Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
அக்டோபர் 2006

இட ஒதுக்கீடு - வரலாற்று உண்மைகள்

கொளத்தூர் மணி

சமூகநீதியான இடஒதுக்கீட்டு உரிமையைத் தொடர்ந்து பார்ப்பனர்கள் தடுத்து வந்த வரலாற்றை சென்னை மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி விளக்கினார். அவரது உரை:

இன்று மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் சிறப்புடன் நடந்து முடிந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக அறிவியலை, பெரியாரியலை மக்களுக்கு கொடுப்பதற்கான ஒரு நூலகத்தை தோழர் பத்ரி அவர்கள் நினைவாக அமைத்துள்ளீர்கள். கழகத்தின் களப்பணியில் மறைந்து போன குமார், கண்ணன் ஆகியோர் நினைவாக நூலகத்துக்கு அருகே ஒரு மேடையை நிறுவியுள்ளீர்கள். கழகத்துக்காக உழைத்தவர்களின் தொண்டினை நினைவு கூரும் வகையில் இவைகளை தோழர்கள் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு கழகத்தின் நன்றியையும் பாராட்டுகளையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறோம்.

பெரியார் திராவிடர் கழகம் துவக்கப்பட்ட பிறகு பல்வேறு பணிகளை நாம் தொடர்ந்து மேற்கொண்டோம். விநாயகர் ஊர்வலத்துக்கு எதிர்ப்பு; அறநிலையத் துறையில் பணியேற்கக் கூட மறுக்கப்பட்டு வந்த பெண்களுக்கு அந்தத் துறையில் இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தோம். அதற்காக வழக்கு நடத்தி வெற்றி பெற்றோம். வேத சோதிடக் கல்வியை பல்கலையில் பாடமாக்கியதை எதிர்த்து, பஞ்சாங்க எரிப்புப் போராட்டம் நடத்தினோம். கடற்கரையில் கண்ணகி சிலையை எடுத்தபோது பல்வேறு இயக்கங்கள் எல்லாம் அதை வேறு மாதிரி பார்த்த போது நாம் அதை முன் வைத்து ‘வாஸ்து மோசடி’ கூட்டங்களை நடத்தி அதை மக்கள் மத்தியில் கொண்டு சென்றோம். அதைவிட குறிப்பாக கலைஞர் ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் அறிவித்த அறிவிப்புகளில் ஒன்றான, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டதிருத்தம் வருவதற்காக அதைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்குள் கருவறை நுழைவு போராட்டம் நடத்தி 865 பேர் கைதானோம்.

அதைத் தொடர்ந்து சம்பூகன் சமூகநீதிப் பயணத்தின் வழியாக, தனியார் துறை இட ஒதுக்கீட்டை பற்றிய பிரச்சார இயக்கத்தை நடத்தினோம். பெரியார் எழுத்தும் பேச்சுகளும் அடங்கிய ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளியிட்டு வருகிறோம். சங் பரிவாரங்களின் சதிராட்டத்தை விளக்குகிற நூலையும் அதற்கடுத்து சாவர்க்கரை பற்றிய விவாதங்கள் வந்தபோது அவரைப் படம்பிடித்துக் காட்டும் சாவர்க்கர் யார்? என்ற நூலையும், இப்போது பேசப்படுகிற ஈழச் சிக்கலில் ஒப்பந்தங்களை சீர் குலைத்தது யார்? என்பதை விளக்குகிற நூலையும் நம்முடைய கழகப் பொதுச்செயலாளர் தோழர் இராசேந்திரன் விரிவாக எழுதினார். அந்த நூல்களை எல்லாம் பதிப்பித்து கழகம் மக்கள் மத்தியிலே கொண்டு சென்றது. இப்போது ‘சோதிடப் புரட்டு’ என்ற நூலையும் வெளியிட்டு இருக்கிறோம். 600 பக்கங்களைக் கொண்ட அந்த அரிய நூல், தெளிந்த அறிவியல் விளக்கங்களோடு எழுதப்பட்ட நூலாகும். அப்படி ஒரு பக்கம் நமது இயக்க வேலைகள் நடக்கின்றன.

நம்முடைய உரிமைகளைப் பெறவிடாமல் பார்ப்பனர்கள் தொடர்ந்து தடுத்து வந்திருக்கிறார்கள். அவர்களின் சூழ்ச்சிகளில் இருந்து நம்முடைய உரிமைகளை மீட்பதற்காக தொடர்ந்து பெரியார் போராடினார். பெரியார் சொல்லுவார் ‘இந்த நிறுத்தத்தில், இந்த ஸ்டேசனில் இரயில் ஏறினவன், அடுத்த ஸ்டேசனில் அதே கட்டணத்தை செலுத்தி விட்டு இரயில் ஏறியவனுக்கு இடம் கொடுக்க மாட்டான். இடம் கொடுக்காதிருக்க என்னென்னவோ ஏமாற்று வேலைகளை செய்வான். தூங்குவதுபோல் நடிப்பான். தட்டித் தூக்கி உட்கார வைத்தால்தான் இடம் கிடைக்கும். ஒரு ஸ்டேசன் முன்னால் ஏறியவனுக்கு இடம் கொடுக்க முன் வராத போது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் அனுபவித்துக் கொண்டிருந்தவன் எளிதில் விட்டுவிடுவானா? என்று பெரியார் கேட்டார்.

1921-ல் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி அரசு வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணையை கொண்டு வந்தது. 1922-ல் ஆணை பிறப்பித்தது. ஆனால் அதை நிறைவேற்ற முடியவில்லை. காரணம் நிறைவேற்ற வேண்டிய இடத்தில் இருந்த அதிகாரிகள் பார்ப்பனர்களாக இருந்தார்கள். அதற்குப் பின்னால்தான் இதைப் புரிந்து கொண்டு ஆட்களை தேர்ந்தெடுப்பதற்கு தனியாக ஒரு குழுவை (அதுதான் இப்பொழுது தமிழ்நாடு தேர்வாணையமாக வந்திருக்கிறது) நியமித்து அதற்குப் பிறகு சட்டம் இயற்றி அதை நிறைவேற்ற வைத்தார்கள். அப்படிப் பார்ப்பனர்களின் தடையை நாம் தாண்டினோம். அதற்குப் பிறகு மதிப்பெண்களை மட்டும் பார்க்காமல், நேர்காணல் முறை ஒன்றை கொண்டு வந்தார்கள். அதற்கு ஒரு குழுவை நியமித்து நேர்காணலுக்கு 150 மதிப்பெண் என வைத்தார்கள். ஆனால் அதைப் பிறகு ஆட்சிக்கு வந்த ராஜாஜி ஒழித்துக் கட்டினார். நேர்காணல் மூலம் கிடைத்த மதிப்பெண் முறையை ரத்து செய்தார்.

தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்களில் இந்தியை புகுத்தினார். அது மட்டுமல்ல மதுவிலக்கு கொள்கைகளை கொண்டு வருகிறேன் என்று சொல்லி சேலம் மாவட்டத்தில் மட்டும் மது விலக்கை அமுல்படுத்தி விட்டு அதனால் வருகிற வருவாய் இழப்பைக் காரணம் காட்டி கிராமப் பகுதியில் இருந்த 2000 பள்ளிக் கூடங்களை ராஜாஜி மூடினார். அவர் பங்குக்கு நாம் கல்வி பெறுவதை அவர் இப்படி எல்லாம் தடுத்தார். அதைத் தொடர்ந்து நம்முடைய நீதிக்கட்சித் தலைவர்களும் பெரியாரும் எடுத்த முயற்சியினால் சென்னை மாகாண அரசில் மட்டுமில்லாமல் சென்னை மாகாணத்தில் இயங்குகிற மத்திய அரசு நிறுவனங்களான இரயில்வேக்களில் வங்கிகளில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தனர். மாநில அரசு பணிகளில் மட்டுமில்லை. மத்திய அரசு பணிகளிலும், சென்னை மாகாணத்தில் மட்டும் இடஒதுக்கீடு தரும் சிறப்பான ஆணை ஒன்று மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்டது. 1936-ல் இது அமுலுக்கு வந்தது. ராஜாஜி ஆட்சிக்கு வந்ததும் இதை எல்லாம் பறித்தார்.

அதற்குப் பின்னால் இரண்டாம் உலகப் போர். அதைத் தொடர்ந்து காங்கிரசு ஆட்சியில் ஓமந்தூர் ராமசாமி முதல்வராக வந்தார். அவரும் காங்கிரஸ்காரர் என்றாலும் பார்ப்பன எதிர்ப்புணர்வு கொண்டவர். தமிழர் ஆதரவு கொள்கையின் காரணமாக அவர் மீண்டும் நேர்காணல் முறையைக் கொண்டு வந்தார். அவர்தான் முதலில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தனியாக இடஒதுக்கீட்டை அறிவித்தார். இப்படி நம்முடைய பார்ப்பனரல்லாத மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றிய நிலையில், இந்தியா “விடுதலை” பெற்றது. அப்போது பெரியார் சொன்ன கருத்துக்கள் நமக்குத் தெரியும். அது பார்ப்பன - பனியாக்களுக்கான விடுதலை, நமக்கு துக்க நாள் என்றார். அந்த விடுதலை வந்து ஒன்றரை மாதங்களில் மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கு இருந்து வந்த ஒதுக்கீட்டை பறித்துவிட்டார்கள். மத்திய அரசு பணிகளில் இருந்த ஒதுக்கீட்டை டெல்லியில் இருக்கிற எல்லா துறைகளும் ரத்து செய்தது. ‘சுதந்திரம்’ கிடைத்தவுடன், ஒன்றரை மாதம் கூட அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அப்படிப்பட்ட பார்ப்பனர்கள்தான் தொடர்ந்து நமது உரிமைகளுக்கு தடை போட்டு வருகிறார்கள்.

1952 இல் காங்கிரஸ் ஆட்சி வந்தது. இராசாசி மீண்டும் முதல்வராக வந்தார். 6000 பள்ளிக்கூடங்களை மூடினார். அரை நேரம் படி, அரை நேரம் குலத் தொழிலை செய் என்றார். இப்படியான தடை மட்டும் அல்லாமல் ஓமந்தூரார் கொண்டு வந்த நேர்காணல் முறையையும் ரத்து செய்தார். பிறகு காமராசர் வந்து அதை மாற்றினார். இப்படி அவர்களுக்கு என்னென்ன முறைகளில் எல்லாம் முடிகிறதோ அந்தந்த முறைகளில் தடுத்து வந்தவர்கள் பார்ப்பனர்கள். கல்வியில் இட ஒதுக்கீடு இல்லாத அரசியல் சட்டம் தான் 1950-ல் நடைமுறைக்கு வந்தது. சட்டமன்றம், நாடாளுமன்றங்களுக்கு சென்றிராதப் பெரியார் நடத்திய போராட்டத்தால் 1951-ல் முதல் அரசியல் சட்டத்தின் வழியாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனைவருக்கும் கல்வி உரிமையை பெற்றுத்தர வழி வகை செய்தது. 1951-லே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் சட்டம் வந்து இன்று 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. 1994 வரையில் இடஒதுக்கீடு இல்லை. சென்ற ஆண்டு சட்டத்திருத்தம் வந்த பிறகு, மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை அது உறுதி செய்தது. அதையும் அமுலாக்க விடாமல் தடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். என்ன நியாயம்?

அதிலேயே உயர்கல்வி நிறுவனங்கள் என்று சிலவற்றை சொல்லிக் கொள்கிறார்கள். அது மத்திய அரசு பல்கலைக்கழகங்கள் அய்.அய்.டி. போன்றவை ஏ.அய்., அய்.எம்.எஸ். போன்றவை இந்த உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வருவதற்கு ஒப்புக் கொள்ள மாட்டோம் என்கிறார்கள். எதற்கு வந்தால் கூட இதற்கு வரக் கூடாது என்கிறார்கள். இதை எதிர்த்து, ஒரு நூறு பேர் நடத்திய போராட்டத்தை இந்தியாவையே உலுக்குகிற போராட்டமாக நம்முடைய தொலைக்காட்சிகளும் செய்தி ஊடகங்களும் நமக்குக் காட்டின. செருப்புத் துடைக்கவும், தெருக்கூட்டுவதற்கும் நாங்கள் போக வேண்டுமா என்று போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் அவ்வளவு வேகம் காட்டினார்கள். ஆனால் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான போராட்டங்களை நாம் தீவிரமாக எடுக்கவே இல்லை. எல்லாவற்றையும் சட்டம் பார்த்துக் கொள்ளும், அரசியல் கட்சிகள் பார்த்துக் கொள்ளும் என்று நாம் தெருக்களுக்கு வரவில்லை.

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு செய்து மத்திய அரசே சட்டத்திருத்தம் கொண்டு வந்துவிட்டது. ஆனாலும் அதை நடைமுறைப்படுத்துவதற்காக மொய்லி குழுவைப் போடுகிறார்கள். அது பற்றி ஆலோசிப்பதற்கு ஒரு குழுவாம். எந்த அய்க்கிய முற்போக்கு கூட்டணி அந்த சட்டதிருத்தத்தைக் கொண்டு வந்ததோ, அதே அணியில் இருக்கக்கூடிய உயர்சாதிக்காரர்கள், பார்ப்பனர்கள் இதை எதிர்க்கிறார்கள். வடநாட்டிலுள்ள பிரணாப் முகர்ஜி, பரத்வாஜ்கள் ஆனாலும், தமிழ்நாட்டில் ப.சிதம்பரங்கள் ஆனாலும் அவர்கள் உயர்சாதிக்காரர்கள் தான். தங்கள் ஆதிக்கம் குலைந்துவிடக் கூடாது என்பதற்காகவே அந்தக் குழு நியமிக்கப்பட்டது. வீரப்ப மொய்லி குழு அறிக்கை தந்திருப்பதாக செய்திகள் வருகிறது.

55 ஆண்டுகாலம் நாம் அனுபவிக்காத இந்த இடஒதுக்கீட்டை இப்போது தான் அனுபவிக்கப் போகிறோம். நம்மவர்கள் உள்ளே நுழையப் போகிறார்கள். மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் 60 விழுக்காடு கொண்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடுதான் அந்த நிலையிலும் கூட இந்த ஆண்டு 5 விழுக்காடு அடுத்த ஆண்டு
10 விழுக்காடு, அதற்கடுத்த ஆண்டு 12 விழுக்காடு அமுல்படுத்தப்படும் என்று சொல்லுகிறார்கள்.

இந்தியாவில் மொத்தம் 17 மத்திய பல்கலைக் கழகங்கள் நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றில் 1,42,757 மாணவர் கல்வி பயில்கிறார்கள். மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 15 சதவீதம் பழங்குடி மக்களுக்கு 7 புள்ளி 5, ஆக மொத்தம் 22 புள்ளி 5 விழுக்காடுதான் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மீதி 77 புள்ளி 5 இடங்களை பார்ப்பனர்கள் உயர்சாதிக்காரர்கள் அனுபவித்து வந்தார்கள். அது குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வீரப்ப மொய்லி குழு பரிந்துரை செய்கிறது. 100 இடங்களில் 77 அனுபவித்தவனுக்கு இப்பொழுது 27 போச்சுனா 50 தான் அவனுக்கு வரும். ஆனாலும் அவனுக்கு 77 குறையக் கூடாதாம். யாருக்கு 100க்கு 10 பேராக இருக்குற உயர்சாதிக்காரர்களுக்கு ஒரு மத்திய அரசு தான் கொண்டு வந்த சட்டத்தை நாடாளுமன்றம் ஒரு மனதாக நிறைவேற்றிய சட்டத்தை அதை அமுலாக்காமலிருப்பதற்கு எத்தனை பித்தலாட்டங்கள், பார்த்தீர்களா? அவனுக்கு 77 இடம் குறையக் கூடாது. எனவே அவர்களுக்கான இடத்தை 154 ஆக உயர்த்துவார்களாம். அப்படியானால் 50 சதவீத இட ஒதுக்கீடு என்றாலும் அவனுக்கு 77 கிடைத்து விடும்.

27 சதவீத ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்று கலைஞர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் இராமதாசு டெல்லிக்குப் போனார் எல்லோரையும் பார்த்தார் அவரும் முயற்சிகள் எடுத்தார். நாம் என்ன முயற்சிகளை மேற்கொண்டோம் என்று பார்த்தால் பெரிதும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலையில்தான் வீரப்பமொய்லி பரிந்துரை வந்திருக்கிறது. அகில இந்திய சர்வீசுகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தின் அனுமதியோடு 1994-ல்தான் அமுலுக்கு வந்தது. அதை அமுல்படுத்துவதில்கூட பித்தலாட்டங்களை செய்திருக்கிறார்கள். என்ன பித்தலாட்டம் செய்தார்கள் என்பதை வடக்கே சரத்யாதவ் என்கிற முன்னாள் மத்திய அமைச்சரும், தெற்கே சென்னை முன்னாள் பல்கலைக் கழக துணைவேந்தர் சாதிக் அவர்களும் ஆய்வு செய்து எழுதியிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு அகில இந்திய சர்வீசுகளில், 425 இடங்களுக்கு, தேர்வு நடைபெற்றது. இதில் திறந்த போட்டிக்கான இடங்கள் 264. மற்றவை தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டுக்கான இடங்கள். இதில் மார்க் தகுதி அடிப்படையிலேயே 40 பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, திறந்த போட்டியிலேயே இடம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இவர்களை பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக்குத் தள்ளிவிட்டார்கள். முதலில் திறந்த போட்டிக்கான இடங்களை நிரப்பிவிட்டு, பிறகுதான், இடஒதுக்கீட்டுக்கான இடங்களை நிரப்ப வேண்டும் என்று தெளிவான அரசு ஆணை இருக்கிறது. வி.பி.சிங் தான் இந்த ஆணையைப் பிறப்பித்தார். ஆனாலும், அந்த ஆணையைப் புறக்கணித்துவிட்டு, கடந்த 12 ஆண்டுகளாக திறந்த போட்டியில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களையே இடம் பெறாமல் தடுத்து, முன்னேறிய சாதியினரைக் கொண்டே நிரப்பி, இந்த மக்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய கூடுதல் இடங்களைப் பறித்து வந்திருக்கிறார்கள்.

உச்சநீதிமன்றத்தின் வழியாக மற்றொரு மோசடியும் அம்பலமாகியுள்ளது. எழுத்துத் தேர்வில், அதிக மதிப்பெண்களை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பெற்று, தேர்வு பெற்றிருந்தாலும், நேர்முகப் பேட்டியின் போது குழுவிலே இடம் பெற்றுள்ள பார்ப்பன, உயர்சாதியினர், மதிப்பெண்களைக் குறைத்துப் போட்டு, தேர்ச்சி பெற முடியாமல் தடுத்து விடுகிறார்கள். எழுத்துத் தேர்வு எல்லோருக்கும் பொதுவாகவே நடக்கிறது. ஆனால் நேர்முகத் தேர்வு மட்டும், இடஒதுக்கீட்டின் கீழ்வருவோருக்கு தனியாக பிரித்து நடத்தப்படுகிறது. எனவே தலித் மாணவர்களை குழுவினர் அடையாளம் காண முடிகிறது. எழுத்துத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற ஒரு தலித் மாணவர் நேர்முகத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், இடம் கிடைக்காமல் போய்விட்டது. தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இவர் வழக்கு தொடர்ந்தார்.

நேர்முகத் தேர்வில் வழங்கப்பட்ட மதிப்பெண்களின் பட்டியலை, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தேர்வுக்குழு முன்வரவில்லை. இந்த நிலையில் அந்த மாணவரே தனது சொந்த முயற்சியில் கடுமையாக உழைத்து, இந்த விவரங்களையெல்லாம் திரட்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது ஒரு அதிர்ச்சியான உண்மை வெளியே வந்தது. தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு, நேர்முகத் தேர்வில் வழங்கப்பட்ட மதிப்பெண், சராசரியாகக் கணக்கிடும்போது 120 தான்! ஆனால், திறந்த போட்டிக்கு வரும் பார்ப்பன உயர்சாதியினருக்கு, தேர்வுக்குழு வழங்கியிருக்கும் சராசரி மதிப்பெண் 200. உச்சநீதி மன்றம் இந்த பாகுபாட்டை உண்மை என்று ஏற்றுக் கொண்டது. பாதிக்கப்பட்ட தலித் மாணவருக்கு வேலை வாய்ப்பை வழங்கவேண்டும் என உத்தரவிட்டது.

இப்படி, பல்வேறு மோசடிகளை சொல்லிக் கொண்டே இருக்க முடியும். ஆனால் நாம் இந்த இடத்தில் சிந்தித்துப் பார்க்க வேண்டியது நமக்கு மண்டல் குழு பரிந்துரையின் வழியாக வெகு நீண்டநாள்களுக்கு பின்னால் 27 விழுக்காடு பரிந்துரைக்கப்பட்டது. அப்பொழுது பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்துக்களில் 44 சதவீதம் பேர்; பிற மதத்தை சார்ந்தவர்கள் 8 சதவீதம். ஆக 52 சதவீதப் பேர் என்று சொன்னார்கள். மண்டல் அப்பொழுது 4349 சாதிகளை பிற்படுத்தப்பட்டவர்களாக பட்டியல்படுத்தினார். அதற்குப் பிறகு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 700 சாதிகளை கூடுதலாக சேர்த்து விட்டார்கள். இதுவரை 1300 சாதியை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிதாக சேர்த்து விட்டார்கள். 52 விழுக்காடு 67 சதவீத அளவுக்கு உயர்ந்துவிட்டது. அப்படியானால் 67 விழுக்காடாக உள்ள மக்களுக்கு 27 விழுக்காடுதான் இடஒதுக்கீடு அதை நிறைவேற்றவேண்டுமானால் 17 ஆயிரம் கோடி செலவு செய்து புதிய இடங்களை உண்டாக்கித் தான் நிறைவேற்ற வேண்டும் என்கிறார்கள்.

ஆனாலும் வரும் ஆண்டில் 5 விழுக்காடுதான் இடம் கொடுப்பேன் என்று சொல்லுகிறான். அதற்கடுத்த ஆண்டு தான் பத்து விழுக்காடு கிடைக்குமாம். மூன்றாண்டுகளுக்குப் பிறகு எப்படி செயல்படுவார்கள் என்று தெரியாது. இப்படி ஒரு பரிந்துரையை வீரப்ப மொய்லி குழு கொடுத்துள்ளது. மண்டல் குழுவோ, ஆழமான ஆய்வுகளை நடத்தி 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமுலாக்க பரிந்துரைத்தது. ஆய்வு நிறுவனங்கள், சமூக விஞ்ஞானிகள் மற்றும் பல்வேறு மாநில அரசுகளை எல்லாம் கலந்து ஆலோசித்து இரண்டு ஆண்டுகள் ஆய்வு செய்து அறிக்கை கொடுத்தது. ஆனால் இரண்டு மாதத்தில் அறிக்கை தயாரிக்க வீரப்ப மொய்லி குழுவோ படிப்படியாக கொடுக்க வேண்டும் என்கிறது. அதுவும் திறந்த போட்டிக்கான இடங்களை உயர்த்த வேண்டும் என்ற நிபந்தனையோடு! இவ்வளவுக்குப் பிறகும் நாம் அமைதியாக இருக்கிறோம். நம்முடைய உரிமையை தொடர்ந்து பறித்துக் கொண்டிருக்கிற பார்ப்பனர்களுக்கு எதிராக அதற்கு துணை போகிற மத்திய அரசுக்கு எதிராக நாமே நம்முடைய உணர்வுகளைக் காட்ட வேண்டாமா? நாம் கிளர்ந்தெழுந்து வீதிக்கு வந்து போராடாமல் இருப்போமேயானால் ஒரு வேளை இப்போது கொடுக்கிற அய்ந்து சதவீதத்தோடுகூட இடஒதுக்கீடு நின்று போகலாம்; ஏனென்றால் கூடுதல் செலவு செய்ய முடியவில்லை என்று காரணம் சொல்லிவிடக் கூடும்.

1250 கல்வி நிறுவனங்களை கட்ட வேண்டும் என்று மொய்லி சொல்கிறார். அதற்கெல்லாம் நேரம் இல்லை.
முடியவில்லை. வேறு செலவு வந்துவிட்டது என்று சமாதானங்களைக் கூறி அய்ந்து சதவீதத்தோடு முடித்தாலும் முடித்து விடுவார்கள். நாம் இப்படியே அமைதியாக இருந்தால்! அதன் காரணமாகத்தான் பெரியார் கருத்துக்களில் இடஒதுக்கீடு சிந்தனைகளில் ஈடுபட்டுள்ள இயக்கங்கள் எல்லாம் இதைப்பற்றி கடுமையாக சிந்திக்கிறார்கள். இந்த பிற்படுத்தப்பட்ட மக்களிடம் செய்தியை முறையாக கொண்டு சென்று அவர்களைக் கிளர்ந்தெழச் செய்யாமல் போனால், இதற்கு கடுமையான போராட்டங்களை முன்னெடுக்காமல் போனால் நாம் தொடர்ந்தும் மத்திய அரசில் எவ்வித பணிகளும் ஏற்க முடியாத நிலைதான் இருக்கும். இப்பொழுதே நாம் பார்க்கிறோம். அரசே ஒரு முடிவெடுத்தாலும் அதிகாரி நிறைவேற்ற மறுக்கிறான்.

மத்திய அரசு கொள்கை ஒன்றாக இருக்கலாம். வெளியுறவுத் துறை வேறொன்று செய்யும். ஈழப் பிரச்சினையில் அதுதானே நடக்கிறது. ஈழச் சிக்கலில் மத்திய அரசு ஒரு முடிவை எடுத்தால் அதன் கட்டுப்பாட்டில் இருக்கிற ‘ரா’ போன்ற நிறுவனங்கள் அவர்கள் விருப்பத்திற்கு ஈழ சிக்கலில் வேறு முடிவுகளை எடுக்கிறார்கள். மத்திய அரசு கருத்து பற்றி அவனுக்கு கவலை இல்லை. அப்படிப்பட்ட இடங்களில் நம்மவர்கள் கொஞ்சமாவது நுழைவதற்கு, அந்த கல்வி நிறுவனங்களில் நம்மவர்கள் நுழைவதற்கும் ஏற்படுகிற தடையைக் கண்டு நாம் அமைதியாக இருக்கலாமா? யாராவது செய்வார்கள். நாம் ஜூலை ஆகஸ்டு மாதங்களில் மட்டும் நம்முடைய பையனுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்குமா, கட் ஆப் மார்க் என்ன என்று பேசுவதைத் தவிர நமது மாணவர்களோ பெற்றோர்களோ மற்ற 10 மாதங்களில் அதைப்பற்றி அக்கறை காட்டுவதே இல்லை. இந்த நிலை நீடிக்குமேயானால் நம்முடைய வருங்கால சமுதாயம் என்னாகும்? மத்திய அரசுத் துறையில் பணிகள் என்பது மிகக் குறைந்த விழுக்காடுதான். தனியார் துறையில்தான் எல்லா வேலை வாய்ப்புகளும் இருக்கின்றன; எனவேதான் தனியார் துறையில் இடஒதுக்கீடு வேண்டும் என்று முழக்கமிடுகிறோம்.

1990-லே மண்டல்குழு பரிந்துரை வந்தபோது இங்கே நீதித்துறை செயலாளராக குகன் என்பவர் இருந்தார். அவர் ஒரு அறிக்கை கொடுத்தார். இதனால் பிற்படுத்தப்பட்டோருக்கு எப்படி பயன் கிட்டும் என்பதை அவர் ஆராய்ந்தார். தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளில் 15 விழுக்காடு தான் பிற்படுத்தப் பட்ட மக்கள் இருந்தார்கள். அது 17.5 விழுக்காடாக உயர்வதற்கு 30 ஆண்டுகள் ஆகும் என்று அவர் சொன்னார். காரணம் ஓய்வு பெற்ற இடங்களில்தான் புதிதாக ஆள் சேர்க்கை நடக்கும். புதிதாக பதவி உற்பத்தி என்பது இப்போது இல்லை. எனவே, 15 விழுக்காடு, 17.5 விழுக்காடாக 20 ஆண்டுகள் ஆகும். அதாவது 2020-ல் தான் 17.5 விழுக்காடாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைக்கும். 2040-ல் தான் 20 விழுக்காடாக அது உயரும். எனவே பிற்படுத்தப்பட்ட மக்கள் 27 சதவீத பங்கை எட்டுவதற்கே 100 ஆண்டுகள் ஆகும் என்று அவர் சொன்னார். எனில் 27 சதவீதத்தை அடைந்து விட முடியாது என்று சொன்னார். அதற்கே பார்ப்பனர் எப்படி போராடினார்கள் என்று தெரியும். இப்போது அடுத்த ஆண்டே 27 விழுக்காடு உடனே கல்வி நிறுவனங்களில் வந்து விடும் என்றால் அவன் அமைதியாக இருக்க மாட்டான் என்பதும் நமக்குத் தெரியும். ஆனால், நாம் அமைதியாக இருப்பது நியாயமா? இந்த மொய்லி அறிக்கைக்கு, இப்படிப்பட்ட சூழ்ச்சி திட்டங்களுக்கு நம்முடைய எதிர்ப்பையாவது காட்ட வேண்டாமா? எனவேதான் பெரியார் திராவிடர் கழகம் தன்னுடைய முயற்சியின் ஒரு பங்காக ஒரு போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது என்றார் கொளத்தூர் மணி.

தொகுப்பு: சொ. அன்பு



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com