Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
மே 2008

நளினி-பிரியங்கா சந்திப்பு எதிரொலி: தூக்குத் தண்டனை ஒழியுமா?

சோனியாவின் மகள் பிரியங்கா, அண்மையில் வேலூர் சிறையில் - நளினியை சந்தித்துப் பேசியதை ஊடகங்கள் பரபரப்பாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த சந்திப்பின் வழியாக - ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறைக்கப்பட்டு அவர்கள் விடுதலையாகிவிடக் கூடாது என்று பார்ப்பன ஏடுகள் - பார்ப்பன ஊடகங்கள் பதறுகின்றன. இந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி இராஜேந்திர சச்சார், இந்த சந்திப்பை வரவேற்றுள்ளதோடு இதன் தொடர் நடவடிக்கையாக தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நளினியுடன் நடத்திய சந்திப்பு - தனிப்பட்ட சந்திப்பு; மன அமைதிக்கான சந்திப்பு என்று பிரியங்கா கூறியுள்ளார். இது பிரியங்காவின் பாராட்டத்தக்க மனிதாபிமான உணர்வின் வெளிப்பாடு. இந்த சந்திப்பின் மூலம் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் முன்னாள் நகர்த்தப்பட்டுள்ளது என்று முன்னாள் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். தூக்குத்தண்டனை இந்தியாவில் ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை அவர் அழுத்தமாக வலியுறுத்துகிறார்.

சட்டத்தாலும் நடைமுறையாலும் 135 நாடுகளில் தூக்குத்தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. 2006 ஆம் ஆண்டில் 25 நாடுகள் மட்டுமே தூக்குத் தண்டனையை நிறைவேற்றியுள்ளன. 2006 இல் தூக்குத் தண்டனை தரப்பட்டோர் 1,591. 2005 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 2,105. சிலி நாட்டின் அதிபர் எட்வர்டோ ஃபிரே “தூக்குத் தண்டனை மனிதாபிமானத்துக்கு எதிரானது. கொலை செய்த குற்றத்துக்காக, நாமும் கொலை செய்யக்கூடாது” என்று கூறியுள்ளார்.

1980 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அரிதிலும் அரிதான வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கலாம் என்று ஒரு வரையறையை உருவாக்கியது. ஏதோ அரசியல் சட்டத்திலேயே, இப்படி இருப்பதுபோல ஒரு பொய்மையான தோற்றத்தை, உச்சநீதிமன்றமே உருவாக்கியது. அப்படி சொன்ன உச்சநீதிமன்றம் தான் 1980க்குப் பிறகு 1990 வரை 40 சதவீத வழக்கில் தூக்குத்தண்டனை விதித்தது. அதற்கு முன்பு - அதாவது ‘அரிதிலும் அரிதான வழக்கில் மட்டும் தூக்குத் தண்டனை விதிக்கலாம்’ என்று இவர்கள் வரையறுப்பதற்கு முன்பு - 1970-80 ஆம் ஆண்டுகளில் 37.7 சதவீத வழக்குகளில்தான் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. 1970 - 80களில் உயர்நீதிமன்றங்கள் 59 சதவீத வழக்குகளில் தூக்குத்தண்டனை விதித்தன, இதுவே 1980-90களில் 65 சதவீதமாக உயர்ந்துவிட்டது. தூக்குத் தண்டனையை குறைக்க வேண்டும் - அரிதாகப் பயன்படுத்த வேண்டும் என்று கூறிய நீதிமன்றமே அதற்கு முரணாக செயல்பட்டது.

தூக்குத் தண்டனையை ஆதரிப்போர், அழுத்தமாக முன்வைக்கும் வாதம் என்ன? தூக்குத் தண்டனையை எடுத்துவிட்டால் குற்றங்கள் அதிகரித்துவிடும் என்பதுதான். 1945 முதல் 1950 வரை திருவாங்கூர் சமஸ்தானத்தில் தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு நடந்த கொலைகள் 962. மீண்டும் 1950-55இல் தூக்குத் தண்டனை கொண்டு வரப்பட்டபோது நடந்த கொலைகளோ 967. 1976 இல் கனடாவில் தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்டப் பிறகு அங்கு கொலைகளின் சதவீதம் குறைந்துவிட்டது. 1988 இல் அய்.நா. நடத்திய ஆய்வில் தூக்குத் தண்டனை விதிப்பதால் குற்றங்கள் தடுக்கப்படுகின்றன என்ற கருத்துக்கு ஆதாரங்களே இல்லை என்று கண்டறியப்பட்டது.

1976 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் தூக்குத் தண்டனையை அறிமுகப்படுத்தியது. அதற்குப் பிறகு 500 பேர் அந்த நாட்டில் தூக்கில் போடப்பட்டனர். இதே காலகட்டங்களில் பல ஆண்டுகாலமாக சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்த 75 பேர். இவர்கள் அப்பாவிகள். தவறாக சிறைப்படுத்தப்பட்டு விட்டனர் என்று கூறி விடுதலை செய்யப்பட்டனர். இரண்டு சம்பவங்களும் ஒரேகால கட்டத்தில் நிகழ்ந்தவை. தூக்கில் போடப்பட்ட 500 பேரில் எத்தனையோ அப்பாவிகள் இருந்திருக்கலாமே! 7 பேருக்கு தூக்கு என்றால் - தவறாக சிறை வைக்கப்பட்ட ஒருவருக்கு விடுதலை என்ற வீதத்தில் - இது நடந்து முடிந்திருக்கிறது.

குற்றம்சாட்டப்பட்டவருக்கு, சட்டத்தின் தரமான உதவிகள் சமமாக கிடைப்பதில்லை. வசதி படைத்த ஒருவர் நல்ல பணம் கொடுத்து சிறந்த வழக்கறிஞரை நியமித்துக் கொண்டு தூக்குத் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கான சட்ட நுணுக்கங்களை தனக்காக வாதிடச் செய்ய முடியும். இதுவே ஏழையாக இருந்தால், இந்த வாய்ப்புகள் கிடைக்குமா? ஏழைகள் தூக்குத் தண்டனையைத்தான் சந்திக்க வேண்டும். இந்தியாவில் தண்டனை வழங்கும் செயலமைப்பு - சீர்மையாக இல்லை. எனவே தூக்குத் தண்டனை சட்டத்தில் இருப்பதே - நீதிக்கு எதிரானது.

உலகமே - இப்போது தூக்குத் தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது. 2007 நவம்பரில் அய்.நா.வின் பொது அவை - உலகநாடுகள், தூக்குத்தண்டனை விதிப்பதை நிறுத்தி வைத்து, படிப்படியாக தூக்குத் தண்டனையை சட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தது. இத்தீர்மானத்தை எதிர்த்து இந்தியா ஓட்டளித்தது. மீண்டும் 2008 இல் அய்.நா. பொது அவை முன் இதே தீர்மானம் வரவிருக்கிறது. அப்போது, இந்தியா, தனது நிலையை மாற்றிக் கொண்டு, மனித உரிமைகளைப் பேணும் நாடாக தன்னை அடையாளப்படுத்த வேண்டும், என்கிறார், நீதிபதி இராஜேந்திர சச்சார்! (கட்டுரை - ‘டைமஸ் ஆப் இந்தியா’, ஏப்.26)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com