Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
மே 2007

வையகப் பெருநடிகர் நடிகவேள் எம்.ஆர். ராதா
பேராசிரியர் கல். இராசேந்திரன்

நடிகவேள் எம்.ஆர். ராதாவின் நூற்றாண்டு இது. அதன் நினைவாக இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.

நடிகவேள் எம்.ஆர். ராதா - இந்தப் பெயரைக் கேட்டாலே வைதீகர்களுக்கும், அக்ரகாரப் பூணூல் திருமேனிகளுக்கும் அடிவயிற்றில் இடி இறங்கியது போல் ஒருவகைக் கலக்கம் இருக்கும். ஆனால் திராவிட இயக்கத்தவருக்கோ கற்கண்டாய், கனிச்சுவையாய் இருக்கும்.

இவர் நடத்திய நாடகங்கள் சிற்றூர் மற்றும் பேரூர்களிலெல்லாம் பகுத்தறிவுப் போர் முழக்கமாய், ஆண்டாண்டுகாலமாக சமுதாயத்தில் மண்டிக் கிடக்கும் மூடநம்பிக்கை நச்சு மரங்களை வெட்டி வீழ்த்த வந்த சமதர்மக் கோடாரியாய், பெண்ணடிமை போக்க வந்த போர்ப் பரணியாய் இருந்தன.

இல்லாத சாமிகளுக்குப் போற்றித் திருப்பா பாடி, ஊதுவர்த்தி, சாம்பிராணிப் புகையுடன் கடவுளர்கள், கடவுளச்சிகள் வாழ்த்துகளுடன் நாடகங்கள் தொடங்கிய அந்தக் காலத்தில், இவரது நாடகங்கள் தமிழ் வாழ்த்துப் பாடி,

“வளமார் திராவிடம் வாழ்ந்த கதையினை
அறிந்திருப்பாய் தமிழா!
வம்புகள் மிகுந்த ஆரியரால் அது
அழிந்தநிலை கண்டு
வைக்கம்தனிலே வீரப்போரிட்டார்
வாழ்வளித்த நம்பெரியார்!”

என்று தொடங்கும் பாடலுடன், தந்தை பெரியார் நிழல் உருவத்துடனும், கழகக் கருங்கொடி கம்பீரமாய்க் கோட்டையில் பறக்க, அய்யா செய்த பெரும்புரட்சியை ஓரிரு காட்சிகளிலேயே மக்கள் முன் படம்பிடித்துக் காட்டி அவர்தம் நெஞ்சத் திரையில் பதிய வைத்த பாங்கை என்னென்று உரைப்பது? எப்படிப் புகழ்வது? பிற நாடகக் கம்பெனிகளின் பதாகைகளில் விதவிதமான கடவுளர்களும், கடவுளச்சிகளும் காட்சி தந்து கொண்டிருந்த காலத்தில் இவரது நாடகக் கம்பெனியின் பதாகையில் “உலகப் பாட்டாளி மக்களே, ஒன்று சேருங்கள்” என்று உழைப்பவர் உலகத்திற்கு அறைகூவல் விட்ட ஒரே நடிகர் நமது நடிகவேளாகத்தான் இருக்க முடியும்.

அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை கே.வி. அழகிரிசாமியால் ‘நடிகவேள்’ என்று பாராட்டுப் பெற்ற திரு.எம்.ஆர். ராதா அவர்களுக்கு இடைக்காலத்தில் மகாசன்னிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் தலைமையில் திருச்சியில் ‘கலைத் தென்றல்’ என்ற விருது வழங்கப்பட்டாலும், அவையெல்லாம் கால வெள்ளத்தில் கரைந்து, இறுதி வரை நிலைத்து நின்றது ‘நடிகவேள்’ என்ற சிறப்புப் பெயர் தான்.

அவர் நடத்திய நாடகங்களான “ரத்தக் கண்ணீர்”, “விமலா அல்லது விதவையின் கண்ணீர்”, “இழந்த காதல்”, “லட்சுமி காந்தன்”, “மலேயா கணபதி”, “போர் வாள்”, “தூக்கு மேடை”, “இராமாயணம்”, “தசாவதாரம்” முதலியவை சமுதாயத்தில் ஒரு பெரிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தின. அதனால் தான் தந்தை பெரியார் அவர்கள், நான் பேசும் 10 பொதுக் கூட்டங்களைவிட, நடிகவேளின் ஒரு நாடகம் மக்களுக்கு மிகுந்த பயன் அளிக்கிறது என்று குறிப்பிட்டார்கள்.

அவரது நாடகத்தில் சின்னச்சின்ன உரையாடல்களில் கூட தந்தை பெரியாரின் கருத்துக்களை அனைவரும் ஏற்கும் வண்ணம் அவர் காட்சிகளை உருவாக்கித் தருவதற்கு தவறியதில்லை. ஒரு நாடகத்தில் ஒரு காட்சியில் சாமானியன் ஒருவன் நடிகவேளிடம், “பெரியார் படத்தைத் திறந்து வைத்துப் பேசுகிறாயே! அவர் என்னத்தை சாதிச்சார்” எனறு கேட்க, நடிகவேள் அவர்களோ பட்டென்று அவருக்கே உரிய பாணியில், “உன் நெற்றியும், என் நெற்றியும் எந்தக் கோடும் இல்லாமல் சுத்தமா இருக்கிறதே! இதற்குக் காரணம் பெரியார் தான்பா” என்று கூறுவார்.

மற்றொரு காட்சியில் ஒரு வைணவனின் நெற்றியில் இருக்கும் நாமத்தை நடிகவேள் சுட்டிக்காட்டி, “ஏம்பா நீ நெற்றியில் போட்டிருக்கியே டபுள் ஒயிட்; சிங்கிள் ரெட், அது என்னப்பா?” என்று கேட்பார். அதற்கு நாமதாரி, “அது திருப்பதி வெங்கடாசலபதியின் பாதம் என்று பதில் கூறுவார். உடனே நடிகவேள், “ஏம்பா, திருப்பதி வெங்கடா சலபதியின் நெற்றியில் இருக்குதே, நாமம்; அது யார் பாதம்? என் பாதமா?” என்று கேட்க, அந்த வைணவன் பதில் கூறத் தெரியாமல் விழிப்பார். இதுபோல் அவரது நாடகத்தில் ஏராளமான பகுத்தறிவுச் சரவெடிகள் இருக்கும்.

“ரத்தக் கண்ணீர்” நாடகத்தில் குஷ்ட ரோகியானபின் காந்தாவால் விரட்டப்பட்ட நடிகவேள் வீதிக்கு வருவார். அந்த வீதியிலே ஒரு பக்கம் இந்துக் கோவில்; அதிலே ஓர் அர்ச்சகர். இன்னொரு பக்கம் மாதா கோவில்; அதிலே ஒரு பாதிரியார். இந்துக் கோவில் அர்ச்சகர் குஷ்டரோகியைக் கண்டதும், மாபாவி! ஒத்திப் போடா; கிட்ட வராதடா! கிரஹச்சாரம்! கிரஹச்சாரம்” என்று சொல்லி குஷ்டரோகி வேடத்திலிருக்கும் நடிகவேளை விரட்டுவார். ஆனால் பாதிரியரோ, “வா, தம்பி வா!, உன் பாவத்தை மன்னித்து உன்னை ரட்சிக்கக் கர்த்தராகிய யேசு இருக்கிறார்” என்று அன்புடன் குஷ்டரோகியை அழைத்து அடைக்கலம் தருவார். இந்த ஓர் சின்னஞ்சிறு காட்சியில் இந்து மதம் நாளுக்கு நாள் ஏன் தேய்கிறது; கிறிஸ்துவமதம் நாளுக்கு நாள் ஏன் தழைக்கிறது என்பதை நாசூக்காக மிகச் சுருக்கமாகக் கூறிடுவார் நடிகவேள் ராதா. இந்துத்துவா பேசும் இராம. கோபாலன்களும், தொகாடியர்களும், இந்து முன்னணிகளும், விசுவஇந்து பரீட்சத்துகளும், சங்பரிவாரங்களும் இதை இன்றேனும் உணர வேண்டும்.

நடிகவேள் அவர்கள் தனது நாடகங்களை நடத்தும் போது சந்தித்த எதிர்ப்புகள் ஏராளம். வேறு எவராக இருந்தாலும், அத்தகைய எதிர்ப்புகளை எதிர்கொண்டு நாடகங்களை நடத்தி இருக்க முடியாது. வைர நெஞ்சு படைத்த அவர் எதிர்ப்புகளைத் துணிச்சலுடன் சந்தித்தார். நம் இன எதிரிகளால் அனுப்பப்பட்ட விபீடணர்கள் ஒரு முறை அவரது நாடகம் நடந்து கொண்டிருக்கும் பொழுது இடையில் கூச்சலிட்டு கலாட்டா செய்தனர். மேடையிலிருந்த நடிகவேள், “பாதி நாடகம் முடிந்து விட்டது; எனது நாடகத்தால் மனம் புண்படுகிறது எனக் கருதுவோர் பாதி நுழைவுக் கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு நாடகக் கொட்டகையை விட்டு வெளியேறிவிடலாம்” என அறிவித்தார்.

விழுப்புரத்தில் நடிகவேளின் நாடகம். அன்று கலாட்டா நடக்கும் என நடிகவேளும், அவர் நாடகக் குழுவினரும் எதிர்பார்த்தனர். நாடகக் கொட்டகையைச் சுற்றி இரும்புக் கம்பிகளால் வேலி அமைக்கப்பட்டிருந்தது. இரும்பு வேலியைக் கடக்க முயன்ற நாயொன்று மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே செத்து விழுந்தது. இது கண்ட எதிரிகளுக்குக் கிலி ஏற்பட்டது. “நாடகக் கொட்டகைக்கு வெளியிலேயே மின்சாரத்தைப் பாய்ச்சி வைத்திருக்கும் ராதா, நாடகக் கொட்டகைக்குள் என்னென்ன செய்து வைத்திருப்பாரோ” என்று இன எதிரிகள் அஞ்சினர். இதன் விளைவு அன்று நாடகம் அமைதியாக நடந்து முடிந்தது.

1946 மே 11, 12 தேதிகளில் மதுரை வைகையாற்று மணற்பரப்பில் அமைக்கப்பட்ட மாநாட்டுப் பந்தலில் தந்தை பெரியார் தலைமையில் மாபெரும் கருஞ்சட்டைப்படை மாநாடு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இம்மா நாட்டுத் திறப்பாளர் அறிஞர் சி.என். அண்ணாதுரை; கொடி உயர்த்தியவர்; பழையகோட்டை இளையபட்டக்காரர், திரு என். அர்ச்சுனன், இவர்தான் திராவிடர் கழக முதல் பொருளாளர். பார்ப்பனர்களின் தூண்டுதலால் குறிப்பாக மதுரை எஸ். வைத்தியநாத அய்யர் என்ற காங்கிரசுக்காரரின் தூண்டுதலால் இம்மாநாட்டுப் பந்தல் கைக்கூலிகளால் எரித்துச் சாம்பலாக்கப்பட்டது. மாநாட்டிற்கு வந்திருந்த நமது இயக்கப் பெண்கள், கழகத் தொண்டர்கள் மதுரை வைகை ஆற்று மணலில் தாக்கப்பட்டனர்.

இம்மாநாட்டையொட்டி நடிகவேள் எம்.ஆர்.ராதாவைத் தீர்த்துக் கட்ட காலிகள் திட்டம் தீட்டினர். மதுரையிலிருந்த நடிகவேளின் வீடு தகர்க்கப்பட்டது. நடிகவேள் அவர்கள் எவ்வாறோ இன எதிரிகளிடமிருந்து தப்பினார். அன்று தனது நாடகக்குழு நடிகர்களையும், கழக அடலேறுகளையும் துணை கொண்டு, இரவோடு இரவாக மாநாட்டுப் பந்தல் போடப்பட்டு மாநாடு நடந்து முடிய நடிகவேள் உறுதுணையாக இருந்தார்.

நடிகவேள் அவர்கள் இராமன் வேடமேற்று வால்மீகி இராமாயணத்தை 1954 இல் நாடெங்கும் நடத்தினார். ஏராள மக்கள் அந்நாடகத்தைக் கண்டு களித்து தெளிவு பெற்றனர். பொறுக்குமா ஆரியம்? கைக்கூலிகளையும், துரோகிகளையும் ஏவிவிட்டது பார்ப்பனீயம். அணுகுண்டு அய்யாவு, விபூதி வீரமுத்து, மகாலிங்கம் போன்றவர்கள் கூலிகளைத் திரட்டிவந்து நடிகவேள் ராதா நடத்தும் “இராமாயணம்” நாடகம் நடைபெறும் நாடகக் கொட்டகைகளின் முன் மறியல் என்னும் பெயரால் காலித்தனம் செய்ய முயன்றனர். மதுரையில் நடிகவேளின் “ராமாயணம்” நாடகம் நடைபெற்ற போது அணுகுண்டு அய்யாவு, விபூதி வீரமுத்துவின் கூலிப்படை மறியல் செய்ய முயன்றது. இதற்குத் தலைமை ஏற்றவர் மதுரை எஸ்.வைத்தியநாத அய்யர் மகனான வை. சங்கரன் என்னும் பார்ப்பனர்.

மதுரை மாநாட்டுப் பந்தல் தீக்கிரையான நிகழ்ச்சியை தன் மனக்குகையில் ஒரு ஓரத்தில் பூட்டி வைத்திருந்த நடிகவேள், எந்த வைத்தியநாத அய்யரின் தூண்டுதலால் மதுரை கருஞ்சட்டை மாநாட்டுப் பந்தல் தீக்கிரையாக்கப் பட்டதோ, அந்த வைத்தியநாத அய்யரின் மகன் திரு.வை. சங்கரன் தன் “இராமாயணம்” நாடகம் நடைபெறும் கொட்டகை முன் மறியல் செய்ய வந்தபொழுது அன்று நடிகவேள் எம்.ஆர்.இராதா தன் கணக்கை நேர் செய்து கொண்டார். இம்மறியல் காலித்தனத்தை மதுரை முத்துவின் துணை கொண்டு முறியடித்துக் காட்டினார் நம் நடிகவேள். தனது மகனுக்கு நேரிட்ட அவமானத்தால் படுக்கையில் விழுந்த திரு.எஸ்.வைத்தியநாத அய்யர் பின் எழுந்திருக்கவே இல்லை.

நடிகவேளும் நாடகமேதை நவாப். இராஜமாணிக்கம் அவர்களும்: நடிகவேள் சொந்த நாடகக் கம்பெனி நடத்தியபோது ‘இழந்த காதல்’ நாடகம் அவருக்குப் புகழைத் தேடித் தந்தது. அந்த நாடகத்தை ஆசியாவிலேயே பெரிய நாடகக் கம்பெனியை நடத்திய நாடகமேதை நவாப் இராஜமாணிக்கம் பார்த்தார். நாடகத்தில் திரு.எம்.ஆர். ராதாவின் அட்டகாச நடிப்பைக் கண்டு வியந்தார். நவாப் தன் நாடகக் கம்பெனி நடிகர்களை அழைத்தார். “நான் பெரிய சீன்செட்டிங், உயர்ந்த ஆடை கொடுத்து நாடகம் நடத்துகிறேன். ராதா நாடகத்தில் சீன்செட்டிங், உயர்ந்த ஆடை இல்லை. தன் சிறந்த நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். நமது நாடகங்களுக்கு இணையான வரவேற்பு அவருக்கு இருக்கிறது. அந்த ஒரு மனிதனின் திறமைக்காக அவ்வளவு கூட்டம் வருகிறது. நான் பெரிய நாடகக் கம்பெனியை வைத்து எதைத் சாதித்துவிட்டேன்; வெட்கப்படுகிறேன்” என்று குறிப்பிட்டார்.

நவாப் மீது நடிகவேளுக்கும் மிகுந்த ஈடுபாடு இருந்தது. ஆங்கிலத்தில் மிகப் பிரம்மாண்டமாக செடிசல் பி டெமிலியன் “பத்துக் கட்டளைகள்” என்னும் திரைப்படம் வந்தது. அது ஒரு வெற்றித் திரைப்படம். நடிகவேள் அது பற்றி, “இப்படத்தில் கடல் பிளப்பதுபோல் ஒரு காட்சி உள்ளது. எல்லோரும் பாராட்டுகின்றனர். ஆனால் அதை தன் நாடகத்திலேயே செய்து காட்டியவர், நவாப். எனவே இப்படத்தில் எனக்குப் பிரம்மாண்டம் இருப்பதாகத் தெரியவில்லை” என்று கூறினார்.

நடிகவேள் தன் முதல் காரை வாங்கிய சம்பவம்: இவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, சிறந்த மெக்கானிக். தலை சிறந்த ‘எலெக்டிரிசியன்’. ஒரு முறை இவர் நாடகத்தை முடித்துக் கொண்டு வாடகைக் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அது மழைக்காலம். ஒரு காட்டாற்றில் டி.வி.எஸ். லாரி ஒன்று ஏராளச் சுமையுடன் சிக்கிக் கொண்டு நகர மறுத்தது. மறுகரையில் நின்ற நடிகவேளின் நாடகக் கம்பெனி வேனில், லாரியில் இருந்த சரக்கையெல்லாம் ஏற்றினர். லாரியை வேனுடன் பிணைத்து வேனை ஸ்டார்ட் செய்யச் சொன்னார், நடிகவேள். இப்பொழுது சுலபமாக, மாட்டிக் கொண்ட லாரி வெளிக் கிளம்பியது. சிறிது நேரத்தில் லாரி ஆற்றைக் கடந்து கரையைத் தொட்டது. லாரியை ஆற்றிலிருந்து தூக்க கிரேனுடன் வந்தவர்கள் நடிகவேளின் மெக்கானிக்கல் மூளையை மெச்சிப் பாராட்டினர்.

டி.வி.எஸ். அதிபரிடமிருந்து ராதாவுக்குக் கடிதம் வந்தது. அதிபர் ராதாவை நேரில் சந்திக்கச் சொன்னார். நடிகவேளின் யோசனையை அதிபர் பாராட்டினார். தங்கள் கம்பெனியின் புதிய பிளைமவுத் கார் ஒன்றை நடிகவேளுக்குத் தந்து, முடிந்தபோது தவணை முறையில் பணத்தைத் திருப்பித்தரச் சொன்னார். நடிகவேளும் ரூ.500/-, ரூ.1000/-முமாகக் கொடுத்து கடனை அடைத்தார். அப்படித் தான் நடிகவேள் தன் முதல் காரை வாங்கினார்.

பிறவிப் பெரு நடிகரான நடிகவேள் ஒப்பாரும், மிக்காரும் இல்லாத நடிகர். இவரை மேலை நாட்டு நடிகர் பால்முனியுடன் ஒப்பிட்டு அறிஞர் அண்ணா ‘குடி அரசி’ல் எழுதினார். நாடக விதிகளை மீறி வெற்றிக் கண்டவர் இவர். மற்ற நடிகர்கள் முகத்திலே பாவனை காட்டி தங்கள் நடிப்பை வெளிப்படுத்துவர். ஆனால், இவரோ தன் முதுகை ரசிகர்களுக்குக் காட்டி அவர் தலையை ஆட்டி ஆட்டிப் பேசுவதில் தலையிலுள்ள சுருட்டை முடி முன்னும் பின்னும் குலுங்குவதிலேயே இவரது கோபாவேசமும், சிறந்த நடிப்பும் வெளிப்பட்டு, ரசிகர்கள் கைதட்டுவார்கள். இவருடைய இந்த அற்புத நடிப்பை ‘இழந்த காதல்’ நாடகத்தில் பார்த்துப் பரவசப்பட்டவர் பலர்.

தந்தை பெரியார் கருத்துக்கள் அடங்கிய “இராமாயணம்” போன்ற நாடகங்களையும், “விமலா அல்லது விதவையின் கண்ணீர்” போன்ற சமூக சீர்திருத்த நாடகங்களையும் நடத்தி மக்கள் மத்தியில் சமூக, அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நடிகவேள் நாடகங்களுக்குத் தடைப் போட வேண்டும்” என்ற ஒரே குறிக்கோளுடன் அன்றைய காங்கிரஸ் அரசாங்கம் 21.12.54 அன்று “நாடகக் கட்டுப்பாடு சட்டம்” என்ற கறுப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இச்சட்டத்தின் விளைவால், நாடகம் நடத்த விரும்புவோர், நாடகக் கதை, வசனம் முழு வதையும் அவ்வூர் காவல் நிலையத்தில் கொடுத்து அவர்கள் அதைப் படித்துப் பார்த்து ஆட்சேபகரமான கருத்தக்கள் நாடகத்தில் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே நாடகம் நடத்த அனுமதி அளித்தனர். இத்தடைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் காவல் துறையைச் சேர்ந்த ஒற்றர் (சி.ஐ.டி.) நடிகவேளின் நாடகம் எங்கு நடைபெற்றாலும், நாடக மேடைக்கு முன் அமர்ந்து குறிப்பெடுத்துச் செல்வார்.

இத்தடைச் சட்டம் என்ற எலிப்பொறியால், நடிகவேள் என்னும் அரிமாவைச் சிக்க வைக்க முடியவில்லை. இச்சட்டம் தன் மேல் பாயாமல் இருக்க வெவ்வேறு தந்திரங்களைக் கையாண்டார் நடிகவேள். ‘தூக்குமேடை’ நாடகத்திற்கு தடை என்றால், ‘காதல் பலி’ என்னும் பெயரில் அதே நாடகம் நடைபெறும். ‘போர்வாள்’ நாடகத்திற்குத் தடையென்றால், ‘பேப்பர் நியூஸ்’ என்னும் பெயரில் அதே நாடகம் நடைபெறும்.

“இத் தடைச்சட்டத்தை மீறினார்” என்ற காரணத்தைக் காட்டி, நடிகவேள் அவர்கள் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். “இராமாயணம்” நாடகத்தை இவர் மேடையில் நடத்திக் கொண்டிருந்த போது, காவல்துறை இவரை மேடையிலேயே கைது செய்தது. இராமன் வேடத்தில் இருந்த இவர் கையில் மொந்தைக் கலயத்துடன் கைதானார். மறுநாள் ‘விடுதலை’யில் குடிகார இராமன் கைது; விபச்சாரி சீதை கைது” என்று கொட்டை எழுத்துக்களில் செய்தி போடப்பட்டிருந்தது.

வைதீகபுரிக்கு செந்தேளாக இருந்த நடிகவேள், கழகத்தவருக்கு செந்தேனாக இருந்தார். இவர் குதிரை மீதமர்ந்து, திராவிடர் கழக ஊர்வலங்கள் பலவற்றிற்குத் தலைமையேற்று, சிறப்பாக நடத்தித் தந்துள்ளார். 1957 ஆம் ஆண்டு நவம்பர் திங்களில் தஞ்சையில் நடைபெற்ற தந்தை பெரியாருக்கு எடைக்கு எடை வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட்ட விழா ஊர்வலத்தில் இவர் தலைமையேற்று வெண் புரவி மீது அமர்ந்து வந்தார். பெரும்பாலான திராவிடர் கழக மாநாடுகளில் இவரது நாடகங்கள் நடைபெற்றன. 1962 ஆம் ஆண்டு ஜனவரியில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற வாக்காளர் மாநாட்டில் இவரது ‘லட்சுமி காந்தன்’ நாடகம் நடைபெற்றது.

இவரால் தனிப்பட்ட முறையில் உதவி பெற்றோர் ஏராளம். தான் செய்த உவிகள் அனைத்தையும் விளம்பரமின்றிச் செய்தார். இவரோடு நாடகக் கம்பெனியில் பணிபுரிந்தோர் வறுமையில் இருந்தால், அவர்களுக்குத் தன்னாலான பொருளாதார உதவிகளைச் செய்துள்ளார்.

1953 மே 27 இல் நாடெங்கும் புத்தர் விழா கொண்டாடி அன்று தந்தை பெரியாரின் கட்டளைப்படி அழுக்குருண்டைப் பிள்ளையாரைத் தமிழ் நாடெங்கும் கழகத் தோழர்கள் நடுத் தெருவில் போட்டுடைத்தனர். சென்னை சிம்சனில் இப்போராட்டத்தில் ஈடுபட்ட கழகத் தோழர் மயிலை அ. பக்கிரிசாமியின் கையைக் காலிகள் உடைத்தனர். செய்தி அறிந்த நடிகவேள் பாதிக்கப்பட்ட தோழரின் எலும்பு முறிவு சிகிச்சைக்கான அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக் கொண்டார்.

கழகப் பேச்சாளரும், ‘தென்சேனை’ என்ற கழக ஆதரவு ஏட்டின் ஆசிரியருமான பாவலர் பாலசுந்தரத்திற்கு 1957 ஆம் ஆண்டு புதுக்கோட்டை காட்டுப் புதுக் குளம் மைதானத்தில் மூன்று நாட்களில் மூன்று நாடகங்கள் நடத்தி நிதியளிப்புச் செய்தவர் நடிகவேள் ராதா அவர்கள். இந்நாடகங்களுக்குத் தலைமையேற்றவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள்.

பன்முகங்களைப் பெற்ற நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள், தனது ஒப்பற்ற ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்ட 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் திராவிட இயக்கத்தவரையும், பகுத்தறிவு உலகத்தையும் கலங்க வைத்து, தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்து இனமான மீட்புப் பணிபுரிந்த திருச்சி மாநகரில் மறைந்தார்; இல்லை இல்லை நம் நெஞ்சங்களில் நிறைந்தார்.

தனது நாடகங்களின் வாயிலாகவும், தான் நடித்த திரைப்படங்களின் வாயிலாகவும் பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்பிய நடிகவேள், தனது ஒப்பற்ற ஒரே தலைவராம் 1962 ஆம் ஆண்டு பெரியார் பிறந்த நாள் விழா மலரில்,

“புழுவாய்ப் பிறக்கினும், புண்ணிய நின்
திருப்பெயர் மறவா திருக்க
அருள்புரிய வேண்டும்”

என்று தொடங்கி, “அறிவுத் தந்தையாம் என் தலைவரின் தொண்டு இந்நாட்டிற்குத் தேவையாக இருக்கும்போது, அவருக்கு என்றுமே நான் தொண்டனாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை” என்று தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

ஓவிய மேதைகளான பாலுசகோதரர்களை ஆசிரியராகக் கொண்டு 1958 இல் வெளிவந்த “கலை” என்னும் மாத இதழ் நடிகவேளைப் பற்றி,

“வாள்வீச்சை வாய்வீசும்
வாய்திறந்தால் கடல்சீறும்”

என்று குறிப்பிட்டது. நடிகவேள் மறைந்து 28 ஆண்டுகள் உருண்டோடிய பின்னரும், அவரது மறைவால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப எவரும் வரவில்லையே என்ற ஆதங்கம் நம் நெஞ்சமெல்லாம் நிறைந்துள்ளது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com