Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam

இடஒதுக்கீடு ‘தகுதி-திறமை’யை ஒழித்து விடுமா? எதிர்ப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?

புது டில்லியிலும், பம்பாயிலும், சில கல்லூரிகளில் - மாணவர்களில் ஒரு பகுதியினர், வீதிக்கு வந்து, போராடி வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக - மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களும் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். நோயாளிகள் சிகிச்சைக் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

ஏன் இந்தப் போராட்டம்? இவர்கள் வீதிக்கு வந்து ஏன் கலவரம் செய்கிறார்கள்?

மத்தியில் - ஆட்சியில் இருக்கும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் சார்பில் மனித வளத்துறை அமைச்சர் அர்ஜுன்சிங் - அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற உயர் தொழில் நுட்பக் கல்வி மய்யங்களில் - தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் - உரிய வாய்ப்புகளை வழங்குவதற்கு (இடஒதுக்கீடு) அரசு முடிவு செய்திருக்கிறது என்பதே, அவர் வெளியிட்ட அறிவிப்பு. அதை அனுமதிக்க முடியாது என்று, பார்ப்பன உயர்சாதி மாணவர்கள் கூக்குரல் போடுகிறார்கள். இடஒதுக்கீடு என்ற உரிமை பற்றி ஏதும் அறிந்திடாத, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களும், இவர்கள் விரிக்கும் வலையில் விவரம் புரியாமல் வீழ்ந்து விடுகிறார்கள். இதை முறியடித்து, நமக்கான உரிமையை நாம் மீட்டெடுக்க வேண்டியது நமது கடமை என்பதை, நமது தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒவ்வொரு மாணவரும் உணர வேண்டும். அதற்கு இடஒதுக்கீடு என்ற, உரிமை பற்றி நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டாமா?

இடஒதுக்கீடு என்றால் என்ன?

சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகளை ஒழித்து, அனைவரும் சமஉரிமை பெற்றவர்களாக வேண்டும் என்பதற்கான உரிமைச் சட்டம் தான் ‘இட ஒதுக்கீடு’. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த நாம் தான் - சமுதாயத்தில் பெரும் எண்ணிக்கையாக இருக்கிறோம். ஆனால், நமது முன்னோர்கள் காலம் வரை, நமது சமூகம் - படிப்பறிவு இல்லாதவர்களாகவே இருந்தது. அதனால், பரம்பரைத் தொழிலிலும், கூலித் தொழிலிலும், உடல் உழைப்புத் தொழிலிலும், அவர்கள் ஈடுபட்டார்களே தவிர, படித்தவர்களாக, அரசு அதிகாரிகளாக வர முடியவே இல்லை. என்ன காரணம்? “உங்களுக்கு படிப்பு வராது; உங்களது பரம்பரைத் தொழிலைச் செய்யுங்கள்” என்று நமக்குச் சொல்லப்பட்டது. அதுதான் ‘தர்மம்’, ‘நீதி’ என்று கற்றுத் தரப்பட்டது. இந்த அநீதியை எதிர்த்து, தந்தை பெரியார் ஈ.வெ.ரா., டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் போராடினார்கள். அதன் பிறகுதான் ‘தலித்’ (ஷெட்யூல்டு பிரிவினர்) மக்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், கல்வி நிலையங்களிலும், அரசு வேலை வாய்ப்புகளிலும், கட்டாயமாக ஒரு குறிப்பிட்ட சதுவீதம் அனுமதிக்க வேண்டும் என்று சட்டம் வந்தது. அந்த சட்டம் வந்த பிறகு தான், நாம் முதல் தலைமுறையாக அல்லது இரண்டாம் தலைமுறையாகப் படித்தோம். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும் படிக்கும் உரிமைகள் கிடைத்தன. ஆனால் அய்.அய்.டி. போன்ற உயர் தொழில் நுட்பக் கல்லூரிகளில் இந்த உரிமை மறுக்கப்பட்டது; அதை அரசு வழங்க முன் வரும்போதுதான், பார்ப்பனர்கள், உயர்சாதியினர் போராட்டம் நடத்தி, மிரட்டுகிறார்கள்.

இவர்கள் ஏன் இதை எதிர்க்கிறார்கள்?

இந்த உயர்கல்வியில் முழுமையாக இடங்களைப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் பார்ப்பனர்கள்தான்! அய்.அய்.டி.யில், படித்து முடித்து வரும் ஒரு மாணவருக்கு அரசு பல கோடி ரூபாய் செலவிடுகிறது; படித்து முடித்தவுடன் வெளிநாடுகளுக்கு வேலை தேடிப் போய் விடுகிறார்கள். தலித் மாணவர்களுக்கு, இட ஒதுக்கீடு பெயரளவில் இருந்தாலும், முழுமையாக நிரப்பப்படுவது இல்லை. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடே இல்லை. இந்த உயர் கல்வி முழுமையாக தங்களுக்கான படிப்பாகவே இருக்க வேண்டும் என்று, பார்ப்பனர்கள் கருதுவதால், இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள்.
இத்தகைய உயர்தொழில் கல்வி நிலையங்களில் ‘தகுதி-திறமை’ தானே முக்கியம்? இடஒதுக்கீடு வழங்குவதால், தகுதி-திறமை பாதிக்கப்பட்டு விடாதா?

நல்ல கேள்விதான்! தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் வாய்ப்புகள், உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்கும் ‘தகுதி திறமைக்கும்’ எந்தத் தொடர்பும் இல்லை. டாக்டருக்கு படிப்பதானாலும், என்ஜினியரிங் படிப்பதானாலும், அய்.அய்.டி.யில் சேருவதானாலும், இந்தப் படிப்புகளில் சேருவதற்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி, மதிப்பெண், தகுதி பெற்ற, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குத் தானே, உரிமை கேட்கிறோம்? அப்படி சேர்க்கப்பட்ட பிறகு, இந்த நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளை எழுதி, அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்குத் தானே பட்டங்கள் தரப்படுகின்றன? பிறகு எப்படி ‘தகுதி-திறமை’ பாதிக்கப்படும்? தேர்ச்சி பெற்றவர்களுக்கு, உரிய மதிப்பெண் பெறாதவர்களுக்கு நாம் வாய்ப்பு கேட்கவில்லையே!

அது சரிதான். சாதி ஒழிய வேண்டும் என்று கூறிக் கொண்டு, சாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு கேட்கலாமா?

நல்ல கேள்வி தான். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சாதியின் காரணமாகத்தானே கல்வி வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. உங்களுக்கு சந்தேகமிருந்தால், உங்கள் அப்பாவையோ அல்லது குடும்பத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட மூத்தவர்களையோ கேட்டுப் பாருங்கள். அவர்கள் விளக்கிக் கூறுவார்கள். அரசாங்கம் தாழ்த்தப்பட்டவர்களையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் சாதி அடிப்படையில் அடையாளம் காண்பதற்கு இது தான் காரணம். சாதி என்ற பாதாள கிணற்றுக்குள், நமது சமூகம் தள்ளப்பட்டுக் கிடந்தது. கிணற்றுக்குள் விழுந்தவர்களை எப்படி மீட்பது? அதே கிணற்றுக்குள், குதித்துத் தானே மீட்க வேண்டும்? மீட்பதற்கு, கிணற்றுக்குள் குதித்தால் மீண்டும் கிணற்றில் விழலாமா என்று கேட்க முடியுமா? முள்ளை முள்ளால் எடுப்பது போல், சாதி அடையாளத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களை அதே அடையாளத்தைக் கண்டறிந்து மீட்டெடுக்கும் நடவடிக்கை தான் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு செய்வதாகும்.

கல்வி வேலை வாய்ப்புகளில் சாதி பார்க்கக் கூடாது என்பவர்கள், திருமணம் என்று வரும்போது சாதி தானே பார்க்கிறார்கள்? காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் இவர்கள் தானே? நாளேடுகளில் மணமகன், மணமகள் தேவை விளம்பரத்தைப் பாருங்கள்! முதலில் சாதியைத் தானே குறிப்பிடுகிறார்கள்!

அவர்களைப் போலவே நீங்களும் சாதி வேண்டும் என்கிறீர்களா?

இல்லவே இல்லை; சாதி ஒழிய வேண்டும் என்கிறோம். திருமணங்களில், வாழ்க்கையில், சடங்குகளில், வழிபாடுகளில் சாதி ஒழிய வேண்டும் என்கிறோம். ஆனால், கல்வி, வேலை வாய்ப்பில் மட்டும் சாதி அடையாளத்தைப் பார்க்க வேண்டும் என்கிறோம். ஏன் தெரியுமா? கல்வி - வேலை - அதிகாரம் என்று வரும் போதுதான், சாதி அடையாளம் மறையும்; தன்னம்பிக்கை வளரும்; எவரும் எவருக்கும் அடிமையல்ல என்ற துணிவு வரும்; கல்வியும், அதன் வழியாக வேலை வாய்ப்புகளும் கிடைத்த பிறகு தானே, சாதிகளை மறந்து, காதல் திருமணங்கள் பெருகி வருகின்றன. ஆக, இந்த இடஒதுக்கீடு சாதியை ஒழிப்பதில் பங்காற்றுகிறது என்பது உங்களுக்குப் புரியவில்லையா?

நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் எத்தனை ஆண்டு காலத்துக்கு நாம், இதையே பேசிக் கொண்டிருப்பது?

ஏழ்மையையும், வறுமையையும் ஒழிக்க காலத்தை நிர்ணயிக்க முடியுமா? தொடர்ந்து முயற்சிக்கத் தானே வேண்டும். அதுபோல - நமது சமூகத்தில் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள், மற்ற பார்ப்பன உயர்சாதியினரோடு, சமமான நிலைக்கு வரும் காலம் வரை இந்த ஒதுக்கீடுகள் தொடரத்தானே வேண்டும்? இடையில் நிறுத்தப்பட்டு விட்டால், ஏறி வரும் ஏணிப்படியை பாதியில் எட்டி உதைத்ததாகி விடுமே! மீண்டும் பள்ளத்தில் விழுந்து விடுவோமே!

அப்படியானால் இடஒதுக்கீட்டினால் சமத்துவம் வந்து விடுமா?

ஏன் வராது? இப்போது வந்து கொண்டு தானே இருக்கிறது. நன்றாக யோசியுங்கள். அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். தேர்வுகளில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு வந்த பிறகு தானே, இந்த சமூகத்தினரும், அந்த உயர்பதவிகளுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இடஒதுக்கீடு மூலம் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். தேர்வுகளில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், முதலாவது இடங்களிலேயே தேர்ச்சி பெறுகிறார்களே! இது எப்படி நடக்கிறது? வாய்ப்புகள் தரப்பட்டதால் தானே!

மற்றொரு உதாரணத்தைப் புரியும்படி கூற முடிலாமே? மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் ‘கட் ஆப்’ மார்க்கைப் பாருங்கள். திறந்த போட்டியில் போட்டியிட்டு மாணவர்கள் பெறும் ‘கட் ஆப்’ மார்க்குக்கும், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலின் கீழ் இடம் பெறும் மாணவர்கள் ‘கட் ஆப்’ மார்க்குக்கும் ஒவ்வொரு ஆண்டும் ‘இடைவெளி’ குறைந்து கொண்டே வருவது, உங்களுக்கு தெரியுமே! தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பெறும் ‘கட் ஆப்’ அளவு மார்க் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே போவதைக் கவனித்தீர்களா? இது எதைக் காட்டுகிறது? இடஒதுக்கீடு உரிமையால் ஏனைய பார்ப்பன முன்னேறிய சமூகத்தைச் சார்ந்தவர்களோடு சரி நிலைக்கு, சமத்துவத்தை நோக்கி, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தானே!

நீங்கள் சொல்வது சரிதான். அதற்காக நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

மாணவர்களாகிய உங்களிடம் தான் - நமது சமூகத்தின் எதிர்காலமே அடங்கி இருக்கிறது. நம் முன்னோர்கள் போராடிப் பெற்றுத்தந்த உரிமையை நாம் காப்பாற்ற வேண்டாமா? அதை மேலும் விரிவாக்க வேண்டாமா? வேலை வாய்ப்புகள் இனி தனியார் துறைகளில் தான்! எனவே அந்தத் துறைகளிலும் நமக்கு இடஒதுக்கீடு உரிமையை நாம் பெறாவிட்டால், நமக்கு எதிர்காலமே இல்லை. இது நமது வாழ்வுரிமைப் பிரச்சினை அல்லவா? இதைப் புரிந்து கொள்ள வேண்டும். நண்பர்களிடம் எடுத்துக் கூற வேண்டும்; விவாதிக்க வேண்டும்.

நமது சமூகத்துக்கான உரிமைகளைப் பெறுவதற்கு நாம் பெற்ற கல்வி பயன்படாவிடில், நாம் கல்வி கற்று என்ன பயன்? கேளிக்கைகள் மட்டுமே நமக்கு மனநிறைவான அர்த்தமுள்ள வாழ்க்கையைத் தந்து விடாது அல்லவா? கவலையோடு சிந்திக்கும் நேரம் வந்து விட்டது!

அரசுகளே, உரிமைகளை வழங்க முன் வரும்போது, அதைத் தடுக்க நினைக்கும் ஆதிக்கச் சக்திகள் வெற்றி வெற விட்டுவிடலாமா? அது, நமக்கு நாமே இழைக்கும் துரோகமல்லவா?

விழித்துக் கொள்வோம்; உணர்வு பெறுவோம்; போராடவும் அணியமாவோம்!

எதிர்காலம் நம்முடையதே என்ற உறுதி ஏற்போம், வாரீர்
- தமிழக மாணவர் பேரவை


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com