Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
அக்டோபர் 2006

எல்லை மீறுகிறது, உச்சநீதிமன்றம்

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்கள் வழியாக, இனியும், தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்ட பார்ப்பனர்கள், உச்சநீதி மன்றத்தைத் தங்களின் அதிகார பீடமாக்கிக் கொண்டு விட்டார்கள்.

உச்சநீதிமன்றங்கள் மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றங்களைவிட மேலதிகாரத்தை எடுத்துக் கொண்டு, நாடாளுமன்ற சட்டங்களை - குறிப்பாக தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உரிமை தொடர்பான சட்டங்களை முடக்குவதில் உறுதியாக செயல்பட்டு வருகின்றன. உச்சநீதிமன்றம் ஒவ்வொரு முறையும், தனது தீர்ப்புகளால், ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீடு உரிமைகளைப் பறிப்பதும், அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் வருவதும், சட்டத் திருத்தங்களை எதிர்த்து, பார்ப்பன சக்திகள் நீதிமன்றம் போவதும், அந்த வழக்குகளைப் பயன்படுத்தி, வேறு ஏதாவது ஒடுக்கப்பட்ட உரிமைகளைப் பறிக்க வாய்ப்பிருக்கிறதா என்று கண்டறிந்து உச்சநீதிமன்றங்கள் தீர்ப்பளிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்காக டாக்டர் அம்பேத்கர் தீவிர முயற்சியால் கொண்டு வரப்பட்ட இடஒதுக்கீட்டில், ‘கிரிமீலேயர்’ என்ற பொருளாதார வரம்பை இப்போது உச்சநீதிமன்றம் புகுத்திவிட்டது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு எதிராக உச்சநீதி மன்றம், இந்தப் பேரிடியான தீர்ப்பை அறிவித்த நாள் அக்.19, 2006. அரசியல் சட்டத்தின் 77, 81, 82, 85வது திருத்தங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இது. தலைமை நீதிபதி ஒய்.கே.சாபர்வால், நீதிபதிகள் கே.ஜி. பாலகிருஷ்ணன், எஸ்.எச். கபாடியா, சி.கே.தாக்கர், பி.கே.பாலசுப்ரமணியம் ஆகியோரடங்கிய 5 பேர் அமர்வு - ஒரு மனதாக தீர்ப்பை வழங்கியுள்ளது. 5 பேர் கொண்ட இந்த அமர்வுக்காக தீர்ப்பை எழுதிய நீதிபதி எஸ்.எச். கபாடியா.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான வேலை வாய்ப்புகளிலும் சரி, பதவி உயர்விலும் சரி, ‘கிரிமிலேயர்’ என்ற பொருளாதாரத்தில் வளர்ந்த பிரிவினரை இடஒதுக்கீட்டுப் பிரிவிலிருந்தே நீக்கிட வேண்டும் என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், இடஒதுக்கீடு, மொத்தத்தில் 50 சதவீதத்துக்கும் மேலே போகக் கூடாது என்று உச்ச வரம்பை வலியுறுத்தியிருக்கிறது.

தனியார் பொறியியல் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் - இப்போது தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களின் வேலை வாய்ப்பு பதவி உயர்வுகளிலும் தனது ‘அதிகாரத்தை’ நுழைத்திருக்கிறது. நாடு முழுதும் அதிர்ச்சி அலைகளை இத் தீர்ப்பு உருவாக்கியிருக்கிறது. மத்திய அரசு, இத் தீர்ப்புக் குறித்து பரிசீலிக்கும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியிருக்கிறார். காங்கிரஸ் கட்சி, இந்தப் பிரச்சினையில் எந்த நிலையும் எடுக்காமல், அரசு முடிவுக்கே விட்டுவிடும் என்று, காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் பேச்சாளரான அபிஷேக்சிங்வி, ஒதுங்கிக் கொண்டு விட்டார். பிற்படுத்தப்பட்டோருக்கு பொருளாதார வரம்பை வலியுறுத்தி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தாழ்த்தப்பட்டோருக்கு அதைப் புகுத்துவதை எதிர்த்துள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தெலுங்கு தேசம், பா.ம.க. கட்சிகள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன.

அரசியல் கட்சிகள், சமூகநீதி இயக்கங்களைத் தவிர, சட்ட நிபுணர்களும், சமூக நீதியில் நம்பிக்கையுள்ள ஓய்வு பெற்ற நீதிபதிகளும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைக் கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடப்பட வேண்டியதாகும். கர்நாடகத்திலுள்ள சமூகநீதிக்கான வழக்கறிஞர்கள் அமைப்பு சார்பில் வெளியிட்ட அறிக்கையில், மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ் (இவர் ஒரு பார்ப்பனர்) பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலனையும், நாடாளுமன்ற உரிமையையும், காப்பாற்ற, சட்ட அமைச்சர் தவறிவிட்டார் என்றும் அது குற்றம் சாட்டியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைக் கடுமையாக விமர்சித் திருப்பதில் குறிப்பிடத்தக்கவர், கேரள உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சுகுமாறன். “அண்மைக்காலங்களாக, உச்சநீதிமன்றம், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் குறுக்கிட்டுக் கொண்டே வருகிறது; கொள்கைகளை வகுப்பது உச்சநீதிமன்றத்தின் வேலை அல்ல; அது நாடாளுமன்றத்தின் வரம்புக்கு அப்பாற்பட்டது. சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்றக் குழு அறிக்கையை (இது தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் வேலை வாய்ப்பு தொடர்பாக ஆராய நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவாகும்). நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமுன், உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது எப்படி சரியாகும்? அரசு வழக்கறிஞர் எதிர்ப்புக்குப் பிறகு உச்சநீதிமன்றம் தனது கருத்தை மாற்றிக் கொண்டது. உச்சநீதிமன்றம், தனது வரம்பை மீறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு, இது ஒரு உதாரணம்” என்று ‘நெத்தியடி’ தந்திருக்கிறார், முன்னாள் கேரள நீதிபதி கே.சுகுமாறன்.

ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி.எஸ்.ஏ. சாமி. அவர் உச்சநீதிமன்றத்தின் ‘வரம்பு மீறல்’ பற்றி இவ்வாறு கூறியிருக்கிறார். “உச்சநீதிமன்றத்தின் முன், இந்த வழக்கில் விசாரணைக்கு வந்தது ‘கிரிமீலேயர்’ பிரச்சினையே அல்ல; பதவி உயர்விலும், தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தம் தான் (16(4ஏ), 16(4பி)) விசாரணைக்கு வந்தது. இந்த சட்டத் திருத்தம், முறையானது தானா என்பது பற்றி தீர்ப்பு வழங்குவதுதான் உச்சநீதி மன்றத்தின் வேலை.

இதைத் தவிர, கிரிமீலேயர் பற்றியோ, அல்லது இடஒதுக்கீட்டுக்கான உச்ச வரம்பு பற்றியோ, குடியரசுத் தலைவரோ, அல்லது நாடாளுமன்றமோ, உச்சநீதிமன்றத்தின் அறிவுரையைத் கேட்டதா? அரசு பின்பற்ற வேண்டிய கொள்கைகளை நீதிபதிகள் உத்தரவிட முடியாது. அது மட்டுமல்ல, கிரிமீலேயர் என்பது பற்றி அரசியல் சட்டத்தில் எந்தக் குறிப்பும் இல்லை” என்று ஆவேசத்துடன் கூறியிருக்கிறார் முன்னாள் நீதிபதி பி.எஸ்.ஏ. சாமி.

கருநாடக முன்னாள் பிற்படுத்தப்பட்டோர் குழுவின் தலைவர் இரவிவர்மா குமார், உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஏ.சுப்பாராவ் ஆகியோரும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினரை அடையாளம் காணவும், அட்டவணைப்படுத்தவும், நாடாளுமன்றத்துக்கு மட்டுமே, அரசியல் சட்டம் அதிகாரம் வழங்கியிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டியுள்ளனர். ஆந்திர மாநில அரசு, தாழ்த்தப்பட்டோரை, நான்கு பிரிவுகளாகப் பிரித்து, தனித்தனியாக இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டு வந்ததை, இதே உச்சநீதிமன்றம் தான், செல்லாது என்று தீர்ப்பளித்தது. அதே உச்சநீதிமன்றம், தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கு பொருளாதார அளவுகோலைப் புகுத்தி தனிப் பிரிவை உண்டாக்குவது எப்படி சரியாகும்?” என்ற கேள்வியை அவர்கள் எழுப்பியுள்ளனர். இப்படி முன்னாள் நீதிபதிகளே உச்சநீதி மன்றத்துக்கு எதிராகக் கொதித்தெழுந்து கருத்துத் தெரிவித்திருப்பது, உச்சநீதிமன்றத்தின் பார்ப்பன வெறியை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

முடிவுரை எழுதிய உச்சநீதிமன்றம்

அய்க்கிய ஜனதாதளம் தலைவர் சரத் யாதவ் - இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றத்தின் விசாரணை வரம்புகளிலிருந்து விடுவித்து 9வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஒன்று, சாதி அமைப்பை ஒழித்துவிட வேண்டும் அல்லது இடஒதுக்கீடு கொள்கையை, அரசியல் சட்டத்தின் 9வது அட்டவணையில் கொண்டு வந்து, நீதி மன்றத்தின் விசாரணைகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கான லட்சக்கணக்கான வேலைகள், நிரப்பப்படாமல் இருக்கினற்ன. இப்போது பொருளாதார வரம்பையும் புகுத்தி விட்டால், இந்த இடங்களைப் பூர்த்தியே செய்ய முடியாத நிலை உறுதியாகி விடும்.

பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை பற்றி சரியான புள்ளி விவரங்கள் இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறுகிறது. கடைசியாக, சாதி அடிப்படையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது 1931-ல் தான். பிறகு அரசுகள் அதைத் தொடராமல் போனதற்கு பிற்படுத்தப்பட்ட மக்களை ஏன் உச்சநீதிமன்றம் தண்டிக்க வேண்டும்? இது என்ன நீதி?

1931 ஆம் ஆண்டு எடுத்த சாதி வாரிக் கணக்கெடுப்பின்படிப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் 52 சதவீதம். 1931 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பு, சரியானது அல்ல என்று, எவரும் நீதிமன்றம் போகவில்லை. எனவே, அது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதே அடிப்படையில், இப்போது கணக்கிட்டால், பிறப்டுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 62 சதவீதம். இதை நீதிமன்றம் ஏன் ஏற்க மறுக்க வேண்டும்? சரியான புள்ளி விவரங்கள் இல்லை என்று ஏன் கூற வேண்டும்?

கடந்த 60 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு நேர்மையாக அமுல்படுத்தப்பட்டதா? இல்லவே இல்லை. இப்போது உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பால், இடஒதுக்கீட்டுக்கே முடிவுரை எழுதிவிட்டது. ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரத்துக்கு வராமல் தடுக்க நினைப்போருக்கு, நீதிமன்றத் தீர்ப்புகள் ஆயுதமாகப் பயன்படுகின்றன” என்று சரத்யாதவ் தனது பேட்டியில் கூறியிருக்கிறார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com