Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
தலையங்கம்
சங்கராச்சாரிகள் வழக்கு!

காஞ்சிமடத்து பார்ப்பன சங்கராச்சாரிகள் மீது நடைபெற்றுக் கொண்டிருப்பது கொலை வழக்கு. கிரிமினல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்குக்கான தொடக்க நிலைக் கட்டங்களும் தாண்டப்பட்டு, விசாரணை தொடங்கிவிட்ட நிலையில், உச்சநீதிமன்றம், விசாரணையை புதுவை மாநிலத்திற்கு மாற்ற உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட இரு நீதிபதிகள் அடங்கிய ‘பெஞ்ச்’ இந்த தீர்ப்பை சங்கராச்சாரிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது வழங்கியிருக்கிறது. (26.10.2005). அக்.31 ஆம் தேதியோடு ஓய்வு பெறப் போகிறார் இந்த தலைமை நீதிபதி. ஏற்கனவே சங்கராச்சாரிக்கு பிணை வழங்கியவரும் இவர் தான்.

கிரிமினல் - கொலை வழக்குகளில் சிக்கினாலும் கூட, பார்ப்பன சங்கராச்சாரிகளை, நாட்டை வழி நடத்தும் “ஆன்மிகத்” தலைவர்களாகவே, நீதிமன்றங்கள் பார்க்க விரும்புகின்றன. இது நீதிமன்றத்தின் பச்சைப் பார்ப்பனப் பார்வை என்பதே நமது உறுதியான கருத்து. வருமான வரித் துறையானாலும், இந்து அறநிலையத் துறையானாலும், அவைகளுக்கு தனது ‘பார்ப்பன அதிகாரத்தில்’ தலையிடும் உரிமை கிடையாது என்று இதுவரை செயல்பட்டு வந்தவர்கள் இந்த சங்கராச்சாரிகள். இதே போல், இவர்கள் நடத்துகிற கல்வி நிறுவனங்களிலும், அங்கே ‘தீண்டாமை’ கொடிகட்டிப் பறந்தாலும், சட்டம் தனது கடமையைச் செய்ய முடியாது. சங்கரமடங்களின் முறைகேடுகளில் நடவடிக்கை எடுக்க முயன்ற பல அதிகாரிகள் பழிவாங்கலுக்கும், இடமாற்றங்களுக்கும் உள்ளாகி இருக்கிறார்கள். இப்படி சட்டத்தை மதிக்காத சங்கராச்சாரிகளின் காலடியில் விழுந்து தங்களது சங்கரமட ஆதரவை நீதித்துறையிலிருந்து - நிர்வாகத்துறை வரை, உயர் பதவிகளில் இருக்கும் பலர் வெளிச்சம் போட்டுக் காட்டினர். மக்களுக்கே தொடர்பில்லாமல், வெகுமக்களை ‘இழிமக்களாக’ அறிவித்துக் கொண்டிருக்கும், ஒரு நிறுவனம் தான் ஆட்சி அதிகாரத்தை ஆட்டிப் படைத்தது. அந்த அதிகார மய்யங்கள் - இன்னும் நிலைகுலைந்துவிடவில்லை என்பதைத்தான் சங்கராச்சாரி தொடர்பான இத்தகைய நீதிமன்றங்களின் போக்குகள் நாட்டுக்குத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.

கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிறகும், நெய்வேலி நிலக்கரி நிறுவனத் தலைவர், சங்கராச்சாரிகளிடம் ‘ஆசி’ வாங்கப் போனார். (‘இடதுசாரி நட்சத்திரமாக’ தூக்கி நிறுத்தப்படுபவரும், திராவிடக் கட்சித் தலைவர்கள் பலரின் பாச அரவணைப்போடு உலா வருபவருமான ‘இந்து’ பார்ப்பன நாளேட்டின் ஆசிரியர் ராம், காஞ்சிபுரம் சங்கராச்சாரிகள் மடம் நிலைகுலைந்து விடக் கூடாது என்ற கவலையில், இளைய சங்கராச்சாரி, ஆந்திராவிலிருந்து தமிழகம் வரும்போது, எல்லைக்குச் சென்று வரவேற்று, தனது காரிலேயே ஏற்றிக் கொண்டு வந்து, காஞ்சிபுரம் மடத்தில் “பாதுகாப்புடன்” விட்டுவிட்டு வருகிறார்.)

கடந்த காலத் தமிழ்த் திரைப்படங்களில் உலா வந்த “வில்லன்கள்” மீது கற்பனையாக, கதையாசிரியர்களும் இயக்குனர்களும் ஏற்றி வைத்த கொலை, மோசடி, பாலியல் வன்கொடுமை போன்ற நிகழ்வுகளுக்கு எல்லாம், உண்மையான முகம் கொடுத்து வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் தான் இந்த சங்கராச்சாரிகள்! மக்கள் மன்றத்தில் “வில்லன்களாக” புரிந்து கொள்ளப்பட்ட பிறகும் கூட, ‘அக்கிரகாரங்களின்’ அதிகார மய்யத்தினால், அவைகளைத் தகர்த்துக் காட்டும் வலிமை தங்களுக்கு உண்டு என்பதையே பார்ப்பனர்கள் உறுதிப்படுத்தி வருகிறார்கள். ஒரு நூற்றாண்டு போராட்டத்துக்குப் பிறகும், இதுதான் நிலை என்றால், இதைத் தகர்க்க, இன்னும் எவ்வளவு தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது என்பதைத் தமிழர்கள் கவலையோடு சிந்திக்க வேண்டும்.

“லோககுரு”வின் வாரிசுகள் - ‘லோகத்தில்’ - தமிழகத்தை மட்டும் நம்ப மறுக்கிறார்கள் போலும்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com