Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
அக்டோபர் 2006

பெரியாரை இளைஞர்களிடம் சேர்க்க வேண்டும்
- தமிழருவி மணியன்

அக். 7 ஆம் நாள் சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒடுக்கப்பட்டோர் உரிமை மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் தமிழருவி மணியன் ஆற்றிய உரை:

பெரியாரைப் பற்றிச் சிந்திப்பதும், பெரியாரியலை இன்றைய சமூக இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதும், சமூகப் பொறுப்புள்ள ஒவ்வொருவரின் முதற் கடமை என்று எண்ணுபவன் நான். இந்த தமிழ் மண்ணிலுள்ள ஒவ்வொரு இளைஞனும் மூன்று பெருமக்களை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் என்கின்ற தவிப்பும் தாகமும் எப்பொழுதும் எனக்கு உண்டு. அதனால்தான் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களிடையேயும், வேலையற்று வீதிகளில் நிற்கும் இளைஞர்களிடையேயும் கருத்துகளை வழங்குகின்ற களங்கள் அமைகின்ற பொழுது நான் மறவாமல் மூன்று பெருமக்களைப் பற்றித்தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஒன்று பகுத்தறிவுப் பகலவன் பெரியார், அடுத்து பெருந்தலைவர் காமராசர், அடுத்து தோழர் ஜீவானந்தம் இந்த மூன்று பேரையும் நினைத்துப் பார்க்கும் நெஞ்சம் இல்லாத மனிதன் எவனாயிருந்தாலும் அவன் முதலில் தமிழனாக இருக்க முடியாது என்பது என்னுடைய அழுத்தமான பதிவு.

நண்பர்களே, இந்த மண்ணுக்காக இந்த மண்ணினுடைய மக்களுக்காக முற்றாக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மூன்று துறவிகள் அவர்கள். நான் அதைத்தான் எல்லா இடங்களிலும் சொல்லுகிறேன். துறவி என்பது காவி உடுத்தி, கற்றை சடை முடி வளர்த்தி கானகத்தில் போய் ஒற்றை மனிதனாய் தனித் தவமிருப்பது அல்ல. அதன் பெயர் துறவே அல்ல. அப்படி ஒரு துறவு மேற்கொண்டால் அதன் அடித்தளம் சுயநலமே தவிர பொது நலம் கிடையாது. ஏனென்றால் இந்தப் பிறவிப் பிணியிலே இருந்து விடுபட்டு சிற்றின்பச் சகதியிலிருந்து தன்னை விடுவித்து பேரின்பப் பெருவழியிலே சிறகடித்துப் பறந்து பரம் பொருளை அடைய வேண்டும் என்கின்ற சுயநலத்திற்காக அவன் ஒரு துறவை மேற்கொண்டு அவன் தனித்து தவம் இருக்கின்றான்.

ஆனால் துறவியாக இருப்பவர் சுயநலமற்றவனாக இருக்க வேண்டும். தன்னைத் துறந்தவனாக இருக்க வேண்டும். சமூகத்தில் இருக்கின்ற எல்லா உயிர்களையும் பேதமற்று நேசிக்கின்றவனாய் உலகம் முழுதும் உள்ள உயிர் இனங்கள் அனைத்தையும் ஆரத் தழுவி அரவணைத்துக் கொள்கிற அன்புடையவனாய் இருப்பவன் எவனோ அவன்தான் முழுத் துறவி. துறவு என்ற சொல்லுக்கு ஒரு பொருள் இருக்க வேண்டும் அல்லவா? ஒன்றை அவன் துறந்தால் தான் துறவி. எதைத் துறக்க வேண்டும்? சுயநலத்தைத் துறக்க வேண்டும்.

சுயநலம்தான் பாவப் பாழ் மண்டபத்தின் முதல் படிக்கட்டு. எவன் ஒருவன் சமூக நலனுக்காக சுய நலத்தைத் துறந்து சமுக நலனுக்காகவே முற்றாகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறானோ அவன் தான் துறவி என்றால் பெரியாருக்கு ஈடு சொல்ல இன்னொரு துறவி எவனும் கிடையாது. (கைதட்டல்) கதர்சட்டை அணிந்தவன் பெரியாரைப் பற்றி பேசுகிறேன். அது முரண்போல் யாருக்காவது தோன்றினால் அவர்களுக்கு வரலாறு தெரியாது என்பதுதான் பொருள். தமிழ்நாட்டிலே உள்ள காங்கிரஸ்காரர்களுக்கே பெரியாரை சரியாகத் தெரியாது. இதை சொல்லுவதால் எனக்கு ஒன்றும் இழப்பு கிடையாது. காரணம் புதிதாக இழக்க என்னிடம் எதுவும் கிடையாது. நான் பெரியாரிடத் திலிருந்து ஒரு கருத்தை ஏற்றுக் கொண்டவன். பெரியார் எப்பொழுதுமே நான் கட்சிக்காரன் இல்லை; கொள்கைக்காரன் என்றுதான் சொல்லியிருக்கிறார். நான் ஒரு கட்சி சார்ந்தவனாக இருந் தாலும் ஒரு கட்சிக்கு அடிமையாக இருப்பவனில்லை. சுயமாக சிந்தித்து, சுயமாக கருத்துக்களைச் சொல்லுபவன். அதனால்தான் 1966 இல் மாநிலக் கல்லூரியில் மாணவனாக நுழைந்தபொழுது, காமராசரை இனம் கண்டு காமராசருடைய காலடியில் போய் நான் அரசியலைக் கற்றேன். அதற்கு காரணம் பெரியாரே காமராசருக்குப் பக்கத்தில் நின்றதும் ஒன்று.

66 இல் தொடங்கி 2006 வரை இடைப்பட்ட 40 ஆண்டுகாலம் என் பொது வாழ்வில் ஒரு செப்புக்காசைக்கூட அறத்திற்கு மாறாகவும் நேர்மைக்கு புறம்பாகவும் பெற்று வாழ்கிற வாழ்க்கை எனக்கு இல்லை என்பதுதான் நான் கற்றறிந்த அரசியல். இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அரசியலும்கூட பெரியாரை வெறுமனே பேசுவதில் பயனில்லை. நான் இந்த பெரியார் திராவிடர் கழகத்திலே இருக்கக்கூடிய ஒவ்வொரு தோழனையும் வணங்கி மகிழ்கிறேன். காரணம் என்ன தெரியுமா? அரசியல் உலகத்தில் பொது வாழ்வில் அடி எடுத்து வைக்கின்ற பொழுதே என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு வரக்கூடிய உலகமாக இன்றைக்கு அரசியல் உலகம் பொது வாழ்க்கை உலகம் சிதைந்து சீரழிந்து விட்டது. ஆனால், நீங்கள் எல்லாம்இந்த அரசியலிலிருந்து விடுவித்துக் கொண்டு எந்தப் பயனும் கருதாமலும், பெரியார் கருத்தைப் பரப்ப வந்திருக்கிறீர்களே! அந்தத் தொண்டுள்ளத்தை வணங்குகிறேன்.

அரசியலைவிட இன்றைக்கு இழிந்த தொழில் வேறெதுவுமே கிடையாது. இந்த உலகத்திலே, நான் மூன்று நிலைகளைப் பார்க்கிறேன். 1919-ல் காந்தியத் தாக்கத்திலேதான் பெரியார் உள்ளே நுழைந்தார். பிறகு காந்தியத் தாக்கத்திலிருந்து விடுபட்டார் என்பது வேறு வரலாறு. ஆனால் உள்ளே நுழைந்த பொழுது காந்தியத் தாக்கத்திலே நுழைந்தார் என்பதை நாம் மறுப்பதும் மறைப்பதும் நாம் வரலாற்றுக்கு செய்யும் நியாயம் இல்லை.

அவர் 1919-லே உள்ளே நுழைகிறார். நுழைகிற பொழுது அவர் ஈரோடு முனிசிபல் சேர்மனாக இருந்தார். அந்த ஈரோடு முனிசிபல் சேர்மனாக இருந்தப் பதவியைத் துறந்துவிட்டு பொது வாழ்க்கைக்கு உள்ளே வந்தார். 29 பதவிகளை அவர் வகித்தார். எல்லாப் பதவிகளையும் தூக்கி எறிந்தார். தன்னுடைய தந்தை வளர்த்தெடுத்த வணிக உலகில் தனக்குரிய திறமைகளை பயன்படுத்தி 15 ஆண்டுகாலம் மிகச் சிறந்த வணிகராக வளர்ந்து, 20 ஆயிரம் ரூபாய் ஒரு ஆண்டுக்கு வருமானம் வரக்கூடிய சூழலில் அவர் இருந்தார். 1919-ல் 20 ஆயிரம் ரூபாய் ஆண்டு வருமானம் என்றால் இன்றைய சூழலில் 20 கோடி ரூபாய். அந்த 20 ஆயிரம் ரூபாய் வருமானத்தை முற்றாகத் தூக்கி எறிந்து, அது வரை வளர்த்தெடுத்த வணிக நிறுவனங்களை இழுத்து மூடி, வாழ்க்கையில் தந்த 29 பதவிகளையும் தூக்கி எறிந்து விட்டு, பதவிகளைத் துறந்து, பணத்தைத் துறந்து உள்ளே காலடி எடுத்து வைத்த மனிதர் பெரியார். இன்றைக்கு பதவிகளுக்காகவும், பணத்திற்காகவும் கால் எடுத்து வைக்கக்கூடிய மனிதர்கள் நிறைந்த சமூகமாக மாறிக் கிடக்கிறது.

எனவே பெரியாரைப் போன்றவர்கள் அரசியல் உலகத்திற்கு வருகின்றபொழுது தங்களிடமிருந்ததை முற்றாக சமூக நலனுக்குத் தந்தார்கள். நாடு விடுலை பெற்ற பிறகு ஒரு சிறிய மாற்றம் நிகழ்ந்தது. என்ன தெரியுமா? தங்களிடமிருந்ததை பொது வாழ்வில் மக்கள் நலனுக்காக தந்தது போக தன்னிடமிருப்பதை கொஞ்சம் கொடுத்து அதிகமாக எடுப்பது என்கிற முடிவோடு உள்ளே வந்தார்கள். இன்று என்ன தெரியுமா? எதையுமே கொடுக்காமல் எல்லாவற்றையும் எடுத்து விடுவது என்கிற முடிவோடு அரசியலில் இருக்கிறார்கள். எனவே இந்தச் சூழலில் பெரியாரை நீங்கள் இளைஞர்களிடம் கொண்டு போக வேண்டும். காரணம் பெரியார் உடைமை மறுப்பாளர். பெரியார் தனக்கென்று சொத்துக்களை வைத்துக் கொள்ளவில்லை.

‘பார்ன் வித் சில்வர் ஸ்பூன்’ என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்களே, பெரியாருடைய தந்தை வறுமையில் வாடியவர். பெரியாருடைய தந்தை கூலியாக இருந்தவர். பெரியாருடைய தந்தையும் பெரியாருடைய தாயும் சேர்ந்து முயன்று, வியர்வையைச் சிந்தி கொஞ்சம் கொஞ்சமாக உழைத்து சிறு மளிகைக் கடை வைத்து அதை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்து பெருமண்டியாக மாற்றி வணிக உலகத்தில் கொடிகட்டிப் பறந்தவர்கள். ஆனால், செல்வ வளமான சூழலிலே பிறந்த பெரியார் செல்வத்திலே தன்னுடைய கவனத்தைச் செலுத்தவும் இல்லை. செல்வத்திலே மதிமயங்கிப் போகவும் இல்லை. உடைமை மறுப்பாளனாக இருந்தார். காமராசர் உடைமை மறுப்பாளராக இருந்தார். 9 ஆண்டுகள் தமிழ்ச் சமுதாயத்தை ஆண்ட காமராசர் 5 ஆண்டுகள் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராசர், நண்பர்களே இரண்டு பிரதமர்களை உருவாக்கக்கூடிய பேராற்றல் மிக்க தமிழனாக உயர்ந்த காமராசர் சாகிற பொழுது 10 வேட்டி, 10 சட்டை 63 ரூபாய் மட்டுமே வைத்து வாழ்ந்து செத்தார் என்றால், உடைமை மறுப்பாளராக இருந்தார்.

ஜீவா எப்படி இறந்தார்? காலுக்குச் செருப்புமில்லை கால் வயிற்றுக்குக் கூழுமில்லை. பாலுக்கு உழைத்தோமடா என் தோழனே, பசையற்றுப் போனமடா என்று அவர் வெறும் கவிதை பாடவில்லை. அவர் அப்படி வாழ்ந்தார். அந்த காலுக்குச் செருப்புமில்லாமல், கால் வயிற்றுக்குக் கூழுமில்லாமல், பாலுக்குழைத்து பசையற்றுப் போனவர் ஜீவானந்தம். அந்த ஜீவாவை நினைத்து பார்க்க வேண்டும். தமிழ்நாட்டினுடைய வரலாற்றை நுணுக்கமாக நீங்கள் பார்த்தால் பெரியாரியல் ஒரு பக்கமும், பொதுவுடைமை இயக்கம் இன்னொரு பக்கமும் பிரிந்து நின்றதுதான் வேதனைக்குரியது.
இனியாவது இந்த இரண்டு இயக்கங்களும் ஒரு களத்தில் மையப் புள்ளியிலே வந்து சேரவேண்டும்.

பெரியார் இயக்கத்தின் அடிப்படை என்ன? இங்கே இரண்டு விதமான சமூகத் தீமைகள் இருக்கின்றன. ஒன்று வர்க்கப் போராட்டம், இன்னொன்று சாதியப் போராட்டம். நண்பர்களே வர்க்கங்களுக்கிடையே இருக்கக்கூடிய வேற்றுமைகளைக் களைந்து சமத்துவ சமுதாயத்தைக் கொண்டு வந்து சேர்த்துவிட வேண்டும் என்கிற வெறியோடு புறப்பட்டவர்கள் கம்யூனிஸ்டுகள். சாதிகளுக்கிடையே இருக்கக்கூடிய பேதங்களை அகற்றி அதனுடைய ஆணி வேரை முற்றாக அறுத்தெறிந்து அனைவரும் சமம் என்கிற சூழலை உருவாக்குவதற்காக புறப்பட்டது பெரியாருடைய திராவிடர் இயக்கம். ஆனால் ஒன்றை பார்க்க வேண்டும். கம்யூனிஸ்டு இயக்கம் இங்கே பெரிதாக வளர முடியவில்லை. திராவிட இயக்கம் பெரிதாக வளர்ந்தது.

காரணம் என்ன? கோடீசுவரனாக பொருளாதாரத் துறையில் செழுமை பெற்றவனாக ஒரு தலித் இருந்தாலும்கூட அவன் பார்ப்பானுக்கு இணையாக உட்காரக்கூடிய ஒரு சமூக அந்தஸ்து அவனுக்கு கிடைக்கவில்லை. எனவே ஒரு தலித் என்கிற தோழன் தாழ்த்தப்பட்டவன், உரிமைகள் மறுக்கப்பட்டவன் என்ன யோசிக்கிறான். நான் பெரும் பணக்காரனாக மாறுவது எனக்குப் பெரிதல்ல, சக மனிதனுக்கு சமமாய் உண்ணவும் உடுக்கவும் நடக்கவும் இருக்கக்கூடிய சூழல் கனிய வேண்டும் என்று கருதினான். கீழே விழுந்து கிடந்த அவன் உயர்சாதிக்காரனுக்குப் பக்கத்தில் தோளோடு தோள் உரச நடக்கிற சூழல் வரவேண்டும் என்று கருதினான். எனவே மானம் முக்கியம் என்று அவன் நினைத்தான். சோறு முக்கியம் என்று கருதவில்லை. பெரியார்தான் அழகாகச் சொன்னார். இதைவிட சுருக்கமாக வள்ளுவன்கூட சொல்லவில்லை என்று நான் சொல்லுவேன். வள்ளுவன்கூட ஒரு கருத்தை வழங்குகின்றபொழுது ஒன்றே முக்கால் அடி அவனுக்குத் தேவைப்பட்டது. ஆனால் ஒருஅடியில் பெரியார் சொன்னார் - மனிதனுக்கு அழகு எது? அரிதாரம் பூசிக்கொள்வது மனிதனுக்கு அழகா? எது மனிதனுக்கு அழகு? பெரியார் ஒரு வரியில் சொன்னார் - மானமும் அறிவும் தானடா மனிதனுக்கு அழகு. (கைதட்டல்)

மானமும் அறிவும் இருந்தால் தான் மனிதன். எனவே மானம், அறிவு அதன் விளைவாக வரக்கூடிய சுயமரியாதை என்கிற உணர்வு இவற்றை வளர்த்தெடுக்க வேண்டும் என்று புறப்பட்ட போராளி பெரியார். அதனால்தான் பெரியாருடைய திராவிடர் இயக்கம் வளர்ந்தது. கம்யூனிஸ்டு இயக்கம் அந்த இடத்திற்கு வர முடியாமல் நின்றது. இன்றைக்கும் மூன்று சதவீத வாக்குக்கு மேல் கம்யூனிஸ்டுகளுக்கு தமிழ்நாட்டிலே இல்லை. அது மகிழ்ச்சி அடையக்கூடிய சூழலும் இல்லை. பெரியார் இயக்கம் தமிழ்நாட்டில் மிகப் பெரிதாக வளர்ந்து விட்டது என்று ஏதோ கனவு உலகத்திலும் நீங்கள் இருக்கலாகாது. இன்றைக்கு விஜயகாந்திற்கு கிடைக்கக்கூடிய வரவேற்பு திராவிட இயக்கத்தில் குறிப்பாக உங்களைப் போன்ற உண்மையான பெரியார் இயக்கங்களுக்கு கிடையாது. காரணம் என்ன? நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஜீவாவை நான் நினைத்துப் பார்க்கிறேன். காமராசரை நினைக்கிறேன், பெரியாரை நினைக்கிறேன். நண்பர்களே பெரியார் காந்தியத்தில் ஈடுபட்டார் என்று சொன்னேன். ஜீவாவும் காந்தியத்தில்தான் ஈடுபட்டார். ஜீவாவின் அரசியல் காந்தியத்தில் இருந்துதான் தொடங்கியது. பெரியாரும் காந்தியத்தில் இருந்துதான் தொடங்கினார். ஆனால், பிறகு அதே பெரியார் காந்தி ஒழிய வேண்டும்; காங்கிரஸ் அழிய வேண்டும் என்று குரல் கொடுத்தார். இன்னொரு விசயத்தையும் நீங்கள் பார்க்க வேண்டும். அற்புதமான ஒரு இலக்கிய ஏடு ஒன்று வருகிறது, ‘புதிய பார்வை’ என்று. அந்தப் ‘புதிய பார்வை’யில் நேர்காணல் என்னிடம் நடத்திய போது ஒன்று சொன்னேன். காங்கிரசை வெகுசன இயக்கமாக வளர்த்த பெருமை பெரியாருக்கு மட்டும்தான் உண்டு என்றேன். 1919-லிருந்து 1925 வரை இடைப்பட்ட ஆறாண்டு காலத்தில் வழக்கறிஞர்களின் சட்டைப் பையில் சிறையிருந்த காங்கிரசை உயர்சாதிக்காரர்களின் மடியிலே உட்கார்ந்திருந்த காங்கிரசை, அடித்தளத்திலே இருக்கக் கூடிய மனிதர்களிடத்திலே கொண்டு போய் சேர்த்த பெருமைக்குரியவர் பெரியார். வெகு சன இயக்கமாக காங்கிரசை சுதந்திரப் போராட்ட காலச் சூழலில் உருவாக்கியவர் பெரியார் என்று நான் அந்த நேர்காணலிலே சொன்னேன்.

நண்பர்களே! அது இதழில் பிரசுரமானவுடன், ஒரு “பிராமண” எழுத்தாளர் அல்ல, ஒரு “பிராமண” பத்திரிகையாளர் அவர். இப்பொழுது மத்திய அமைச்சராக இருக்கிற நண்பர் வாசன் அவர்கள், அப்பொழுது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த நேரத்தில் அவருக்கு ஒரு நீளமான கடிதம் எழுதி அனுப்பினார். காங்கிரசை வளர்த்தார் பெரியார் என்று சொல்லக்கூடிய தமிழருவி மணியனை தமிழ்நாடு காங்கிரசில் ஒரு நிமிடம்கூட நீங்கள் வைத்திருக்கக் கூடாது. உடனே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தை வாசன் அவர்கள் என்னிடம் கொடுத்து படித்துப் பார்க்கச் சொன்னார். நான் படித்தேன். பிறகு வாசனிடம் கேட்டேன், என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று. இல்லை அய்யா, எழுதியதை உங்களிடம் கொடுத்தேன் என்றார்.

நான் சொன்னேன் பெரியாரைப் பற்றி பேசுவது ஒரு பாவம் என்று காங்கிரஸ் நினைக்குமேயானால், அந்தக் காங்கிரசில் இருப்பது பாவம் என்று கருதி நான் வெளியேறிவிடுவேன். (கைதட்டல்) எந்த இயக்கத்தையும் வைத்து பிழைப்பதற்காக நான் வந்து நிற்கிற பிழைப்புவாதியில்லை. எனவே முதலில் நான் தெளிவாகச் சொல்லுவது இந்த காந்தியத்திலிருந்து எனக்கும் தேடல் நடந்து கொண்டே இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட கருத்தில் பிடிவாதமாக நின்று விடுதல் அறிவுக்கு அடையாளமில்லை. தேடல் நடக்க வேண்டும். உள்முகமாக ஒரு தேடல் தற்சோதனை நடக்க நடக்கத் தான் பல செய்திகள் புலப்படும். ஜீவானந்தம் காந்தியத்தை நேசித்தார் என்று சொன்னேன். சிறாவயலில் காந்தி ஆசிரமத்தை தொடங்கியவர் தோழர் ஜீவானந்தம். பெரியார் காந்தியத்தை ஏற்றார். பெரியார் காந்தியத்தை ஏன் ஏற்றார்? ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். வைணவ சமுதாயத்திலே ஊறித் திளைத்த குடும்பத்திலே பிறந்தவர் பெரியார். ஆனால் அவர்தான் ஒரு பகுத்தறிவாளராக உருவெடுக்கிறார்.

பாதிரியாக இருந்தவருக்குப் பிறந்தவர் தான் இங்கர்சால். கிறித்துவப் பாதிரியாருக்கு மகனாகப் பிறந்து கிறித்துவப் பாதிரியாகவே வளர்த்தெடுக்கப்படவேண்டும் என்று தந்தை முயன்று, அந்த முயற்சியையும் மீறி பகுத்தறிவாளனாக புறப்பட்டவர் அமெரிக்காவிலே இங்கர்சால். வைணவ சமுதாயத்தில் வைணவ சம்பிரதாயத்தில் ஊறித் திளைத்த குடும்பத்தில் பிறந்து அந்த வைணவ சம்பிரதாயத்தை மட்டும் அல்ல, ஒட்டு மொத்த மதங்களுக்கு எதிராகவும் மூர்க்கமாகவும், முற்றாகவும் போராடுவதற்கு புறப்பட்ட போராளி பெரியார். இந்த இரண்டு பேருக்கும் இடையே ஒரு அற்புதமான ஒற்றுமை இருக்கிறது. இங்கர்சால் சொன்னதைத்தான் பெரியார் தமிழ் மண்ணிலே செய்தார். இங்கர்சால் சொன்னதில் நீங்கள் மறக்கக் கூடாத வாசகம் எது தெரியுமா? இன்றைக்கு பெற்றோராக இருக்கக்கூடிய யாராக இருந்தாலும் பிள்ளைகளுக்கு கற்றுத் தர வேண்டிய வாசகம் என்ன தெரியுமா? இங்கர்சால் சொன்னார் குழந்தைகளுக்கு நம்பக் கற்றுக் கொடுப்பதைவிட சிந்திக்கக் கற்றுக் கொடுங்கள் என்று சொன்னான். நம்பக் கற்றுக் கொடுப்பதைவிட சிந்திக்கக் கற்றுக் கொடுங்கள் என்று சொன்னாரே அதுதான் மிக முக்கியமான செய்தி. அதைத் தான் பெரியார் ஊர் ஊராக தெருத் தெருவாக சுமந்து சென்றார். இது இப்படித்தான் என்று நம்ப வைத்து ஒரு குழந்தையை வளர்த்தால் அந்த குழந்தை மூடநம்பிக்கையில்தான் மூழ்கிக் கிடக்கும்.

இது ஏன், இது எவ்வாறு, இது எவ்விதம், இது எப்படி, இது ஏன் நிகழ்ந்தது என்று கேள்வி மேல் கேள்வியை குழந்தைப் பருவத்திலே இருந்தே கேட்கத் தொடங்கிவிட்டால் அறிவுக் கண் திறந்து கொள்ளும். சிந்தனைதான் முக்கியம். அது மனிதனுக்கு மட்டுமே கிடைத்திருக்கக்கூடிய வரம். இங்கர்சால் ஏன் நம்பக் கற்றுக் கொடுப்பதைவிட சிந்திக்க கற்றுக் கொடுக்க வேண்டும் என்று சொன்னான்? ஏன் சிந்திக்க வேண்டும்? அதற்கு இங்கர்சால் அழகாகச் சொன்னான், ஏன் சிந்திக்க வேண்டும் தெரியுமா? சிந்தனை சந்தேகத்தை வளர்க்கும். சிந்தனை இருப்பவனுக்குத்தான் சந்தேகம் வரும். எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று எவனாவது சொன்னால் அவன் சிந்திப்பதற்கே தயாராக இல்லாத மூடன் என்று பொருள். சிந்தனை என்ன செய்யும்? சந்தேகத்தை வளர்க்கும். சந்தேகம் ஆராய்ச்சியை நடத்தும். சந்தேகம் வந்தால்தான் இது ஏன்? இது எப்படி? இது எவ்விதம்? இது எவ்வாறு என்ற கேள்விகள் வரும். ஆராய்ச்சிகள் தொடரும். சிந்தனை சந்தேகத்தை வளர்க்கும். சந்தேகம் ஆராய்ச்சியை உருவாக்கும். ஆராய்ச்சி உண்மைகளை கண்டுபிடிக்கும். உண்மை அது வரையில் உன் உள்ளத்தில் மண்டிக் கிடக்கிற குருட்டு நம்பிக்கைகளை ஆழக் குழித் தோண்டிப் புதைக்கும் என்று சொன்னான் இங்கர்சால்.

எனவே மூடநம்பிக்கைகளை குருட்டு நம்பிக்கைகளை ஆழக் குழித் தோண்டிப் புதைப்பதற்காக மனிதர்கள் சிந்திக்க வேண்டும் என்று இங்கர்சால் அங்கு சொன்னான். அதைத்தான் செயல்படுத்தினார் பெரியார் அவர்கள். பெரியாருக்கு என்று அடிப்படைச் சிந்தனைகள் இருந்தன. பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக பெரியாருக்கு அன்றைய சிந்தனை இருந்தது. மதுவிலக்கிற்கு எதிராக பெரியாருடைய சிந்தனை இருந்தது. வர்ணாசிரம தர்மத்திற்கு எதிராக பெரியாருக்கு இளமையிலேயே சிந்தனைகள் இருந்தது. இந்தச் சிந்தனைகள் காந்தியத்திடமிருந்து வந்ததனால் காந்தியம் தனக்குப் பொருந்தும் என்று அவர் நம்பியதினால் வரதராசுலு நாயுடுவின் வற்புறுத்தலிலும், இராஜாஜியின் பரிந்துரையிலும் அவர் காங்கிரசுக்குள்ளே கால் எடுத்து வைத்தார். காங்கிரசுக்குள்ளே கால் எடுத்து வைத்து விட்டேன். இனிமேல் வாழ்நாள் முழுவதும் நான் காங்கிரசுக்காரனாகத்தான் இருப்பேன். அந்தக் காங்கிரசை விட்டு வெளியே வந்தால் இவன் கட்சி மாறி என்று உலகம் தூற்றும் என்று பழி சொல்லுக்காக அஞ்சி அந்த காங்கிரசுக்குள்ளேயே பெரியார் கடைசிவரை இருக்கவில்லை. அந்த காங்கிரசுக்குள்ளேதான் ஜீவா காலடி எடுத்து வைத்தார். இந்த ஜீவானந்தம் கட்சி மாறி என்று எவனாவது சொல்லிவிடுவானோ என்று பழிக்கு அஞ்சி அங்கேயே அவர் இருக்கவிலலை.

நண்பர்களே, நினைத்துப் பார்க்க வேண்டியது ஒன்றுதான். ஒரு சிற்பி இருக்கிறான் என்றால் அவன் நோக்கம் சிலை செய்வது. சிலை செய்வதற்காகத்தான் அவன் கையிலே உளி எடுக்கிறான். கையிலே உளி எடுத்திருப்பது நெஞ்சிலே அவன் வைத்திருக்கக்கூடிய கற்பனையை சிலையாக பாறையிலே கொண்டு வந்து சேர்ப்பதற்கான கருவி அது. அந்த உளி கூர் மழுங்கிப் போகிறது. உளி கூர் மழுங்கிப் போன பின்னாலும் அந்த சிற்பி இது என் கையிலே உள்ள உளி. இந்த உளியை நான் போட மாட்டேன். இதனோடு என் உள்ளம் தொடர்பாகி விட்டது. நான் வேறு உளியை எடுக்க மாட்டேன். இதே உளியில் தான் தொடர்ந்து சிற்பம் செய்வேன் என்று நினைந்து சிற்பம் செய்ய நினைத்தால் சிற்பம் மூளியாகிவிடும். உளியின் நோக்கம் சிலை செய்வதே தவிர உளியை வைத்துக் கொள்வது அல்ல. நான் செய்ய நினைக்கும் சிலை இந்த உளியின் மூலமாக சரியாக வரவில்லையென்றால் இந்த உளியை வீசி எறிந்து விட்டு வேறு ஒரு கூர்மையான உளியை எடுப்பவனுக்குப் பெயர்தான் உண்மையான சிற்பி. தன்னுடைய கொள்கைக்கு சரிபட்டு வரவில்லையென்றால் அந்த இயக்கத்தைத் தூக்கி எறிந்துவிட்டு தன் கொள்கைக்கேற்ப நடப்பவன்தான் உண்மையான பொதுவாழ்க்கைத் துறவி. அதைத்தான் பெரியார் செய்தார். அதைத் தான் ஜீவானந்தம் செய்தார்.

ஒன்று சொல்கிறேன் வரதராசுலு நாயுடு ஒரு கட்டத்தில் சொன்னார், தமிழ்நாட்டிலேயே தேசநலனுக்காக முற்றாக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அப்பழுக்கற்ற காங்கிரஸ்காரர் யார் என்று என்னைக் கேட்டால் நாலு பேரைத்தான் சொல்லுவேன் என்றார் வரதராஜுலு நாயுடு. அந்த நாலுபேர் யார் என்று கேட்டார்கள். வரதராசுலு நாயுடு சொன்னார், நாலு பேர் தன்னலமே இல்லாமல் மண் நலத்திற்காக முற்றாக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மாபெரும் காங்கிரசுக்காரர்கள் நான்குபேர். ஒருவர் வ.உ.சி., அடுத்தவர் பெரியார், அடுத்தவர் திரு.வி.க., அடுத்தவர் காமராசர் இது சொன்னது வரதராஜுலு நாயுடு. இந்த நாலுபேரைத்தான் தமிழ்நாட்டில் தன்னலமில்லாமல் மக்கள் நலனுக்காக உழைத்த சமூக நலனை வளர்த்தெடுக்கப் புறப்பட்ட காங்கிரசுக்காரர்கள் என்று சொன்னார்.

அதில் உண்மை என்ன தெரியுமா? அதில் மூன்று பேரும் காங்கிரசை விட்டு வெளியேறிவிட்டார்கள். காமராசரைத் தவிர. எந்த திரு.வி.க.வின் தலைமையில் 1925 இல் காங்கிரஸ் மாநாடு நடந்ததோ, எந்த மாநாட்டில் பெரியார் அவர்கள் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை கொண்டு வந்து சேர்த்து விடுவது என்ற முடிவோடு 1920 இல் தொடங்கிய முயற்சியை தொடர்ந்து நடத்தி 1925 வரை சேர்க்க நினைத்தாரோ அது தோழர் திரு.வி.க. தலைமையிலே கூடி வாய்க்காத பொழுது இந்தக் காங்கிரசை அடியோடு அழித்து விட்டுத் தான் அடுத்த வேலை என்று வெளியே புறப்பட்டார். அவர் முதலிலே போனார். அன்றைக்கு தலைமைப் பொறுப்பிலே இருந்த திரு.வி.க. கடைசி வரையில் காங்கிரஸ்காரராக இருந்தாரா என்றால் இல்லை. இந்த வரதராஜூலு இந்த நான்கு பேரைத்தான் காங்கிரஸ்காரர் என்று சொன்னார். வரதராஜூலு நாயுடு கடைசி வரை காங்கிரஸ்காரராக இருந்தாரா என்றால் இல்லை.

இந்த தமிழ்ச் சமுதாயத்தில் முதன்முதலில் தேசப்பற்று என்கிற சிறு நெருப்பாக இருந்ததை பெரு நெருப்பாக மாற்றுவதற்கு போராளியாகப் புறப்பட்டவனே செக்கிழுத்த வ.உ.சி.. வ.உ.சி. தொடர்ந்து காங்கிரசில் இருந்தாரா என்றால் இல்லை. காரணம் என்ன? அவர்கள் எல்லாம் சுயநலத்திற்காக ஒரு இயக்கம் சாரவில்லை. அவர்கள் சமூக நலனுக்கு வந்தார்கள் காந்தியத்திடமிருந்து எப்பொழுது கருத்து மாறுபாடு கொண்டார்களோ அதற்குப் பிறகு போலியாக அங்கு இருக்கவில்லை.

காந்தி ஆசிரமம் நடத்தியவர் ஜீவானந்தம். இந்த நேரத்தில் நான் உங்களுக்குச் சொல்கிறேன். இந்த நேரத்தில் ஜீவானந்தத்தை சேர்த்து சிந்திக்க வேண்டும். எனக்குள்ள வருத்தம் என்ன தெரியுமா? நான் ஒவ்வொருவரைப் பற்றியும் பேசுகிறேன். இந்தக் குற்றச்சாட்டையும் தஞ்சையில் வைத்தேன். பெரியாரைப் பற்றி பேசுகின்றபொழுது பெருந் திரளாக கருஞ்சட்டைக்காரர்கள் வந்து உட்கார்ந்து கேட்கிறார்கள். ஒரு கம்யூனிஸ்ட்காரரைக்கூட நான் அங்கு பார்க்க முடியவில்லை. ஜீவாவைப் பற்றி பேசுகின்ற பொழுது ஏராளமான சிகப்புச் சிந்தனையாளர்கள் வந்து உட்காருகிறார்கள். ஒரு கருப்புச் சட்டைக்காரரைக்கூட என்னால் அங்கு நான் பார்க்க முடியவில்லை. இது இந்த தமிழ்ச் சமுதாயத்திற்கு வந்து சேர்ந்திருக்கிற சாபம் என்று நான் கருதுகிறேன்.

நண்பர்களே, கட்சிகளை மீறி வேலிகளைத் தாண்டி எவன் ஒருவன் இந்த மக்களுக்காக, மண்ணுக்காக முற்றாக தன்னை அமர்த்திக் கொண்டானோ, அர்ப்பணித்தானோ அவனை நேசிக்கிற நெஞ்சம் நமக்கு முதலில் வேண்டும். அவர் என் கட்சியா என்று பார்த்து ஆராதனை செய்கிற பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். அப்பொழுது தான் இந்த சமுதாயத்திற்கு நல்ல பலன் வந்து சேரும். ஏன் நான் ஜீவாவையும், பெரியாரையும் சேர்த்து பேசுகிறேன் என்றால், பெரியாரும் காந்தியிடமிருந்து வெளியே வந்தார். ஜீவாவும் காந்தியிடமிருந்து வெளியே வந்தார். பெரியார் காந்தி ஆசிரமம் நடத்தவில்லை. ஆனால் காந்தி சொன்ன கதர் இயக்கத்தை இந்த தமிழ்நாட்டில் வளர்த்தெடுத்த முதன் மகன் பெரியார். தமிழ்நாடு காங்கிரஸ் கதர் வஸ்திராலயம் என்று பெயர் வைத்து, தமிழ்நாடு முழுவதும் கதர் துணியை மூட்டை மூட்டையாக தன் தலையில் சுமந்து விற்று அதை வளர்த்தெடுத்த மனிதர் பெரியார். காந்தி சொன்னார் என்பதற்காக கள்ளுக்கடை மறியல் நடத்தி குடும்பத்தோடு சிறைக்குச் சென்றவர் பெரியார். காந்தி சொன்னார் என்பதற்காக தனக்குச் சொந்தமான 500 தென்னை மரங்களையும் வெட்டி வீழ்த்தியவர் பெரியார்.

வடநாட்டில் கள்ளு இறக்குவது என்பது ஈச்சமரத்திலேயிருந்து இறக்குவான். ஈச்சமரத்தை வெட்டி வீழ்த்துவதனால் பெரிய நட்டம் ஒன்றும் கிடையாது. ஆனால் விவசாயிகளுக்கு தெரியும், ஒரு தென்னை மரம் வெட்டினால் எவ்வளவு நட்டம் என்று. பெரியார் 500க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். காந்தி சொன்னதை வேதமாக கருதினார் பெரியார். அவர்தான் காந்தியை விட்டு வெளியே வந்தார். அந்த காந்தியின் ஆசிரமத்தையே நடத்தினார் ஜீவா. ஜீவா காந்தியின் பெயரால் அந்த ஆசிரமத்தை நடத்துகின்ற பொழுது, ‘அரிசன்’ பத்திரிகையில் நண்பர்களே மகாத்மா காந்தி எழுதிய எழுத்துகளை அவர் படிக்கிறார். அவர் எழுதிய எழுத்துக்களை அவர் படிக்கின்ற பொழுது அதற்குப் பிறகு ஜீவாவிற்கு காந்தியத்தின் மீது பற்று அகன்று விடுகிறது. சுதந்திரம் பெற்று இந்திய நாட்டில் சுதந்திரச் சூழலில் ஒரு இந்திய ஆட்சி அமைந்தால் அந்த ஆட்சியிலும், வர்ணாசிரமதர்மம் நீடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை என்று ‘மகாத்மா’ காந்தி எழுதினார். உடனே இங்கே இருந்த ஜீவா 20 வயது இளைஞன், இதை எதிர்த்து கேள்வி கேட்டான். இன்றைக்கு உள்ள 20 வயது இளைஞன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? விஜய்காந்திற்கு கொடிகட்டிக் கொண்டு இருக்கிறான். விஜய் திரைப்படத்திற்கு கட் அவுட் வைத்துக் கொண்டிருக்கிறான். ரஜினிகாந்திற்கும், கமலகாசனுக்கும் கற்பூர ஆரத்தி எடுத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் அன்று 20 வயது ஜீவா இதைப் படித்தார். உடனடியாக காந்திக்கு கடிதம் எழுதினார்.

ஜீவா எழுதுகிறார், “நீங்கள் சுதந்திரம் பெற்று ஒரு ஆட்சி அமைத்தால், அந்த ஆட்சி வர்ணாசிரம தர்மத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று சொல்லுவது எனக்கு அதிர்ச்சியைத் தருகிறது. வர்ணாசிரமதர்மம் என்பது பெண் அடிமைத்தனத்தைப் போற்றுவது அல்லவா? வர்ணாசிரம தர்மம் நிலவக்கூடிய ஆட்சியில் பெண்ணுக்கும், ஆணுக்கும் சமமாக உரிமை கிடைக்குமா? ஒடுக்கப்பட்டவர் என்று நீங்கள் பேசுகிற பொழுது வெறும் ஆண் மக்களை மையமாக வைத்துப் பேசலாகாது. நண்பர்களே, ஒடுக்கப்பட்டவர்களிலே மிகவும் ஒடுக்கப்பட்டவர்கள் யார்? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஒவ்வொரு இந்தியனுக்கும் மூன்று விலங்குகள் போடப்பட்டிருக்கின்றன. அரசியல் சமூகப் பொருளாதார விலங்குகள் என்ற மூன்று விலங்குகளோடு ஒவ்வொரு இந்தியனும் இந்த மண்ணிலே நடக்கிறான்.

இதில் ஒருவன் தலித்தாகப் பிறந்துவிட்டால், இந்த மூன்று விலங்குகளோடு சேர்ந்து தாழ்த்தப்பட்டவன் என்பதால் தீண்டாமை என்கிற இன்னொரு விலங்கையும் சேர்த்துச் சுமக்கிறான். அதே ஒரு பெண்ணாகப் பிறந்து விட்டால் இந்த நான்கு விலங்குகளோடு பெண் அடிமையாக இருக்கிற ஆண் ஆதிக்கம் என்கிற அய்ந்தாம் விலங்கையும் சேர்த்து சுமக்கிறாள். அப்படி என்றால் ஒடுக்கப்பட்டவர்களிலேயே ஒடுக்கப்பட்ட இனம் யார் என்றால் பெண் இனம் தான். எனவே அந்தப் பெண் இனம் சம உரிமை பெறுவதற்கு வர்ணாஸ்ரம தர்மத்தில் இடம் இல்லாத பொழுது இந்த வர்ணாஸ்ரம தர்மம் தான் சுதந்திர இந்தியாவில் இருக்க வேண்டும் என்று சொல்லுவது “மகாத்மாவே நியாயமா” என்று கேட்டு கடிதம் எழுதினார். 20 வயது இளைஞன் என்னைக் கேட்பதா என்று காந்தி நினைக்கவில்லை.

பெரியாரை நான் பார்த்திருக்கிறேன். பெரியாரை ‘விடுதலை’ அலுவலகத்தில் பார்த்துப் பேசியிருக்கிறேன். நண்பர்களே கல்லூரியில் படிக்கின்றபொழுது சின்னஞ்சிறு பையனாக பெரியாரை சந்தித்தேன். அப்பொழுது ஒரு பூத கண்ணாடியை வைத்து படித்துக் கொண்டிருந்தார். என்னை என் மாமா அழைத்துக் கொண்டு போனார். என் தாயோடு பிறந்த சகோதரர் மிகக் கடுமையான பெரியாரிஸ்டு. அவர் என்னை அழைத்துக் கொண்டு போனார். பெரியார் உட்கார்ந்து இருக்கிறார். படுக்கையில் உட்கார்ந்து இருக்கிறார். என்னைப் பார்த்து வாங்க அய்யா என்று சொல்லி தன் இரண்டு கையை அப்படி படுக்கையில் அழுத்தி தன் உடலை உயர்த்தி எனக்கு வரவேற்பு கொடுத்தார். அது போன்ற பெருந்தன்மையை அது போன்ற தன்மையை வேறெங்கும் பார்க்க முடியாது. ஆனால் மேடையில் பேசுகின்ற பொழுது சொல்லுவார், எல்லாம் பொறுக்கிப் பசங்க என்பார்.

தேர்தலில் என்னுடைய கட்சி என்றைக்கும் நிற்காது என்றார் பெரியார். ஏன் தேர்தலில் நிற்கக் கூடாது என்று கேட்ட பொழுது அவர் சொன்னார், தேர்தலில் நிற்கக் கூடிய எவனாக இருந்தாலும் அவன் ஓட்டுப் பொறுக்குகிற பொறுக்கி என்று சொன்னார் பெரியார். எனவே மேடையில் பேசுகின்றபொழுது கடுமையாகப் பேசுவார். அவ்வளவு கடுமையாகப் பேசுகின்ற மனிதனை தனியாகப் போய்ப் பார்த்து விட்டால் அவ்வளவு மென்மையாகவும், பண்பாகவும், இனிமையாகவும் பேசுகிற ஒரு பெரிய மனிதரை இதுவரையில் என் வாழ்வில் சந்தித்ததே கிடையாது. அந்தக் குணம் காந்திக்கும் இருந்தது. அதனால் 20 வயது இளைஞன் இப்படி கேள்வி எழுப்பியிருக்கிறான் என்பதற்காக அந்தக் கடிதத்தை கிழித்துப் போடவில்லை.

அந்த காந்தி அதற்கு பதில் எழுதினார். “இரவு 9.30 மணிக்கு உன் கடிதத்தை எடுத்தேன். ஆசிரமத்தில் படித்தேன். மூன்று மணி வரை உன் கடிதம் குறித்தே சிந்தித்தேன். உன் கடிதம் என்னைத் தூங்கவிடவில்லை. உண்மையை ஒப்புக் கொள்கிறேன். வர்ணாஸ்ரமதர்மத்தில் பெண்களுக்கு சம உரிமை கிடையாது என்று நீ சொன்னதுதான் உண்மை. உன் கருத்தை ஏற்றுக் கொள்ளுகிறேன்” என்று காந்தி கடிதம் எழுதினார்.

அதற்குப் பிறகு 1927-ல் நண்பர்களே, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்வதற்காக காந்தி காரைக்குடி வருகிறார். காரைக்குடியில் ஜீவாவைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஏ.வி.எம்., செட்டியாருடைய வீட்டில் இருக்கிறார். சட்டை போடாத கணேசன், சாவன்னா கணேசன் இருந்தாரே அவர் நின்று கொண்டு இருக்கிறார். சாவன்னா கணேசனைப் பார்த்து காந்தி சொல்லுகிறார், இங்கே ஜீவானந்தம் என்கிற ஒருவர் இருக்கிறாரா? ஆம் இருக்கிறார். அவரை நான் பார்க்க வேண்டுமே என்கிறார். நீங்கள் விரும்பினால் இப்பவே அவரை அழைத்து வருகிறேன் என்று சா. கணேசன் சொன்னார். நீங்கள் போய் அவரை அழைத்துக் கொண்டு வரவேண்டாம். அவர் இருக்கும் இடத்தைக் காட்டுங்கள் நான் அவரைப் போய் பார்க்க வேண்டும் என்று சொன்னார். போய்ப் பார்த்தார். இரண்டு பேருமே உட்கார்ந்து பேசினார்கள்.

இதுவும் பெரியாருக்குப் பொருத்தமான செய்தி என்பதனால்தான் உங்களுக்குச் சொல்லுகிறேன். காந்தியும் ஜீவாவும் நேரில் சந்தித்துப் பேசினார்கள். பேசுகிறபொழுது ஜீவா ‘மகாத்மா’ காந்தியைப் பார்த்து கேட்கிறார், பகவத்கீதையில் எனக்கு ஒரு சந்தேகம். உங்களிடமிருந்து விளக்கம் பெற விரும்புகிறேன் என்றார். கேளுங்கள் என்றார். ஒன்றும் இல்லை, ‘சதுர்வர்ணம் மயோசிர்ஷ்டம் குணதர்ம விபாகச’ என்று பகவத் கீதையில் பகவான் சொன்னதாக வருகிறதே, இதற்கு என்ன பொருள். ‘வருணங்கள் நான்கு. இந்த நான்கு வருணங்களும் பிறப்பை அடிப்படையாகக் கொண்டவை இல்லை. பிராமணனாகப் பிறந்தவன் இழிந்த ஒழுக்கத்தில் ஈடுபட்டால் இழிந்த செயல்களில் இறங்கிவிட்டால் அவன் சூத்திரனாகி விடுகிறான். சூத்திரனாக இருப்பவன் சான்றான்மை மிக்க ஒழுக்கத்தோடு சமூக வீதியில் நடந்தால் பிராமணன் ஆகிவிடுகிறான்’ என்பதுதானே பொருள். அதைத் தானே பகவான் கிருஷ்ணன் இதில் சொல்லுகிறார் என்று ஜீவா காந்தியிடம் கேட்டார்.

உடனே காந்தி சொன்னார், ‘இல்லை, இல்லை. அது அப்படி பொருள் இல்லை’ என்றார். பிறகு எப்படிப் பொருள் என்று கேட்டார். ‘ஒரு பிராமணன், பிராமணனுக்குரிய நியமங்களோடு நடந்தால் அவர் நல்ல பிராமணன். அந்த பிராமணன் பிராமணனுக்குரிய நியமங்களிலிருந்து தவறினால் அவன் கெட்ட பிராமணன்.’ ஜீவா சொல்லுகிறார், ‘நீங்கள் வைசிய குலத்திலே பிறந்தவர். ஆனால் ஒரு பிராமணனைவிட ஒழுக்கம் சார்ந்தவராக இருக்கிறீர்கள். எனவே நீங்கள் நல்ல பிராமணர் என்று சொல்லலாம் இல்லையா. உங்களை பிராமணர் என்று நான் சொல்லலாம் இல்லையா’ என்று கேட்டதற்கு காந்தி சொன்னார், ‘இல்லை என்னை வேண்டுமானால் நல்ல வைசியன் என்று சொல்லலாமே ஒழிய பிராமனன் என்று சொல்லக் கூடாது. பிராமணன், பிராமணன் தான். அவன் நல்லவற்றைச் செய்தால் நல்ல பிராமணன். கெட்டவற்றைச் செய்தால் கெட்ட பிராமணன். வைசியன் நல்லவற்றைச் செய்தால் நல்ல வைசியன், அல்லதைச் செய்தால் கெட்ட வைசியன்’ என்று சொன்னபொழுது, காந்தி வர்ணாசிரம தர்மத்தின் பாதுகாவலர் என்கிற புரிதல் ஜீவாவிற்கு வந்துவிட்டது! அந்தப் புரிதல் என்று வந்ததோ அன்றே ஜீவா காந்தியை விட்டு விட்டு பெரியாரோடு வந்து சேருகிறார்.

நண்பர்களே, ஜீவா பெரியாரையும் விட்டு பிரிந்தார் என்பதும் வரலாற்றுண்மை. பெரியாரை விட்டு ஏன் பிரிந்தார்? திருத்துறைப்பூண்டி மாநாட்டில் பெரியாரை உட்கார வைத்துக் கொண்டே பேசினார் ஜீவா. வெறும் சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு, பிராமண எதிர்ப்பு என்று பேசிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை. சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும். ஒரு பக்கம் சாதிகளைத் தகர்த்து சாதிய சமத்துவம், இன்னொரு பக்கம் வர்க்க வேற்றுமைகளைத் தகர்த்து சமத்துவம் என்று இரண்டு பக்கமும் நாம் போராட வேண்டும். அதனால் கம்யூனிச தத்துவங்களையும் நாம் ஏற்க வேண்டும் என்றார். இந்த தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுகளுக்கே தெரியாத செய்தி. பழைய கம்யூனிஸ்டுகளுக்குத் தெரியும். புதிய கம்யூனிஸ்டுகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. எந்த ஒரு இயக்கத்திலும் புதிதாக வருகிறவர்கள் பின்னாலே திரும்பி பார்ப்பது கிடையாது.

இந்த தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டு கருத்துகளை கொண்டு வந்து சேர்த்த பெருமைக்குரிய ஒரு மனிதர் உண்டென்றால் பெரியார்தான். சிங்காரவேலர் எழுதிய கட்டுரைகளை தன்னுடைய குடிஅரசு பத்திரிகையிலே தொடர்ந்து போட்டு கம்யூனிசக் கொள்கைகளுக்கு இந்த மண்ணில் இடம் தேடிக் கொடுத்தவர் பெரியார். நான் ஏன் நாத்திகன் என்று பகத்சிங் சிறையிலே எழுதிய அற்புதமான ஒரு படைப்பை தமிழில் ஜீவாவை வைத்து மொழி பெயர்க்கச் சொல்லி குடிஅரசு பதிப்பகத்தின் மூலமாக கொண்டு வந்து சேர்த்தவர் பெரியார்.

சோவியத் ரசியாவிற்கு சென்று ரசியாவிலே இருக்கிற சமத்துவ சமுதாயத்தைப் பார்த்து அதே போன்ற சமுதாயம் இந்த மண்ணிலே தழைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவரும் பெரியார். குழந்தைகளுக்குப் பெயர் வைக்கச் சொன்னால் மாஸ்கோ என்று பெயர் வைத்தவர். எனவே பெரியார் கம்யூனிசத்திற்கு எதிரி அல்ல. ஆனால் பெரியார் என்ன நினைத்தார், வர்க்க வேற்றுமைகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் சாதி வேற்றுமைகளை அழித்தொழிக்க வேண்டும் என்று நினைத்தார். அந்த சாதி வேற்றுமைகள் இன்றைக்கு அழிந்திருக்கிறதா? அழிந்தது போல் ஒரு மாயத் தோற்றம் இருக்கிறதே தவிர, அது இன்னும் அழியவில்லை. இன்றைக்கு இருக்கும் இளைஞர்களிடம் நான் பார்க்கிறேன். ஒரு ஆரோக்கியமான சிந்தனைதான் அது. எவனும் இப்பொழுது இராமசாமி நாயக்கர் என்று போட்டுக் கொள்வதில்லை. எவனும் கோவிந்தசாமி முதலியார் என்று போட்டுக் கொள்வதில்லை.

எவனும் கிருஷ்ணசாமி படையாச்சி என்று போட்டுக் கொள்வதில்லை. சாதி பெயரை தனக்குப் பின்னால் வைத்துக் கொள்வதற்கு கூச்சம் இருக்கிறது. அப்படியானால் இந்த சாதியை விட்டு விட்டானா என்றால் இல்லை. வெளியே சாதியைச் சொல்லக் கூசுகிற அவனுடைய உள்ளம், இன்னும் அந்த சாதியிலேதான் ஊறிக் கிடக்கிறது. அந்த சாதியம் என்கிற ஆணிவேரை அறுக்க வேண்டும் என்றால், பெரியாருடைய கருத்துக்களை கொண்டு போய்ச் சேர்ப்பதைத் தவிர வேறெந்த வழியும் கிடையாது. ஆணுக்கு பெண் சமம் என்கிற சூழலை உருவாக்க வேண்டும் என்றால் பெரியாரை விட இன்னொரு மனிதர் பேசவில்லை. (கைதட்டல்)

நான் பாரதியாரைப் படித்தவன். பாரதியாரின் எழுத்துக்களை ஆதர்சமாக ஏற்றவன். அந்த பாரதி பெண்ணுக்காகப் பாடினான். பெண்ணுக்காகப் போராடினான். ஆனால் பாரதியே சிந்திக்காதவையெல்லாம் சேர்த்து சிந்தித்து பெண்களுக்காகப் பேசினார் பெரியார். ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்கிற பெரியாரின் படைப்பை இன்றைய இளைஞர்களிடம் நீங்கள் கொடுத்துப் படிக்கச் சொல்ல வேண்டும். அதைவிட புரட்சிகரமான கருத்துக்ளை பெண்ணியம் பேசுகிற யாரும் இன்று சொல்லிவிட முடியாது. கற்பு என்பதற்கு அவரைவிட அழுத்தமாகச் சொன்னவர் எவருமில்லை. அவற்றையெல்லாம் உள் வாங்கிக் கொண்டதின் விளைவாகத்தான் ‘ஆனந்த விகடனி’ல் ‘ஊருக்கு நல்லது சொல்லுவேன்’ என்ற தொடர் எழுதுகின்ற பொழுது கற்பு என்ற தலைப்பில் கட்டுரை எழுதியது முழுக்க முழுக்க பெரியாரை உள் வாங்கித்தான்.

கற்பு என்பது காலையிலே கணவனுக்கு முன்னாலே கண்விழித்து கணவனின் கால்களை தட்டி கண்களிலே ஒற்றி தாலியை எடுத்து, கண்களிலே பொத்தி அதற்குப் பிறகு வீட்டிற்கு வெளியே வந்து துடைப்பத்தால் பெருக்கி, சாணம் இட்டு மெழுகி கோலமிட்டு, சமையல் செய்து முடித்து, கணவனை எழுப்பி காப்பி கொடுத்து, கணவனுக்கு சிற்றுண்டி தந்து அவர் உண்டது போக மீதி எச்சிலை உண்டு, கணவனை வழியனுப்பி, வருகிறவரை அவரையே சிந்தித்து கிடந்து, வந்த பிறகும் அவனுக்கு கடனாற்றி, இரவு அவரோடு படுத்து, அதிகாலையில் தொடங்கி இரவு வரையில் ஒரு ஆணின் சுயநலத்திற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு பெண் கரைந்து போகிறாளே, அதுதான் கற்பு என்றால் இல்லை.

கற்பு என்பது என்ன? கரம் பிடித்த ஆணுக்கு பெண் உண்மையாக இருப்பது. கரம் பிடித்த பெண்ணுக்கு ஆண் உண்மையாக இருப்பது. இதற்குப் பெயர் தான் கற்பு. ஒரு பெண்ணை கரம் பிடித்தவன் அந்தப் பெண்ணுக்கு உண்மையாக இல்லை என்று சொன்னால், அவனைத் தூக்கி எறிந்து விட்டு எவன் தனக்கு உண்மையாக இருப்பானோ அவனிடம் போய்ச் சேர்ந்தால் அவள் ஒன்றும் கற்பிழந்தவள் இல்லை. இதை இன்று நாம் பேசலாம். ஆனால் இவற்றையெல்லாம் பெரியார் என்று பேசினார் என்பதைத்தான் பார்க்க வேண்டும். ஒரு நூறாண்டுகளுக்கு முன்னாலே எவனும் பேச முடியாத, எவனும் சிந்திக்க முடியாததையெல்லாம் தெளிவாகப் பேசினார்.

பெரியார் மரண வாக்குமூலத்திலிருந்து பெரியாரே சொல்லுகிறார், ‘நான் ஏன் பொது வாழ்க்கைக்கு வந்தேன்’. அவரே அழகாகச் சொன்னார், மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக இந்த திராவிட சமுதாயத்தை உயர்த்துவதை என் மேல் போட்டுக் கொண்டு அதே பணியாக செய்து கொண்டிருப்பவன் நான் என்றார். பொது வாழ்வில் ஈடுபட்டால் உங்களுக்கு என்று நெறி, குறி, இலக்கு, பாதை, பயணம் இருக்க வேண்டும். நெறியற்றும், குடியற்றும், பாதையற்றும், பயணமற்றும் தான் இன்றைக்கு பதவிச் சுகம் தேடி பொது வாழ்க்கையில் பல பேர் இருக்கிறார்கள்.

ஒரு குறியும் நெறியும் இருக்க வேண்டும். பெரியாருக்கு ஒரு குறியும் நெறியும் இருந்தது. தெளிவாகச் சொன்னார், மானமும் அறிவும் உள்ளவனாக இந்த திராவிட சமுதாயத்திலுள்ள ஒவ்வொருவனும் உருவாக வேண்டும் என்கிற பணியை நான் மேற்கொண்டு இருக்கிறேன் என்றார். தமிழனுக்காகப் பேசுகிறாயே நீ தமிழனா என்று கேட்டார்கள் எதிரிகள். பெரியார் தெளிவாகச் சொன்னார். நான் தமிழன் இல்லை. நான் கன்னடத்து பலிஜா நாயுடுதான் நாயக்கர்தான். நான் தமிழன் இல்லை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இந்த தமிழ்ச் சமுதாயத்தை மேன்மைப்படுத்துவதற்கு வேறு எந்த தமிழனுக்கும் யோக்கியதை இல்லாததனால் நான் வந்து நிற்கிறேன் என்று சொன்னார்.

எந்தத் தலைவராவது கூட்டம் போட்டு பேசினால் எதிரே உட்கார்ந்திருக்கும் ஒருவன் எழுந்து எனக்கு ஒரு சந்தேகம் அய்யா, நான் கேட்கட்டுமா என்று கேட்டால், அவரைச் சுற்றி இருக்கும் தொண்டர் கூட்டம் விடுமா, சந்தேகம் கேட்கக் கூடாது. சந்தேகத்திற்கு இடமே இருக்கக் கூடாது. ஆனால், பெரியார் பேசிய தொடக்கக் காலங்களில் கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். நான் பல கூட்டங்களில் மாணவப் பருவத்திலே பெரியாருடைய கூட்டங்களை கேட்டிருக்கிறேன். பக்கத்திலிருந்து பார்த்திருக்கிறேன். எழுதி எழுதி அனுப்புவார்கள். எல்லா கேள்விகளுக்கும் பதில் கொடுத்தார்.

(அடுத்த இதழில் முடியும்)

தொகுப்பு: பொள்ளாச்சி பிரகாசு



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com