Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam

‘மியூசிக் அகாடமி’ எனும் ‘அக்கிரகாரம்’

பார்ப்பனர்களின் மடமாக செயல்பட்டு வரும் ‘சென்னை மியூசிக்’ அகாடமி தலைவர் பதவிக்கு பார்ப்பனர் ஒருவரும் பார்ப்பனரின் அடிமையாகக் காட்டிக் கொள்வதில் பூரிப்பு அடையும் தமிழர் ஒருவரும் போட்டியிட்டனர். முன்னவர் ‘இந்து’ பத்திரிகை குடும்பத்தைச் சார்ந்தவரும், அதன் இணை நிர்வாக இயக்குனருமான முரளி; பின்னவர் ‘நல்லி’ குப்புசாமி (செட்டியார்). கடந்த முறை கடும் எதிர்ப்புக்கிடையே போட்டியிட்டு துணைத் தலைவர் பதவியைப் பிடித்தார் குப்புசாமி. கடந்த 25 வருடங்களாக பார்ப்பனர்கள், இந்த ‘அகாடமியில்’ நடத்திவரும் ஊழல், முறைகேடுகள், ஒழுக்கக் கேடுகளைக் கண்டு மனம் குமுறினார். அகாடமி உருவாக்கியவர்களையும், அதற்காக உருவாக்கப்பட்ட சட்ட திட்டங்களையும் கூட தூக்கி எறிந்துவிட்டு, ‘காஞ்சி சங்கராச்சாரிகளைப்போல’ போலி ஆவணங்களை பார்ப்பனர்கள் உருவாக்கி வைத்திருப்பதையும், அவர் கண்டறிந்தார். கருநாடக இசைப் பிரியரான இந்த “சூத்திரத்” தமிழர், மியூசிக் அகாடமியை ஊழலிலிருந்து மீட்டெடுத்து, நல்ல நிர்வாகத்தின் கீழ் ‘அகாடமியின்’ செயல்பாடுகளை நடத்துவேன் என்று கூறி, தேர்தலில் போட்டியிட்டார். பார்ப்பனர் “விடுவாளா?” “நம்மவர் கையில் உள்ள ஒரு ஸ்தாபனத்துக்கு நம்மவர் அல்லாதவர் வருவதா? அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்” என்று பார்ப்பனர்கள் கொதித்தனர். ஊழல் முறைகேடுகள், பற்றி எல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை.

நல்லி குப்புசாமி அணியிலும், ஒரு சில பார்ப்பனர்கள் போட்டியிட்டனர். அதில் ஒருவர் ஆடிட்டர் பார்த்தசாரதி. அவரே மனம் உடைந்து பேசினார். “இந்துக்கள், இசுலாமியர்கள், கிறித்தவர்கள் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த நிறுவனத்தை, பிராமணர்களுக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொண்டு நிறுவனத்தை சீரழித்துவிட்டார்கள். அதனால்தான் நல்லி குப்புசாமி அணியில் நான் சேர்ந்து போட்டியிடுகிறேன். ஆனாலும் ‘இந்து’ முரளி அணியினர் திருட்டு ஓட்டுப் போட முடிவு செய்து விட்டார்கள். அதை எப்படி எங்களால் தடுக்க முடியும் என்றே தெரியவில்லை” என்று ‘நக்கீரனுக்கு’ அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

‘மியூசிக் அகாடமி’ ஓர் அறக்கட்டளையாகும். தமிழக அரசின் ‘சொசைட்டி’ சட்டத்தின் கீழ், அதிகாரிகள் ‘அகாடமி’ கணக்குகள் மற்றும் நிர்வாகங்களைப் பரிசீலித்து, முறைகேடுகள் நடத்தியுள்ளதைக் கண்டறிந்த பிறகு, அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை நீதிமன்றத்தின் வழியாக எடுக்கத் தொடங்கியது. விசாரணைகளிலிருந்து தப்பிக்க, ‘அகாடமி’ பார்ப்பனர்கள் வழக்குக்கு மேல், வழக்குகளைப் போட்டுக் கொண்டே போனதால்தான், தேர்தலையே - ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் கண்காணிப்பின் கீழ் நீதிமன்றம் அறிவித்தது. தேர்தல் முடிவில் பார்ப்பனர்கள் தான் வெற்றி பெற்றார்கள் என்பதை எழுத வேண்டுமா என்ன? 721 வாக்குகளில் - ‘இந்து’ முரளி அணி 482 வாக்குகளை “அள்ளிக்” கொண்டு போய் விட்டது. 70 வயதுக்கு மேற்பட்ட ‘குடு குடு’ பார்ப்பனர்கள், ஏராளமாக வந்து, ‘பூணூல்’ உணர்வோடு வாக்குகளைப் போட்டுள்ளார்களாம். ஊழல் எதிர்ப்பு, ஒழுங்கு, நேர்மை என்றெல்லாம் - பார்ப்பனர்களும், பார்ப்பன ஏடுகளும், பேசுவதும், எழுதுவதும், மற்றவர்களுக்குத் தான். அவாளுக்குத்தான் ‘மனுதர்மம்’ விதிவிலக்கு அளித்து விட்டதே. ‘ஆரிய அடிமை’யாகக் காட்டிக் கொள்வதில் பரவசமடைந்து வந்த நல்லி குப்புசாமிகளுக்கு, இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும். செம்மங்குடி சீனிவாச அய்யங்காரின் சீடராக இருந்தும்கூட, சங்கீத மேதை ஜேசுதாசை, அவர் ஒரு கிறித்துவர் என்பதால் ‘மியூசிக் அகாடமிக்குள்’ நுழைய விடாமல் தடுத்தவர்கள், இந்தப் பார்ப்பனர்கள். இவர்களிடம் நல்லி குப்புசாமிகள் மோதிப் பார்க்க முடியுமா?

பாரதிராஜா கூறுகிறார்

திருவண்ணாமலையில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநாட்டில் (செப்.30, அக்.1, 2) பங்கேற்றுப் பேசிய இயக்குனர் பாரதிராஜா, ஒரு உண்மையை வெளிச்சமாக்கியுள்ளார். அவர் தயாரித்த ‘வேதம் புதிது’ படத்தில் சங்கராச்சாரிகளை விமர்சிக்கும் ஒரு காட்சி வந்ததால் தணிக்கைக்குழு அதிகாரிகள் - “காஞ்சிபுரம் போய் சங்கராச்சாரியிடம் கடிதம் வாங்கி வா” என்று கூறினார்களாம். தணிக்கை அதிகாரி காஞ்சிபுரத்தில் இருக்கிறாரா என்று கேட்டதற்கு, “அங்கே பெரியவாள் இருக்காள்” என்றார்களாம். அங்கு போவதை விட படச்சுருளை தீயிட்டுக் கொளுத்தி விடுகிறேன் என்று அந்த அதிகாரிகளிடம் பாரதிராஜா பதிலளித்தாராம். இந்த உண்மையை வெளியிட்ட பாரதிராஜா, “தமிழ்நாட்டில் கறுப்பன்தான் வெற்றி பெறுகிறான்; இளையராஜாவும் ஒரு கறுப்பன் தான்! ஆனாலும் அவருக்கும் எனக்கும் என்ன தகராறு? அவர் “பிராமணனாக” வாழ ஆசைப்படுகிறார்; அதுதான் தகராறு. இளையராஜா இளையராஜாவாக இருப்பது தான் அழகு” என்றும் ‘நச்’சென்று ஒரு போடு போட்டிருக்கிறார்; பாராட்டுகிறோம்!

பார்ப்பனர் - ஏகாதிபத்தியம் உறவு

அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் வாழும் பார்ப்பனர்கள் பெரும் வசதி படைத்தவர்கள். ‘விசுவ இந்து பரிஷத்துக்கு’ பல்வேறு வழிகளில் - கோடிக்கணக்கான பணத்தை அவர்கள் வாரி வழங்கி வருகிறார்கள். “சங் பரிவார்களின் சதி வரலாறு” நூலில் - இவை ஆதாரங்களோடு விளக்கப்பட்டுள்ளன. இந்தப் பார்ப்பனர்கள், தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையிலும், இவ்வாண்டு “தீபாவளி” கொண்டாட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்து விட்டனர். அதே போல், இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும், அங்கே வாழும் பார்ப்பனர்கள் “தீபாவளி” கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகளை செய்துவிட்டனர். வெள்ளை மாளிகை தீபாவளி கொண்டாட்டத்தில் அதிபர் புஷ் கலந்து கொள்ள வேண்டும் என்று ‘இந்தியாலீக்’ என்ற ‘இந்து அமைப்பின் இயக்குனர் டான்பெடர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதோடு நிறுத்திக் கொள்ளாமல், “இந்துக்கள் அமெரிக்காவின் நண்பர்கள்; முஸ்லீம்கள் அமெரிக்காவின் எதிரிகள்” என்றும் நஞ்சைக் கக்கியிருக்கிறார். பார்ப்பனிய மயமாகிவரும் புஷ் - இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதை, தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, மேலும் பகையை மூட்டி விடத் துடிக்கிறார்கள், பார்ப்பனர்கள். பார்ப்பனியம் - இப்போது ஏகாதிபத்தியத்துடன் கை கோர்த்து நிற்கிறது; இதுவே இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சம்!

ஓர் மறுப்பு

திருப்பூர் விழாவில் - எழுச்சி இசை நிகழ்ச்சி நடத்திய தலித் சுப்பையா - பாடல்களுக்கிடையில் வெளியிட்ட கருத்துகளைத் தொகுத்து ‘பெரியார் முழக்கம்’ வெளியிட்டிருந்தது. அதைப் படித்த பல தோழர்கள் அவரது கருத்துகளை மிகவும் பாராட்டினார்கள். அவர் வெளியிட்ட கருத்துக்கு, மறுப்பு ஒன்றையும் பழனியிலிருந்து ஒரு தோழர் பெயரைக் குறிப்பிடாமல், ‘பார்ப்பனர் பகைவன்’ என்ற புனைப் பெயரில் நமக்கு எழுதியிருக்கிறார். “பெரியார் மறைவுக்கு சங்கரமடம் அனுதாபம் தெரிவிக்கவில்லை என்பது உண்மை. ஆனால், பார்வர்டு பிளாக் கட்சியும் அனுதாபம் தெரிவிக்கவில்லை என்ற கருத்து சரியல்ல. அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் மூக்கையா தேவர், தமிழ்நாடு பார்வர்டு பிளாக் தலைவர் ஏ.ஆர். பெருமாள் இருவரும் இரங்கல் தெரிவித்தள்ளனர்” என்று சுட்டிக் காட்டியிருக்கிறார். அண்மையில் திரு.காவிரிநாடன் தொகுத்து வெளியிட்டுள்ள “தந்தை பெரியார் இறுதி நாட்களும் - இதழ்களும்” என்ற நூலில், இந்த செய்திகள் இடம் பெற்றுள்ளதை எடுத்துக் காட்டியிருக்கிறார். தவறைச் சுட்டிக் காட்டிய பழனி தோழருக்கு நன்றி!

மரண தண்டனையும் நீதிபதிகளும்

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லகோத்தி ஓய்வு பெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன் - சங்கராச்சாரி கொலை வழக்கு விசாரணையை, தமிழ்நாட்டிலிருந்து புதுவைக்கு மாற்றி உத்தரவிட்டார். வழக்கை நடத்தும் அரசுத் தரப்பினர் மீது கடும் கண்டனங்களையும் பதிவு செய்தார். சங்கராச்சாரிக்கு பிணை வழங்கியதும், இதே நீதிபதி தான். பிணைக்கான ஆணையில் ‘சங்கராச்சாரி மீது எந்தக் குற்றமும் இல்லை’ என்று, ஒரு தீர்ப்பையே எழுதி விட்டு, தனது இந்தக் கருத்துகளை, வழக்கு விசாரணைக்குப் பயன்படுத்தக் கூடாது என்று ஒரு நிபந்தனை போட்டு, பிணையை வழங்கி விட்டார். பதவி ஓய்வு பெற்றவுடன், அடுத்த ஒரு வாரத்துக்குள்ளேயே ‘தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கூடாது’ என்று, குடியரசுத் தலைவரின் கருத்துக்கு, எதிர்வினையாற்றினார். லகோத்தியைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுள்ள ஒய்.கே. சபார்வால், இதிலிருந்து மாறுபட்டவராகத் தெரிகிறார். ‘இந்து’ நாளேட்டுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் - “தனிப்பட்ட முறையில் ஒரு சாதாரணக் குடிமகனாக, என்னுடைய கருத்து, நம் நாட்டில் மரண தண்டனையே இருக்கக் கூடாது என்பது தான். ஏனெனில் சரி செய்ய முடியாத ஒரு தண்டனையை யாருக்கும் அளிக்கக் கூடாது. அய்ரோப்பா முழுவதும் மரண தண்டனை கிடையாது. இன்னும் வேறு பல நாடுகளிலும் மரண தண்டனை கிடையாது. இது ஒரு சமூகப் பிரச்சினை” என்று கூறியிருக்கிறார். புதிய தலைமை நீதிபதியின் இந்த மனித உரிமைச் சிந்தனைகள், நீதித்துறையில் மிகவும் அபூர்வமானதுதான்!

மூடிக் கிடக்கும் வள்ளுவர்

கருநாடக மாநிலம் பெங்களூரில் கடந்த 15 ஆண்டுகளாக - வள்ளுவர் சிலை திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. கன்னட வெறியர்களின் எதிர்ப்பால் தமிழர்களுக்கு நிகழ்ந்துள்ள அவமானம் இது. நவம்பர் 20 ஆம் தேதி குடியரசுத் தலைவர் கலாம், கருநாடக சட்டசபையில் உரையாற்ற வருகிறார். எனவே, மூடப்பட்டுக் கிடக்கும் வள்ளுவர் சிலையை, குடியரசுத் தலைவரின் கவனத்துக்குக் கொண்டு வரும் தந்திகளை தமிழர்கள், குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்ற வேண்டுகோளை, கரூர் வழக்கறிஞரும், தமிழின உணர்வாளருமான வழக்கறிஞர் இராசேந்திரன், ‘செல்பேசி-தகவல்’ மூலம் செய்தி அனுப்பியுள்ளார். தமிழின உணர்வாளர்கள், இந்த நல்ல நடவடிக்கையை, இனமானம் கருதி மேற்கொள்ள வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com