Keetru
இலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் தகவல் களம் சிரிப்'பூ'
Font problem?
Keetru Puratchi Periyar Muzhakkam
நவம்பர் 2006

திருச்சி நிறைவு விழாவில் தீர்மானங்கள்: நீதிபதிகள் தேர்வுக்கு ஆணையம்

12.11.2006 அன்று திருச்சியில் ‘பெரியார் திராவிடர் கழகம்’ சார்பில் நடைபெற்ற இரண்டாம் கட்ட ‘சம்பூகன் சமூகநீதிப் பயண’ நிறைவு விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1)அ) மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இதுவரை இல்லாமல் இருந்த 27 சதவீத இடஒதுக்கீட்டை, முழுமையாக, அடுத்த கல்வி ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

ஆ) 27 சதவீத இடஒதுக்கீட்டை மூன்று ஆண்டுகளில் படிப்படியாக நிறைவேற்றவும், பிற்படுத்தப்பட்டோருக்கு ஒவ்வொரு ஆண்டும் அளிக்கப்படுகிற இடங்களுக்கு இணையான இடங்களை, அக்கல்வி நிறுவனங்களில் பெரும் செலவில் கூட்டிக் கொள்ளவுமான, சூழ்ச்சி நிறைந்த பிரிவுகளைக் கொண்ட 76/2006 எண்ணிட்ட நாடாளுமன்ற சட்ட முன்வரைவை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டுமென ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

இ) மேற்குறிப்பிட்டவாறான, பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கும், சுயமரியாதைக்கும் எதிரான சட்டமுன் வரைவை கொண்டுவர பரிந்துரைத்துள்ள வீரப்ப மொய்லி தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை முழுதாக புறக்கணிக்குமாறு மத்திய அரசை இம்மாநாடு வற்புறுத்துகிறது.

ஈ) இதுவரை மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு மறுக்கப்பட்டு வந்த உரிமைகளை அளிக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிக்கும், மத்திய அமைச்சரவையையும் முடிவு செய்து கொண்ட நிலையிலும், அமைச்சரவையிலும், வெளியிலும் இருக்கிற மிகச் சில ஆதிக்க சக்திகளை திருப்திபடுத்துவதற்காக நாட்டில் ஏறத்தாழ 60 சதவீதமாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் உணர்வுகளை புறந்தள்ளுவதாகவும், உரிமைகளை மறுப்பதாகவும் உள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 76/2006 எண்ணிட்ட சட்டமுன்வரைவு, வீரப்ப மொய்லி குழு அறிக்கை ஆகியவற்றின் மீது, இந்நாட்டில் பெரும்பான்மை மக்களுக்குள்ள வெறுப்பை வெளிப்படுத்தும் விதமாக பெரியார் திராவிடர் கழகம்/மார்க்சிய, பெரியாரிய பொதுவுடைமை கட்சி ஆகிய அமைப்புகள் எதிர்வரும் 22.11.2006 அன்று தமிழ்நாட்டில் நிகழ்த்தவுள்ள ‘வீரப்ப மொய்லி அறிக்கை எரிப்புக் கிளர்ச்சியில்’ அனைத்து ஒடுக்கப்பட்ட சமூக மக்களும், ஜனநாயக, மனித உரிமை சக்திகளும் கலந்து கொண்டும், ஆதரவு காட்டியும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டுமென இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

பெண்களுக்கு...

2)அ) மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்கு அவர்களது விகிதாச்சாரத்துக்கும் குறைவாக பரிந்துரைக்கப்பட்டுள்ள 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் சட்டத்தை அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

ஆ) பல்வேறு சட்ட முன்வரைவுகளை கடும் எதிர்ப்புகளுக்கிடையே அறிமுகப்படுத்தி நிறைவேற்றும் மத்திய அரசு, இதில் மட்டும் கருத்தொற்றுமையைக் காரணம் காட்டி காலந்தாழ்த்துவதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

இ) நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கு மட்டுமே பேசப்படுகிற மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் அறிமுக நிலையிலேயே கல்வி, வேலை வாய்ப்புகளுக்கும் விரிவாக்கி அறிமுகப்படுத்த வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

3)அ) மத்திய அரசுப் பணிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் தாழ்த்தப்பட்டோருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் முழுமையாக நிரப்பப்பட வேண்டும் என இம்மாநாடு மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்துகிறது.

ஆ) இடஒதுக்கீட்டுக் கொள்கை சரியாகப் பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க தண்டிக்கும் அதிகாரம் கொண்ட ஓர் அமைப்பை நிறுவுமாறும், முறையான இடஒதுக்கீட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகளைத் தண்டிக்க வகை செய்யும் சட்டங்களை இயற்றுமாறும் மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

இ) அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கிய பிரிவினருக்கு என செய்யப்பட்டுள்ள இடஒதுக்கீட்டில் முன்பு பிற்படுத்தப்பட்டோருக்கும், தற்போது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களுக்கும், அரசியல் சட்ட வரையறைகளுக்கு முரணாக உச்சநீதிமன்றத்தால் திணிக்கப்பட்டுள்ள பொருளாதார வரம்பினை நீக்க உரிய சட்டத் திருத்தத்தை காலந்தாழ்த்தாமல் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்திலேயே கொண்டு வர வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு

4)அ) 1931-க்குப் பிறகு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புகளில் சாதிவாரியான புள்ளி விவரங்கள் எடுக்கப்படாததால், அரசின் பல்வேறு துறைகள் மேற்கொள்ளும் அறிவியல்பூர்வமற்ற மாதிரி கணக்கெடுப்புகளில் மாறுபட்ட விவரங்கள் வெளியாகின்றன. இது தேவையற்ற குழப்பங்களையும், இடஒதுக்கீட்டு அமுலாக்கத்தில் பல்வேறு சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது. சாதிவாரியான விவரக் கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென முதலாவது பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு பரிந்துரைக் குழுவான காகாகலேல்கர் குழுவும் 1955லேயே பரிந்துரைத்திருந்தது. எனவே, 2011 ஆம் ஆண்டில் நடத்தவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரி புள்ளி விவரங்களும் கணக்கெடுக்கப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

ஆ) தேவையற்ற சிக்கல்களையும், பல்வேறு சமூகங்களுக்கும் திருப்தியின்மையும், அதனால் அமைதியின்மையும் ஏற்படுவதற்கு இடமில்லாமல் வேலை வாய்ப்புகள், கல்வி எல்லாவற்றிலும் அந்தந்த சமூகக் குழுக்களின் மக்கள் தொகைக்கேற்ப இடங்களை பகிர்ந்தளிப்பதுதான் சரியான தீர்வு என்பதை அக்கறையுடன் பரிசீலித்து அதற்கேற்ப சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டுமென அரசுகளையும், அரசியல் கட்சிகளையும், சமூக, பொதுநல அமைப்புகளையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

இ) பொது மக்களிடையே நிலவுகிற பிரச்சினைகளையும், உணர்வுகளையும் சரியாக உணர்ந்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கொண்டுவரும் முற்போக்கு சட்டங்களை, தங்கள் விருப்பத்திற்கேற்ப நீதிமன்றங்கள் விளக்கம் கொடுத்து முடக்கிப் போடும் போக்கு அண்மைக்காலத்தில் அதிகரித்து வருவதை மிகுந்த கவலையோடு இம்மாநாடு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

நாடாளுமன்றம், நீதித்துறை, ஆட்சித் துறை ஆகியவை தங்கள் வரம்புகளை மீறும்போதெல்லாம் நாட்டில் அமைதியின்மை ஏற்படுகிறது. இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல்பணி (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.) என்பனவற்றைப் போலவே, அரசியல் சட்டத்தின் 312வது பிரிவு இந்திய நீதிப்பணியையும் அனுமதிக்கிறது. எனவே, இந்திய நீதிப்பணி தேர்வுக்கு என ஆணையம் ஒன்றை நிறுவி, அதன் வழியே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்துடன் நீதிபதிகளை நியமிப்பதே இச்சிக்கல்களுக்கு சரியான தீர்வாக இருக்க முடியும் என்பதை சுட்டிக் காட்டுவதோடு, இந்திய நீதிப்பணி ஆணையத்தை உடனடியாக நிறுவ மத்திய அரசை இம்மாநாடு வற்புறுத்துகிறது.

அரசுத் துறை, பொதுத் துறை வேலைவாய்ப்புகள் குறைந்தும், தனியார் மயமாக்கம் அதிகரித்து வரும் இந்தச் சூழலில் - தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கு தனியார் துறையிலும் வேலை உறுதி செய்து சட்டமியற்றுமாறு மத்திய அரசை இம்மாநாடு வற்புறுத்துகிறது.


நீதிமன்றத்தைக் கண்டித்தே ஆகவேண்டும்!: பெரியார்

சாதாரணமாக இந்த ஊரிலே நான் பிள்ளையார் உடைச்சதுக்காக ஓர் ஆள் என் மீது வழக்குப் போட்டார். அது முதலிலே மாஜிஸ்திரேட் கோர்ட்டிலே தள்ளுபடியாச்சு, அதற்குப் பிறகு அப்பீலில் மேல்முறையீட்டில் சப்-ஜட்ஜ் கோர்ட்டிலும் தள்ளுபடி ஆச்சு. பிறகு ஜில்லா கோர்ட்டிலும் தள்ளுபடி ஆச்சு. அய்க்கோர்ட்டிலும் இதை விசாரித்த நீதிபதி இதைத் தள்ளிவிட்டார். இதற்கு அப்பீலுக்கும் அனுமதி மறுத்துவிட்டார். கடைசிக் கோர்ட்டான (டெல்லி) சுப்ரீம் கோர்ட்டுக்குப் போச்சு. அங்கே தீர்ப்பு சொல்லும் வாய்ப்பு பார்ப்பானுக்கு இருந்தது. உடனே கீழே 3-4 கோர்ட்டுகள் சொன்ன தீர்ப்புகள் தப்பு என்று சொல்லி, சட்டப்படிக் குற்றம் என்று தீர்ப்பு எழுதி விட்டானே!

இப்படி அவன் கிட்டே பலம் இருக்கிறது; அதனால் நீதி முறைக்கேட்டிற்கு இடம் இருக்கிறது. காரணம், நீதித்துறை அமைப்பிலேயே கோளாறு காணப்படுகிறது. இந்த நாட்டுக்கு (தமிழகத்துக்கு) நீதிபதிகளாக இருப்பவர்களை, எதற்கான டெல்லியில் இருக்கிற ‘பிரசிடெண்டு’ நியமிக்கும் அதிகாரத்தை வைத்திருக்க வேண்டும்? நாம் எதற்காக டெல்லிக்கு கீழ்ப்பட்டிருக்க வேண்டும்? பொதுவான பாதுகாப்பு, படை - அதுக்காக அவருக்கு அதிகாரம் என்றாலாவது ஓரளவு அர்த்தம் இருக்க முடியும். இந்த அதிகாரங்களை அங்கே கொடுத்துவிட்டு, நாம் பார்ப்பானிடம் சிக்கிக் கொண்டு எதற்காக அவஸ்தைப்பட வேணும்? ரொம்பக் கஷ்டப்பட்டுப் பெரிய கிளர்ச்சி பண்ணினால்தானே, நாம் இதிலிருந்து விடுபட முடியும்.

ஓர் அய்க்கோர்ட் ஜட்ஜ் என்றால், அவர் தீர்ப்பு எழுதுவதன் மூலம்தான் நம்மவர்களுக்குக் கேடு விளைவிக்க முடியும் என்பது அல்ல; இன்னும் பல வழிகளில் செய்ய முடியும். கீழே இருக்கிற நீதித் துறையில் உள்ள அத்தனை அதிகாரிகள், ஜில்லா மாஜிஸ்திரேட், ஜில்லா முன்சீப், சப்டிவிஷனல் மாஜிஸ்திரேட், சப்மாஜிஸ்திரேட் முதலிய பல உத்தியோகத்திலுள்ளவர்களின் வேலையைப் பற்றி விமர்சனம் செய்து தூக்கியும் விடலாம் - கீழே அழுத்தியும் விட முடியும். தங்களுக்கு வேண்டாதவர்களை ஒழித்துக் கட்டி விடுவதற்கு முழு வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு ஜட்ஜுக்கும் ஒவ்வொரு ஜில்லா என்று பிரித்துக் கொடுத்து, அந்த ஜில்லாவில் உள்ள நீதித் துறை அதிகாரிகளின் குடுமிகள் அவர் கையில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பார்ப்பான் கையில் தமிழன் குடுமி சிக்கினால் அவ்வளவு தான். அவன் தலையெடுக்க வொட்டாமல் அழுத்திவிட முடியும்.

பார்ப்பனருக்கும், பார்ப்பனரல்லாதாருக்கும் (திராவிடருக்கும்) இப்போது நடைபெற்று வரும் மாபெரும் போராட்டத்தின் ஓர் அம்சம் தான் இந்த நிகழ்ச்சிகள் என்பதை, நம் மக்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அது எப்படி இருந்த போதிலும், நாம் இந்த மாதிரி நீதிப் போக்கின் கொடுமையைக் கண்டிக்காமல் இருந்துவிட முடியாது. ஆகவே விளைவு என்னவானாலும் சந்தோஷத்தோடு அதை ஏற்பது என்ற முடிவோடு, இந்தக் கேட்டைக் கண்டித்து நாம் தீர்மானம் நிறைவேற்றியாக வேண்டும்.

(23.10.1960 அன்று திருச்சியில் ஆற்றிய உரை)



கீற்றுவில் தேட

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puthiyakaatru.keetru.com

www.koottanchoru.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anicha.keetru.com

www.anaruna.keetru.com

www.thaagam.keetru.com

www.dheemtharikida.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.kathaisolli.keetru.com

www.kuthiraiveeran.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.bank.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.puthiyathendral.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

www.sancharam.keetru.com

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://uthappuram.keetru.com/

About Us | Terms & Conditions | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP