Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
மே 2007

‘பெரியார் திராவிடர் கழகம்’ தான் பெரியார் வழியில் செயல்படுகிறது
வே.மதிமாறன்

15.4.2007 பல்லடத்தில் பெரியார் திராவிடர் கழகத்தால் நடத்தப் பெற்ற ‘நாத்திகர் விழா’வையொட்டி அன்று பகல் 12 மணியளவில் நடைபெற்ற கருத்தரங்கில் வே.மதி மாறன் ஆற்றிய உரையின் சில பகுதிகள்:

‘நமஸ்காரம்’ என்கிற சமஸ்கிருதத்தையும் ‘கும்புடேறன் சாமி’ என்கிற அடிமைத் தமிழையும் ஒழித்த, ‘வணக்கம்’ என்ற சுயமரியாதைமிக்க சொல்லை அறிமுகப்படுத்தியது திராவிட இயக்கம். ‘வணக்கம்’ என்கிற அந்த கம்பீரமான கலகச் சொல்லோடு என் உரையை துவங்குகிறேன், வணக்கம்.

பெரியார் வழி சிந்திப்பவர்களின் கொள்கை காக்க சிறையில் இருக்கும் பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்களின் அந்தக் கோபத்திற்கு பரம்பரை குணமே காரணம். அந்த பரம்பரை சுயமரியாதை இயக்க பரம்பரை; பெரியாரின் சிந்தனை பரம்பரை. பெரியாரின் மிகப் பெரிய சாதனை, அவரைப் போலவே சிந்திப்பவர்களை உருவாக்கியது. இன்னும் உருவாக்கிக் கொண்டே இருப்பது. அவர் பேச்சை, எழுத்தை தீவிரமாக படித்த ஒருவர் அவர் சாயலில் சிந்திப்பதில் இருந்து தப்பிக்கவே முடியாது. அதுதான் பெரியாரின் பிரமிக்க வைக்கிற ஆளுமை.

காந்தியின் ஆளுமைக்கு நேர் எதிரான ஆளுமை. தன்னை சுற்றியே அரசியல் நிகழ வேண்டும். தன் கருத்துக்கு மாறாக தன்னைத் தாண்டி வேறு ஒரு கருத்தோ, வேறு தலைவரோ அரசியல் நடத்துவதை விரும்பாத காந்தியின் அழுகுனி ஆளுமையைப் போல் சுயநலம் சார்ந்ததல்ல.

பெரியாரின் ஆளுமை பொதுநலம் சார்ந்தது. பிரிவினையின் போது காந்தி முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருந்தார். அவர் செய்த ஒரே நல்ல செயல் அதுதான். அதற்காகத்தான் அவர் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பானால் கொல்லப்பட்டார். அதன் பொருட்டே பெரியார் ‘இந்தியாவிற்கு காந்தி தேசம்’ என்று பெயர் வைக்கச் சொன்னார்.

ஒருவேளை காந்தி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்த துரோகத்திற்கு ஒரு தாழ்த்தப்பட்டவரால் கொலை செய்யப்பட்டிருந்தால், பெரியார் அதை வரவேற்றிருப்பார் அல்லது காந்தியை ஆதரித்து இருக்க மாட்டார். வட்டமேசை மாநாட்டில் டாக்டர் அம்பேத்கரின் வாதத்தின் முன்னால் தரைமட்டமான காந்தி, ‘இந்திய அரசியலில் தன்னை மீறி ஒரு முக்கிய முடிவெடுக்கப்படுகிறது. தன்னை எதிர்த்து ஒரு தலைவர் உருவாகிறார்’ என்பதை தாங்கிக் கொள்ள முடியாத காந்தி, சாகும் வரை உண்ணாவிரதம் என்று அறிவித்து, உண்ணாவிரதம் இருக்கிறார்.

“கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையைவிட, காந்தியின் உயிர் முக்கியமானதல்ல. அதனால் உங்கள் நிலையிலிருந்து இறங்கி வராதீர்கள்” என்று டாக்டர் அம்பேத்கருக்கு தந்தி கொடுத்தவர் தான் பெரியார்.

‘காந்தி உண்ணாவிரதம் இருந்து இறந்து விடுவாரே’ என்கிற பரிதாப உணர்வு பெரியாரிடம் துளியும் இல்லை. ‘ஆர்.எஸ்.எஸ். பார்ப்பான் கொன்றானே’ என்கிற ஒரே காரணம் தான் காந்தியை பெரியார் அந்த உயர்நிலைக்குப் போய் ஆதரித்ததற்கு. காந்தியவாதம் அல்லது காந்தியின் சிந்தனை என்பது, “பாபுஜி இப்படி சொல்லியிருக்கிறார்” என்று சொல்வதற்கு வேண்டுமானால் பயன்படுமேதவிர, அந்த முறையில் சிந்திக்கவோ செயல்படுத்தவோ முடியாது. நடைமுறைக்கு உதவாது போனதால்தான், காந்தியக் கொள்கை காந்தியாலேயே தோற்கடிக்கப்பட்டது.

உண்ணாவிரதம் இருந்தே சாதிக்க முடியும் என்றால், “வெள்ளையன் வெளியேற வேண்டும். இல்லையேல் சாகும்வரை உண்ணாவிரதம்” என்று காந்தி உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால், வெள்ளைக்காரன் டாக்டர் அம்பேத்கரை போல் பெருந்தன்மையிம் இரக்க குணமும் கொண்டு நடந்திருக்க மாட்டான். அவன் முடித்து வைத்திருப்பான். உண்ணாவிரதத்தை அல்ல, காந்தியை. அது தெரிந்ததால்தான் காந்தி அப்படி ஒரு உண்ணாவிரதத்தை இருக்கவில்லை. காந்தியைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், பகத்சிங் கண்களாலும், டாக்டர் அம்பேத்கர் கண்களாலும் பாருங்கள், அப்போதுதான் அந்தப் பச்சைத் துரோகம் புரியும்.

பெரியார் தோற்றுவித்த திராவிடர் கழகம் இன்று காந்திய வழியில் செயல்படுகிறது. பெரியார் திராவிடர் கழகம் தான் பெரியார் வழியில் செயல்படுகிறது. பெரியாரின் ஆதரவுடன்தான் பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்கள் சிலை இடிப்பு விவகாரத்தில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள்.

பெரியார் சிலை உடைப்புக்கான எதிர்ப்பை இதே மாதிரி இன்னும் ஒரு முறை செஞ்சா போதும். அதுக்கப்புறம் பெரியார் சிலைக்கு பெரியார் தொண்டர்களோ, காவல் துறையோ பாதுகாப்புக்கு இருக்க தேவையில்லை. பிராமணர் சங்கமே பாதுகாப்பு கொடுக்கும். அத்திம்பேரும், ஆத்துக்காரரும் நைட் ஷிப்டும், பகல் ஷிப்டுமா மாறி மாறி ஷிப்ட்டு சிஸ்டம் போட்டு பெரியார் சிலையை பாதுகாப்பார்கள்.

1929 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 மற்றும் 18 அம் தேதிகளில் செங்கற்பட்டில் கூடிய சுயமரியாதை மாநாட்டில், “தாய் மொழியில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும். பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும். விதவை திருமணத்தை ஊக்குவிக்க வேண்டும். தீண்டாமை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு இவைகளோட யாரும் தன் பெயருக்குப் பின்னால் ஜாதி பெயரை போட்டுக் கொள்ளக் கூடாது. நெற்றியில் திருநீறு, நாமம் போன்ற சமயச் சின்னங்களை அணியக் கூடாது. கலப்பு மணத்தை ஊக்குவிக்க வேண்டும்” என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. இந்தத் தீர்மானங்கள் சைவ சமயத்தாரையும் நீதிக்கட்சியில் இருந்த சில முக்கியத் தலைவர் களையும் திடுக்கிட வைக்கிறது. நீதிக்கட்சியில் இருந்த சில தலைவர்களைப் பற்றி 2.11.1952 இல் பெரியார் இப்படி சொல்லியிருக்கிறார்.

“ஜஸ்டிஸ் கட்சி என்ற கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்களில் 100க்கு 99 பேர் சுயமரியாதைக் கொள்கைக்கு விரோதிகளே.” சுயமரியாதை மாநாட்டுக்கு பதிலடி தரும் வகையில், உடனே சைவ சமய மாநாடு, 1929 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29, 30, 31 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் கூட்டப்பட்டது. சைவ சமயத்தில் சீர்திருத்தம் வேண்டும் என்ற கருத்துடையவரும், பெரியார் கொள்கைகளில் ஈடுபாடு உள்ளவரும், பெரியாரின் நண்பருமான கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரத்திற்கு, சைவ மாநாட்டில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

சைவ மாநாட்டில் சுயமரியாதை இயக்கத்தின் தாக்கம் காரணமாக, ‘எல்லா மக்களும் கோயிலில் நுழைய வேண்டுமானால், அவர்கள் சுத்தமாக இருக்க வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்த தீர்மானத்தை காறி துப்புவதுபோல் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த கோவை அய்யாமுத்து இப்படி எழுதினார்:

“அய்யா, சைவப் பெரியோரே, தாங்கள் கோரும் சுத்தம் அகச் சுத்தமா, புறச் சுத்தமா? அகச் சுத்தமாயின், அகச் சுத்தமுள்ளவனுக்கு கோயில் எதற்கு? புறச் சுத்தமாயின், நாளைய தினமிருந்த தங்களை ஒரு அழுக்குள்ள குடிசையில் குடியிருக்கச் செய்து, திருநெல் வேலியிலுள்ள கக்கூசு மலங்களையெல்லாம் வாரியெடுத்து அப்புறப்படுத்துவதைத் தங்களுக்குத் தொழிலாகக் கொடுத்து அதற்காக தங்களுக்கு மாதம் ஐந்து ரூபாய் சம்பளங் கொடுத்து, கிணற்றிலும் அனுமதிக்காமல் தடுத்து வைக்கப்பட்டால் தாங்கள் சுத்தமாக இருக்க முடியுமா?” கோவை அய்யாமுத்துவின் இந்தக் கேள்விக்கு சைவ சமயத்தைச் சார்ந்தவர்களிடம் இருந்தோ, இல்லை அவர்களை ஆதரிக்கிற தமிழ் உணர்வாளர் களிடமிருந்தோ இன்றுவரை பதில் இல்லை.

அதேபோல், 1934 இல் சென்னையில் தமிழ்ச் சங்க மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெறுகிறது. கூட்டத்தில் பெரியார் கொள்கையின் தீவிர பற்றாளர்களும், சுயமரியாதை இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்களுமான சி.டி.நாயகமும், சாவடி கூத்த நயினாரும் கலந்து கொண்டு சாதி ஒழிப்புப் பற்றி தீர்மானம் கொண்டுவர முயல்கின்றனர்.

“தமிழ்மொழி மாநாட்டில் சாதி பற்றிப் பேசக் கூடாது” என்று அனுமதி மறுக்கப்படுகிறது. அதற்குப் பிறகு தலைமையேற்றுப் பேசுகிற மறைமலையடிகள், தன் பேச்சைக் கடவுள் வாழ்த்தோடு துவங்குகிறார். சி.டி.நாயகம் எழுந்து, “கூட்டத்தில் தமிழைப் பற்றி மட்டுமே பேசப்படுமென்று குறிப்பிட்டு விட்டுக் கடவுள் வாழ்த்துக் கூறுவது ஒழுங்கல்ல” என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

உடனே மறைமலையடிகள் “தேவாரம் பாடலாமா?” என்று கேட்கிறார்.

அதற்கு நாயகம் “இசையென்ற முறையில் பாடலாம்” என்கிறார்.

மீண்டும் மறைமலையடிகள், “தமிழையாவது தெய்வமாக வணங்கலாமா?” என்று கேட்கிறார்.

“தமிழை மொழியாக போற்றலாம்” என்று நாயகம் சொல்கிறார்.

வேறு வழியின்றி, “பல்லுயிரும் பல உலகும்” என்ற பாட்டுப்பாடி தன் உரையை துவங்கியிருக்கிறார் மறைமலையடிகள்.

இந்த சி.டி. நாயகம்தான் 1938 இல் பெரியார் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணியில் நின்றவர்.

பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கம் இப்படி நெருப்பாகததான் இயங்கியது.

அந்த நெருப்பில் பட்டுக்கோட்டை அழகிரியை ஒரு தீப்பந்தம் என்றே சொல்லலாம். தஞ்சை மாவட்டத்திலும் சென்னையிலும் பெரியார் இயக்கத்தை பெரும் அளவு வளர்த்த பங்கு அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமியையே சேரும். ‘அஞ்சாநெஞ்சன்’ என்கிற பட்டம் ஏதோ, நடிகர் விஜய்க்கு தந்த ‘இளைய தளபதி’ பட்டம் போல் அல்ல. உண்மையில் அழகிரி அஞ்சாநெஞ்சனாகவே வாழ்ந்தார். அழகிரியோடு கைகோர்த்து இயக்கம் கட்டிய எஸ்.வி.லிங்கம் சொல்கிறார்:

“மன்னார்குடியில் ஒரு கூட்டம். அதில் அழகிரியின் பிரசங்கம். கூட்டத்தில் கால் பாகத்தினர் கேள்வியும் கல்லும் வீசுகிறார்கள். இப்படி முக்கால்மணி நேரம் நடந்தது. நிலைமையை உணர்ந்து கொண்ட அழகரிசாமி, பேசிக் கொண்டே வந்து திடீரென்று கற்களை எடுத்துக் கொண்டு மேடை மீது ஏறினார். கற்களை மேஜை மீது வைத்தார். கலகம் செய்து கல் வீசியவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அழகிரிசாமி மேலும் பேசினார்.

“தோழர்களே, இந்த ஊருக்கு நான் புதியவன். இவ்வூர் வழக்கம் எனக்குத் தெரியாது. பெரிய வைஷ்ண ஸ்தலமாக இது இருந்தும், வைஷ்ணவ வகுப்புக்காரனான எனக்கு இவ்வூர்ப் பழக்கம் தெரியாமல் போனது தப்புதான். இனி நான் பேசுகிறேன். நீங்களும் கல் போட்டுக் கொண்டே என் பிரசங்கத்தைக் கேளுங்கள். நானும் உங்கள் மீது கல் வீசிக் கொண்டே பிரசங்கம் செய்கிறேன்” என்றார். இந்த தில்லு, இதுதான் அழகிரிசாமி. நம்முடைய கொள்கைகளை பரப்புவதற்கு கூட்டம் போட்டு பேசுவது ஒரு முறை. ஆனால் அழகிரிசாமியோட முறை அது மட்டுமல்ல. எதிரிகள் போடுகிற கூட்டத்திற்குப் போய் அந்தக் கூட்டத்தையே நம்ம கூட்டமா மாற்றி அவன் செலவிலேய நம்ம கட்சி தீர்மானத்தைப் போட்டுக் கூட்டத்தை முடிச்சிடுறது. சாதாரண பொதுக் கூட்டங்களில் மட்டுமல்ல, மிகப் பெரிய கனவான்கள் நடத்துகிற மாநாட்டிலேயே போய் அதை செய்திருக்கிறார் அழகிரிசாமி. பூணூலிலேயே பூ கட்டி அதை அவர்கள் காதுகளிலேயே வைத்தவர்தான் அழகிரி. இந்த அஞ்சாநெஞ்சன் அழகிரி பெயரைதான், கலைஞர் தன் மகனுக்கு வைத்திருக்கிறார். பட்டுக்கோட்டை அழகிரி மாதிரியே தைரியமாக செயல்பட்ட பெரியார் திராவிடர் கழகத் தோழர்களை சிறையிலும் வைத்திருக்கிறார். ‘காந்திக்குப் பிறகு அகிம்சையைப் போதிக்கிற ஒரே தலைவர் கலைஞர் மு.கருணாநிதிதான்’ என்கிற பெயரை எடுப்பதற்காக படாதபாடுபடுகிறார் கலைஞர்.

அழகிரியைப் போலவே பட்டுக் கோட்டையில் பெரியாரின் போர்வாள் ஒருவர் இருந்தார். அந்தப் போர்வாளுக்குப் பெயர் டேவிஸ். கட்சியின் தீவிர தொண்டர். இவரை பெரியாரின் தொண்டர்களுக்கு தெரிந்திருக்கிறதோ இல்லையோ, அந்தப் பகுதி பார்ப்பனர்களுக்கு இவா என்றால் பயம். ஏனென்றால் இவரின் பிரச்சார முறை, பூணூல் அறுப்பது, அடித்து உதைப்பது, ஆறடி உயரத்தில் கம்பீரமான உருவம் கொண்ட டேவிஸ், நல்ல ஆங்கில அறிவு உள்ளவர்.

பூணூல் அறுப்பின் போது, பார்ப்பனர்களிடம் ஆங்கிலத்திலேயே, “நீங்கள் அணிந்திருக்கிற பூணூல் என்னை அவமானப் படுத்துவதாக இருக்கிறது. அதனால் தயவு செய்து நீங்களே கழட்டி தந்துவிடுங்கள்” என்று பணிவோடுதான் கேட்பாராம். பார்ப்பனர்களும் உடனே கழற்றி தந்துவிடுவார்களாம். இல்லையென்றால், ‘யாரு ஒதை வாங்குறது?’. திராவிடர் கழகத்தைப் பற்றியோ, பெரியாரைப் பற்றியோ யாராவது தவறாகப் பேசினால், அவர்கள் டேவிசின் தர்ம அடியில் இருந்து தப்ப முடியாது.

பெரியார் தொண்டர்கள் என்று சொல்லிக் கொள்கிற சிலர், பெரியார் சிலை இடிப்பின் போது, ‘கலைஞர் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது’ என்று தங்கள் வீரத்தை அடக்கிக் கொண்டதுபோல் வசனம் பேசினர்.

மதுரை வீரன் திரைப்படத்தில் பாலையா பேசிய, ‘இன்னிக்கு வெள்ளிக்கிழமையா? அப்போ நான் கத்தியை வெளியே எடுக்க மாட்டேன்’ என்ற வசனத்தையே அது ஞாபகப்படுத்தியது.

என்னமோ இவர்கள் ஜெயலலிதா ஆட்சியில் பெரிய புரட்சிக்காரர்களாக இருந்தா மாதிரியும், கலைஞர் ஆட்சியில் அடக்கி வாசிப்பது மாதிரியும் நடிக்கிறார்கள். ஜெயலலிதா ஆட்சியில், ‘ஜெயலலிதா ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வராமல் பாதுகாத்தார்கள்’. கலைஞரை மோசமான முறையில் கைது செய்தபோதுகூட, இவர்கள் கலைஞரைத்தான் கண்டித்தார்கள். உண்மையில் இவர்கள், எந்த ஆட்சி வந்தாலும் தங்கள் நலனைப் பாதுகாப்பதில் வல்லவர்கள்.

ஆனால் தந்தை பெரியார், தான் பாடுபட்டு உருவாக்கிய காமராஜர் ஆட்சியில்தான் 26.11.1957 அன்று அரசியல் சட்டத்தையே எரித்தார். இந்திய பிரதமர் நேருவையே நடுநடுங்க வைத்தார். இவர்களோ கேவலம் ராமர் படத்தை எரிப்பதற்கே, கலைஞர் ஆட்சியின் மீது பழி போடுகிறார்கள்.

பெரியார் சிலை இடிப்பு விவகாரத்தில் தங்கள் எதிர்ப்பை சிறப்பான முறையில் வெளிபடுத்திய மக்கள் கலை இலக்கிய கழகத்திற்கு, பெரியார் இயக்க மேடையில் இருந்து நன்றி சொல்வது பொருத்தமாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com