Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
நவம்பர் 2008

திரிபுவாத திம்மன்கள் - யார்? (8)
‘ஜெ’யின் மதமாற்றத் தடை சட்டத்தை - எதிர்க்காதது ஏன்?

ஈரோடு மாவட்டம் சதுமுகையில், பெரியார் திராவிடர் கழகத்தினர் இந்து முன்னணியின் பொய் வழக்கை எதிர்கொண்டதை, திராவிடர் கழகத்தினர் எதிர் கொண்டதாக ‘விடுதலை’ தலையங்கம் தீட்டியதை எடுத்துக் காட்டியிருந்தோம். ‘இந்து’ நாளேடு முதலில் தவறாக செய்தி வெளி யிட்டு, பிறகு திருத்தம் வெளியிட்டதையும், ஆதாரத் துடன் கடந்த இதழில் தான் சுட்டிக் காட்டியிருந்தோம். கடந்த வாரம் ‘குமுதம்’ வார ஏட்டில் (5.11.2008) ஞாநி எழுதிய ‘பயங்கரவாதத்தின் நிறம் காவி’ என்ற கட்டுரையிலும் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

“2002 இல் ஈரோடு மாவட்டத்தில் சதுமுகை என்ற கிராமத்தில் அம்மன், விநாயகர், முனீஸ்வரன் சிலைகள், கோயில்கள் நாசப்படுத்தப்பட்டன. இதைச் செய்தது பெரியார் திராவிடர் கழகத்தினர் என்று காவல்துறையில் இந்து முன்னணியினர் அதிகாரபூர்வமாகப் புகார் செய்தனர். கடைசியில் துப்பு துலக்கியதில் நாசவேலை செய்ததோ இந்து முன்னணியைச் சேர்ந்த செல்வகுமார், மஞ்சுநாதன் என்ற இருவர்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.”

இவ்வளவுக்கும் பிறகு, கடந்த 29 ஆம் தேதி ‘விடுதலை’யில் வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏற்கனவே எழுதிய பொய்யையே மீண்டும் எழுதியிருக்கிறார். வீரமணியின் முதல் பக்க அறிக்கை இவ்வாறு கூறுகிறது.

“தமிழ்நாட்டில் சத்தியமங்கலத்தையடுத்த சதுமுகையில் இந்துமுன்னணியினர் சாமி சிலைகளுக்கு செருப்பு மாலை போட்டதைக் குறிப்பிட்டு, “திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் மீது பழியைப் போடுவதுதான் அவர்களின் நோக்கம் என்ற குட்டும் உடைபட்டது” என்று எழுதி, ஏதோ ஆதாரத்துடன் எழுதியதாக காட்டிக் கொள் வதற்காக ‘தி இந்து’ (8.2.2002) என்று தேதியையும் வீரமணி குறிப்பிட்டுள்ளார். பிப்.18 ஆம் தேதி வெளியிட்ட அந்த செய்திக்கு மார்ச் 9 ஆம் தேதி ‘இந்து’ திருத்தம் வெளியிட்டு, தவறுக்கு வருத்தம் தெரிவித்ததை நாம் ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியும், ‘இந்து’வின் தவறான செய்தியையே தனக்கு சாதகமாக்கிக் கொண்டு எழுதுகிறார் வீரமணி. ‘இந்து’ ஏடு மார்ச் 9-ல் வெளியிட்ட திருத்தம் இதுதான்:

“பிப்.18 ஆம் தேதி, நாங்கள் வெளியிட்ட இரண்டு இந்து முன்னணியினர் கைது என்ற செய்தி தொடர்பாக, விடுதலை இராசேந்திரன் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.

“கடவுள் சிலைகளை உடைத்து, பழியை பெரியார் திராவிடர்கழகத்தினர் மீது போட்டனர். அந்த பொய் வழக்கில் பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். பொய்யாக வழக்கு போடப்பட்டுள்ளது, பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது தான். (திராவிடர் கழகத்தினர் மீது அல்ல) என்பதற்கான ஆதாரமாக காவல்துறை முதல் தகவல் அறிக்கையை இணைத்து அனுப்பியுள்ளோம். சத்திய மங்கலம் பகுதியில், மதவெறி சக்திகளுக்கு எதிராக களத்தில் நிற்கும் ஒரே அமைப்பு - தந்தை பெரியார் திராவிடர் கழகம் மட்டுமே” என்று விடுதலை இராசேந்திரன் எழுதியுள்ளார். தவறான செய்தி வெளியிட்டமைக்கு வருந்துகிறோம்”

- இது ‘இந்து’ வெளியிட்ட வருத்தம். இவ்வளவுக்குப் பிறகு, கி.வீரமணி, பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி, உண்மையாக்கிவிடலாம் என்ற ‘கோயபல்ஸ்’ தந்திரத்தையே பின்பற்றி வருகிறார். ‘அறிவு நாணயம்’ என்ற வார்த்தையை வீரமணி அடிக்கடி பயன்படுத்துவது வாடிக்கை. ‘அறிவு நாணயம்’ பற்றி அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்கிறவர்கள், தங்களிடம் அதை பரிசோதித்துப் பார்த்துக்கொள்வது நல்லது. இவ்வளவு கீழான நிலைக்கு இறங்கி, இல்லாத பெருமையைப் பொய்யாக சூட்டிக் கொண்டு, தங்களுக்கு தாங்களே ‘சபாஷ்’ போட்டுக் கொள்ள வேண்டிய நிலைக்கு பெரியார் உருவாக்கிய இயக்கம் வந்து விட்டதுதான் வேதனை! திராவிடர் கழகத்தில் தன்மானமுள்ள தொண்டர்கள் இதை எல்லாம் இனியும் சகித்துக் கொண்டு, தமிழர் தலைவர் புகழ் பாடிக் கொண்டிருக்கப் போகிறார்களா என்பதை, அவர்களின் சிந்தனைக்கே விட்டுவிடலாம். வேதனை என்னவென்றால், இப்படி பொய்யையும், புரட்டையும், கூச்சமின்றி பரப்பி வருகிறவர்கள், பெரியாரின் ‘குடிஅரசு’ தொகுதிகளை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டால், பெரியார் கருத்துகளை சிதைத்து விடுவார்கள் என்று கூறுவது தான்.

பார்ப்பன ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவருக்கு சமூகநீதி காத்த வீராங்கனை பட்டம் தந்து, அவரைப் பாராட்டி, இன்று கலைஞருக்கு புகழாரம் சூட்டுவதுபோல், அப்போதும் நாள்தோறும் புகழாரம் சூட்டி வந்த கி.வீரமணி, ஜெயலலிதாவின் பார்ப்பன இந்துத்துவா செயல்பாடுகளுக்கு எல்லாம் தலையாட்டி, பெரியார் கொள்கைக்கு பெரும் துரோகம் செய்ததை நாடு மறந்துவிடவில்லை. பார்ப்பன சங்கராச்சாரியின் ஆதரவுடன், ஜெயலலிதா மதமாற்றச் சட்டம் ஒன்றை கொண்டு வந்தபோது தமிழகமே கொதித்தது. கடற்கரையில் கூட்டம் போட்டு, காஞ்சி ஜெயேந்திரன் என்ற முன்னாள் சங்கராச்சாரி, ஜெயலலிதாவைப் பாராட்டினார். பா.ஜ.க., இந்து முன்னணிகள் ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டினர். அக்காலகட்டத்தில், ஜெயலலிதாவின் இந்த ‘இந்துத்துவ ஆதரவை எதிர்த்து களத்தில் நிற்க வேண்டிய பெரியார் இயக்கம் என்ன செய்தது? ஒதுங்கி நின்றது.

திராவிடர் கழகத்தின் மாவட்டக் கமிட்டிகளைக் கூட்டி, அக் கூட்டத்தில் கட்சியின் பிரச்சார செயலாளராக இருந்த துரை சக்கரவர்த்தி, மதமாற்றத் தடைச் சட்டத்தை ஆதரித்தே பேசினார். கன்யாகுமரி மாவட்டத்தில் மண்டைக் காட்டில் இந்து முன்னணியினர் மதக் கலவரம் நடத்திய போது , அது பற்றி விசாரிக்க நீதிபதி வேணுகோபால் தலைமையில் அன்றைய எம்.ஜி.ஆர். ஆட்சி விசாரணைக் குழு ஒன்றை அமைத்தது. அந்த விசாரணைக்குழு தந்த பரிந்துரைதான் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதாகும். ஜெயலலிதா, இந்த சட்டத்தைக் கொண்டு வந்ததற்கு இந்தப் பரிந்துரையைத் தான் காரணமாகக் கூறினார். மதமாற்றத் தடைச் சட்டத்தை ஆதரித்து அப்போது நீதிபதி வேணுகோபால் எழுதிய கட்டுரையை ‘விடுதலை’ ஏடு வெளியிட்டு பூரித்தது. ஜெயலலிதா மனம் புண்பட்டு விடுமே என்பதால் இந்த ‘இந்துத்துவா’ நடவடிக்கையை கூட பச்சைக் கொடி காட்டி, கொள்கை துரோகத்தை இழைத்தவர் தான் வீரமணி.

‘இந்துத்துவா’வின் மறுவடிவமான இதே ஜெயலலிதாவை, மதச்சார்பற்ற அணியின் தலைவராக, தலை மீது தூக்கி வைத்து ஆடியவர் வீரமணி என்பதை தமிழகம் மறந்துவிடவில்லை.

1996-98 இல் தி.மு.க. ஆட்சியிலிருந்தபோது தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், ஈரோடு அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோயிலில் தீ மிதித்தார் என்றவுடன், முதல்வர் கலைஞர் அதை காட்டுமிராண்டித்தனம் என்று கூறி, சொந்தக் கட்சிக் காரரையே கண்டித்தார். உடனே பார்ப்பன ஜெயலலிதா, கலைஞர்இந்துக்களைப் புண்படுத்தி விட்டார், மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஆவேசமாக அறிக்கை வெளியிடவே, ஜெயலலிதாவைக் கண்டித்து, அம்பேத்கர் அமைப்புகளும், பா.ம.க.வும், தேவேந்தர குல வேளாளர் கூட்டமைப்பும் அறிக்கைகள் வெளியிட்டன. வீரமணி, பெரியார் கொள்கைத் தொடர்பான இப்பிரச்சினையில், ஜெயலலிதாவைக் கண்டிக்க முன் வராமல், வாய்மூடி அமைதி காத்தது பெரியார் கொள்கைக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகமேயாகும்!

இந்தியாவில், பா.ஜ.க.வின் ஆட்சிக்கு மீண்டும் வழி வகுத்துவிடக் கூடாது என்று இப்போது அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார் வீரமணி. ஆனால் வாஜ்பாய் பிரதமராக வந்தவுடன், அவர் ‘விடுதலை’யில் வெளியிட்ட அறிக்கையில் பா.ஜ.க. வினர் மீதான சந்தேகப் பார்வை தற்காலிகமாக நீங்கியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

“பி.ஜே.பி.யின் மீது இருந்த சந்தேகப் பார்வை தற்காலிகமாக விலகியுள்ளது என் றாலும், இந்தப் போக்கினை விரிவாக்க அது முயல வேண்டும்” - விடுதலை (20.3.98)

நல்ல பாம்பின் ஆபத்து, தற்காலிகமாக நீங்கியுள்ளது என்றாலும், அந்த விஷ முள்ள பாம்பு தன்னை திருத்திக் கொள்ள முன் வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பது போன்றதே, மேற்குறிப்பிட்ட வீரமணியின் அறிக்கையாகும். பெரியார் கொள்கையில் வளர்க்கப்பட்ட எந்த ஒருவரும் இப்படி ஒரு கருத்தை முன் வைப்பார்களா? ஆட்சி அதிகாரத்தில் வந்து அமருவோர் யாராக இருந்தாலும், அது பா.ஜ.க.வாக இருந்தாலும், பார்ப்பனராக இருந்தாலும் உடனே, வீரமணியின் ஆதரவுப் பாசம் மேலோங்கிவிடும்.

அறக்கட்டளைகளையும், வர்த்தக கல்வி நிறுவனங்களையும் நடத்திக் கொண்டு, அதற்கே முன்னுரிமை தந்து கொண்டிருப்பவர்கள், மத்திய அரசை எதிர்க்க எப்படி முன் வருவார்கள்? டெல்லியில் பெரியார் மய்யம் இரண்டு இடங்களில் இருப்பதாகக் கூறுகிறார்கள். இந்த மய்யங்களில் இப்போது பெரியார் கொள்கை பரப்பும் நிகழ்ச்சிகள் ஏதாவது நடக்கிறதா? பெரியார் இந்திய தேசியப் பார்ப்பனியத்தையும், பார்ப்பன ஆட்சியையும் எதிர்த்துப் போர்ச் சங்கு ஊதிய தலைவர், அந்தத் தலைவர் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமை கோருகிறவர்கள் என்ன செய்கிறார்கள்?

பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகத்தையே அறக்கட்டளையாகப் பதிவு செய்து கொண்டு, தொண்டர்களிடம் ஏதோ, பெரியார் கொள்கைகளை முன்னெடுக்கும் புரட்சிகர இயக்கமாக பொய் பரப்பி வருகிறார்கள். திராவிடர் கழகத்தை உருவாக்கிய பெரியார் அதைப் பதிவு கூட செய்யவில்லை. ஆனால், வீரமணி அறக்கட்டளையாக்கி விட்டார். திராவிடர் கழகம் அறக்கட்டளையாகிவிட்டதா என்று ஆச்சரியப்படும் தோழர்கள், ‘முரசொலி’ (அக்.30) நாளேட்டைப் பார்த்தால் உண்மை புரியும். திராவிடர் கழக அறக்கட்டளை சார்பில் கி.வீரமணி, தமிழக முதல்வரிடம் ஈழத் தமிழர் நிவாரண நிதி வழங்கியுள்ள செய்தி அதில் பதிவாகியுள்ளது.

(புரட்டுகள் உடைப்பு தொடரும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com