Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
மே 2007

இரட்டைக் குவளை தீண்டாமைகளுக்கு எதிராக களம் இறங்குகிறது கழகம்!

கிராமங்களில் - இன்னும் தொடரும் இரட்டைக் குவளை, இரட்டை இருக்கைகளை அகற்றக் கெடு விதிப்பது என்றும், அகற்றாவிடில் ஆக.15-இல் உடைக்கும் போராட்டத்தை நடத்துவது என்றும், தஞ்சை மாநாட்டில் பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. மாநாட்டின் இறுதியில் இத்தீர்மானத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன் மொழிந்து பேசினார். கழகத் தலைவர் முன் மொழிந்த தீர்மானம்:

• தமிழ்நாட்டின் பல்வேறு கிராமப் பகுதிகளில் இப்போதும் தீண்டாமை தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. தென் மாவட்டங்களில் ‘நாடு’ என்ற அமைப்பு முறை சாதியத்தைப் பாதுகாப்பதுபோல், மேற்கு மாவட்டங்களில் ஒடுக்குமுறையின் நவீன வடிவமாய் ‘பண்டு கிராமங்கள்’ என்ற முறையால் பெரும்பான்மை ஆதிக்க சாதிகளால் சாதிய ஒடுக்குமுறையைத் தொடர்ந்து நிலைநிறுத்த கட்டாய நிதி திரட்டும் முறை நிலவி வருகிறது. அம்முறையைப் பயன்படுத்தி இரட்டைக் குவளை, இரட்டை இருக்கை, பஞ்சமி நில அபகரிப்பு எனும் சட்டவிரோத, ஜனநாயக விரோத முறையைக் கடுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடைமுறைப்படுத்துகின்றன.

தமிழ்நாட்டின் பல்வேறு கிராமங்களில் நிலவும் இந்தத் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான போராட் டத்தில் பெரியார் திராவிடர் கழகம் - தோழமை சக்திகளின் துணையோடு போராட முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக - தமிழ்நாடு முழுவதும் இரட்டைக் குவளை, இரட்டை இருக்கை உள்ள கடைகள், கிராமங்களின் பட்டியலையும், ஒடுக்கப்பட்ட மக்களின் குறைந்தபட்ச வாழ்வாதாரமாக, ஆங்கி லேயர் ஆட்சியில் வழங்கப்பட்டிருந்த பஞ்சமி நிலங்கள் ‘சுதந்திர’ இந்தியாவில் பிற சாதியினரால் வஞ்சகத்தாலும், மிரட்டியும் அபகரிக்கப்பட்டுள்ள விவரங்களையும், தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்காத கோவில்கள் பற்றிய விவரங்களையும் தயாரித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது காவல்துறை, வருவாய்த்துறை, ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகளிடமும் அரசிடமும் புகார் தருவது எனவும்,

இரண்டாம் கட்டமாக காலக்கெடுவுக் குப்பின் இந்தத் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக ஒரு மாத காலம் தமிழ்நாடு முழுவதும் கிராமம் கிராமமாக பரப்புரை செய்து தீண்டாமையைக் கைவிடுமாறு வலியுறுத்துவது எனவும்,

மூன்றாவது கட்டமாக விடுதலை வந்ததாகச் சொல்லப்படும் ஆகஸ்டு 15 ஆம் நாளன்று முன்னறிவிப்புக் கொடுத்துவிட்டு இரட்டைக் குவளை, இரட்டை இருக்கை முறைகளைச் சட்டவிரோதமாகக் கடைபிடிக்கும் கடைகளில் தீண்டாமை வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வலியுறுத்தி, ‘இரட்டைக் குவளை, இரட்டை இருக்கைகளை உடைத்தெறிவது’ எனவும், பெரியார் திராவிடர் கழகம் இந்த சாதி ஒழிப்பு மாநாட்டில் அறிவிக்கிறது.

சாதி ஒழிப்பிற்காகச் சட்டம் எரிக்கப்பட்ட நாளும், சட்ட தினமுமான நவம்பர் 26 அன்று ஒத்த கருத்துள்ள அனைத்து சக்திகளையும் இணைத்துக் கொண்டு பஞ்சமி நில மீட்புப் போரை நடத்துவது எனவும் அறிவிக்கிறது.

சாதி ஒழிப்பிற்காக - மகத்தான தியாகங்கள் செய்த சட்ட எரிப்புப் போராளிகளின் தியாகத்திற்கு நாம் காட்டும் உண்மையான மரியாதையும், பெரியார் தொண்டர்கள் செல்ல வேண்டிய திசை வழியும் இதுவே என்று பெரியார் திராவிடர் கழகம் கருதுகிறது.

• பெரியாரின் ஆணையை ஏற்று, கடும் அச்சுறுத்தல் சட்டங்கள் அவசர அவசரமாக இயற்றப்பட்ட நிலையிலும், அரசியல் சட்டத்தில் சாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளைக் கொளுத்தி, நீதிமன்றத்தில் எதிர் வழக்காடாமல் 6 மாதத்திலிருந்து 3 ஆண்டுகள் வரை, கடும் சிறைத் தண்டனை ஏற்ற, ஆயிரமாயிரம் பெரியார் தொண்டர்களின் இலட்சிய உறுதிக்கு, இம்மாநாடு தலைதாழ்த்தி வணங்கி, அவர்கள் போட்டுத் தந்த பாதையில் - சாதி ஒழிப்பு இலட்சியப் பயணத்தைத் தொடர உறுதி ஏற்கிறது. சமூக மாற்றத்திலும், சாதி ஒழிப்பிலும் அக்கறையுள்ள அனைத்து இயக்கங்களும் சாதியத்துக்கு எதிரான போராட்டத்துக்கு முன்னுரிமை தரவேண்டும் என்று இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது. முன்மொழிந்தவர் : ஆனைமலை ருக்மணி

• சாதியத்தின் ஒடுக்குமுறைக்கு உள்ளான சமூகங்களுக்கு சுயமரியாதையும், சம உரிமையும் என்ற நோக்கோடு கல்வி, வேலை வாய்ப்புகளில் மட்டுமே பிற்பற்றப்பட வேண்டிய சாதியின் அடையாளத்தை, அதிலிருந்து திசை திருப்பி, அரசியல் கட்சிகள் ஓட்டு வங்கிகளை உரு வாக்குவதற்கும், சுயநல சக்திகள் தங்கள் சுரண்டலுக்கும், சுயநலனுக்கும் பயன்படுத்துவது அதிகரித்து வருவதும், இந்த சாதிய உணர்வுகளுக்குத் தீனி போடக்கூடிய திரைப்படங்களும், கலை வடிவங்களும் பெருகி வருவதும், சமூகத்தை மீண்டும் பின்னோக்கி இழுத்துச் செல்லும் ஆபத்தான போக்கு என்று இம்மாநாடு கவலையோடு சுட்டிக் காட்டுகிறது. சாதி அமைப்பின் ஏற்றத் தாழ்வுகளை ஒழிப்பதற்குப் பதிலாக, சாதிக்குப் புத்துயிர் ஊட்டும் அரசியல் கட்சிகள், சுயநல சக்திகள், திரைப்படங்கள், கலைவடிவங்களுக்கு எதிரான கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று சாதி எதிர்ப்பாளர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. முன்மொழிந்தவர்: திண்டுக்கல் துரை. சம்பத்

• தலித் மக்களின் மேம்பாட்டிற்காக - மத்திய அரசு சிறப்புக்கூறு திட்டம் ஒன்றின் வழியாக மாநில அரசுகளுக்கு நிதி வழங்கி வருகிறது. இதன்படி தமிழ்நாட்டில் ஒவ்வொரு துறையிலும் 19 சதவீத நிதியை தலித் மக்கள் மேம்பாட்டிற்காக ஒதுக்கிட தமிழக அரசு கடமைப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 12,000 கோடி ரூபாய் மறுக்கப்பட்டுள்ளதோடு, 7143 கோடி ரூபாய் வேறு செலவினங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது என்பது அதிர்ச்சி தருவதாகும். இந்த முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவும், ஒதுக்கப்பட்ட நிதியை முறையாகச் செலவிடவும் தலித் உரிமையில் ஈடுபாடு கொண்ட, உயர்மட்டக் கண்காணிப்புக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. முன்மொழிந்தவர்: மதுரை விடுதலை சேகர்

• வடநாட்டில் மண்டல் அலை உருவாக்கிய தாக்கத்தால் தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் கூட்டணி உருவாகி, பார்ப்பன ஆதிக்கத்தை அரசியலில் ஓரம் கட்டியது. மனுவாத எதிர்ப்பை முன்வைத்து, வெகு மக்கள் உரிமைக்காக தொடங்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி இன்று பார்ப்பன மனுவாத சக்திகளோடு கைகோர்த்து ஆட்சிக்கு வந்திருப்பது ஆபத்தான அரசியலாகும். முதல்வராகப் பதவி யேற்றவுடன், முதலமைச்சர் மாயாவதி இடஒதுக்கீட்டைப் பொருளாதார அடிப்படையிலும், அதுவும் உயர்சாதி ஏழைகளுக்கு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கூறியிருப்பது அவரது கொள்கைத் தடுமாற்றத்தையே உணர்த்துகிறது. தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வுரிமைகளை மறுத்து சமூகச் சுரண்டலுக்கும் மூல ஊற்றாக இருக்கும், பகை சக்திகளான பார்ப்பனர்களை, நட்பு சக்திகளாக்கிடும் பேராபத்தை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் புரிந்து, இந்தப் போக்கு பரவாமல் முறியடிக்க முன்வரவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. முன் மொழிந்தவர் : மேட்டூர் கனக ரத்தினம்

• சாதிமதமற்ற சமூகத்தை உருவாக்கிட - சாதி மறுப்புத் திருமணங்கள் பெருக வேண்டியதும், அதை ஊக்கப்படுத்தும் திட்டங்களை அரசு மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகும். சாதி மதத்தைக் கடந்து திருமணம் புரிந்தோருக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் சிறப்புரிமை வழங்கப்பட வேண்டும். சாதி மத மறுப்பாளர்களுக்கென சாதி மத மறுப்புக் குடியிருப்புகளை உருவாக்குவதோடு சமத்துவபுரத்திலும் முன்னுரிமை தரப்பட வேண்டும். சாதி மத மறுப்பாளர்கள் தங்களது வாரிசுகளை, தங்களது பிறவி அடையாளங்களைக் கடந்து, புதிய உறவுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது அவசியம் என்பதையும் இம்மாநாடு சுட்டிக்காட்ட விரும்புகிறது. முன் மொழிந்தவர் : கொடையூர் தமிழ் தாசன்

• இந்து சாதி அமைப்பு - தொழிலையும், வாழ்க்கைத் துணையையும் தேர்வு செய்வதில் சாதியைப் புகுத்தி சமூகத்தைத் தேக்கமடையச் செய்து விட்டதோடு மனித உணர்வுகளையும், உரிமைகளையும் நசுக்கி வருகிறது. இந்தச் சாதித் தடைகளை மீறி வயது வந்த பெண்ணும், வயது வந்த ஆணும், வாழ்க்கைத் துணைவர்களாக விரும்பும்போது, குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் முதலில் பாசத்தைக் காட்டியும், அது பலிக்காமல் போனால் அச்சுறுத்தல், வன்முறைகளைப் பயன்படுத்தியும் சாதி வெறியோடு தடுக்கப் பார்க்கிறார்கள். இப்படித் தடுக்க முனைவதைத் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதி, கடும் சட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும், இவர்களில் தலித் பெண்ணோ, ஆணோ இருப்பார்களானால் தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இதனைக் குற்றமாகக் கருத வேண்டும் என்றும் இம்மாநாடு தமிழக அரசை வற்புறுத்துகிறது. முன்மொழிந்தவர் : நெடுமானூர் வ. நடராசன்

• உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு - நாடாளுமன்றமே சட்ட திருத்தம் செய்து ஒப்புதல் தந்த பிறகு பார்ப்பன ஆதிக்க பீடமான உச்சநீதிமன்றம், தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு இவ்வாண்டு 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு இடைக்காலத்தடை விதித்துள்ளது - ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைத்துள்ள மிகப் பெரிய அநீதியாகும். இந்தத் தடையை நீக்குவதற்கான சட்டப்படியான நடவடிக்கைகளை மத்திய அரசு உடன் எடுக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. முன்மொழிந்த வர்: சீர்காழி பெரியார்செல்வன்

• இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி போல இந்திய நீதிப்பணி ஏற்படுத்த தற்போதுள்ள அரசியல் சட்டத்தின் பிரிவு 312 அனுமதிக்கிறது. அவ்வாறு நியமிக்கப்பட்டால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களும் இடஒதுக்கீட்டின் வழியே நீதிபதிகளாகும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு உருவாக்குவதுதான் வெகு மக்கள் நலனுக்காக இயற்றப்படும் சட்டங்களை எளிதில் நடைமுறைப் படுத்த உதவும். எனவே இந்திய நீதிப்பணியை உருவாக்குமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. முன்மொழிந்தவர்: மதுரை அகராதி

• அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாகும் சட்டத்தை அமுல்படுத்தி, அர்ச்சகர் பயிற்சிக்கான வகுப்புகளைத் துவக்கி, திட்டத்தை அமுல்படுத்தத் தொடங்கியுள்ள தி.மு.க. அரசை இம்மாநாடு பாராட்டி வரவேற்கிறது. முன்மொழிந்தவர் : நெல்லை காசிராசன்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com