Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
மே 2009

ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்க இந்திய ஆயுதமா? ராணுவ வாகனங்கள் மறிப்பு

தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவத்துக்கு இந்தியா ஆயுதங்களையும், பயிற்சிகளையும் வழங்கி வருவது தமிழர்களிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில்,

கோவை வழியாக 80 லாரிகளில் ஆயுதங்கள் கொச்சி வழியாக கொழும்புக்கு அனுப்பப்படுகிறது என்ற செய்தி கடந்த 2 ஆம் தேதி பரவியது. செய்தியறிந்த பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள், ம.தி.மு.க.வினர், தமிழின உணர்வாளர்கள், பொது மக்கள் திரண்டு வாகனங்களைத் தடுக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், பெரம்பலூர் லட்சுமணன், கணபதி புதூர் பொன்சந்திரன், அவரது மனைவி தனலட்சுமி, மணியக்காரம்பாளையம் கிருஷ்ணசாமி, ஆவாரம்பாளையம் விக்னேஷ், சண்முக சுந்தரம், காளப்பட்டி அம்பேத்கர், ஜெயப் பிரகாஷ், ம.தி.மு.க.வை சேர்ந்த பீளமேடு புதூர் முருகேசன், பீளமேடு சந்திரசேகரன், நீலம்பூர் பிரபாகரன், ராசிபாளையம் ரவீந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது பயங்கர ஆயுதங்களுடன் சட்ட விரோதமாக கூடுதல், பணி செய்ய விடாது தடுத்தல், பொது சொத்துக்களை சேதம் விளைவித்தல் ஆகிய 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. 13 பேரும் பல்லடம் நீதிபதி முன் நேர் நிறுத்தப் பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர்.

கோவை, சேலம், உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளில் கழகத்தினரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள். கோவை - நீலாம்பூர் நெடுஞ்சாலை சந்திப்பில் சனிக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்தது. 84 லாரிகளில் ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் ஏற்றப்பட்டு சாலையில் வரிசையாக அணி வகுத்துச் சென்றதைக் கண்ட தமிழர்கள் கொதிப்படைந்தனர். ஒவ்வொரு நாளும் ஈழத்தில் இந்தியாவின் ஆயுதங்களைப் பயன்படுத்தி தமிழர்களை கொத்து கொத்தாக பிணமாக்கி வருகிறது சிங்கள ராணுவம். கொதித்துப் போய் நிற்கும் தமிழர்கள் உணர்வுகளைப் பற்றி கவலைப்படாது - தமிழகத்திலிருந்து கொச்சி வழியாக - ராணுவத்தினர், ஆயுதங்களைக் கொண்டு போவது வழக்கமாக இருந்து வருகிறது.

கோவை அருகே உள்ள மதுக்கரை ராணுவ முகாமைச் சார்ந்த ராணுவத்தினர், அய்தரா பாத்தில் பயிற்சியை முடித்து கொண்டு, கோவை திரும்பியதாக ராணுவத் தரப்பில் கூறப்பட்டாலும், அந்த லாரிகளில் வெடி குண்டுகளும், ஏவுகணைகளும் இருந்தன. அவைகளால் ஆத்திர மடைந்த பொது மக்கள் வெளியே தூக்கி வீசி வாகனங்களின் சக்கரங் களை சேதப்படுத்தியதாக செய்திகள் கூறுகின்றன. செய்தியறிந்த கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் விரைந்தார்.

தோழர்களும் பொது மக்களும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், ஆயுதங்களை வழங்கும் இந்திய அரசுக்கு எதிராகவும் முழக்கமிட்டு வாகனங்களை மறித்தனர்.

பின்னால் வந்து கொண்டிருந்த ராணுவ வீரர்கள் சூலூரில் லாரிகளை நிறுத்தி விட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து இரும்பு கம்பிகளால், எதிர்பட்ட எல்லோரையும் தாக்கினர். காவல்துறையினர், ராணுவத் தினரைத் தடுத்து, அப்பாவி மக்களை தாக்காதீர் என்று கேட்டும், ராணுவத்தினர் தாக்குதலை நிறுத்தவில்லை.

இராணுவத்தினர் தாக்குதலில் சன் தொலைக்காட்சி செய்தியாளர் அவிநாசிலிங்கம் மண்டை உடைந்தது. அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பொய்ச் செய்திகளை ஒளிபரப்பி வரும் சன் தொலைக்காட்சி, தனது செய்தியாளர் ராணுவத்தால் தாக்கப்பட்டதைக்கூட ஒளிபரப்பவில்லை. ஈழத் தமிழர் மீதான இனப்படுகொலை தொடர்பான செய்திகளை முழுமையாக இருட்டடித்து, சிங்கள ராணுவத்தை மக்களின் கோபத்திலிருந்து பாதுகாத்து வரும் சன் தொலைக்காட்சி - இதிலும், இந்திய ராணுவத்துக்கு ஆதரவாகவே செய்திகளை ஒளிபரப்பியது.

செய்தியாளர் ராணுவத்தால் தாக்கப்பட்டதை எதிர்த்து கோவை பத்திரிகையாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டச் செய்தியையும் சன் தொலைக்காட்சி இருட்டடிப்பு செய்து விட்டது. இந்த வழக்கு விசாரணையை உள்ளூர் காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டுமே தவிர ராணுவத்தினரிடம் ஒப்படைக்கக் கூடாது என்று பத்திரிகையாளர்கள் வற்புறுத்தினர்.

இதற்கிடையே ஆயுதம் ஏந்தி வந்த இரண்டு ராணுவ லாரிகள் கொச்சி துறைமுகம் வந்து சேர்ந்துள்ளதாக கேரள ஏடுகள் செய்தி வெளியிட்டுள்ளன. தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர், ராணுவத்தினர் ஒருவரிடம் கேட்ட கேள்விக்கு, கொச்சி துறைமுகம் போவதாகக் கூறியிருப்பது - வீடியோ காட்சிகளாகப் பதிவாகியுள்ளது. மக்கள் தொலைக்காட்சி இதை ஒளிபரப்பியது.

இராணுவத்துக்கு எதிராக தமிழர்கள் நடத்திய போராட்டம் தமிழகத்தில் பேரெழுச்சியை உருவாக்கியுள்ளது. உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் - தமிழகத்தில் உருவாகியுள்ள எழுச்சியைப் பாராட்டி வரவேற்கிறார்கள்.

தா.பாண்டியன் கண்டனம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுத்து, ஈழத்தில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு இந்திய அரசுதான் காரணம் என்ற கோபம் தமிழகம் முழுவதும் பெருக்கெடுத்து நிற்கிறது. இதன் வெளிப்பாடாகத்தான் கோவைக்கு அருகில் ராணுவ லாரிகளை மக்கள் தடுத்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள்.

இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ந்து கொல்லப்படுவதால் எழுந்த கோபம் தான் இது என்பதை, இந்த நேரத்தில் அரசாங்கங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மாறாக தொடர்புடையவர்கள் என்று கூறி கைது செய்தல், கடுமையான அடக்குமுறைகள் ஆகியவற்றை கண்டிக்கிறோம். இவ்வாறு தா. பாண்டியன் கூறியுள்ளார்.

பயிற்சிக்குச் சென்றவர்கள் ஆய்தங்களை திரும்ப எடுத்துவர வேண்டிய தேவையில்லை

இந்நிகழ்வு பற்றி போர்ப்படையினரிடம் கேட்டபோது, “இலங்கைக்கு ஆயுதங்கள் எதுவும் அனுப்பப்படவில்லை. மதுக்கரை முகாமைச் சேர்ந்த 200 வீரர்கள் ஐதராபாத்தில் பயிற்சி எடுத்து வந்தனர். பயிற்சி முடிந்த பிறகு அவர்கள் மதுக்கரைக்குத் திரும்பியதை பொதுமக்கள் தவறாகப் புரிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்” என்று தெரிவித்தனர்.

ஆனால், இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. “ஏனெனில் வழி மறிக்கப்பட்ட ஊர்திகளில் அவை ஜெபல்பூரில் உள்ள ஊர்தித் தொழிற்சாலைக்குச் சொந்தமானவை என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் இந்த ஊர்திகளில் போர்ப்படை வீரர்கள் எவரும் வரவில்லை. ஓட்டுநரும், உதவியாளரும் மட்டுமே இருந்தனர். போர்ப் படை வீரர்கள் பயிற்சிக்குச் சென்று வருவதாக இருந்தால் அவர்களுடன் 80 ஊர்திகளில் ஆய்தங்களைக் கொண்டு சென்று திரும்ப எடுத்துவர வேண்டிய தேவையில்லை” என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்தனர். இரத்தக் கறை படிந்த கரங்களுடன் வாக்கு கேட்கவரும் காங்கிரசை தோற்கடிப்பீர்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com