Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
நவம்பர் 2007

சமாதான முயற்சிக்கு தயாராக இல்லை என்பதை சிங்களம் அறிவித்துவிட்டது!

நவம்பர் 6, சென்னையில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய சு.ப. தமிழ்ச்செல்வன் - வீரவணக்க நாள் கூட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் பேசுகையில் குறிப்பிட்டதாவது:

மறைந்த சு.ப.தமிழ்ச்செல்வனை 1985 ஆம் ஆண்டிலிருந்து நான் அறிவேன். தம்பி பிரபாகரனுக்கு துணையாக செயற்பட்டபோது முதல் ஒவ்வொரு கட்டத்திலும் அவரை நான் கவனித்திருக்கிறேன். பிரபாகரனின் முழுமையான நம்பிக்கை பெற்றவரான சிறந்த தளபதியாக வெவ்வேறு களங்களில் வெற்றிக் கொடிநாட்டியவராக மட்டுமில்லாமல் இராஜதந்திர களத்திலும் வல்லவராக சு.ப.தமிழ்ச்செல்வன் திகழ்ந்தார்.

இளம் வயதில் சிறந்த இராஜதந்திரியாக விளங்கி சமரசப் பேச்சுக்களை நடத்தியவர். சிரித்த முகமாக சமரச பேச்சுக்களில் நம் தரப்பு நியாயத்தை பிறர் மனம் ஈர்க்குமளவுக்கு செய்தவர். பொதுவாக தமிழர்களில் அனைத்துலக அரங்கத்தில் இராஜதந்திர திறமை படைத்தவர்கள் மிகக் குறைவு. அன்ரன் பாலசிங்கமும், பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வனும் அந்தக் கலையில் சிறந்து விளங்கிய தமிழர்களாக இருந்தனர். இதற்கு முன்னால் நடந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இந்தியாவின் ஹைதரபாத் சமஸ்தானப் பிரச்சினை வந்தபோது இந்தியப் படை புகுந்து சமஸ்தானத்தை பிடித்து இந்தியாவுடன் இணைத்தது.

ஐ.நா. பேரவையில் பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் அதனை ஆக்கிரமிப்பு என்று கூறி தீர்மானம் கொண்டுவந்த போது சர்தார் படேலும் பிரதமராக இருந்த நேரும் ஏ. இராமசாமி முதலியார் என்கிற தமிழரைத்தான் அனுப்பினார்கள்.
ஐ.நா.வுக்குச் சென்ற அவர் இந்தியாவின் நடவடிக்கை? இராணுவ| நடவடிக்கை அல்ல- காவல்துறை நடவடிக்கை என்று வாதாடி அந்தத் தீர்மானத்தை தோற்கடிக்கச் செய்தவர். அவருக்கு அப்போது 72 வயதுக்கும் மேல் இருக்கும். அவர் நன்கு அனுபவம் பெற்றவர். ஆனால் சு.ப. தமிழ்ச்செல்வன் இளவயதிலே அந்தத் தகுதியைப் பெற்றிருந்தார்.

அவனை வளர்த்தெடுத்தேன். ஆனால் வீணாகவில்லை. நம் இலட்சிய தீபத்தை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்தவன்| என்று பிரபாகரன் மனம் உருகிச் சொன்ன அந்த தமிழ்ச்செல்வனை நாம் வஞ்சகத்தின் மூலம் இழந்திருக்கிறோம்.

யார் உலகெங்கும் சமாதானத் தூதுவராக சமாதானப் புறாவாகச் சென்று ஆதரவு திரட்டினாரோ -யார் சந்திரிகாவோடும் நோர்வே உள்ளிட்ட நாடுகளோடும் பேச்சுக்களை நடத்தினாரோ -யார் எதிரிகளைக் கூட இன்முகத்தோடு சந்தித்து உரையாடினாரோ -அந்த சமாதான தூதுவரை சிங்கள வெறியர்கள் கொன்றொழித்தன் மூலம் சிங்களப் பேரினவாத அரசு எந்த ஒரு சமாதான முயற்சிக்கும் தயாராக இல்லை என்பதை அறிவித்துவிட்டது

சிங்களம் வெளிப்படுத்திய இந்தச் செயலுக்கு அனைத்துலக சமூகத்தின் பதில் என்ன? அது தெரிந்தாக வேண்டும். இந்தக் கொடூரமான கொலைக்கு அனைத்துலக சமூகம் எப்படி கண்டிக்கப் போகிறது? அது தெரிய வேண்டும்.

அனைத்துலக நாடுகள் இருக்கட்டும். இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
நோர்வே நடத்தும் பேச்சுக்கு இருதரப்பும் ஒத்துழைக்க வேண்டும். அதற்கு ஒத்துழைப்போம் என்று சொன்னது இந்தியா. அந்த சமரசப் பேச்சில் ஈடுபட்ட ஒரு தரப்பின் தலைவரை வஞ்சகமாக சிங்களம் கொன்றபோது எத்தனை கடுமையான வார்த்தைகளில் இந்தியா கண்டித்திருக்க வேண்டும். ஆனால் வாயே திறக்கவில்லையே. புத்தரும் மகாவீரரும் அசோகனும் பிறந்த நாடு என்று பெருமை பேசுகிற இந்தியா வாயே திறக்கவில்லை.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டபோது-
ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டபோது-
செஞ்சோலையிலே பிஞ்சுகள் படுகொலை செய்யப்பட்டபோது -
வாய் திறக்காத இந்தியா, அந்தக் கொலைகளைச் செய்த சரத் பொன்சேகா மீது குண்டு வீசியபோது கண்டிக்கிறது

என்னய்யா தமிழனுக்கு ஒரு நீதி! சிங்களவனுக்கு ஒரு நீதி! இதுதான் இந்திய அரசின் போக்கா?

தமிழ்நாட்டு முதலமைச்சர் இரங்கல் கவிதை தெரிவித்துள்ளார். அதற்குப் பாராட்ட வேண்டும். அவர் டில்லியை எச்சரித்திருக்க வேண்டும். இந்தியாவின் இராணுவ உதவியை நிறுத்த வேண்டும் என்று அவர் சொல்லியிருக்க வேண்டும். என்றாலும், அவர் கவிதை எழுதியதற்காகப் பாராட்ட வேண்டும்.

ஒரு இரங்கல் கவிதை தெரிவித்ததற்காக ஒரு அம்மையார் கண்டனம் தெரிவிக்கிறார். அவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் தமிழகத்தைச் சேர்ந்த ஜெயந்தி. மற்றொருவர் ஜி.கே. வாசன் - நீங்கள் இரண்டு பேரும் பேசக் கூடாது. உங்களுக்கு அந்த யோக்கியதையும் தகுதியும் இல்லை.

இதே ஜெயந்தி நடராஜன் தான், அன்று ராஜீவ்காந்தி சிறீபெரும்புதூர் வந்தபோது சென்னை வானூர்தி நிலையத்திலிருந்து ஒருகணம் கூட நகராமல் இருந்தவர். ஆனால் குண்டுவெடிக்கிற போது ஆளைக் காணவில்லை. உண்மையான தொண்டனாக இருந்திருந்தால் ராஜீவுக்கு ஆபத்து என்று தெரிந்தபோது உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றியிருக்க வேண்டும்.

தங்கள் உயிரைக் காக்க ஓடிப்போனவர்கள் எல்லாம் இப்போது ஒப்பாரி வைக்க வந்துவிட்டார்கள்!

தமிழக முதல்வர் கவிதை எழுதிவிட்டார் என்பதற்காக அவரை பாய்ந்து பிடுங்குகிறார்கள்!

சரி இன்னொரு அம்மையார்-

அந்த அம்மையாருக்கு பதவி பறிபோன ஆத்திரம்தான் இருக்கிறது- வெளி உலகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

என்னுடைய காலத்திலேயே விடுதலைப் புலிகளை அடக்கி வைத்திருந்தேன் என்று சிறுபிள்ளை மாதிரி பேசுகிறார்.

அனுராதபுரத்திலே 25 இராணுவ வானூர்திகளை அழித்து நொறுக்கிய அந்த விடுதலைப் புலிகளை சென்னையிலே அரண்மனை வீட்டிலே இருந்து கொண்டு ஒடுக்கிவிட்டேன் என்று சொல்வது கேவலமாக இருக்கிறது. அப்படிப் பேச வெட்கமாக இல்லையா?

புலிகளைக் கண்டு சிங்கள இராணுவம் நடுநடுங்குகிறது. இந்தியா போன்ற நாடுகள் நடுங்குகின்றன. ஆனால் தன் உயிருக்காக காவல்துறையின் பாதுகாப்பு கேட்கிற ஒருவர் அந்தப் புலிகளை ஒடுக்கிவிட்டேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
இதே நேரத்தில் இன்னொரு அம்மையார் சொன்னதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

அமெரிக்காவில் வரப்போகிற அரச தலைவர் தேர்தலிலே வெற்றி பெறுவார் என்று கூறப்படுகிற ஹிலாரி கிளிண்டன், அண்மையில் லண்டன் ரைம்சுக்கு அளித்த பேட்டியில் எல்லோரையும் நீங்கள் பயங்கரவாதிகள் என்று பட்டம் சூட்டி ஒழிப்பதற்கு முயற்சி செய்யாதீர்கள். உதாரணமாக இலங்கையில் போராடும் புலிகள் மக்களுக்காக போராடுகிறவர்கள் என்று கூறினார். ஆனால் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுகிற நம்முடைய ஜெய லலிதா அம்மையார் புலிகளை ஒடுக்கிவிட்டேன் என்கிறார்.

சு.ப.தமிழ்ச்செல்வனைப் போன்ற வீரர்கள் மாவீரர்களாகி தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழரின் வரலாற்றில் இதனைப் போன்று வீரஞ்செறிந்த போராட்டத்தை தமிழர்கள் சந்திக்கவில்லை. அந்தப் போராட்டத்துக்கு அனைத்து வகையிலும் உதவியாக நிற்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது.

21ஆம் நூற்றாண்டில் தமிழர்களுக்கு ஒரு அடையாளத்தை ஒரு மரியாதையை உலக அரங்கில் ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். அவர்களின் தியாகமும் வீரமும் பெரும் மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

இலங்கையில் செய்திக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செய்தியைத்தான் இங்குள்ள ஏடுகள் வெளியிடுகின்றன. அதுவும் நமக்கு எதிராக செய்திகளைப் போடுவதையே வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள் அந்த சிங்கள அரசாங்கத்தின் செய்திக்கே முக்கியத்துவம் கொடுத்துத்தான் வெளியிடுகின்றனர்.

கடந்த 6 மாதங்களிலே இந்து பத்திரிகையில் சிங்கள அரசாங்கம் கூறியபடி இறந்த புலிகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் பிரபாகரன் மட்டும்தான் இப்போது அங்கிருக்க வேண்டும்.

இன்னொரு பக்கத்தில் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே என்ற அமைச்சர் அடிக்கடி சொல்லுகிறார்- பொங்கல் நாளில் சுதந்திரப் பிரகடனம் வெளியிடப் போகிறார்கள் என்று. புலி வருகிறது புலி வருகிறது என்று கூறினால் புலி ஒரு நாள் வந்துவிடும்.
பிரபாகரன் தனிநாடு பிரகடனம் செய்தால் என்ன தவறு? அங்கே சுதந்திர அரசாங்கம் நடந்து கொண்டிருப்பதை உலக நாடுகள் அறிந்திருக்கின்றன. வரலாற்றிலே நேதாஜி, ஹோசிமின், யாசர் அராபத் ஆகியோரும் தனிநாட்டுப் பிரகடனங்களைத்தான் வெளியிட்டனர்.

எந்த நேரத்தில் எதைச் செய்வது என்பது பிரபாகரனுக்குத் தெரியும். ஆனால் அத்தகைய ஒரு பிரகடனத்தை பிரபாகரன் வெளியிடும்போது எவராலும் அதனைத் தடுக்க முடியாது.

ஒரு சு.ப. தமிழ்ச்செல்வனை வீழ்த்திவிட்டதாலே போராட்டம் பின்னுக்குப் போய்விடாது. அந்த தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து ஓராயிரம் வீரர்களும் யுவதிகளும் பிறப்பெடுத்து

இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்றார்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com