Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
மே 2008

கழக முயற்சி வெற்றி! அச்சகப் பணியாளர் தேர்வு நிறுத்தம்

கோவை பெரியநாயக்கன் பாளையம் வீரபாண்டி ஊராட்சியில் அமைந்துள்ள மத்திய அரசு அச்சகத்திற்கு பணியாளர்கள் தேர்வு செய்யும் பணி நடந்து வந்தது. பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் 3 பேருமே கேரள மாநிலத்தை சார்ந்தவர்களாக இருப்பதால் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று தேர்வுக் குழுவை மாற்றி தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பெரியார் திராவிடர் கழகம் தலைமையில் தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், தே.மு.தி.க., லோக் ஜனசக்தி, புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்தன. மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அவர்களுக்கு 1000 தந்திகளும் கொடுக்கப்பட்டன.

இந்நிலையில் மத்திய அரசு அச்சகத்தில் நடந்து வந்த பணியாளர் தேர்வுக்கான நேர்காணல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று தமிழர்களை புறக்கணித்து நடத்தி வந்த நேர்காணல் தேர்வை நிறுத்தி வைத்த அச்சகத் துறை சார்ந்த மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அவர்களுக்கு அனைத்துக் கட்சிகளின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கி பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று கழகப் பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மயிலை காவல்நிலையத்தில் பூசை

மயிலாப்பூர் கபாலீசுவரன் கோயில் உண்டியலைத் திருடியவர்கள் யார் என்பதை, கண்டுபிடிக்க முடியாத காவல்துறை, கடைசியில் - கடவுளிடமே, தலையிடுமாறு மனு போட்டுள்ளது. மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஏப்.28 ஆம் தேதி விடியற்காலை 4 புரோகிதர்களை அழைத்து ‘சாந்தி பூஜை’ நடத்தியுள்ளார்கள். நள்ளிரவுக்குப் பின் தொடங்கிய பூஜை, ஒரு மணி நேரம் நீடித்தது. காவல்துறையினர் பூட்சுகளை கழற்றிவிட்டு பயபக்தியுடன் வந்தனர். புரோகிதர் பூஜைக்குப் பிறகு ‘ஆரத்தி’ எடுத்தார். பிறகு காவல் நிலையம் முழுதும் புரோகிதர் ‘புண்ணிய தீர்த்தத்தை’ தெளித்தார். ஆனாலும் - பூஜை எந்தப் பலனையும் தரவில்லை. அதே காவல்நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றிய ஜி. சுப்ரமணியம், பூஜைக்குப் பிறகு கடுமையாக நோயுற்று, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

- ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு ஏப்.29

கலால் வரித் துறையில் மலையாளிகள் ஆதிக்கம்: கழகம் போர்க்கொடி

மத்திய அரசின் சுங்கம் மற்றும் கலால் வரித்துறையின் கோவை - சேலத்திற்கான மண்டல அலுவலகம் கோவையிலுள்ளது. இங்கு குரூப் டி - சிப்பாய் (பியூன்) பணிக்கான தேர்வு 30 காலியிடங்களுக்காக நடைபெற்று வருகிறது. இந்த பணியிடங்கள் கோவை, சேலம் அலுவலகங்களுக்கானவை. இந்த பணியிடங்களுக்கு கேரளாவிலிருந்து நூற்றுக் கணக்கான மலையாளிகள் விண்ணப்பித்து தற்போது நாள்தோறும் நேர்காணலுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே உள்ள கலால் வரித்துறையில் 320 பணியாளர்களில் 100க்கும் மேல் மலையாளிகள் உள்ளனர்.

ஒரு வருடத்திற்கு முன்பு வரை உயர் அதிகாரிகள் மலையாளிகளாக இருந்ததால் அனைத்து முக்கிய பதவிகளிலும் மலையாளிகள் அமர்த்தப்பட்டனர். அதனால் கண்காணிப்பாளர், இன்ஸ்பெக்டர், ஓட்டுனர் சங்கங்கள் அனைத்தும் மலையாளிகள் ஆதிக்கத்தில் உள்ளது. சிப்பாய் தேர்வில் மலையாளிகளை சேர்க்க இந்த சங்கங்கள் நிர்வாகத்தை பணியவைத்து நிர்ப்பந்திக்கிறார்கள்.

குரூப் டி சிப்பாய் பதவிக்கு கர்நாடகத்தில் கன்னடர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் பாதிக்கும் மேல் மலையாளிகளை தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சேலம் - கோவை மாவட்டத்திற்கு மட்டுமான பதவியிது. எனவே வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் மூப்பு அடிப்படையில் உள்ளூர் மக்களை தேர்வு செய்யக் கோரி பெரியார் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

3.5.2008 சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். செயற் குழு உறுப்பினர் வெ. ஆறுச்சாமி முன்னிலை வகித்தார். கோவை வடக்கு மாவட்ட தலைவர் சு. துரைசாமி, ம.ரே.ராசு குமார், வெ. கோபால், சா. கதிரவன், இ.மு. சாஜித் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அரசியல் கட்சித் தலைவர்களான மருத்துவர் இராமதாசு, தொல். திருமா வளவன், வைகோ உள்ளிட்டஅனைத்து தலைவர்களுக்கும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் கழக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கம் அவர்களுக்கும் கழகப் பொதுச்செயலாளர் கோவை இராம கிருட்டினன் கடிதம் அனுப்பியுள்ளார்.

செய்தி : இ.மு. சாஜித்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com