Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
நவம்பர் 2006

‘கிரிமிலேயர்’ - ‘சிக்குன் குனியா’வை முன் வைத்து ஒரு விவாதம்

“நாங்கள் ஒரே குழுவாகத்தான் அடக்கப்பட்டோம்; ஒடுக்கப்பட்டோம்; அந்த ஒடுக்கு முறையை, ஒரே குழுவாகவே நின்று வெற்றி கொள்வோம்”. - மார்டின் லூதர்கிங்

இந்திய அரசியல் சட்டம் உருவான காலத்திலேயே அதன் பிரிவுகள் 340(1), 15(4), 338(10), 46 ஆகியவை பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு உரிமைகளை உறுதி செய்து விட்டன. இதில் 15(4)வது பிரிவு மட்டும் பெரியாரும், திராவிடர் இயக்கத்தினரும் நடத்திய போராட்டத்தால், உச்சநீதிமன்றத்தால் பறிக்கப்பட்ட கல்வி உரிமைகள் மீண்டும் கிடைப்பதற்காக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட முதல் அரசியல் சட்டத் திருத்தமாகும். அன்றைக்கே மத்தியில் ஆட்சியில் இருந்தவர்கள், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை உருவாக்கி, அமுல்படுத்துவதற்கான நாடு தழுவிய ஒரு சட்டத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டைப் போல் அனைத்து மாநிலங்களிலும், பிற்படுத்தப்பட்ட மக்களிடையே அன்று எழுச்சி இல்லை. ஆட்சி அதிகாரத்தைத் தனது இரும்புப் பிடிக்குள் வைத்திருந்த பார்ப்பன உயர்சாதி ஆதிக்க வர்க்கம், தனது அதிகாரச் செல்வாக்கை, பிற்படுத்தப்பட்டோர் உரிமைகளை முடக்கிப் போடுவதற்கே பயன்படுத்தியது.

ஒரு சில மாநிலங்களில் மட்டுமே மாநில அரசுகள், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுக்கு அரசாணைகள் பிறப்பித்தன. பல மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடுகளே கிடையாது என்ற நிலை. 40 ஆண்டுகள் ஓடின. 1990-ல் தான் மத்திய அரசின் அரசு வேலைகளுக்கு மட்டும் 27 சதவீத இடஒதுக்கீடு என்ற ஆணை வந்தது. ஆதிக்க இரும்பு கோட்டைக் கதவுகளைத் தட்டிப் பார்க்கத் துணிந்தவர் வி.பி.சிங் என்ற மாமனிதர். அதற்காக அவர் தனது பிரதமர் பதவியையே விலையாகக் கொடுக்க வேண்டியிருந்தது. உடனே உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் வந்தன. 1992 ஆம் ஆண்டு ‘கிரிமிலேயர்கள்’ என்ற அளவுகோலைப் புகுத்தி, இடஒதுக்கீட்டை அமுலாக்கலாம் என்று கூறியது உச்ச நீதிமன்றம். இவை எல்லாம், மத்திய அரசின் வேலை வாய்ப்புகளுக்கான இடஒதுக்கீடுகள்; கல்விக்கான இடஒதுக்கீடு அல்ல. அதுவும், இந்த இடஒதுக்கீடு ஆணை வந்த காலத்திலிருந்து, ‘உலகமயம் - தாராள பொருளாதாரக்’ கொள்கைகளை பார்ப்பன அதிகார வர்க்கம் வேக வேகமாகப் புகுத்தி, பொதுத் துறை நிறுவனங்களை முடக்கி, தனியார் நிறுவனங்களையும், பன்னாட்டு நிறுவனங்களையும் வளர்க்கத் துவங்கின. இதன் மூலம் மத்திய அரசின் வேலை வாய்ப்புகளே முடங்கிப் போனதால், 27 சதவீத இடஒதுக்கீடும், முழு வீச்சில் அமுலாகாமல் முடங்கியது.

கடந்த ஜனவரி 20 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 93வது சட்டத்திருத்தத்தின் மூலம் 15(5)வது சட்டப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கான கல்விக்கான இடஒதுக்கீட்டை, தனியார் கல்லூரிகளிலும் மத்திய மாநில அரசின் கல்வி நிறுவனங்களிலும் உறுதிப்படுத்துகிறது இந்த சட்டத் திருத்தம். 1951-ல் 15(4)வது பிரிவில் வலியுறுத்தப்பட்டதையே மீண்டும் மறு உறுதி செய்கிறது இந்தப் பிரிவு. கூடுதலான அம்சம் - தனியார் நிறுவனங்களிலும், இடஒதுக்கீட்டை உறுதி செய்வது மட்டும் தான். அய்.அய்.டி., அய்.அய்.எம்., ஏ.அய்.எம்.எஸ். போன்ற மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை 1951 ஆம் ஆண்டிலிருந்தே அமுல்படுத்துவதற்கு, சட்டப்படியான உரிமைகள் இருந்தன. இந்த 93வது திருத்தம் வந்துதான் அமுலாக்க வேண்டும் என்ற சட்ட ரீதியான நிலை இல்லை. ஆனாலும், 50 ஆண்டுகளுக்கு மேலாக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் உயர்கல்விக்கான கதவுகளை, ஆதிக்க சக்திகள், திறந்துவிட மறுத்தே வந்திருக்கின்றன.

சாதி அடிப்படையில் வேலைகளைச் செய்வதற்கும், சாதி அடிப்படையில் பெரும்பான்மையான “சூத்திர பஞ்சம” சமூகம் தற்குறிகளாகத் திரிவதற்கான ‘மனுதர்ம’ம் விதித்த இடஒதுக்கீடு, 3000 ஆண்டுகளுக்கு மேலாக உறுதியாக நீதிமன்றத் தடைகள் ‘தகுதி திறமை’, ‘கிரிமிலேயர்’, ‘விசாரணை ஆணையம்’, ‘பட்டியல் தயாரிப்பு’ நாடாளுமன்றக் குழு விசாரணை போன்ற எதையும் சந்திக்காமல், நாடாண்ட மன்னர்களின் முழு ஆதரவோடு அமுலாகிக் கொண்டிருந்தது. இதுவே இந்த தேசத்தின் சோக வரலாறு.

இப்போதும் - மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் - சட்டத்தின் அனுமதியின்றியே - இடஒதுக்கீடு அமுலாக்கப்பட்டுதான் வருகிறது. அது பார்ப்பன உயர்சாதியினருக்கு மட்டுமே ‘தாரை’ வார்க்கப்படும் முழுமையான இடஒதுக்கீடு. தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் பாதியளவுகூட நிரப்பப்படுவதில்லை. அதுவும் சென்னை அய்.அய்.டி. துவக்கப்பட்டு, 10 ஆண்டு காலம் வரை, தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக்கும், இங்கே இடம் கிடையாது என்று, அமுல்படுத்தவே மறுத்து வந்தார்கள். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கு மறுக்கப்பட்ட சமூக நீதியால் பறி கொடுத்த வாய்ப்புகளின் எண்ணிக்கையைக் கணக்கிடவே முடியாது. தடைகளைத் தாண்டி, தாண்டி பிற்படுத்தப்பட்டோர் எழுச்சி பெற்று போராட்டக் களம் கண்டு, சமூக நீதிக்கான கதவுகள் திறப்பதற்கான அசைவுகள் தெரியும்போது கதவுகளை, “முழுமையாகத் திறந்து விடாதே; மெல்லத் திறந்து வை! பிறகு எல்லோரும் உள்ளே நுழைந்து விடுவான்” என்ற குரல் கேட்கிறது. இந்தக் குரல் ஆதிக்கவாதிகளிடமிருந்து மட்டுமல்ல, “முற்போக்கு” முகாம்களிடமிருந்தும் கேட்பதுதான் வேடிக்கை; வினோதம்.

1990-ல் வி.பி.சிங் ஆட்சி, மண்டல் பரிந்துரையை அமுலாக்கியபோதும்கூட பிற்போக்கு சக்திகள், அதை எதிர்த்து நாடு தழுவிய கலவரங்களைக் கட்டவிழ்த்த நேரத்தில்கூட - சில ‘முற்போக்கு’ முகாம்கள் ‘பொருளாதார அளவுகோலை’ப் பிற்படுத்தப்பட்டோருக்குள் புகுத்த வேண்டும். வசதி மிக்க பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வாய்ப்புகள் தரக்கூடாது என்ற கோரிக்கையை முன் வைக்கத் தயங்கவில்லை.

சமூகநீதிப் பார்வை கொண்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளோடு இணைந்து நிற்கிற எவருமே இந்தக் கோரிக்கையை ஏற்க மாட்டார்கள். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதை செரித்துக் கொள்ள முடியாத நீதித்துறையும், பார்ப்பன உயர்சாதி ஆதிக்க சக்திகளும், தங்களின் கடைசி ஆயுதமாகப் பயன்படுத்துவது, இந்த ‘கிரிமிலேயரை’த்தான். காரணம், இது அவர்களுக்கு மிகவும் சாதகமானது!

உயர்கல்வி நிறுவனங்களை ‘பொருளாதார அளவுகோல்’ என்ற வரம்புகள் எதுவுமின்றி, ஆதிக்க சக்திகள் ஆக்கிரமித்துக் கொண்டு நிற்கும்போது, முதன் முதலாக பிற்படுத்தப்பட்டோர் நுழையும் போதே, ‘பொருளாதார அளவுகோலைப் புகுத்தி வடிகட்டு’ என்று முழங்குவதில் என்ன நியாயம் இருக்க முடியும் என்பது நமது முதல் கேள்வி, வசதி படைத்த பிற்படுத்தப்பட்டவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில், தாராளமாக நுழைந்து விட்டார்கள் என்பதற்கான ஆய்வுகளோ, புள்ளி விவரங்களோ அவர்களிடம் இருக்கிறதா? எந்த ஆய்வுகளுமின்றி இப்படி ஒரு கோரிக்கையை முன் வைப்பதுதான் விஞ்ஞான அணுகுமுறையா?

பிற்படுத்தப்பட்ட சமூகம் என்று வரையறுக்கப்பட்டவர்கள் யார்? அவர்களின் சமூக பொருளாதார நிலை என்ன என்பது இரண்டாவது கேள்வி. விவசாயம் செய்வோர், விவசாயக் கூலிகள், நெசவாளர்கள், முடிவெட்டுவோர், சலவைத் தொழிலாளி, மரம் ஏறுவோர், மண்பாண்டம் செய்வோர் தச்சர் போன்ற “சேவைத்” தொழிலில் ஈடுபடுகிறவர்கள்தான் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டவர்கள். 2000 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ‘தேசிய மாதிரி கணக்கெடுப்பு’ ஒன்று மட்டுமே தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் வாழ்நிலை தொடர்பான அண்மைக் கால ஆய்வு.

இதன்படி, கிராமப்புறங்களில், சிறிது நிலம் வைத்து வீட்டு விவசாயம் செய்கிற பிற்படுத்தப்பட்டோர் 35 சதவீதம். மற்ற முன்னேறிய சமூகத்தில், இதன் எண்ணிக்கை 41 சதவீதம். சொந்தமாக தொழில் செய்கிற பிற்படுத்தப்பட்டோர் 15 சதவீதம். முன்னேறிய சமூகத்தினர் 14 சதவீதம். கூலிகளாக வேலை செய்வோர் பிற்படுத்தப்பட்டோரில் 37.1 சதவீதம். ஏனைய முன்னேறிய சமூகத்தினர் 25.3 சதவீதம்.

நகர்ப்புறங்களில் சொந்தத் தொழில் செய்யும் பிற்படுத்தப்பட்டோர் 38 சதவீதம். முன்னேறிய சாதியினர் 36 சதவீதம். மாதச் சம்பளம் வாங்கும் பிற்படுத்தப்பட்டோர் 36 சதவீதம். முன்னேறிய சாதியினர் 46.5 சதவீதம். கூலித் தொழிலாளர்களாக இருக்கும் பிற்படுத்தப்பட்டோர் 17.4 சதவீதம். முன்னேறிய சாதியினர் 7.4 சதவீதம் (இதில் பார்ப்பனர்கள் ஒருவரைக் கூட பார்க்க முடியாது). (19 லிருந்து 25 வயதுக்குள்) பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா பெற்ற பிற்படுத்தப்பட்டோர் 4.55 சதவீதம். முன்னேறிய சாதியினர் 13.37 சதவீதம். விவசாயப் பட்டதாரிகளில் பிற்படுத்தப்பட்டோர் 18 சதவீதம். முன்னேறிய சாதியினர் 53 சதவீதம். பொறியியல் பட்டதாரிகள் பிற்படுத்தப்பட்டோரில் 17.18 சதவீதம். முன்னேறிய சாதியினர் 51 சதவீதம். மருத்துவபட்டதாரிகள், பிற்படுத்தப்பட்டோரில் 28 சதவீதம், முன்னேறிய சாதியினரில் 34.05 சதவீதம். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கும், முன்னேறிய சாதிப் பிரிவினருக்கும் இடையே உள்ள இடைவெளியை இந்தப் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

நவீன தொழில்நுட்ப யுகத்தில் கணினி தகவல் தொடர்பு நிறுவனங்களில் தங்களுக்குள்ள மேல்மட்ட சமூகத் தொடர்புகளைப் பயன்படுத்திக் கொண்டு நல்ல ஊதியத்தில் பணிகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்பு பார்ப்பனர்களுக்கு மட்டுமே இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கு அத்தகைய வாய்ப்புகள், தொடர்புகள் மிக மிகக் குறைவு. எனவே பொருளாதார அளவுகோலை வைத்து பிற்படுத்தப்பட்டோரை, உயர்கல்வி அமைப்பிலிருந்து வெளியேற்றுவதில் என்ன நியாயம் இருக்க முடியும் என்பது நமது இரண்டாவது கேள்வி.

ஒரு குழு - அதற்குரிய நியாயமான சமூக உரிமைகளைப் பெறவிடாமல் தடுக்கப்பட்டதே, அதன் சாதிய அடையாளத்தை வைத்துத் தானே தவிர, அக்குழுவின் பொருளாதார நிலையைப் பார்த்து அல்ல. ஒட்டு மொத்தமான சாதி அடையாளமே அவர்களைப் புறக்கணிப்புக்கு உள்ளாக்கியது. ஓரளவு பொருளாதார வசதி இருந்தும்கூட, சாதி அடையாளத்தால் அவர்கள் அதிகாரமற்றவர்களாக்கப்பட்டார்கள். இந்த சமூகப் பின்னணியில், பொருளாதார அளவுகோலைப் புகுத்தி, சாதிக் குழுவிலிருந்து ஒரு பிரிவினரை வெளியேற்றுவது, வெளியேற்றப்பட்டவர்களின் முன்னேற்றத்தையும் பாதிக்கும். அந்த சாதிக்குழுவில் நிறுத்தி வைக்கப்பட்ட மக்களை மேலும் கடுமையாகப் பாதித்து விடும். வரலாற்று ரீதியாக ஓரம் கட்டப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், தங்களிடமுள்ள பொருளாதார வலிமையால் மட்டும், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உரிய பரிகாரம் கண்டுவிட முடியுமா என்பது அடுத்த கேள்வி!

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு என்பது, அவர்களுக்கான வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல. நாட்டின் கல்வி அதிகார மய்யத்தில் அவர்களுக்கு உரிய பங்கினை வழங்குவதற்கான ஓர் ஜனநாயகக் கோட்பாடு. எந்த ஒரு அரசின் திட்டத்தையும், தங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதில் முன்னணியில் நிற்பவர்கள், அந்த சமூகத்துக்குள்ளேயே ஓரளவு வலிமை பெற்றவர்களாகத்தான் இருப்பார்கள். சோஷலிச நாடுகளின் திட்டங்களிலேகூட, இது தவிர்க்க முடியாத உண்மை. இதன்படி, உயர்கல்வி நிறுவனங்களில், சேர்ந்து படிக்கக்கூடிய வலிமை பெற்றவர்களாக, பிற்படுத்தப்பட்டோரிலேயே ஓரளவு வலிமை பெற்ற பிரிவினர் தான் இருக்க முடியும். அவர்களை, வெளியேற்றி விட்டால், பார்ப்பன உயர்சாதிகளின் ஆதிக்கத்துக்கு எதிராக போட்டியே இல்லா நிலைதான் உருவாகும். இந்த சமூக யதார்த்தத்தைப் புறக்கணிப்பது, ஆதிக்க சக்திகளுக்கு வலிமை சேர்க்காதா என்பது நமது அடுத்த கேள்வி.

பொறியியல், மருத்துவம் போன்ற தொழில் கல்வி நிறுவனங்கள் நமது விருப்பமின்றியே, தனியார் வர்த்தக நிறுவனங்களாகிவிட்டன. நல்ல மதிப்பெண் பெற்று, அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காத நிலையில், தனியார் கல்லூரி நிறுவனங்களில் சேர வேண்டிய பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களே, பெரும் தொகையைக் கட்டணமாகவும், நன்கொடையாகவும் செலுத்த வேண்டியிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலேயே, ஓரளவு, வசதி படைத்தவர்களும், மாத ஊதியம் பெறக் கூடியவர்கள் மட்டுமே, இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இவர்களையும் ‘கிரீமிலேயர்’ வரம்புக்குள் கொண்டு வந்து இடஒதுக்கீட்டிலிருந்து தூக்கி எறிந்து விட்டால், பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் பூர்த்தியாகாமலே போய் விடும். ஆதிக்க சக்திகள் அவைகளை விழுங்கி ஏப்பமிட்டு விடும். அதற்கான உச்சநீதிமன்ற அனுமதியை, தனியார் கல்வி நிறுவனங்கள் பெற்று வைத்திருக்கின்றன. இந்த நிலையை அனுமதிக்கலாமா என்பது நமது அடுத்த கேள்வி.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாத ஊதியம் பெறுவோர் தான் பொருளாதார வரம்பால் மிகவும் பாதிக்கப்படுகிறவர்கள். காரணம், இவர்களின் ஊதியத்தை மறைத்து, பொய்யாக சான்றிதழ் வாங்க முடியாது. ஊதியத்துக்கான சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். முதல் தலைமுறையாக பிற்படுத்தப்பட்டோரில் படித்து பதவிக்கு வந்த இந்தப் பிரிவினர்தான், அவர்களுக்குள்ள விழிப்புணர்வு காரணமாக, தங்கள் குடும்பத்தினரை, உயர் கல்விக்கு அனுப்ப முன் வருகிறார்கள். ஏறி வரும் ஏணிப்படியை எட்டி உதைப்பது போல், வளர்ச்சிப் பாதையில் அடி வைக்கும் சமூகத்தை, வெளியேற்றி விடலாமா என்பது நாம் எழுப்பும் அடுத்த கேள்வி.

ஒருவர் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்காரர் என்பதை, அவ்வப்போது மாறிக் கொண்டு வரும் ஊதிய விகிதங்கள் தான் தீர்மானிக்கும் என்பதை ஏற்க முடியுமா என்பது நமது அடுத்த கேள்வி. செங்கல்பட்டிலே பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துப் பட்டியலில் இடம் பெற்றவர், சென்னை நகரத்துக்கு மாற்றலாகி, அவரது நகர ஈட்டுப்படி உயர்ந்து, வருமான வரம்பு அதிகரிக்கும்போது அவர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிருந்து நீக்கப்பட்டு முன்னேறிய சாதி ஆகி விடக் கூடும். 3000 ஆண்டுகாலமாக நிலைநிறுத்தப்பட்ட, ஒரு ‘சமூகப் புறக்கணிப்பை’ சென்னைக்கும் செங்கைக்குமிடையே உள்ள 30 கிலோ மீட்டர் பயண இடைவெளியில் சரி செய்து விட முடியும் என்பதை, சமூக இயலைப் புரிந்தவர்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்பது நமது மற்றொரு கேள்வி.

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொரு பிற்படுத்தப்பட்ட சாதிக் குழுவும் தனது குழுவிலிருந்து ஒருவர் மாவட்ட ஆட்சித் தலைவராகவோ, நீதிபதியாகவோ, வருமானவரித் துறை ஆணையராகவோ காவல்துறை அதிகாரியாகவோ வருகிறார் என்கிறபோது, அந்தக் குழுவே, தனது சாதிக்குக் கிடைத்த பெருமையாகக் கருதி, அதன் வழியாக, தங்களாலும், இந்த நிலையை எட்ட முடியும் என்ற புதிய நம்பிக்கையைப் பெறுகிறது. மண்டல் பரிந்துரையும், இந்த உளவியலை சுட்டிக் காட்டுகிறது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தைப் பொருளாதார அடிப்படையில் கூறு போட்டால், அந்த சமூகத்தில் உருவாகும் இத்தகைய தன்முனைப்புகள் தகர்க்கப்பட்டு விடாதா என்பது அடுத்த கேள்வி.

நாட்டில் வேகமாகப் பரவி வரும் ‘சிக்குன் குனியா’ நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர்களை அணுகுகிறார்கள். ஆனால் நோய்க்கான நிரந்தரத் தீர்வு, மருத்துவரிடம் போய் சிகிச்சை பெறுவது மட்டும் அல்ல; கொசுக்களை ஒழிக்க வேண்டும். அதைத்தான் அரசும் தீவிரத்துடன் செயல்படுத்துகிறது. அதேபோல் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதைவிட, இந்தத் துறைகளில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டு, தங்களின் ஆதிக்கத்துக்காக அரசு எந்திரத்தைப் பயன்படுத்திவரும் கூட்டத்தின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது. இடஒதுக்கீட்டின் முக்கியமான நோக்கமாகும். அதிகார மய்யம், ஒடுக்கப்பட்டோர் வசம் வரும்போதுதான் சமூகத்தின் போக்கை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்த முடியும் என்பதே சமூகவியல். இதுவும் ‘சிக்குன்குனியா’ நோய் பரவுவதைத் தடுக்க, கொசுக்களை ஒழிப்பது போலத் தான்!

இந்த சமூக எதார்த்தங்களை புறக்கணித்துவிட்டு, ரூ.16,000 கோடி செலவில் ஆதிக்க சக்திகளுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் கூடுதல் இடங்களை ஒதுக்குவது அவர்களின் வலிமையை மேலும் பலப்படுத்தவே செய்யும். பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதார நுழைவை நுழைத்து பிற்படுத்தப்பட்டோரை கூறுபோட்டு, அதன் மூலம் வலிமை இழக்கச் செய்யும் யோசனைகளும், பார்ப்பன உயர்சாதி மேலாண்மையை உறுதிபடுத்துவதற்கே பயன்படும்.

முன்னேறிய சமூகத்தினருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் உள்ள இடைவெளியைப் போல் இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதிலும், மாநிலங்களுக்கிடையே இடைவெளிகள் இருக்கின்றன. எனவே உயர்கல்வி நிறுவனங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டுக் கொள்கைகள் மாநிலங்களின் உரிமைகளாகக்கப்படுவதே சரியான முடிவாக இருக்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 1992 நவம்பர் 26 ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய மண்டல் வழக்கு தொடர்பான தீர்ப்பில் தனது தனித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கிய நீதிபதி பி.பி.சவந்த் கூறியுள்ள கருத்தை இங்கே பதிவு செய்கிறோம்:

“அரசியல் சட்டப் பிரிவு 16(4)ல் கூறப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பு குடி மக்கள் என்போர் சமூகரீதியாக பிற்படுத்தப்பட்ட குடிமக்கள் ஆவர். அவர்களின் கல்வி, பொருளாதார பின்னடைவுக்குக் காரணம், அவர்களின் சமூக ரீதியான பின்னடைவுதான். எனவே பிற்படுத்தப்பட்ட வகுப்பை நிர்ணயிக்கும் போது சமூகம் மற்றும் கல்வியில் பின் தங்குவதற்கு காரணமான சாதியையே கவனத்தில் கொள்ள வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கியமைக்குக் காரணமே அவர்களின் சமூக கல்வி ரீதியான பின்னடைவுதான். பொருளாதாரம் என்ற அளவுகோல் மட்டுமே பிற்படுத்தப்பட்டோருக்கான அடையாளமாக இருக்க முடியாது. அவர்களின் பொருளாதார பின்னடைவுக்கு, சமூகப் பின்னடைவு காரணமாக இருக்கும்போதுதான், அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களாகவே இருக்க முடியும். அதோடு பணிகளில் உள்ள பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கையை மட்டும் காட்டி, போதுமான பிரதிநிதித்துவம் கிடைத்துவிட்டது என்று முடிவு செய்து விட முடியாது. நிர்வாகத்தின் பல்வேறு மய்யங்களிலும் பல்வேறு உயர்நிலைகளிலும் போதுமான பிரதி நிதித்துவம் வழங்கப்பட்டுள்ளதா என்பதை ஆராய வேண்டும். நிர்வாக அமைப்பில் (பிற்படுத்தப்பட்டோரின்) குரல் வலிமை மிக்கதாக இருக்க வேண்டும்; இதுதான் போதுமான பிரதிநிதித்துவம் என்பதன் அர்த்தமே தவிர, பணியாற்றக் கூடியவர்களின் மொத்த எண்ணிக்கையல்ல.”


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com