Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
மார்ச் 2008

‘சன்’ தொலைக்காட்சியில் இராமாயணம்!
விடுதலை ராசேந்திரன்

‘பாரத கலாச்சாரத்தைப் பறைசாற்றும் இதிகாசம்’ என்ற பூரிப்பான அறிவிப்புடன், ‘சன்’ தொலைக்காட்சி ஞாயிறுதோறும் இராமாயணத்தை மெகா தொடராக ஒளிபரப்பத் தொடங்கியிருக்கிறது. புதிய தொழில்நுட்பங்களுடன், ‘இராமாயணம்’ ஒளிபரப்பப்படுவதாக அறிவிப்பு வேறு. ஏற்கனவே ‘இராம பக்தி’யில் மூழ்கிக் கிடக்கும் வடநாட்டு மக்களின் உணர்வுகளைத் தூண்டி விட்டு, ‘சங்பரிவாரங்களின்’ இராமன் அரசியலுக்கு அவர்களை தயார்படுத்த, ‘என்.டி.டி.வி.’ இந்தி மொழியில் இராமாயணத் தொடரைத் தொடங்கி விட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டு மண்ணையும், பார்ப்பனியமாக்க இதோ, என்னால் இயன்ற ‘அனுமான்’ உதவி என்று ‘விபிஷணராக’ அவதாரமெடுத்துள்ளது ‘சன்’ டி.வி.!

மெகா தொடர்களை அறிமுகப்படுத்தி பெண்களை அதில் மூழ்க வைத்து தமிழ்நாட்டில் குடும்ப - சமூக உறவுகளில் கடும் நெருக்கடிகளை உருவாக்கியதில் ‘சன்’ தொலைக்காட்சிக்கு பெரும் பங்கு உண்டு! அடுத்த கட்டமாக, இவர்கள், ‘இராமராஜ்யத்துக்கு’ தாவியுள்ளார்கள் இதற்கான காரணத்தை, ஆழமாக பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. கலைஞர் தொலைக்காட்சி மீதும் - கலைஞர் மீதும் - சன் தொலைக்காட்சிக்குள்ள குடும்ப பகை காரணமாக தனது கலைஞர் எதிர்ப்பை ‘திராவிடர் இயக்க’ எதிர்ப்பாகவே மாற்றிக் கொள்ள ‘சன்’ டி.வி. முன் வந்துள்ளது மிகப் பெரும் இனத் துரோகம்!

திராவிட இயக்க அரசியலை மூலதனமாக்கி, தொலைக்காட்சி நிறுவனத்தையும், தொழில் நிறுவனத்தையும் வளர்த்துக் கொண்டவர்கள் தான் இந்த ‘சன்’ டி.வி. குழுமத்தார்! தமிழினத்தை அவமதிக்கும் இராமாயணத்தை எரிக்கச் சொன்னார் அண்ணா! ‘சக்கரவர்த்தித் திருமகன்’ என்ற பெயரில் இராமனை ‘தேசியத்’ தலைவனாக்க முயன்ற பார்ப்பன இராஜகோபாலாச்சாரிக்கு பதிலடி தந்து, ‘சக்கரவர்த்தித் திருமகன்’ என்ற பெயரில் ராமனின் பார்ப்பன சுயரூபத்தை, கிழித்துக் காட்டினார் கலைஞர். ‘சன் டி.வி.’ குழுமத்தின் நாயகராகப் போற்றப்படும் முரசொலி மாறன் - 1995 ஆம் ஆண்டு ஜூனியர் விகடன் வார ஏட்டுக்கு அளித்த பேட்டியில் ‘நாங்கள் இராவணனின் பரம்பரை’ என்று பெருமிதத்தோடு அறிவித்தார். ஆனால் அவரின் வாரிசுகளோ, அந்த உணர்வுகளுக்கு சமாதி கட்ட துடிக்கிறார்கள்!

இந்திய அரசின் ‘தூர்தர்ஷன்’ ஆண்டுக்கணக்கில் ஒளிபரப்பிய ‘இராமாயணத் தொடரால் உந்தப்பட்ட மக்களின் மத உணர்வை - மத வெறியாக்கி - ‘இராமன் கோயிலுக்கான’ அஸ்திவாரமாக்கி, அதை ஆட்சி பீடமேறுவதற்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொண்டது பா.ஜ.க. கூட்டம்! மீண்டும் இப்போது அதிகாரத்தைப் பிடிக்க, இவர்களுக்கு ‘ராமன்’ தேவைப்படுகிறான். அதற்கான சதிவலை நாடு முழுதும் பின்னப்படுகிறது. சேது சமுத்திரத் திட்டத்தைப் பிடித்துக் கொண்டு, அதற்குள்ளே ‘ராமனை’த் தேடி, அந்த கற்பனை ராமனை தமிழகத்திலிருந்து இந்தியா முழுதும் தேர்தல் விற்பனைக்குக் கொண்டு போக முயற்சிக்கிறார்கள். அந்த விற்பனைக்கு மக்கள் சந்தையைத் தயார்படுத்தும் சதி வலைக்குள் ‘சன்’ தொலைக்காட்சி விருப்பத்தோடு இடம் பிடித்திருக்கிறது.

அயோத்தியில் - பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில், நாடு முழுதும் மதக் கலவரங்கள் வெடித்தபோது, தமிழகம் மட்டும் ‘பெரியார் மண்ணாக’ தனது அமைதியை வெளிப்படுத்தி கம்பீரமாக எழுந்து நின்றது. பார்ப்பனர்களுக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் - ராமாயணத்தை எடுத்துப் படியுங்கள் என்று தமது சமூகத்தினருக்கு அறிவுரை கூறினார். பார்ப்பனர் ராஜகோபாலாச்சாரி! அந்த எச்சரிக்கையை ‘வேதவாக்காகக்’ கருதி வரும் கூட்டம், இப்போது இராமாயணத்தைப் புரட்டத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் எப்போதுமே பார்ப்பனர் பார்ப்பனியத்தின் பக்கமே நிற்கத் துடிக்கும் சன் தொலைக்காட்சிக் குழுமம் - இப்போது பச்சையாகவே வெளிவந்து விட்டது; வரலாறு இவர்களை மன்னிக்காது.

ஆனாலும் திட்டவட்டமாக கூறுகிறோம் - இது இராமாயன காலமல்ல; துரோகத்தை தமிழர்கள் சரியாகவே புரிந்து கொள்வார்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com