Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
மே 2009

கலைஞர் கருணாநிதியின் நள்ளிரவு கைதை வரவேற்ற வீரமணி

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, மேம்பாலம் ஊழல் தொடர்பாக கலைஞர் கருணாநிதியை கைது செய்த போது தமிழின உணர்வாளர்கள் கொதித்து கைதை கண்டித்தார்கள். ஆனால், கி.வீரமணி, கைதை ஆதரித்தார். ஜெயா தொலைக்காட்சி அப்போது ஒளிபரப்பிய காட்சிகளை பெரியார் திடலிலே கூட்டம் போட்டு, காட்சிப் பதிவுகளைக் காட்டி, கருணாநிதியைக் கண்டித்தார். தொடர்ந்து 13.7.2001 இல் மதுரையில் திராவிடர் கழகம் நடத்திய மாநட்டில் இது குறித்து கி.வீரமணி நிகழ்த்திய உரையை திராவிடர் கழகம் ‘எனது மரணசாசனம்’ எனும் தலைப்பில் நூலாக வெளியிட்டது. அதிலிருந்து சில பகுதிகள்:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆற்றல் வாய்ந்த பொதுச்செயலாளர் அவர்கள் நிச்சயமாக பி.ஜே.பி. கூட்டணி நிலையிலே இருந்து மாறுவார்கள் என்ற நம்பிக்கை மற்றவர்களுக்கு இருந்தாலும், இல்லாவிட்டாலும் எங்களைப் போன்று நன்றாகப் புரிந்தவர்களுக்கு உண்டு. எனவே, அவர்கள் ஒன்றரை ஆண்டு காலத்திற்குள்ளாகவே பி.ஜே.பி. கூட்டணியிலிருந்து வெளியே வந்தார்கள். வெளியே வந்தது மட்டுமல்ல; வேறு எந்தவொரு அரசியல் கட்சித் தலைவருக்கும் இல்லாத துணிச்சலான கருத்து ஒன்றை சொன்னார். சென்னை - கடற்கரையிலே இலட்சோப இலட்சம் மக்களைக் கூட்டி வைத்துக் கொண்டு அவர்கள் முன்னாலே சொன்னார்.

“நான் அரசியலிலே ஒரு பெரிய தவறு செய்து விட்டேன். அதன் காரணமாகத்தான் பி.ஜே.பி. என்ற மதவெறிக் கும்பலோடு நாங்கள் கூட்டு சேர்ந்தோம். நாங்கள் கணக்குத் திறப்பதற்குக்கூட ஓரளவுக்குக் காரணமாக இருந்தோம். அது என்னுடைய வாழ்நாளிலே அரசியலிலே செய்த மிகப் பெரிய தவறு. ஆனால், இனிமேல் என்னுடைய வேலை பி.ஜே.பி. கூட்டத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்றுவதுதான் என்னுடைய வேலை என்பதை அவர்கள் மக்களிடையே பிரகடனப்படுத்தினார்கள்” - இது இரகசியப் பேச்சல்ல. அந்த நேரத்தில் உண்மையாகவே பெரியார் வழி வந்தவர்களாக இருந்தால், அண்ணா வழி வந்தவர்களாக இருந்தால், நீங்கள் பி.ஜே.பி.யை ஒரு ஆக்டோபஸ் என்று சொன்னீர்களே, வாஜ்பேயி ஒரு மூகமூடி என்று சொன்னீர்களே, அத்வானி ஒரு நாகரிகமான முகமூடி என்று சொன்னீர்களே நீங்கள் போய் அதே பி.ஜே.பி.யுடன் கூட்டு சேரலாமா?

அ.தி.மு.க., பி.ஜே.பி.யுடன் கூட்டணி சேர்ந்ததற்கு அ.தி.மு.க.விற்கு பெரியார், அண்ணா பெயரை உச்சரிப்பதற்கு எந்தத் தகுதியும் இல்லை என்று சொன்ன திராவிட முன்னேற்றக் கழகத்தினரே நீங்கள் என்ன ஆனீர்கள்? நீங்கள் கொள்கை உள்ளத்தோடு நின்றிருந்தால் எந்தப் பக்கத்திலும் அந்தப் பி.ஜே.பி.க்குத் தமிழ்நாட்டிலே கால் ஊன்றுவதற்கு இடமே இருந்திருக்காது. ஆனால், என்ன செய்தீர்கள்? இதைவிட வேறு நல்ல வாய்ப்புக் கிடையாது என்று நினைத்தீர்கள். நீங்கள் உங்கள் கட்சியைக் கூட்டவில்லை. உங்களுடைய பொதுக் குழுவைக் கூட்ட வில்லை. ஜனநாயகம் என்று வாய் கிழிய பேசிக் கொண்டிருக் கின்ற நீங்கள் ஏற்கனவே முடிவெடுத்துவிட்டு அந்த முடிவுக்கு ஒரு ஒப்புதலைப் பெறத்தான் நினைத்தீர்களே தவிர, அந்த முடிவை ஏற்றுக் கொள்ளும் படியாகத்தான் செய்தீர்களே தவிர, திராவிட முன்னேற்றக் கழகத் தோழர் களுடைய எண்ணங்களை, முடிவுகளைக்கூட நீங்கள் கேட்கத் தயாராக இல்லை.

ஏனென்றால், அதுதான் உங்களுடைய முடிவுக்கு ஒரு முடிவு கட்டப் போகிறது என்று அன்றும், இன்றும் உங்களுக்குத் தெரியாது. வரலாறு மேலும் சரியாகத் தீர்ப்பளிக்கப் போகிறது. மிகப் பெரிய கறையை உங்களுடைய கட்சியில் நீங்கள் உண்டாக்கிக் கொண்டீர்கள். ஆனால், இதற்கு காரணமென்ன? தன் பெண்டு, தன் பிள்ளை, தன் குடும்பம் என்பதை மட்டுமே நினைத்தீர்கள். உங்களுக்கு இரண்டு வகையான ஆசை. ஒன்று இங்கே இருக்கின்ற ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வது மட்டுமல்ல. தன்னுடைய குடும்பத்தைச் சார்ந்தவர் இந்தியாவினுடைய துணைப் பிரதமராக வர மாட்டாரா? இதான் அவர்களுக்கிருக்கின்ற ஆசை. ஆகவே, பி.ஜே.பி.யுடன் கூட்டு சேர்வதற்கு நீங்கள் யாரையும் கேட்கவில்லை.

..... கடந்த 5 ஆண்டுகாலத்திலே மிக முக்கியமான பணியை தி.மு.க. தலைவர் எதை செய்தார்? அன்றைய முதலமைச்சர் திருவாளர் கருணாநிதி அவர்கள். ரொம்ப இலாவகமாகச் சொன்னார்.

பொது மக்களே நீங்கள் எங்களுக்கு உத்தரவு கொடுத்திருக்கின்றீர்கள். என்ன? ஜெயலலிதா அவர்கள் மீது வழக்கு போடுவது என்று - வேறு எதையும் பொதுமக்கள் தேர்தல் அறிக்கையில் கேட்கவில்லை. நீங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கின்றீர்கள். எனவேதான் ஜெயலலிதா மீது வழக்கு போடுகின்றோம் என்று சொல்லி 46, 47 வழக்குகளைப் போட்டிருக்கின்றார்கள். தொடர்ச்சியாக வழக்கு, வழக்கு என்று போட்டுக் கொண்டிருந்தார்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை கைது செய்தார். சிறையில் வைத்தார். அப்பொழுதுகூட ஒரு அறிக்கை எழுதினோம். ஆத்திரப்படக்கூடிய தி.மு.க. தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறோம் - பொது மக்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். ஒரு சார்பு நிலையை திராவிடர் கழகம் ஒரு போதும் எடுக்காது. நடுநிலையில் இருந்து சொல்லுகின்றோம். அந்த நடுநிலை பல பேராலே பாராட்டப்படுகின்றதா - இல்லையா? என்பதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. எங்களுக்குச் சரி என்பதை எடுத்துச் சொல்லுகின்றவன் தான் பெரியார் தொண்டனே தவிர, யாருக்காகவும் என்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ளாதவன் தான் பெரியார் தொண்டன். ஆகவே அந்த அடிப்படையிலே அப்பொழுது நான் சொன்னேன். ஒரு தவறான முன்மாதிரியை நீங்கள் உருவாக்குகின்றீர்கள்.

ஒரு ஆட்சி நடக்கின்றபொழுது எந்த முதலமைச்சர் வந்தாலும் ஃபைலிலே கையெழுத்துப் போடக்கூடிய நிலை வரும். அமைச்சர்கள் போடுகிறார்கள். அலுவலர்கள் போடுகிறார்கள். ஆகவே முதலமைச்சர், அமைச்சர், அதிகாரிகள் எல்லோர் மீதும் வழக்கு போடுகிற ஒரு தவறான முன் மாதிரியை உருவாக்கி விட்டீர்கள். அவர்களை எல்லாம் கைது செய்து உள்ளே போடுகின்றீர்களே அது எங்கே போய் நிற்கும்? இது எங்கே போய் முடியும்? இது ஒரு தவறான முன் மாதிரி ஆகாதா என்றுஅப்பொழுதே கேட்டோம். நாங்கள் சொல்வதை அவர் கேட்கவில்லை. உடனே தி.மு.க தலைவர் 5 இலட்சம் பேசுகிறது என்று சொன்னார்.

என்னுடைய வாதத்தை சந்திக்க முடியாதவர்கள். என்னைத் தனிப்பட்ட முறையிலே கொச்சைப்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றார்கள். நான் அதைப் பற்றிக் கவலைப்படாதவன். ஆனால், அவருக்கு என்ன பெயர்? எனக்கென்ன பெயர் என்று எல்லோருக்கும் தெளிவாக தெரியும். சர்க்காரியா என்னைப் பார்த்து விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்தவன் வீரமணி என்று சர்டிஃபிகேட் கொடுக்கவில்லை. ஆகவே நான் அதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. நான் பெட்டி வாங்கிக் கொண்டு பேசுகின்றேன் என்று தி.மு.க. தலைவரே முரசொலியில் கார்ட்டூன் போடுகின்றார். மணி என்பது அவருடைய பெயரிலேயே இருக்கிறது என்று சொல்லுகின்றார்.

இவ்வளவையும் அவர்கள் சொன்ன நேரத்திலே நான் ஒரு கேள்வி கேட்டேன். இதுவரை அந்தக் கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை. சரி. உங்களை ஏறத்தாழ 23 ஆண்டுகாலம் ஆதரித்தோமே- நீங்கள் அதற்கு எத்துணை முறைபெட்டிக் கொடுத்தீர்கள்? எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் என்ற கணக்கை தயவு செய்து வெளியிடுங்கள். இதை வெளியிடக் கூடிய தெம்போ, திராணியோ, தைரியமோ உங்களுக்கு உண்டா?

...... ஒரு பொதுத் தலைவரை கைது செய்யும்பொழுது கிளர்ச்சிகள், தேவையற்ற அடிதடிகள், அசம்பாவிதங்கள், துப்பாக்கிச் சூடுகள் இவைகள் எல்லாம் நடக்கும் என்று எண்ணித்தான் இரவிலே கைது செய்தார்கள். கைது செய்வார்கள். பெரிய தலைவர்களை கைது செய்யும்பொழுது நீண்டகாலமாக இருக்கின்ற நடைமுறை இதுதான். இதை நான் நியாயப்படுத்துவதற்காக சொல்லவில்லை.

எத்தனையோ தலைவர்களை இப்படி எத்தனையோ முறை கைது செய்திருக்கிறார்கள். போலீசார் அழைத்தவுடன் வந்திருந்தால் இந்த மாதிரியான பிரச்சினைகளுக்கெல்லாம் இடம் உண்டா? இவர் வீட்டிற்குள்ளேயே இருந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் செல்ஃபோனில் தகவல் கொடுக்கின்றார் சன் டி.வி.க்கு, மாறனுக்கு. இதற்குரிய ஆதாரங்கள், தொடர்ச்சியாக நடைபெற்ற சம்பவங்கள் - முரசொலியிலே வந்த செய்திகள் - இப்படி கத்தை, கத்தையாக என்னிடத்திலே ஆதாரங்களாக உள்ளன.

எந்த அரங்கத்திலே வேண்டுமானாலும் நான் வாதாடுவதற்குத் தயாராக இருக்கின்றேன். தி.மு.க. தலைவர் அவருடைய வழக்கறிஞர் சண்முகசுந்தரத்திடம் தொலைபேசியிலே பேசினேன் என்று சொல்லுகின்றார். தி.மு.க. தலைவர் எதிர்பார்த்த சன் டி.வி. வரவேண்டும். அவருடைய மருமகன் மத்திய அமைச்சர் மாறன் வரவேண்டும். அதற்காக அவரை அழைத்துக் கொஞ்சம் சரளமாகப் பேசுகின்றார்கள். அதை எல்லாம் போலீஸ் டி.வி.யிலே, ஜெயா டி.வி.யிலே காட்டியிருக்கின்றார்கள். தி.மு.க. தலைவரிடம் ரொம்ப மரியாதையாகத்தானே காவல்துறையினர் சொல்லுகின்றார்கள். எதற்காக வந்திருக்கின்றீர்கள் என்று இவர் கேட்கிறார்.அய்யா உங்கள் மீது வழக்குப் போடப்பட்டிருக்கிறது என்று சொல்லுகின்றார்கள். இதற்கு அரஸ்டு கார்டு என்பதைக் கொண்டு போனாலே போதும்.

மற்றவர்கள் பொத்தாம் பொதுவில் சொல்லுகின்றார்கள். போலீசார் வாரண்டே இல்லாமல் போயிருக்கிறார்கள் என்று; இங்கே பல வழக்கறிஞர்கள் அமர்ந்திருக்கின்றார்கள். இதோ குற்றவியல் நடைமுறைச் சட்டம் இருக்கிறது. இதிலே மிக முக்கியமான ஒரு பகுதி இருக்கிறது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால், இது 41-ஆவது விதி. வாரன்ட் இல்லாமல் ஒரு குற்றத்தில் கைது செய்யலாம் என்றிருக்கிறது. பதினான்கு வருடம் முதலமைச்சராக இருந்த தி.மு.க. தலைவருக்கு இது தெரியாதா? இது சட்டவிரோதமா? இல்லை. கலைஞர் கருணாநிதி என்பவர் ஒருவர் வருவார். அவருக்காகவே இப்படி ஒரு சட்டத்தை எழுதி வைத்திருக்கின்றார்களா?

போலீஸ் அதிகாரி சொல்லுகின்றார். அய்யா உங்கள் மீது மேம்பாலம் கட்டியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்லுகின்றார். உடனே, முன்னாள் முதல்வர் தி.மு.க. தலைவர் கேள்வி கேட்கின்றார். பாலம் நானா கட்டினேன்? என்று. பொது மக்களே இனிமேல் உங்களுடைய பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். தாஜ்மகாலை யார் கட்டியது என்றால், ஆக்ராவிலே இருந்த கொத்தனார் என்று சொல்லிக் கொடுங்கள். (பலத்த கைதட்டல்) தயவு செய்து மும்தாஜ், ஷாஜகான் பெயரைச் சொல்லாதீர்கள்.

இந்த மாதிரி பிரச்சினைகள் வரும் என்பதால்தான் நான் 5 வருடத்திற்கு முன்னாலேயே அறிக்கை கொடுத்திருக்கிறேன். நான் பெரிய தீர்க்கதரிசி என்பதற்காக அல்ல. எப்படி எப்படி இவைகள் எல்லாம் மாறும் என்பதற்காக. முதலமைச்சர் என்ற முறையிலே நீங்கள் (கருணாநிதி) வழக்குப் போடுவதற்கு கையெழுத்து போட்டால் இது எல்லா முதலமைச்சர்களுக்கும் சங்கடத்தை உருவாக்கும் என்று சொன்னோம். அன்றைக்கு என்ன செய்தார்கள்? அரசாங்க உத்தரவைத் திருத்தினார்கள். அல்லது அதற்கு அனுமதி கொடுத்தார்கள். ஆகவே கையெழுத்துப் போட்ட அதிகாரிகள் மீது வழக்கு; கையெழுத்துப் போட்ட அமைச்சர்கள் மீதும் வழக்கு என்று போட்டீர்கள். இப்பொழுது அதே நிலைதான் திரும்பி வந்திருக்கிறது.

- கி.வீரமணி உரையிலிருந்து

தற்கொலைப் படை?

அய்யா நினைத்ததை நீங்கள் (ஜெயலலிதா) செய்யும்போது பெரியார் தொண்டர்களாகிய நாங்கள் பாராட்டுகிறோம். இதிலென்ன வியப்பு? பெரியாரின் கொள்கைகளை உங்கள் ஆட்சி செய்கின்ற நேரத்திலே, உங்களுக்கு எதிர்ப்பு ஏற்படுமானால், எந்த இடத்தில் இருந்து எதிர்ப்பு ஏற்படுமானாலும், கருப்புச் சட்டைப் படை, தற்கொலைப் பட்டாளம், கருப்பு மெழுகுவர்த்தி - தங்களை அழித்துக் கொண்டு சமுதாயத்திற்கு ஒளி கொடுப்பவர்கள் என்றென்றைக்கும் அவற்றை முறியடித்து ஆட்சிக்கு உறுதுணையாக இருப்போம் என்று இந்த மாபெரும் மக்கள் மன்றத்தின் முன்னாலே நான் சொல்ல விழைகிறேன்.

- கி. வீரமணி - ‘விடுதலை’ 13, 14.3.1994)

தி.க.வுடன் தொடர்பு கூடாது

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தளபதி வீரமணி அவர்கள் அண்மைக்காலமாக தி.மு.க.வைப் பற்றி கூட்டங்களில் பேசுவதும், அறிக்கைகள், பேட்டிகள் அளிப்பதும் - அவர் எடுத்துள்ள முடிவுக்கு சாதகமாக இருக்கக் கூடும். அதற்காக தி.மு.க. அவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு இருக்க வேண்டுமென்று கட்டாயமில்லை. பெரியாரின் சமுதாய மறுமலர்ச்சி கொள்கைகளை அண்ணா வழியில் நிறைவேற்றப் பணியாற்றுகிற நம்மைப் பற்றி வீரமணி அவர்கள் தொடர்ந்து மாறுபட்ட கருத்தை வெளியிட்டு வருவதால் இந்த விளக்கம் தரவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, தோழமை உணர்ச்சிக்கு இடமற்ற சூழலை விரும்பும் திராவிடர் கழகத்துடன் நமது கழகத்தோழர்கள் தொடர்பு கொள்ள வேண்டாமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”

- தி.மு.க. வெளியிட்ட அறிக்கை ‘முரசொலி’ 20.9.1987


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com