Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
மே 2008

நடிகவேள் நடத்திய நாடகப் புரட்சி

(பெரியார் கருத்துகளை நாடகத்தின் வழியாகப் பரப்ப நடிகவேள் எம்.ஆர்.ராதா கடும் சவால்களை எதிர்கொண்ட வரலாறுகளை விளக்குகிறது இக் கட்டுரை. தோழர் மனா தொகுத்துள்ள “எம்.ஆர். ராதா, காலத்தின் கலைஞன்” நூலில் இடம் பெற்றுள்ள ஒரு பகுதி)

1942-க்குப் பிறகு மறுபடியும் நாடக மேடைக்கே திரும்பினார் நடிகவேள் எம்.ஆர்.ராதா. பொன்னுச்சாமி பிள்ளை கம்பெனியில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இழந்த காதல் நாடகத்தில் அவருடைய சவுக்கடிக் காட்சிக்குத் தனிப் பெயர் கிடைத்தது. சிவாஜி பெண் வேடத்தில் நடித்த இந்த நாடகம் வெள்ளித் திரை தரத் தவறிய புகழைத் தந்தது. அண்ணா உட்படப் பலர் பாராட்டினார்கள். பெரியாரும், சம்பத்தும் வந்து மனப்பூர்வமாக வாழ்த்தினார்கள். பெரியாருடன் தொடர்பு கூடியது.

‘திராவிட மறுமலர்ச்சி நாடக சபா’ என்கிற பெயருடன் இயங்க ஆரம்பித்தார் ராதா. “சுயமரியாதைக் கருத்துக்களை நான் ஆராய ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே முழுவதும் அதன் வசமாகி விட்டேன்” என்று ராதாவே உணர்வுடன் சொல்லுமளவுக்கு திராவிட இயக்கக் கருத்துக்கள் அவருடைய நாடகங்களில் வெளிப்பட்டன.

விமலா அல்லது விதவையின் கண்ணீர் துவங்கி, லட்சுமி காந்தன், போர் வாள், தூக்கு மேடை, ராமாயணம், ரத்தக் கண்ணீர், தசாவதாரம், கதம்பம் என்று பல நாடகங்களை அரங்கேற்றினார். கலைஞர் கருணாநிதி, சி.பி. சிற்றரசு, திருவாரூர் தங்கராசு, குத்தூசி குருசாமி என்று பலர் இவருடைய நாடகங்களுக்கான வசனங்களை எழுதினார்கள். ஒவ்வொரு முறையும் இந்த நாடகங்கள் நிகழ்த்தப்படும் போதும், அன்றைக்குள்ள சமூக, அரசியல் குறித்த செய்திகள் நாடகத்தில் அலசப்படுவதின் மூலம் அந்த நாடகங்களுக்குச் சம காலத்திய அந்தஸ்து கிடைத்தது.

“பெரியார் படத்தைத் திறந்து வைத்துப் பேசுகிறாயே, அவர் என்னத்தைச் சாதிச்சார்?”

“உன் நெற்றியும், என் நெற்றியும் எந்தக் கோடும் இல்லாமல் சுத்தமாக இருக்கிறதே; இதற்குக் காரணம் பெரியார்தாம்ப்பா...” என்று ஒரு காட்சியிலும் கலைஞர் கருணாநிதியுடன் நடித்துக் கொண்டிருக்கும்போது “தளபதி தளபதி என்கிறீர்களே அண்ணாதுரை எத்தனை போர்க்களங்களைச் சந்தித்தார்?” என்றும் கேட்பதற்கான துணிவு ராதாவிடம் இருந்தது.

சில சாதிச் சின்னங்களைக் குறித்து -

“ஏம்ப்பா... நீ நெற்றியில் போட்டிருக்கியே... டபுள் ஒயிட். சிங்கிள் ரெட். அது என்னப்பா?”

“அது திருப்பதி வெங்கடாசலபதியின் பாதம்”.

“சரி... திருப்பதி வெங்கடாசலபதியின் நெற்றியிலே இருக்கே ஒரு நாமம்... அது யார் பாதம்? என் பாதமா?” என்றெல்லாம் ராதா நாடகத்தில் பேசும் வசனங்கள் அந்தக் காலகட்டத்தில் எழுப்பிய அதிர்வுகள் அதிகம்.

1954 டிசம்பர் 11, 12 தேதிகளில் ராமாயணம் நாடகத்திற்குத் தடை விதிக்கப்பட்டபோது திருச்சியில் உள்ள தேவர் மன்றத்தில் “வராதே. என் நாடகத்தால் மனம் புண்படும் என்று கருதுகிறவர்கள் எவராயிருந்தாலும் அவர் எம்மதத்தினராக இருந்தாலும், அவர்கள் கண்டிப்பாய் வர வேண்டாம். அவர்கள் காசும் எனக்கு வேண்டாம். மீறி வந்து பார்த்தால் அவர்கள் மனம் புண்பட்டால் அதற்கு நான் ஜவாப்தாரியல்ல என்பதைக் கண்டிப்பாய் அறியவும். எம்.ஆர். ராதா.” என்று தட்டியிலும், நோட்டீசிலும் விளம்பரம் செய்வதற்குப் பின்னுள்ள உணர்வைப் பற்றி ராதாவே (1964) இப்படிச் சொல்லியிருக்கிறார்.

“இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சுயமரியாதைக் கொள்கைகளை நாடகங்களில் புகுத்தி நடிப்பதென்பது அத்தனை சுலபமான வேலையல்ல.”

1946-ல் சென்னையில் போர்வாள் நாடகத்தை ராதா நடத்த முயன்றபோது அதற்குத் தடை, பிரகாசம் தலைமையிலான அரசிடமிருந்து, உடனே பெயரை மாற்றிச் சில காட்சிகளை மாற்றி அதே நாடகத்தை சர்வாதிகாரி, மகாத்மா தொண்டன், சுந்தர லீலா என்கிற பெயர்களில் நடத்தினார்.

மதுரையில் 1946 இல் நடந்த திராவிடர் கழக மாநாட்டுப் பந்தலில் தீ வைக்கப்பட்டபோது ராதா தங்கியிருந்த வீட்டிலும் தாக்குதல் நடந்தது. ஏழு வருடங்களுக்குப் பின் திரும்பவும் மதுரையில் ராமாயணம் நாடகம் நடத்தியபோது கலவரமானது. திருச்சி, குடந்தையிலும் இதே மாதிரியான கலாட்டாக்கள். அவருடைய நாடகப்படுதாவில் காட்டப்படும் ‘உலகப் பாட்டாளி மக்களே ஒன்று சேருங்கள்’ என்கிற வாசகத்திற்கும், அரிவாள் சுத்தியல் சின்னத்திற்கும்கூட எதிர்ப்பு வலுத்தது. கோவையில் நாடகம் நடத்தும்போது உருவான கலவரச் சூழலில் “உயிருக்குத் துணிந்தவர்கள் மட்டும் நாடகம் பார்க்க வரலாம்” என்று ராதாவே மைக்கில் அறிவிக்கும்படி ஆனது. கும்பகோணத்தில் தடையை மீறி ராமாயணம் நாடகத்தை நடத்திய ராதா ராமர் வேடத்துடனேயே கைது செய்யப்பட்டார்.

நாடகத் தடைச் சட்டம் உருவாக்கப்பட்டு ராதாவின் நாடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு காமராஜர் ஆட்சியில் மட்டும் ராதா கைது செய்யப்பட்டது 52 தடவைகள். தென்னிந்திய நடிகர் சங்கம் இதற்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை என்கிற ஆதங்கம் ராதாவிடம் இருந்திருக்கிறது. நிகழ்த்தப்பட்ட போதெல்லாம் பரபரப்பை ஏற்படுத்திய ராமாயணம் நாடகம் ராமனை உயர்த்திப் பிடிப்பதற்கு எதிராக சீதை மற்றும் அவர்களுடைய குழந்தைகளான லவன், குசனின் பார்வையிலிருந்து ராமனைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

“எங்கே எங்கே நீதி
ராமன் வாழ்விலே
ராமராஜ்யம் தன்னிலே. அது
அன்றும் இல்லை
இன்றும் இல்லை என்றே சொல்வீர்:
தெய்வம் ஆவானோ ராமன்”

“அநீதியிதே” என்று லவகுசர்கள் பாடுவதான பாடலுடன் முடிகிறது ராதா நடித்த ‘ராமாயணம்’ நாடகம். தனக்கு ஒரு சிலை வைத்து அதில் காறித் துப்புங்கள் என்கிறபடி முடியும் ரத்தக் கண்ணீர் நாடகம்.

8.4.1959 அன்று நடிகர், நடிகைகள் அஞ்சலிதேவி தலைமையில் ஆந்திர முதல்வர் சஞ்சீவ ரெட்டியைச் சந்தித்து ‘இந்து நேசன்’, ‘கலைநேசன்’ போன்ற மஞ்சள் பத்திரிகைகளுக்குத் தடை விதிக்கக் கோரியபோதும் (‘நடிகன் குரல்’ இதழ் 1959 மே) ‘இந்து நேசன்’ பத்திரிகையை நடத்தி வந்த லட்சுமிகாந்தன் சென்னை புரசைவாக்கத்தில் ரிக்ஷாவில் செல்லும்போது கொலை செய்யப்பட்டு 1944 செப்டம்பர் 27 அன்று தியாகராஜ பாகவதரும், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும் சிறைக்குச் சென்ற நிலையில் லட்சுமிகாந்தனின் மறைவுக்கு மக்கள் வருந்துவதாக நாடகம் முடிந்தாலும், சிறையில் பாகவதரும், கலைவாணரும் வாடுவதையும், விடுதலை ஆக வேண்டும் என்பதையும் நாடகத்தில் காட்டியிருந்தார் ராதா.

‘லட்சுமி காந்தன்’ என்கிற தலைப்பில் 760 தடவை ராதா மேடையேற்றியிருப்பது சமூக மதிப்பீடுகளுக்கும் போர்த்தப்பட்டிருக்கும் மதிப்பீடுகளுக்கும் எதிரான விமர்சனக் குரல். தனக்கு ஏற்படுகிற சரிவுகளையோ, இழப்புகளையோ, எதிர்ப்புகளையோ பொருட்படுத்தாமல் கலகக் குரலாக வெளிப்படுத்தியதுதான் ராதாவுக்கான தனி அடையாளம்.

இந்தத் தனித்துவம்தான் - “இந்தத் தாழ்ந்த தமிழகத்தைத் தலை தூக்கி நிறுத்த நூறு திராவிடர் கழக மாநாடுகள் நடப்பதும் ஒன்று. ஒரேயொரு எம்.ஆர்.ராதா நாடகம் நடப்பதும் ஒன்று” என்று அண்ணாவைச் சொல்ல வைத்திருக்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com