Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
மே 2008

மூடநம்பிக்கை மக்களிடம் எப்படி வருகிறது? - சிற்பி இராசன்

மூடநம்பிக்கை மற்றவர்கள் செய்வதைப் பார்த்தும், மற்றவர்கள் சொல்வதை அப்படியே நம்புவதாலும், நம்பியதை அவரவர் வசதிக்கு தகுந்தாற்போல மாற்றிக் கொண்டு செய்வதாலும், சிறிதும் பகுத்தறிவிற்கு வேலை கொடுத்து சிந்திக்காததனாலும் பரவுகிறது!

17 ஆண்டுகளுக்கு முன் என்னுடைய நண்பனுடன் திருப்பதிக்குச் சென்றிருந்தேன். அவனுடன் அவன் மனைவி மற்றும் 5 வயது பையனும் வந்திருந்தார்கள். திருமலைக்கு நடந்து போவதாக வேண்டிக் கொண்டதால் நடைபாதை வழியாக நடந்து போனோம். பாதி வழியில் அவனுடைய பையன் அவசரமாக மலம் கழிக்க வேண்டும் என்று சொன்னான்.

நண்பனோ இது கோவிலுக்குப் போகும் வழி, இங்கு அப்படிச் செய்யக் கூடாது என்று கண்டித்தான். சிறுவனால் அடக்க முடியவில்லை. நான் நண்பனிடம், பரவாயில்லை, சின்னப் பையன்தானே அவன் ‘போன’ பிறகு நாம் எடுத்தெறிந்து விடலாம் என்ற கூறினேன். சிறுவனும் ஓரமாக உட்கார்ந்து மலம் கழித்தான். இதைப் பார்த்த பக்தர்களில் பலர் எங்களைக் கண்டபடி பேசிவிட்டுச் சென்றார்கள். அந்த ‘வேலை’ முடிந்தவுடன் அதில் ஈக்கள் வந்து மொய்க்கத் தொடங்கின. நான் பெருமாளுக்கு அர்ச்சனை செய்வதற்காக நண்பன் வாங்கியிருந்த பூவைக் கொஞ்சம் எடுத்துப் போட்டு மலத்தை மூடினேன்.

எங்களுக்குப் பின்னால் வந்த பக்தர்கள் இதைப் பார்த்துவிட்டு ஏன் என்று சிந்திக்காமல் இந்த இடத்தில் பூப் போட்டால் புண்ணியம் என்று எண்ணி அவர்களும் நான் போட்ட பூவின் மேல் பூவை எடுத்துப் போட்டார்கள். நாங்கள் இதைக் கொஞ்ச நேரம் வேடிக்கைப் பார்த்துவிட்டு மேலே போய் சாமியெல்லாம் கும்பிட்டுவிட்டுத் திரும்பி வர 7 மணி நேரம் ஆகிவிட்டது.

திரும்பி வரும்போது பூப்போட்ட இடத்தில் ஏகப்பட்ட கும்பல். அந்த இடத்தில் பூப்போடுவதற்காக ஆண்களுக்குத் தனி வரிசையும், பெண்களுக்குத் தனி வரிசையும் செய்து கொடுக்க 2 போலீஸ்காரர்களைக் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

5 வயதுச் சிறுவன் வேறு வழியில்லாமல் அங்கு மலம் கழிக்கும்போது திட்டியவர்கள், அதன் மீது போடப்பட்ட மலரைப் பார்த்தவுடன் மதி கெட்டுப் போவது ஏன்? கொஞ்சம் சிந்தித்தால் இந்த அவல நிலை வருமா?

என் நண்பனும் கடவுள் நம்பிக்கை என்பது மூடத்தனம் என்பதை உணர்ந்தான்! இதைத் தான் பெரியார் அவர்கள் வாழ்நாள் முழுவதும் “யார் எதைச் சொன்னாலும் அதை அப்படியே நம்பி விடாதீர்கள்! ஏன்? எதற்கு? என்று கேளுங்கள்” என்று கூறினார். ஒவ்வொரு மாதம் கார்த்திகைத் தினத்தன்று முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். அர்ச்சனைத் தட்டுகள் விற்கும் கடைகள் அன்றைக்குத் தற்காலிகமாக நிறைய இருக்கும். கணவன், மனைவி, அம்மா ஆகிய மூன்று பேரும் அருகருகே தனித்தனியாக மூன்று கடைகளைப் போட்டு அர்ச்சனைத் தட்டுகள் விற்பார்கள். கணவன் 15 ரூபாய் என்பார்; அந்தக் கடையில் வாங்கவில்லையென்றால் மனைவி அதே சாமான்களை 12 ரூபாய் என்று விற்று விடுவார். அவரிடமும் வாங்கவில்லை எனில் அம்மா 10 ரூபாய்க்கு விற்று விடுவார். எப்படியோ வியாபாரம் நடந்துவிடும். மூன்றுபேருக்கும் சேர்த்து 1000 ரூபாய் லாபம் கிடைக்கும். இதற்காக ஒரு வாரம் அலைந்து தேங்காய், பழம், சூடம், ஊதுபத்தி, வெற்றிலை, பாக்கு, பூ இவற்றைச் சேகரிக்க வேண்டும்.

கடைக்காரர் சுயசிந்தனையுடையவர். யோசித்துப் பார்த்தார். ஒரு வாரம் அலைந்து 3 பேர் ரூ.1000 சம்பாதிப்பது முட்டாள்தனம். கோயிலில் அர்ச்சனை செய்பவர் எந்தப் பொருளுமே இல்லாமல் வெறும் மந்திரம் என்ற பெயரிலேயே 4000, 5000 ரூபாய் வரைச் சம்பாதிக்கிறார். நாமும் அதேபோல ஏதாவது செய்ய வேண்டும் என்றெண்ணி, ஒரு கார்த்திகை நாளன்று 1000 சூட வில்லைகளை மட்டும் வாங்கி வந்து, பஸ் நிற்கும் இடத்திற்குப் பக்கத்தில் ஒரு மேசையைப் போட்டு, அதன் மீது ஒரு வெள்ளைத் துணியைப் போட்டு, மேசையை மல்லிகைப்பூவால் அலங்கரித்து சூடத்தை மேசை மீது அழகாக அடுக்கி வைத்தார். தெருவோரமாகக் கிடந்த ஒரு கருங்கல்லைக் கொண்டு வந்து தரையில் போட்டு அதற்கு 3 பட்டைகள் போட்டு குங்குமமும் வைத்து, அதற்குப் பூப் போட்டு, ஒரு சூடவில்லையை ஏற்றி வைத்தார்.

பஸ்ஸைவிட்டு இறங்கியவர்களில் ஒருவர் வந்து, இங்கே என்ன விசேஷம்? ஏன் சூடம் கொளுத்தி வைக்கப்பட்டுள்ளது? என்று கேட்டார். கடைக்காரரோ இது எல்லோருக்கும் தெரியாது. இந்த ஊரிலேயே இந்தக் கல்லுக்குத்தான் மகிமை! இதைக் கும்பிடாமல் முருகனைக் கும்பிடுவதால் எந்தப் பலனும் இல்லை என்றார். உடனே அந்த நபர் ஒரு சூடத்தை வாங்கி ஏற்றி வைத்து கீழே விழுந்து கும்பிட்டார். இதைப் பார்த்த மற்றவர்களும் அதே போல் செய்யத் தொடங்கினார்கள்! விளைவு? 50 பைசா சூடம் 2 ரூபாய். 3 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தது. லாபம் ரூ.1500. பழம், தேங்காய் என்று அலையவும் தேவையில்லாமல் போயிற்று.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com