Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
நவம்பர் 2008

முதுகுளத்தூர் கலவரத்தில் பெரியார் அணுகுமுறை என்ன?

பெரியார் ‘குடிஅரசு’ தொகுப்புகளை பெரியார் சுயமரியாதை பிரச்சாரம் நிறுவனம் மட்டுமே வெளியிட வேண்டும் என்று கூறி, பெரியார் திராவிடர் கழகத்தின் வெளியீட்டுக்கு தடை கோரியவர்கள். அதற்காக சில சொத்தை வாதங்களை முன் வைத்தார்கள். ‘விடுதலை’யின் ‘அனல் பறக்கும்’ எழுத்தாளர் மின்சாரம், இதற்காக மிகவும் ஆராய்ச்சி செய்து, தேடிக் கண்டு பிடித்து ஒரு வாதத்தை முன் வைத்தார்.

“தந்தை பெரியார் மாபெரும் சமூகப் புரட்சியாளர். அவர் தம் படைப்புகளை வெளியிடும்போது எங்கள் அளவுக்கு பொறுப்புணர்ச்சி மற்றவர்களுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ‘ஜாதி’ என்பது தமிழ்ச் சொல் அல்ல. தமிழர்களிடையே ஜாதி என்பது கிடையாது என்று சொன்னவர் தந்தை பெரியார். தந்தை பெரியார் கருத்துகளைத் தொகுத்த பேராசிரியர் ஒருவர் ‘ஜாதி’ என்று வருகிற இடங்களில் எல்லாம் ‘சாதி’ என்றே தொகுத்துள்ளார். இது எவ்வளவு பெரிய ஆபத்து! தந்தை பெரியார் கருத்துகளை கூறுவதாக நினைத்துக் கொண்டு, தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளையே தலைக்கீழாகப் புரட்டும் தன்மை தானே இது” - மின்சாரம் கட்டுரை, ‘விடுதலை’ 25.8.2008.

‘ஜாதி’ என்பதை ‘சாதி’ என்று பெரியார் எழுத்துகளில் பயன்படுத்துவது எவ்வளவு பெரிய ஆபத்து - கருத்துப் புரட்டு என்றெல்லாம் எழுதியவர்கள் தங்களைப் போல் பொறுப்புணர்ச்சி மற்றவர்களுக்கு இருக்குமா என்று, தங்கள் பொறுப்புணர்ச்சிக்கு தாங்களே நற்சான்று தந்து கொண்டவர்கள் ‘பொறுப்புணர்ச்சி’ எப்படி என்று பார்க்கலாமா?

இதை எழுதிய அடுத்த மாதத்திலேயே சுயமரியாதை பிரச்சார நிறுவனம் நடத்தும் ‘உண்மை’ மாதமிருமுறை ஏட்டில் இவர்களின் “பொறுப்புணர்ச்சி”யைக் காட்டி விட்டார்கள்! ‘என்னைப் பற்றி’ என்ற தலைப்பில், பெரியாரின் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. 2008 செப். 11-30 தேதியிட்ட ‘உண்மை’ இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில் இவ்வாறு அச்சேற்றப்பட்டிருக்கிறது.

“(நான்) சாதி உணர்ச்சி சாதிப்பற்று இல்லாதவன். என்ன செய்தாவது சாதியை ஒழிக்க வேண்டுமென்பவன்” - இதற்குப் பெயர் என்ன? கட்டுரையாளர் மின்சாரத்தின் வாதப்படி இது பெரியார் கொள்கை தலைகீழ் புரட்டு அல்லவா? இந்தப் புரட்டை செய்யும் உரிமை தங்களுக்குத்தான் உண்டே தவிர, வேறு எவருக்கும் கிடையாது என்று வாதாடப் போகிறார்களா? இவர்கள் எடுத்து வைக்கும் எந்த வாதத்திலாவது கடுகளவு நேர்மை இருக்கிறதா?

‘என்ன செய்தாவது சாதியை ஒழிக்க வேண்டும்’ என்ற பெரியார் பின்பற்றிய அணுகுமுறைகளை வீரமணி பின்பற்றுகிறாரா என்பதுதான் மிகவும் முக்கியமானது. ‘ஜாதி - சாதி’ என்ற வார்த்தைகளைவிட முக்கியமானது. அண்மையில் சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த மாணவர்களிடையே சாதி அடிப்படையில் நடந்த கலவரம் பற்றி கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில் (15.11.2008, ‘விடுதலை) மாணவர்கள் சாதிவெறியில் ஈடுபடக் கூடாது என்று கூறியதோடு, காவல்துறை கல்லூரி முதல்வர் மற்றும் சம்பவத்தை ஒளிபரப்பிய சன் தொலைக்காட்சியைக் கண்டித்துவிட்டு, தமிழக முதல்வர் விரைந்து செயல்பட்டார் என்று புகழாரம் சூட்டி, அறிக்கையை முடித்துக் கொண்டார். ஆதிக்கசாதியினரான தேவர் சாதி மாணவர்கள் சட்டக் கல்லூரிக்கு சூட்டப்பட்டுள்ள அம்பேத்கர் பெயரையே அங்கீகரிக்க மறுப்பது பற்றியும், மாணவர்களிடம் ஆதிக்கசாதியினர் தூண்டிவிடும் சாதி வெறி பற்றியும் ஒரு கண்டன வார்த்தைகூட அந்த அறிக்கையில் இடம்பெறவில்லை.

அன்றைக்கே அதே ‘விடுதலை’ நாளேட்டில் சென்னை அருகே உள்ள புழலில் அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் வீரமணி. ஆனால், சட்டக் கல்லூரிக்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டதை ஏற்க மறுக்கும் சாதிவெறிப் போக்குப் பற்றி மவுனம் சாதிக்கிறார். இத்தகைய சாதிக் கலவரங்கள் நடந்தபோது பெரியார் உண்மையான சாதி ஒழிப்புப் போராளியாக ஆதிக்கசாதியினரின் சாதி வெறிக்கு எதிராக துணிந்து குரல் கொடுத்திருக்கிறார் என்பதுதான் வரலாறு.

1957 இல் அன்றைய ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தலித் மக்களுக்கு எதிராக தேவர் சாதியினர் சாதிக்கலவரங்களை நடத்தினர். ஆதிக்கசாதியினரின் அடக்குமுறைகளுக்கு எதிராக தலித் மக்களை அணி திரட்டிப் போராடிய இமானுவேல் சேகர் என்ற போராளி படுகொலை செய்யப்பட்டார். ஆதிக்கசாதியினரின் தலைவராகவும், வழிகாட்டியாகவும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் செயல்பட்டார். ஆனாலும், அவரை விமர்சிப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சினர். கலவரம் வெடித்தபோது, முதலமைச்சராக இருந்தவர் காமராசர். முத்துராமலிங்கதேவரை துணிவுடன் கைது செய்தார், காமராசர். பெரியார் ஒருவர் தான் அன்று ஆதிக்கசாதியினருக்கு எதிராக உறுதியாகக் குரல் கொடுத்தார். காமராசர் எடுத்த நடவடிக்கைகளை தீவிரமாக ஆதரித்தார்.

முதுகளத்தூர் கலவரத்தில், படுகொலைக்குள்ளான இம்மானுவேல், ஒடுக்கப்பட்ட மக்களின் இதயத் தலைவராக போற்றப்பட்டார். அவரது போர்க்குணத்தைப் பாராட்டி, கிராமங்களில் பெண்கள் நாட்டுப்புறப்பாடல்களைப் பாடுவது இன்று வரை தொடரும் மரபாகும். இந்த வகைப் பாடல்கள் பற்றி ஆய்வு செய்த செ.சண்முக பாரதி என்ற ஆய்வாளர் தமது ஆய்வு நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“கலவரத்தை ஒடுக்குவதில் ஆளும் கட்சியான காங்கிரஸ் தனது முழுக் கவனத்தையும் செலுத்தியது காங்கிரசின் செயலுக்காகப் பெரியார் காமராசரைப் பாராட்டினார். இக்கலவரத்தில் சமூக விரோதிகளைக் கடுமையாய்த் தண்டித்துச் சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பு ஏற்படுத்தாவிட்டால் அம்மக்களின் சார்பில் போராட்டத்தில் குதிப்பேன் என்று பெரியார் அறிக்கையும் விட்டார்” - என்று சுட்டிக்காட்டுகிறார்.

“கலவரத்தைப் பயன்படுத்தி அரசியல் கட்சிகள் அதிகாரத்தை பிடிக்கவே முயற்சித்த நிலையில் பெரியார் ஒருவர் மட்டும் மறுதலையாக சிந்தித்து எழுதினார்” - என்கிறார் அந்த ஆய்வாளர். (இம்மானுவேல் தேவேந்திரர் - கதைப் பாடல் ஆய்வு நூல். பக்.70)

1957 செப்டம்பர் மாதங்களில் கலவரம் நடந்ததைத் தொடர்ந்து, முத்துராமலிங்க தேவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தான் பெரியாரின் சாதி ஒழிப்புப் போராட்டமும் தொடர்ந்தது. முதுகுளத்தூரில் ஆதிக்கசாதியினர் தலித் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட படுகொலை அடக்குமுறைகளைக் கண்டு குமுறிய பெரியார், அடுத்த ஒன்றரை மாதங்களிலே 1957 நவம்பர் 3 ஆம் தேதி தஞ்சையில் சதி ஒழிப்பு மாநாட்டைக் கூட்டி 23 நாட்கள் இடைவெளியில் நவம்பர் 26 அன்று சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவை எரிக்கும் போராட்டத்தை அறிவித்தார். பெரியார் இயக்க வரலாற்றில் குறிப்பிடத்தக்க போராட்டமான சாதி ஒழிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்துவதற்கு காரணமாக அமைந்ததே முதுகுளத்தூரில் முத்துராமலிங்க தேவர் தலைமையில் தலித் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட சாதிக் கலவரமும் படுகொலைகளும் தான்.

விடுதலை தலையங்கமும் (11.11.1957) இதை உறுதிப்படுத்தியது. அந்தத் தலையங்கம் இவ்வாறு கூறியது. “முதுகுளத்தூர் கலவரத்துக்குப் பிறகு தமிழ்நாட்டிலுள்ள ஆதி திராவிடர்கள் அனைவரும் காமராசர் ஆட்சிக்கு எதிராக உள்ள அரசியல் கட்சிகளை நஞ்சாக வெறுத்துவிட்டனர். நூற்றுக் கணக்கான ஆதி திராவிட உயிர்கள் பலியாக்கப்பட் டிருப்பதையும், ஆயிரக்கணக்கான குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டதையும் சிறிதும் பொருட் படுத்தாதபடி “உயர்சாதி”க்காரர்களை போலீசு சுட்டுக் கொன்றது பற்றி கண்ணீர் வடிப்பதும், திரு.மு.தேவரை (முத்துராமலிங்க தேவர்) விடுதலை செய்ய வேண்டுமென்று கடையடைப்பு செய்யவும், இதற்காக சட்டசபையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவதும், இதற்காக சட்டசபையை விட்டு வெளியேறுவதும் போன்ற நடத்தைகளால் அரசியல் எதிர்க்கட்சிகள் என்பவை ஆதி திராவிட சமுதாயத்திற்கு துரோகம் செய்துவிட்டன. இந்த மன்னிக்க முடியாத குற்றத்திற்காக, ஆதி திராவிட சமூகம் இந்த எதிர்க்கட்சிகள் மீது இன்று ஆத்திரப்பட்டு கொதிப்படைந்து இருக்கிறது” என்று அந்தத் தலையங்கம் துணிவுடன், பிரகடனம் செய்தது.

இந்த வரலாறுகளை நாம் சுட்டிக்காட்டுவதற்கு காரணம் உண்டு. சாதி ஆதிக்கத்தின் குறியீடாக பெரியாரும் விடுதலையும் சுட்டிக்காட்டிய ஒரு தலைவரை பெரியார் கொள்கைக்கு ஒரே வாரிசு தாம் மட்டுமே என்று மார்தட்டும் கி.வீரமணி எப்படிப் பார்த்தார்? பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அவரது பிறந்த நாளில் மாலை போடத் தொடங்கினார். எப்போது? வீரமணி, ஜெயலலிதாவுக்கு, ‘சமூக நீதி காத்த வீராங்கனை’ பட்டம் அளித்து, ‘மதச்சார்பற்ற அணியின் புரட்சித் தலைவியாக’ மகுடம் சூட்டியபோது. அப்படி ஜெயலலிதாவை ஆதரித்த காலத்தில், அவரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகவும், அவரது ‘மூளையும் இதயமுமாக’ செயல்படும் சசிகலாவிடம் நற்சான்று பெறவும், முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, அவரது பிறந்த நாளில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி வந்தார் கி.வீரமணி. திராவிடர் கழக மாநாடுகளிலும் முத்துராமலிங்க தேவர் படம் திறக்கப்பட்டது. இவர்தான் பெரியார் திராவிடர் கழகத்தைப் பார்த்து ‘திரிபுவாத திம்மன்கள்’, ‘வரலாற்றுப் புரட்டர்கள்’, ‘பெரியார் கொள்கை துரோகிகள்’ என்று வசைமாரி பொழிகிறார்.

ஜாதி-சாதி என்று எழுதுவதே பெரியார் கொள்கைத் திரிபு என்று மிகவும் நுட்ப மாக பெரியாரியலை காப்பாற்றுவதாகக் கூறும் இவர்கள் சாதி ஆதிக்கவாதிகளுக்கு பெரியார் கொள்கைக்கு எதிராக துணை போகலாமா? இது கொள்கைப் புரட்டு அல்லவா?

(புரட்டுகள் உடைப்பு தொடரும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com