Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
மே 2007

சிறைக்குள்ளே 18 போராளிகள் உயிர்ப்பலியான வீரவரலாற்றை நினைவு கூர....
தஞ்சை மாநாட்டுக்கு திரளுவீர்!

1957 - நவம். 27! சாதி ஒழிப்பு வரலாற்றில் புதிய அத்தியாயத்தைப் பதிவு செய்த நாள். பெரியார் ஆணையை ஏற்று - 10,000 கருஞ்சட்டைத் தோழர்கள், சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவை தீயிட்டுக் கொளுத்தினர்; 300 பேர் கைது செய்யப்பட்டு சிறையேகினர். பிணையில் வெளிவரவில்லை. 6 மாதத்திலிருந்து 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை ஏற்றனர். சிறையில் கிரிமினல் கைதிகளாகவே நடத்தப்பட்டு, சொல்ல முடியாத துயரங்களை சந்தித்தனர். பெரியார் இயக்கம் நடத்திய அந்த போராட்டத்தின் 50 ஆம் ஆண்டு இது. மூத்த தலைமுறையினரின் தியாகங்களை நினைவு கூர்ந்து, பெரியார் திராவிடர் கழகம் மே 19-ல் தஞ்சையில் சாதி ஒழிப்பு மாநாடு நடத்துகிறது. தமிழகம் முழுதும் தோழர்கள் மாநாட்டுக்கு தயாராகி வருகிறார்கள். அந்த போராட்ட வரலாற்றில் தியாக தீபங்களாகிப் போன கருப்பு மெழுகுவர்த்திகளின் லட்சிய உறுதியை வரலாற்றிலிருந்து பதிவு செய்கிறார், நம் பெரியார் குடும்பத்தின் மூத்த சகோதரர் திருச்சி செல்வேந்திரன். தோழர் இளவேனில் நடத்திய ‘குடியரசு’ பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரையை பொள்ளாச்சி பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் சிறு நூலாக வெளியிட்டுள்ளனர். அதிலிருந்து ஒரு
பகுதி:

போராட்ட நாளில் குறித்தபடியே போராட்டம் சென்னை தொடங்கி, கன்னியாகுமரி வரையில் நடை பெற்றது. குறிக்கப்பட்ட 26.11.1957 இல் பத்தாயிரம் கருஞ்சட்டைத் தொண்டர்கள் சட்டப் பிரிவுகள் அச்சடிக்கப்பட்ட தாளைக் கொளுத்தினார்கள். அவர்களில் 2884 பேர்கள் கைது செய்யப்பட்டதாய் டெல்லி பாராளுமன்றத்தில் 4.12.1957 இல் அறிவிக்கப்பட்டது. ஆனால், சிறை ஆவணங்களின்படி 3000 பேர் கைதாகிச் சிறையில் இருந்தனர்.

இந்தக் கட்டுரைக்கான சில குறிப்புகளைக் கொடுத்த - இப்போது எழுபத்தைந்து வயதாகும் திரு.து.மா. பெரியசாமி போன்றவர்கள் மூன்று மாதம் தொடங்கி பல ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு மூன்றாண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் யாரும் எதிர் வழக்காடவில்லை! ‘கொளுத்தப்பட்டது அரசியல் சட்ட நூலல்ல. அதன் பிரிவுகள் சில எழுதப்பட்ட ஒரு தாள் தான். இது தேசிய அவமதிப்பாகாது’ என்று வாதாடி இருந்தால் அனைவருமே தண்டனையின்றித் தப்பி இருப்பார்கள்.

இந்த மூன்று மாதம் தொடங்கி மூன்றாண்டுகள் வரை இருந்த தண்டணைக் காலத்தில் திராவிடர் கழகத் தோழர்களில் பலர் காட்டிய மன உறுதியும் - அஞ்சாமையும் - தியாகமும் - மகத்தானது. மறக்க முடியாதது. ஆனால், மறைக்கப்பட்டது. தோழர் இளவேனிலின் ‘குடியரசு’ இதழ் இவைகளை ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிக் கொணர வாய்ப்பளித்தது சரித்திரத்தின் நன்றிக்குரியது.

சிறைக் கொடுமை!

இந்தப் போராட்டத்தில் கலந்து சிறைப்பட்ட ஒருவர்கூட அரசியல் கைதியைப் போல் நடத்தப்படவில்லை. கீழான சமூகக் குற்றங்களைச் செய்த கைதிகளைப் போலவே அரைக்கால் சட்டை, அரைக்கைச் சட்டை, சட்டையில் வில்லை என்ற முறையில் அவமானப்படுத்தப்பட்டனர். மற்ற கிரிமினல் கைதிகளைப் போலவே தோட்ட வேலை, சமையற்கட்டு சாமான் கழுவுதல் போன்ற பணிகளில் அமர்த்தப்பட்டனர். சிறையின் உணவும், சீதோஷ்ணமும், போதிய தண்ணீர் வசதி இல்லாமையினாலும், அலட்சியமான மருத்துவ கவனிப்பினாலும் பலர் நோய்வாய்ப்பட்டனர். ஐந்து பேர் சிறையிலேயே இறந்தனர்.

சிறையிலேயே கடுமையாய் நோய்வாய்ப்பட்டு, இனிப் பிழைக்க வாய்ப்பில்லை என்று தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே பழியிலிருந்து தப்பிக்கத் தமிழக அரசால் விடுதலை செய்யப்பட்டவர்கள் பதிமூன்று பேர் விடுதலையான ஒரே வாரத்திற்குள் இறந்தனர். அவர்களும் கொல்லப்பட்டவர்கள் பட்டியலில்தான் வருவார்கள். சாதி ஒழிப்புப் போருக்குத் திராவிடர் கழகம் கொடுத்த களப்பலி மொத்தம் பதினெட்டு பேர். இந்தச் சட்டம், மன்றத்தில் வந்த போதும் சரி - மூன்றாண்டு தண்டனை விதிக்கப்பட்ட போதும் சரி - ஒருவர் பின் ஒருவராய் பதினெட்டு பேர் செத்த போதும் சரி - பச்சைத் தமிழர் காமராசர் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. ‘அமைதியாய் இருந்து டெல்லிக்கு நல்ல பிள்ளையாகிவிட்டார் நம்மை பலி கொடுத்து’ எனத் திராவிடர் கழகத்திலிருந்த தீவிர காமராஜ் பற்றாளர்கள் பலர் முனகினார்கள்.

வெளியில் இருக்கும்போது சரிகை வேட்டி - பட்டுச் சட்டை, விலை உயர்ந்த பூட்சுகள் என்ற தோரணையில் உடை யணியும் திராவிடர் கழகத்தின் மூத்த பெரும் தலைவர்களில் ஒருவரும், பெரியாரின் பேரன்பிற்குப் பாத்திரமானவரும், பல நூறு ஏக்கர் நிலங்களுக்கு உரிமையுடைய பெரு நில உடைமையாளர்களான நீடாமங்கலம் ஆறுமுகம், சிதம்பரம் கிருஷ்ணசாமி, ஆனைமலை நரசிம்மன் (பெரியாரின் சம்பந்தி) போன்றவர்கள் அரைக்கால் சட்டையுடன் இருந்தது மட்டுமல்ல - சிறையில் கூட்டுதல், புல் பிடுங்குதல், பாத்திரம் கழுவுதல் போன்ற வேலைகள் செய்யும்படி கொடுமைப்படுத்தப்பட்டனர்.

வேலூர் திருநாவுக்கரசு, திருச்சி வீரப்பா போன்றவர்கள் வருமானவரி செலுத்து மளவு வசதி மிக்க வியாபாரிகள். அவர்கள் வயதைக் கூட கருத்தில் கொள்ளாமல் சிறை அதிகாரிகளுக்கு எடுபிடி வேலை செய்யும் ஏவலர்களாய் (ஆர்டர்லி) அமர்த்தி வேலை வாங்கப்பட்டனர்.

இந்த இரண்டு பேருடைய ஒரு நாளைய வியாபார வருமானம் தான் அந்தச் சிறை அதிகாரிகளின் ஒரு மாதச் சம்பளம் என்பது ஒரு வேடிக்கைச் செய்தி!

‘தந்தை பெரியார் சிந்தனைகள்’ என்ற வரலாற்றுப் பெருமை மிக்க நூலொன்றைத் தொகுத்தளித்த நல்ல படிப்பாளியும், சிந்தனையாளருமான வே.ஆனைமுத்து சிறை நூலகரின் பணியாளராக (ஆர்டர்லி) வேலை வாங்கப்பட்டார்.

மண்மேடான மண வாழ்க்கை

திருச்சியைச் சேர்ந்த இன்னொரு தீவிரத் தொண்டன் ஓராண்டுத் தண்டனை பெற்ற மாணிக்கம்! திருமணமான ஒரே வாரத்தில் போராட்டத்தில் கலந்து கொண்டு தண்டனை அடைந்தார். அடுத்தடுத்த நேர் காணல்கள் - இளம் மனைவியின் கண்ணீர். திருமணமாகி ஒரே வாரம்! மாணிக்கத்தின் மனதில் சலனம்!

ஆனாலும், தன்னை திடப்படுத்திக் கொண்ட மாணிக்கம் - கோழையாய் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு மனைவியுடன் மண வாழ்க்கை வாழ்வதைவிட வீரனாகச் செத்துப் போவதே மேல் என்ற தன் முடிவை மனைவியிடம் - ‘நான் விடுதலையாகி வரும் வரையில் என்னைப் பார்க்க வராதே. என் மனம் சலனப்பட்டு நான் வெளியே வரக் கூடாது. மனதைக் கல்லாக்கிக் கொள். போய் வா’ என்றார்.

மாணிக்கம் சொன்னபடியே அவருடைய மனம் கல்லாகத்தான் ஆகிவிட்டது. கணவன் லட்சிய வெறியோடு உறுதியாய் இருக்கிறான் என்று அந்தப் பேதைப் பெண்ணால் உணர முடியவில்லை. தன்னை உதறிவிட்டான் என்று எண்ணி சித்த பிரமை பிடித்தவர் போல் சில நாள் இருந்து பின்னர் முழுப் பைத்தியமாகவே ஆகிவிட்டாள். ஓராண்டுக்குப் பின்னர் விடுதலையான மாணிக்கம் - மன நோயாளியான மனைவியுடன் வாழ்ந்த - அந்த ஒரே வாரக் கால இனிய நினைவுகளுடனேயே வாழ்ந்து முடிந்து போனார்.

சிறைக்குச் சென்ற பெரியார் தொண்டர்களின் ஒரு சாரார் மட்டுமே வசதியான நில உடைமையாளர்கள். வியாபாரிகள், பலர் நடுத்தர வர்க்கத்தினர். பலர் ஏழை விவசாயிகள். விவசாயக் கூலிகள். ஆண்டுக்கணக்கான சிறைவாசத்தால் அனைத்துத் தரப்பினருமே பாதிக்கப்பட்டார்கள். பலருடைய தொழில்கள் சீர் கெட்டன. குடும்பம் பிழைப்புத் தேடி, பலர் குடி பெயரும் நிலை ஏற்பட்டது. பல குடும்பங்களில் எதிர்பாராது ஏற்பட்ட குடும்பத் தலைவிகளின் சாவால் பல குடும்பங்களின் நிலை நிர்க்கதியானது.

சிறையிலிருந்து ‘பரோ’லில் (விடுப்பில்) வருவதைக் கூடக் கோழைத்தனம் என்று பிடிவாதமாய்ச் சிறையிலிருந்த கருஞ்சட்டைத் தொண்டர்கள், குடும்பத்தில் முக்கியமானவர்கள் நோய்வாய்ப்பட்ட போதுகூட விடுப்பில் வெளிவர மறுத்தார்கள். திருவாரூரைச் சேர்ந் சிவ சங்கரனும், முத்துக்கிருஷ்ணனும் பழம்பெரும் தொண்டர்கள். தலைவர் கலைஞரின் தோழர்கள். கலைஞரின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘நெஞ்சுக்கு நீதி’யில் இவர்களைப் பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.

வேறு வேறு சந்தர்ப்பங்களில் மேலே சொன்ன இருவருடைய மனைவியரும் கடும் நோய்வாய்ப்பட்டார்கள். அவர்களுடைய உறவினர்கள் அவர்களிருவரையும் பரோலில் அழைத்துச் செல்ல விரும்பினார்கள்.

ஆனாலும், இருவருமே ‘வெளியே வருவதென்பது விடுதலையானால்தான்’ என்று உறுதியோடு கூறி விட்டார்கள். காலம் தான் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே! நோய்வாய்ப்பட்ட அவர்களுடைய மனைவியர்கள் (வேறு வேறு சமயங்களில்) இறந்தே போனார்கள். மொத்த சிறைச்சாலையும் உறைந்தே போய்விட்டது. ‘உயிரோடு இருக்கும் போதே பார்க்கவில்லை, பிணத்தைப் போய்ப் பார்த்து என்ன ஆகப் போகிறது’ என்று அழுதபடி சொல்லிக் கொண்டு அன்றைய சிறை வேலைக்குப் போய் விட்டார்களாம் இருவரும் இந்தச் சிவசங்கரன் 1976 இல் என்னோடு (செல்வேந்திரன்) மீண்டும் ஓராண்டு ‘மிசா’ சிறையில் இருந்தார். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ‘எங்களை விடுதலை செய்ய வேண்டும். நாங்கள் எந்தக் குற்றமும் செய்யாத அமைதி விரும்பும் குடிமக்கள்’ என்று அனைத்து ‘மிசா’ தண்டனை பெற்றவர்களும் ஆய்வு மனு (ரெவ்யூ பெட்டிசன்) எழுதுவார்கள்.

“அவனாகப் பிடித்தான். விடுகிறபோது விடட்டும். நான் யாருக்கும் மனுப் போட மாட்டேன்’ என்று கடைசி வரை சிவசங்கரன் மனுப் போடவேயில்லை.

இதே சிறையில் ஒரு இளைஞர் மிசாவில் இருந்தார். அவர் மூன்று மாதத்திற்கு ஒரு முறையல்ல. சிறையைப் பார்வையிட வரும் அதிகாரியிலிருந்து பிரதமர் வரை அனைவருக்கும் ‘நான் எந்தக் கட்சியும் சாராதவன். எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. என்னை விடுவிக்க வேண்டும்’ என்று மனுப் போட்ட வண்ணம் இருந்தார். பின்னர் அவரே சில மாதங்களில் ஒரு கட்சியில் உறுப்பினராகிப் பெரிய பெரிய பதவிகளையெல்லாம் அனுபவித்து ஓய்ந்து விட்டார்.

அமுதமும் நஞ்சும் ஒரே இடத்திலாம்! இதுவும் ஒரேசிறையில் தான். ‘இரும்பு மனம் கொண்டவர்களின் கனவுக்குப் பெயர்தான் லட்சியம்’ என்றொருவன் சொன்னான். சிவசங்கரன்களுக்கு இரும்பு மனம் இருந்தது. கனவுகள் இல்லவே இல்லை!

களப்பலி மொத்தம் பதினெட்டு

சிறைக்குள்ளேயே நோய்வாய்ப்பட்டு மாண்ட ஐவரில் இரண்டு பேர் தஞ்சை மாவட்டத்துக்காரர்கள். மூவர் நாம் முன்னர் சொன்ன வாளாடி பெரியசாமி (22.12.1958)லும், லால்குடி நன்னிமங்கலம் கணேசன் (30.7.1958)லும், திருச்சி சின்னசாமி (7.9.1958)லும், மணல்மேடு வெள்ளைச்சாமி (9.3.1958)லும், ஓய்வு பெற்ற ஆசிரியரான பட்டுக்கோட்டை ராமசாமி (8.3.1958)லும் அடுத்தடுத்த நாட்களிலும் இறந்து போனார்கள்.

இறந்த அனைவரும் சிறைப்பட்ட ஒரே ஆண்டுக்குள் மறைந்து போனதும் - உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த நிலையில் 1. இடையாற்று மங்கலம் நாகமுத்து, 2. இடை யாற்று மங்கலம் தெய்வானை அம்மாள் 3. மாதிரிமங்கலம் ரெத்தினம் 4. கோவில் தேவராயன்பேட்டை நடேசன் 5. திருவையாறு மஜித் 6. காரக்கோட்டை ராமய்யன் 7. புது மணக்குப்பம் கந்தசாமி 8. பொறையாறு தங்கவேலு 9. மணல் மேடு அப்பாதுரை 10. கண்டராதித்தம் சிங்கார வேலு 11. திருச்சி டி.ஆர்.எஸ். வாசன் 12. தாராநல்லூர் மஜீத் 13. கீழவாளாடி பிச்சை ஆகியோர் விடுதலை செய்யப்பட்ட சில நாட்களில் இறந்துபோனது கவனிக்கத் தக்கது. அதுவும், அனைவருமே சிறை உணவு, சீதோஷ்ணம் காரணமான வயிறு சம்பந்தப்பட்ட நோய்களாலேயே மாண்டனர் என்பதும் நினைவில் கொள்ள வேண்டியது.

உயிரோடு அனுப்பினோம்! பிணத்தையாவது கொடுங்கள்!!

பட்டுக்கோட்டை ராமசாமியும், மணல்மேடு வெள்ளைச் சாமியும் அடுத்தடுத்த நாட்களிலேயே மாண்டனர். இருவரும் உறவினர்களும், நண்பர்களும் உடையவர்கள் - அனாதைகள் அல்ல.

இருவரும் சிறையில் மாண்ட செய்தி (அல்லது கொல்லப்பட்ட செய்தி) வெளியே கசிந்து பெரும் பதற்றம் ஏற்பட்டது. நாட்டில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்று அஞ்சிய பச்சைத் தமிழரின் அரசு - பாவி பக்தவத்சலம் (போலீஸ் அமைச்சர்) வழிகாட்டுதல்படி அவர்களுடைய உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் சிறைக்குள்ளேயே புதைத்து விட்டது.

திருச்சி நகரம் அமர்க்களமாயிற்று. பெரியார் வெளியில் இல்லை. இப்போது நானே எல்லாம் என்று பரிவட்டம் கட்டிக் கொண்டு ஆடும் வீரமணி - அப்போது சட்டக் கல்லூரியில் படிக்கிறார் - திராவிட மாணவர் கழகத்தின் மாநிலப் பொறுப்பாளர் பதவி வேறு! சட்ட எரிப்பில் சம்பந்தப்பட்டால் பின்னாளில் வக்கீல் தொழில் உரிமம் கிடைக்காது என்பதால் வழக்கம் போல் பம்மிக் கிடந்தார்.

திருமதி. மணியம்மையார் துணிச்சலோடு பக்தவத்சலத்திடம் போய்ப் போராடினார். “உயிரோடு அனுப்பினோம் - பிணத்தையாவது கொடுங்கள்” என்று வீறு கொண்டு நின்றார். புதைக்கப்பட்ட அவர்களுடைய பிணங்களைத் தோண்டி எடுத்து பாதி அழுகிய நிலையில் கொடுத்தார்கள்.

எரிமலையாய்க் குமுறிய தொண்டர்களின் தோளில் ராமசாமி, வெள்ளைச்சாமி உடல்கள் பவனி வந்தன. திருச்சியில் பெரியாரின் கோடானுகோடி சொத்துக்கள் இருக்கின்றன. கல்வி வளாகமும் - கனமான வசூலும் நடக்கிறது. ஆனால் இந்த இருவர் நினைவாய் ஒரு கொடிக்கம்பம் கூட இல்லை.

சாதி ஒழிய கலப்பு மணங்கள்!

இறந்து போன வெள்ளைச்சாமி, இராமசாமியின் உடல்கள் சிறையிலிருந்த கருஞ்சட்டை வீரர்களின் கடுமையான போராட்டத்திற்குப் பின் - அஞ்சலி செய்வதற்காகச் சில நிமிடங்கள் வெளியில் வைக்கப்பட்டன. திருமணமாகாத கருஞ்சட்டைத் தொண்டர்கள் பலர், இந்த சாதி ஒழிப்பு வீரர்கள் நினைவாகத் தாங்கள் சாதி மறுத்த கலப்பு திருமணங்களே செய்து கொள்வோம் என்று - அந்த மாவீரர்கள் உடல்கள் முன்னால் உறுதி எடுத்துக் கொண்டார்கள். பலர் பல ஆண்டுகள் பின்னர் அப்படியே செய்யவும் செய்தார்கள். தந்தை பெரியாரே, பலருக்குத் தானே பெண் பார்த்து திருமணம் முடித்து வைத்தார்.

கடைசி வரை சுயமரியாதை வீரராய், கலப்புத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து - தன்னுடைய எளிய பெட்டிக்கடை வருவாயில் பிள்ளைகளைப் படிக்க வைத்து - நல்ல நிலைக்கு உயர்த்தி - அவர்களுக்கும் சாதி மறுப்புத் திருமணங்களயே செய்து வைத்த மறைந்த மாவீரர் மண்ண நல்லூர் அரங்கராசன் அவர்களில் ஒருவர்.

இதுபோல் சிறையில் உறுதி எடுத்துக் கொண்ட பல நூறு பேர் உண்டானாலும் - ஊரறிந்த சிலரை மட்டும் சொன்னோம். இன்னொருவர் பெரும் பணக்காரரும் பட்டதாரியுமான தோழர் மகுடஞ்சாவடி கிள்ளிவளவன்! இவருடைய துணைவியார் தி.மு.க.வின் மத்திய அமைச்சராய் இருந்த திரு.டி.ஜி.வெங்கட்ராமனின் உடன் பிறந்த சகோதரியாவார். இதுவும் ஒரு சாதி மறுப்புத் திருமணமே! மணமகளின் தந்தை கோபால கவுண்டர் தந்தை பெரியாரின் நண்பர்! இந்தத் திருமணத்தை மணமகன் கிள்ளிவளவன். அவருடைய பெற்றோர், அவருடைய மைத்துனர் டி.டி.வீரப்பா இவர்கள் வேண்டுகோள்படி - பெண் பார்த்து முடித்து வைத்தவர் தந்தை பெரியார்.

தன்னுடைய மாமா கிள்ளிவளவன் திருமணத்தைப் பார்த்து, அது போலவே கலப்புத் திருமணம் செய்தவர் திரு. வீரப்பாவின் மகன் ஜனார்த்தனம். இந்தத் திருமணத்தையும் நடத்தி வைத்தவர் பெரியார் தான்”. இவ்வாறு தோழர் செல்வேந்திரன் வரலாற்றைப் பதிவு செய்துள்ளார்.

இப்படி சாதி ஒழிப்புப் புரட்சியில் களம் இறங்கியோர் ஏராளம்! சாதி ஒழிப்புக்காக உயிர்த் தியாகம் செய்த அம் மாவீரர்கள் கல்லறைகளாக முடங்கிவிடவில்லை. அவர்கள் காலத்தின் அறைகூவலாக எழுந்து நிற்கிறார்கள்.

பெரியார் பெரும்படையே! அம் மாவீரர்கள் காட்டிய வழியில் பயணிக்க தஞ்சை நோக்கி திரண்டு வா!

- மாநாட்டு வரவேற்புக் குழு


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com