Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
தலையங்கம்
இனியும் தொடரலாமா இந்த இழிவு?

மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றி, தலையில் சுமந்து செல்லும் இழிவு - ஒரு குறிப்பிட்ட சாதியினர் மீது சுமத்தி விட்டது இந்து மதம்! இந்த அவலம், இன்னும், அதுவும் அரசுத் துறையில் தொடர்ந்து கொண்டிருப்பது, வெட்கக் கேடு; அவமானம்; தலைகுனிவு. இதை அனுமதித்துக் கொண்டு ‘இந்தியா’ சுதந்திரம் பெற்று விட்டது என்று கூறிக் கொண்டிருப்பது, மிகப் பெரும் மோசடி! ரயில் நிலைய நடை மேடைகளில் - மனிதக் கழிவுகளை இப்போதும் மனிதர்களே அகற்றி வருகிறார்கள்.

கடந்த ஆகஸ்டு மாதமே, இந்த இழிவுகளுக்கு, ‘ரயில்வே துறை’யில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார். ஆனால், அதற்கான திட்டங்களைக் காணோம்! ரயில்வே துறையை நவீனப்படுத்த, ரூ.24,000 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்தும், அதில், இந்த இழிவை ஒழிப்பதற்கான திட்டங்களைக் காண வில்லை. இந்த நாட்டிலுள்ள சுமார் எட்டாயிரம் ரயில் நிலையங்களில், 500 ரயில் நிலையங்களில் மட்டுமே எந்திரத்தைப் பயன்படுத்தி, மனிதக் கழிவுகளை அகற்றத் திட்டமிட்டுள்ளார்களாம்! எஞ்சியுள்ள ரயில் நிலையங்களில் இந்த இழிவை ஒழிக்க எந்தத் திட்டமும் இல்லை. இதை முழுமையாக ஒழிக்க எந்தக் காலக் கெடுவையும் நிர்ணயிக்க முடியாது என்று ரயில்வே அமைச்சகம், சமூகநீதி அமைச்சகத்திடம் தெரிவித்து விட்டதாம்! ரயில் நிலையங்களில், இந்த இழிவுக்கு முற்றுப் புள்ளி வைத்து, நவீன முறையில் கழிவுகளை அகற்ற அரசு செலவிட வேண்டிய தொகை ரூ.1,100 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் இதற்கென ஒதுக்கப்பட்டது ரூ.200 கோடி மட்டுமே. (தகவல்கள் : ‘தலித் முரசு’)

இது மனிதர்களை - மனிதர்களாக அங்கீகரிக்கும் நாடு என்பது உண்மையானால், இந்த இழிவை ஒழிப்பதற்கு முன்னுரிமை கொடுத்து அதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டாமா என்று கேட்கிறோம்! கருநாடக மாநிலத்தில் - சிறந்த பகுத்தறிவுவாதியும், பெரியார்-அம்பேத்கர் கொள்கைகளில் ஆழமான உறுதி கொண்டவருமான திரு.பசவலிங்கப்பா, அமைச்சராக இருந்த போது, இந்த இழிவு ஒழிப்புக்கு முன்னுரிமை கொடுத்து, தனது பதவிக் காலத்திலேயே, தனது மாநிலத்தில் ஒழித்துக்கட்ட சூளுரைத்து, அதன்படி செயல்படுத்தினார். தமிழ்நாட்டில், மனிதக் கழிவுகளை சுமப்பது ஒழிக்கப்பட்டாலும், சாக்கடைக் குழிகளில், மனிதர்களே இறங்கி தூய்மைப்படுத்துவதும், சில நேரங்களில், பணியில் ஈடுபடும்போதே நச்சுக்காற்றால், மரணிப்பதும் நடந்து கொண்டிருக்கிறது. இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்காத ஒரு சமூகத்தில், நாம் மனிதர்களாக வாழ்வதே வெட்கக் கேடு அல்லவா?

ஆதித் தமிழர் பேரவை - இந்த இழிவுகளை எதிர்த்து - நவம். 28-ம் தேதி ரயில் மறியில் போராட்டத்தை அறிவித்திருப்பதை மிகவும் பாராட்டி வரவேற்கிறோம்! இன்று நடக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் - இதுவே முன்னுரிமை பெற வேண்டிய போராட்டம் என்பது நமது உறுதியான கருத்தாகும். ‘தந்தை பெரியார் திராவிடர் கழகம்’ - இந்தப் போராட்டம் நடை பெறும் - அனைத்து ஊர்களிலும் முழுமையாகப் பங்கேற்கும் என்று, கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, திருப்பூர் ‘தமிழர் எழுச்சி விழா’வில் கழக சார்பில் அறிவித்துள்ளார். உண்மையான மனிதநேய - மனித உரிமைப் போராட்டத்தில் பங்கேற்கும் நல்ல வாய்ப்பாகவே, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ஒவ்வொரு தோழர்களும் கருதி, களமிறங்குவார்கள். இது உறுதி. மனித உரிமை அமைப்புகளையும், சாதி ஒழிப்பு இயக்கங்களையும் உரிமையோடு, இந்த ‘சுயமரியாதை’ப் போராட்டத்தில் பஙகேற்க வருமாறு நாம் அறைகூவி அழைக்கிறோம். இந்தப் பங்கேற்பை மனிதனாகப் பிறந்தவர்களின் சமூகக் கடமையாகக் கருத வேண்டும்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com