Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
நவம்பர் 2006

‘பெரியார் பொன்மொழிகளின்’ பெயரால் பதவி ஏற்ற உறுப்பினர்

‘பெரியார் பொன்மொழிகள்’ என்ற தொகுப்பினை எழுதியமைக்காக தந்தை பெரியார், ‘ஆரிய மாயை’ என்ற நூல் எழுதியமைக்காக அறிஞர் அண்ணா ஆகிய இருவரும் அன்றைய தமிழக அரசால் வழக்கு தொடரப்பட்டு, அபராதம் கட்ட மறுத்து திருச்சி சிறையில் அடுத்து அடுத்த அறைகளில் வைக்கப் பெற்றனர். இருவரும் சிறை மீண்டு வெளியே வந்தபோது அண்ணாவை அழைத்துச் செல்ல வரவேண்டிய தோழர்கள் கால தாமதமாகிவிட பெரியாரின் ஆணைப்படி திராவிடர் கழகத் தலைவர் வக்கீலய்யா தி.பொ. வேதாசலம் அண்ணாவையும் அதே காரில் அழைத்துச் சென்று அண்ணாவின் தங்குமிடம் கொண்டு சேர்த்தார்கள். ‘பெரியார் பொன் மொழிகள்’ என்ற நூலை வெளியிட்டவர் ‘திராவிட மணி’ என்ற கழகக் கொள்கைப் பரப்பு ஏட்டை நடத்தி பொருளிழப்புக்கு ஆளாகி, வீடு வாசலை இழந்தவர் திராவிட மணி முத்து. பொன்மொழிகளின் நூலின் வெளியிட்டாளர் என்ற முறையில் ‘திராவிடமணி’ முத்துவும் நீதிமன்றத்தின் தண்டனைக்கு ஆளானார். வளமாய் வாழ்ந்த ‘திராவிட மணி’ முத்து வறுமையைத் தன் பிள்ளைகளுக்குச் சொத்தாக்கிவிட்டுச் செத்துப் போனார். ஆனால் அவர் விட்டுப் போன வித்து வீணாகிவிட வில்லை. பாறை இடுக்கில் வளரும் செடிபோல் இதோ அவர் மகன் தி.மு.ரெங்கா!

நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் படித்தவர்கள் பெரும் பகுதியாய் வாழும் திருச்சி குமரன் நகர் பகுதியில் அதே வார்டில் அவருடைய துணைவியார் பானுமதி இருமுறையும், மூன்றாம் முறையாய் ரெங்காவும் வெற்றி பெற்றுள்ளார்கள். இவர் சாதி மறுப்பு - மத மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். பகுத்தறிவாளர்.

பதவி ஏற்றுக் கொண்டபோது எல்லோரும் ‘கடவுள்’, ‘மனசாட்சி’, ‘சத்தியம்’ என்று கூறி உறுதி எடுத்துக் கொண்டபோது தி.மு.க. ரெங்கா மட்டும் ‘பெரியாரின் பொன்மொழிகளை மனதில் பதித்துக் கொண்டிருக்கும் தொண்டனாகிய நான்’ எனக் கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டபோது அவையில் பார்வையாளர் இடையில் மகிழ்ச்சி நிறைந்த அதிர்ச்சி.

மூன்று முறை மாநகர் மன்ற உறுப்பினர் - ஆனால் சொந்த வீடு கூட இல்லாத இந்த எளிய தொண்டனின் வலிய கொள்கை உறுதியை திருச்சி நாளேடுகள் சில பெட்டிச் செய்தியாய் வெளியிட்டுக் கொண்டாடின.

அய்.அய்.டி.யில் தற்கொலைகள்

அய்.அய்.டி. உயர்கல்வி நிறுவனங்களில் தலைவிரித்தாடும் பார்ப்பன ஆதிக்கத்தால் அங்கு உரிய கல்வித் தகுதியோடு படிக்கச் செல்லும் தலித் மாணவர்கள் புறக்கணிப்புக்கும், அவமானத்துக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். இதனால், கடந்த பல ஆண்டுகளாகவே, தலித் மாணவர்கள் பலர் மன உளைச்சலுக்கு உள்ளாகி விடுதியிலேயே தற்கொலை செய்து கொள்ளும் துயர சம்பவங்கள் நடந்து வருகின்றன.

கடந்த நவம்பர் 6 ஆம் தேதி - கான்பூர் அய்.அய்.டி.யில் கெமிக்கல் என்ஜினியரிங் துறையில் ஆராய்ச்சி மாணவராக ஆய்வு செய்து வந்த கேரளாவைச் சார்ந்த அபிலாஷ், விடுதி அறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் தலித் மாணவரா என்பது தெரியவில்லை. இதேபோல் - இதே நிறுவனத்தில் அண்மையில், மூன்று மாணவர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

உலக தரத்திலான உயர் கல்வியைத் தருவதாக பார்ப்பனர்கள் பெருமையடித்துக் கொள்ளும் அய்.அய்.டி.யில் மாணவர்களிடம் மன அழுத்தத்தை உருவாக்கி, அவர்களை தற்கொலை விளிம்புக்கு தள்ளக்கூடிய ஒரு சூழலைத்தான் உருவாக்கி வைத்துள்ளார்கள்.

பல்லாயிரம் கோடி ரூபாய் அரசு பணத்தை விழுங்கிக் கொண்டிருக்கும் இந்தக் கல்வி நிறுவனங்களில் - மாணவர்களுக்கு சுதந்திரமான சூழலை உருவாக்கித் தராதவர்கள் - ‘தகுதி திறமை’ பற்றி பேசுவதற்கு யோக்கியதை உண்டா?

அய்.அய்.டி.கள் - பார்ப்பனப் பிடியிலிருந்து முதலில் விடுதலை செய்யப்பட்டு, சுதந்திரமான காற்றை உள்ளே வீச அனுமதிக்க வேண்டும். அதற்கான ஒரே வழி தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை அமுல்படுத்துவது தான்! இல்லையேல் பார்ப்பனியம் என்ற விஷ வாயு - மாணவர்களின் மூச்சை நிறுத்துவது தொடரவே செய்யும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com