Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
நவம்பர் 2006

அப்சலைத் தூக்கில் போடலாமா?

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அப்சல்குருவுக்கு, உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. தூக்குத் தண்டனை நாகரிக சமூகத்துக்கு ஒவ்வாத ‘பழிக்குப் பழிவாங்கும்’ காட்டுமிராண்டி காலத்தின் கலாச்சாரப் பிரதிபலிப்பு என்று கூறும் மனித உரிமை அமைப்புகள், தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் ‘இந்து’ ஏட்டில் ஆசிரியருக்குக் கடிதம் எழுதும் பார்ப்பனர்களும், பாரதிய ஜனதா கட்சியும், இந்து முன்னணியும், தூக்கில் ஏற்றியே தீர வேண்டும் என்று இயக்கம் நடத்துகிறார்கள்.

நாடாளுமன்றத்தையே இடித்து அழிப்பதற்குத் துணிந்தவர்களை உயிரோடு விடலாமா என்று கேட்கிறார்கள். இவர்களாவது இடிப்பதற்கு வந்தவர்கள்தான். ஆனால் இடிக்கவில்லை. ஆனால் சிறுபான்மை சமூகத்தின் வழிபாட்டுத் தலத்தையே இடித்து சுக்குநூறாக்கிவிட்டு, நாட்டில் எந்தத் தண்டனயும் பெறாமல் உலவிக் கொண்டிருக்கிற ஒரு கூட்டம், இப்படிக் கோருவதற்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது?

அப்சல்குரு மீது விசாரணை நியாயமாக நடத்தப்பட்டதா? அவர் மீதான வழக்கை நடத்தியவர்களும், நீதி வழங்கியவர்களும் யார்? மக்கள் மன்றத்தில் மறைக்கப்படும் உண்மைகள் என்ன?

* அப்சல் குரு, தீவிரவாத இயக்கத்தில் இருந்தவர், அதே அப்சல் குரு, தனது தீவிரவாதத்தின் தவறை உணர்ந்து, காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படையிடம் சரணடைந்தவர். அது முதல் எல்லைப் பாதுகாப்புப் படையின் கண்காணிப்பின் கீழ் இருந்தவர்.

* காஷ்மீரில் போராடும் “தீவிரவாதிகள்” பற்றிய பல ரகசிய தகவல்களை ராணுவத்தின் உளவுத் துறைக்கு தந்து வந்தவர்.
* இந்திய எல்லைப் படையிடம் அப்சல் குரு சரணடைந்த பிறகும் - பாதுகாப்புப் படையினர், அவர்களது முகாம்களுக்கு அவ்வப்போது அப்சலை அழைத்துப்போய், அவரை சித்திரவதை செய்வது வழக்கமாக இருந்தது. ‘ஹம்ஹமா’ என்ற இடத்தில் உள்ள பாதுகாப்புப்படை முகாமுக்கு, அவரைக் கொண்டுபோய் சித்திரவதை செய்து வந்த டி.எஸ்.பி. நிலையிருந்த அதிகாரிகள் டாரிந்தர் சிங், டி.எஸ்.பி. வினாய்குப்தா, இருவரும், சித்திரவதையை நிறுத்துவதற்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டனர்.
தங்களிடமிருந்த அனைத்து உடைமைகளையும் விற்று, ஒரு லட்சம் ரூபாயை அந்த அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கொடுத்ததாக, அப்சலின் மனைவி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

* அப்சலுக்குத் தூக்குத் தண்டனை விதித்த நீதிபதி - பல வழக்குகளில் தூக்குத் தண்டனை விதிப்பதை வழக்கமாக்கிக் கொண்டவர்; அவரைத் ‘தூக்கிலிடும் நீதிபதி’ என்று ‘கார்டியன் வீக் எண்ட்’ பத்திரிகை பட்டப் பெயரோடு எழுதுகிறது.

* இந்த வழக்கு விசாரணை நடத்தியவர் காவல்துறை உதவி ஆணையர் ராஜ்பீர் சிங். இவர் வழக்கு விசாரணையில் செய்த முறைகேடுகளை முன்னாள் சட்ட அமைச்சர் சாந்திபூஷன், ராம் ஜெத்மலானி ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்திலேயே கண்டித்தார்கள். வழக்கு விசாரணையில் இந்த அதிகாரி நடத்திய முறைகேடுகளுக்காக அவரை இ.பி.கோ. 194, 195 பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்று வாதாடினார்கள்.

* குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குருவை - வழக்கு நடக்கும் போதே தீர்ப்பு வருவதற்கு முன்பே குற்றவாளியாக்கி, தொலைக்காட்சியின் முன் நிறுத்தி, மக்களின் முன் ஒரு விசாரணையையே நடத்தினார் இந்தக் காவல் துறை அதிகாரி!

* வழக்கு நடக்கும் போதே - இது பற்றிய தொலைக் காட்சித் தொடர் ஒன்று கற்பனையாக ஒளிபரப்பானது. அந்தத் தொடரில் கற்பனைப் பாத்திரமாக சித்தரிக்கப்பட்ட அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. நாடக வடிவில் நடத்தப்பட்ட இந்த முன்னோட்டம், பிறகு உண்மையான தூக்காக அறிவிக்கப்பட்டது.

* முஸ்லீம்கள் என்றால், அவர்கள், தீர்த்துக் கட்டப்பட வேண்டியவர்கள் என்பதையே கொள்கையாகக் கொண்டவர், இந்த காவல்துறை அதிகாரி. பல முஸ்லீம்கள் மீது பொய் வழக்கு போட்டவர். டெல்லியில் அன்சால் பிளாசா என்னுமிடத்தில், இரண்டு அப்பாவி முஸ்லீம்களை என் கவுண்டரில் சுட்டு வீழ்த்தியவர். டெல்லிப் பல்கலைக் கழகப் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.ஜிலானி, இதே வழக்கில் பொய்யாக இணைக்கப்பட்டார்.
தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டார். இவர் குற்றமற்றவர் என்று டெல்லி உயர்நீதிமன்றம், விடுதலை செய்தது. ஜிலானி விடுதலை செய்யப்பட்டதைப் பொறுக்க முடியாத இந்த அதிகாரி, கூலிப்படையை ஏற்பாடு செய்து, ஜிலானி தனது வழக்கறிஞருடன் இருந்த போதே சுட்டுக் கொல்ல ஏற்பாடு செய்தார். குண்டுக் காயங்களுடன் ஜிலானி உயிர் தப்பி விட்டார்.

* ராணுவ உளவுப் படையின் கண்காணிப்பில் அவர்களுக்கு லஞ்சம் தந்து கொண்டு வாழ்ந்து வந்த அப்சல் எப்படி இந்தத் தாக்குதலில் பங்கு பெற முடியும்? இந்தக் கேள்விக்கு அதிர்ச்சி தரக்கூடிய செய்திகள் விடையாகக் கிடைக்கின்றன. இந்த நாடாளுமன்றத் தாக்குதல் சதித் திட்டத்திலேயே, பாதுகாப்புப் படைக்கே தொடர்பிருக்கிறது என்று, இந்த வழக்கு பற்றிய முழுமையாக ஆய்வு செய்துள்ள ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் அமைப்பு (PUDR- People’s Union for Democratic Rights) தனது வெளியீட்டில் ஆதாரங்களுடன் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

* அப்சலுக்காக முழுமையாக, முறையாக வாதாட, வழக்கறிஞர்கள் எவரும் முன்வரவில்லை. ஒரு வழக்கறிஞர் அவருக்காக வாதாட முன் வந்தார். ஆனால், அப்சலுக்கு தூக்குத் தண்டனை வேண்டாம், அதற்கு பதிலாக, விஷம் தந்து கொலை செய்யலாம் என்று அவர் வாதாடினார்.

* முகம்மது என்பவரை, அப்சல் காஷ்மீரிலிருந்து டெல்லிக்கு அழைத்து வந்தார் என்பது அப்சல் மீதான குற்றச்சாட்டு. இந்த முகம்மது, நாடாளுமன்றத்தைத் தாக்க வந்த தீவிரவாதிகளில் ஒருவர்; சுடப்பட்டு இறந்து விட்டார். இதனால் நாடாளுமன்றத் தாக்குதலுக்கு, உடந்தையாக செயல்பட்டார் என்பதுதான் அப்சல் மீதான குற்றச்சாட்டு. ஆனால், அப்சல் டெல்லிக்கு அழைத்து வந்த முகம்மது என்பவர் சிறப்புக் காவல் படையைச் சார்ந்த தாரிக் என்பவருக்கு நெருக்கமானவர். அவரது உத்தரவுப்படிதான், அப்சல், முகம்மதுவை டெல்லிக்கு அழைத்து வந்தார். அப்சல் நீதிமன்றத்தில் தெரிவித்த இந்தக் குற்றச்சாட்டு, மறுக்கப்படவே இல்லை. இதை ‘பிரன்ட் லைன்’ ஏட்டில் பிரபுல் பிட்வை (தொடர்ந்து எழுதும் கட்டுரையாளர்) குறிப்பிட்டுள்ளார்.

* இந்த வழக்கின் முக்கிய ஆதாரங்களாக ‘செல்வோன்’ உரையாடல்களே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் வழக்குக்காக போலியான செல்பேசி ‘சிம்கார்டுகள்’ தயாரிக்கப்பட்டுள்ளன என்று, குற்றம் சாட்டுகிறது, மக்கள் ஜனநாயக உரிமைகளுக்கான ‘பியுடிஆர்’ அமைப்பு.

* நாடாளுமன்றத் தாக்குதல் நடந்த காலத்தில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செல்போன் இணைப்பு வசதிகளே நிறுவப்படவில்லை. ஆனால், அங்கிருந்து கொண்டு செல்பேசியில் பேசியதாக வழக்குக்கான காட்சியங்கள் முன் வைக்கப்படுவதை, நீதிமன்றம் எப்படி ஏற்றுக் கொண்டது என்ற கேள்வியை எழுப்பு கிறார், ‘பிரன்ட் லைன்’ கட்டுரையாளர், பிரபுல் பிட்வை.

* காந்தியில் கொலையில் அந்த சதியின் முழு விவரத்தை அறிந்தவர் என்று நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டவர் கோபால் கோட்சே. சதித்திட்டத்தை முழுமையாகத் தெரிந்திருந்த கோபால் கோட்சேயை நீதிமன்றம் தூக்கிலிடவில்லை. இவரது சகோதரர் நாதுராம் கோட்சேயைத்தான் தூக்கிலிட்டது. கோபால் கோட்சேவுக்கு கிடைத்தது ஆயுள் தண்டனைதான். ஊகங்கள் அடிப்படையில் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், இப்போது அப்சலும், கோபால் கோட்சே நிலையில்தான் இருக்கிறார். இவரை மட்டும் ஏன் தூக்கிலிட வேண்டும் என்று கேட்கிறார், ‘பிரன்ட் லைன்’ கட்டுரையாளர்.

இப்படி சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும், ஊகங்களுக்கும் உள்ளாகியுள்ள உறுதி செய்ய முடியாத ஒரு குற்றச்சாட்டின் கீழ், ஒருவரை தூக்கிலிட்டே தீர வேண்டும் என்று, பார்ப்பன இந்துத்துவா சக்திகள், ஏன் துடிக்க வேண்டும்? இது பழிவாங்கும் வெறியாட்டமல்லவா?

காஷ்மீர் மாநில முதல்வர் குலாம்நபி ஆசாத் தூக்கி லிடுவதை நிறுத்தச் சொல்கிறார். மாநிலத்தின் மற்றொரு செல்வாக்கு படைத்த, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர், முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவும், மற்றொரு முக்கிய அமைப்பாகத் திகழும் ஹீரியத் அமைப்பின் தலைவர் யாசின் மாலிக்கும் தூக்கிலிடுவதை நிறுத்த வேண்டும் என்கிறார்கள். இந்த உணர்வுகளைப் புறந்தள்ளி, பழிவாங்கும் வெறியோடு காஷ்மீரிகளின் தேசிய உணர்வை மீண்டும் சீண்டிப் பார்க்கத் துடிக்கிறது, பார்ப்பனிய இந்துத்துவா கும்பல்! ஒரு அப்சலைத் தூக்கிலிடுவதால், தீவிரவாதத்தை நிறுத்திவிட முடியாது. அது மேலும் அதிகரிக்கும். காஷ்மீரிகளின் தேசிய சுய நிர்ணய உரிமையை அங்கீகரிப்பதுதான் பிரச்சினைக்கு தீர்வே தவிர, அப்சலைத் தூக்கில் போடுவது அல்ல!

‘இந்துத்துவ’ கும்பலின் வெறிக் கூச்சலுக்கு எதிராக மனித உரிமையாளர்களின் கோரிக்கைகளை மத்திய ஆட்சியாளர்கள் மனத்தில் நிறுத்தி முடிவெடுக்க வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com