Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
அக்டோபர் 2007

இலங்கைக்கு ரகசியமாக இந்தியாவின் ஆயுதங்கள்
விடுதலை ராஜேந்திரன்

இந்தியா இலங்கை அரசுக்கு பாதுகாப்பு ஆயுதங்களை மட்டுமல்ல, விடுதலைப்புலிகளையும் அப்பாவித் தமிழ் மக்களையும் கொன்றொழிக்கும் ஆயுதங் களையும் ரகசியமாக வழங்கி வருவது அம்பலமாகியுள்ளது. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளேடு (அக்.15, 2007) இந்த அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது. அண்மையில் விமானத்தை சுட்டு வீழ்த்தக் கூடிய ஏவுகணைகளை, இந்தியா, சிறீலங்காவுக்கு அனுப்பியுள்ளது. (40விவிலி-70 - மிக அருகாமையில் விமானத்தை வீழ்த்தக்கூடிய தானியங்கி ஏவுகணை) அத்துடன் ரூ.40,000 டாலர் மதிப்புள்ள ‘எ-70’ நவீன துப்பாக்கிகளையும், இந்தியா அனுப்பியுள்ளது.

தங்களுக்கு மேலும் ஆயுதங்களை அனுப்புமாறு, சிறீலங்கா, இந்தியாவை கோரி இருக்கிறது. “சீனா, பாகிஸ்தானிடமிருந்து ஆயுதங்கள் வாங்க வேண்டாம், நாங்களே உங்களுக்கு தருகிறோம்” என்று இந்தியா உறுதியளித்துள்ளது. இந்தியா - பாதுகாப்புக்கான ஆயுதங்களை மட்டுமே சிறீலங்காவுக்கு வழங்கி வருகிறது என்று இதுவரை சொல்லப்பட்டு வந்தாலும், (மக்களையும், விடுதலைப்புலிகளையும்) கொன்றொழிக்கக்கூடிய - ஆயுதங்களையும் வழங்கி வருகிறது என்பது தெரிய வந்துள்ளது. சிறீலங்காவில், பாகிஸ்தான், சீனா உதவிகளைத் தடுக்கவே இந்தியா, தனது ஆயுத சப்ளையைத் தீவிரமாக்கி யுள்ளது. பிரதமருக்கான, பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், ‘பாதுகாப்புக் கருவிகளை’ மட்டுமே வழங்கி வருவதாகக் கூறுவது உண்மைக்கு மாறானது என்று அதிகார வட்டாரங்கள் கூறுகின்றன.

அதே நேரத்தில், மத்தியில் கூட்டணி ஆட்சியிலுள்ள தி.மு.க. - ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி வருவதால், இந்த ஆயுத உதவிப் பிரச்சினை வெளியே தெரிந்து, சிக்கலை உருவாக்கிடக் கூடாது என்பதில், மத்திய அரசு எச்சரிக்கையுடன் ரகசியமாக செயல்பட்டு வருகிறது என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன் இந்தியாவும் சிறீலங்காவும் இணைந்து “கூட்டு பாதுகாப்புக் குழு” என்ற அமைப்பை உருவாக்கியுள்ளதாக சிறீலங்கா அரசு அறிவித்தது. அதாவது இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் உளவுத் துறையினர் இணைந்து தமிழர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எதிரான அழித்தொழிப்புக்கு திட்டமிட்டு செயல்படுதலே இதன் நோக்கம். ரகசியமாக மேற்கொண்டிருந்த இந்த முடிவை சிறீலங்கா வெளிப்படையாக அறிவித்தவுடன் அதிர்ச்சியடைந்த இந்திய உளவுத் துறை அவசர அவசரமாக மறுப்பு வெளியிட்டது.

அதைத் தொடர்ந்து சிறீலங்கா அரசும், தனது அறிக்கையைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தது. உண்மையில் இது திட்டமிட்ட ஒரு நாடகம் என்றும், இரண்டு அரசுகளும் ‘ராணுவ கூட்டமைப்பு’ ஒன்றை உருவாக்கிக் கொண்டு செயல்பட்டு வருகின்றன என்பதும், இப்போது ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ செய்தியின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கை உலகம் முழுதும் வாழும் தமிழர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.



உளவுத் துறையின் கபட நாடகம்!

விடுதலை சிறுத்தைகளின் வெளியீட்டு அணிச் செயலாளர் தோழர்வன்னி அரசு, விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கடத்துவதாகக் கூறி, தமிழகக் காவல் துறையின் உளவுப் பிரிவு கைது செய்தது. அன்று மாலையே அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். சென்னை துறைமுகத்துக்கு பொதி அஞ்சலில் நார்வே நாட்டிலிருந்து, கோகுலன் என்பவர் வன்னி அரசுக்கு அதிவேகப் படகுகளை செலுத்தக் கூடிய எந்திரங்களை அனுப்பியதாகக் குற்றம்சாட்டிய உளவுத் துறை, இது விடுதலைப் புலிகளுக்கு அனுப்புவதற்காகவே வந்துள்ளது என்று யூகத்தின் அடிப் படையில் தோழர் வன்னி அரசைக் கைது செய்துள்ளது. “ஆயுதங்களையோ அல்லது வேறு பொருள்களையோ கடத்தக் கூடியவராக இருந்திருந்தால் வன்னி அரசு என்கிற தன்னுடைய பெயரிலேயே, தான் தங்கியிருக்கும் வீட்டு முகவரிக்கே அனுப்பும்படி கோரி இருப்பாரா?” என்று விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலாளர் தோழர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். நியாயமான கேள்வியாகும் இது.

“விசாரணையின்போது, கடத்தலில் ஈடுபட்டதாக ஒப்புக் கொள்ளும்படியும், திருமாவளவனின் தூண்டுதலில்தான் அவ்வாறு செயல்பட்டதாகவும் வாக்குமூலம் தரும்படி மத்திய உளவுத் துறையினர் வன்னி அரசைக் கட்டாயப்படுத்தியுள்ளனர்” என்ற அதிர்ச்சியான தகவலையும் தோழர் திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் நடக்கும் தி.மு.க. ஆட்சியின் தோழமைக் கட்சி மீது, இத்தகைய பழி சுமத்தி, தமிழக அரசுக்கு நெருக்கடி தருவதற்கு உளவுத்துறை சதித் திட்டம் தீட்டுகிறது என்ற தோழர் திருமாவளவனின் குற்றச்சாட்டைப் புறக்கணித்துவிட முடியாது. இது உளவுத் துறையின் கைவந்தக் கலையாகும். விடுதலைப்புலிகள் மீதான தடையைத் தொடர்ந்து நீடிக்கவும், அவ்வப்போது, மத்திய அரசுக்கு இது போன்ற வழக்குகள் தேவைப்படுகின்றன.

ஆயுதக் கடத்தல் என்றால் சட்டப்படி அது குற்றம் தான். ஆனால், அந்த வழக்குகள் பொய்யாகவே புனையப்படுகின்றன. அதே நேரத்தில், இந்திய அரசு என்ன செய்கிறது? முறையான ஒப்பந்தங்கள் ஏதுமின்றி, அரசின் கொள்கை முடிவுகள் ஏதுமின்றி அமைச்சரவை ஒப்புதலின்றி - இந்தியா, சிறிலங்காவுக்கு ‘ரகசியமாக’ ஆயுதங்கள் வழங்கி வருகிறது. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ போன்ற நாளேடுகளே இதை அம்பலப்படுத்தியுள்ளன. உண்மையில் இதுவும் சட்டவிரோதமாக ஒரு அரசே நடத்தும் ‘கடத்தல்’ தானே!

அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒரு இயக்கத்தைச் சார்ந்த வன்னி அரசுக்கு சட்டப்படி, கட்டணம் செலுத்தி பெயர் முகவரி கொடுத்து கப்பலில் அனுப்பப்பட்ட படகு எந்திரம் இந்தியப் பார்ப்பன ஆட்சியின் பார்வையில் ஆயுதக் கடத்தலாகிறது? அது தேச விரோதமாம்!

எந்தச் சட்டமோ ஒப்புதலோ இன்றி இந்தியாவின் ஆளும் பார்ப்பன-பனியா உளவுத் துறைக் கும்பல் அண்டை நாட்டுக்கு தமிழர்களை கொன்றொழிக்கும் ஆயுதங் களை ரகசியமாக ‘கடத்துவது’ தேச பக்தியாம்!

பார்ப்பான் வகுத்ததுதான் இந்த நாட்டின் சட்டம், தர்மம், தேசபக்தி என்றால், நடப்பது ‘மனுதர்ம’ ஆட்சி, இல்லாமல் வேறு என்ன?

தோழர் வன்னி அரசு மீது தொடர்ந்துள்ள பொய் வழக்கை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். இலங்கைக்கு, ரகசியமாக ஆயுதம் அனுப்பும் இந்திய அரசிடம் தமிழக அரசு விளக்கம் கேட்டு, இனப் படு கொலைக்கு துணைப் போகும் துரோகத்தை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com