Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
மார்ச் 2008

பெரியார் - அம்பேத்கர் - மனித உரிமை அமைப்புகள் ஒன்றுபட்டுப் போராடுவோம்!
கு. இராமகிருட்டிணன்

உடுமலையில் 5.3.2008 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் பேசுகையில் குறிப்பிட்டதாவது:

சாதி ஒழிப்பு கூட்டியக்கம் கோபி நம்பியூரிலே மாரியப்பனுக்கு திருமண மண்டபம் தர மறுத்ததில் தொடங்கிய இந்த கூட்டியக்கம் பேரெழுச்சியோடு இன்றைக்கு சாளரப்பட்டி அருந்ததிய மக்களுக்காகவும் இந்த ஆர்ப்பாட்டத்தை இங்கு நடத்துகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்திலே தலைவர் அதியமான் சொன்னது போல தமிழ்நாட்டிலிருக்கக்கூடிய எல்லா தலித் இயக்கங்களையும், சுயமரியாதை இயக்கங்களையும் மனித உரிமை இயக்கங்களையும் ஒன்றிணைத்து இன்றைக்கு ஒன்றுபட்டு விட்டோம்; ஒன்றுபட்டு விட்டோம் என்கிற குரலோடு இங்கே கூடியிருக்கிறோம்.

சாளரப்பட்டிக் கலவரம் தாக்குதல் கொடூரமான நிலையில் நடந்திருக்கின்றது. அந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் அங்கே ஆதிக்க சாதியினராக இருப்பவர்கள் பத்து தேனீர் கடைகளிலே தனிக் குவளைகள் இருக்கின்ற தென்று நீண்டகாலமாக காவல்துறைக்கு புகார் செய்தும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால், அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டபோது அவர்கள் பத்துக் கடைகளையும் மூடி விடுவோம் என்று மூடி விட்ட நிலையிலே இரண்டு கடைகள் மட்டும் அதிலே அங்கு இருக்கக்கூடிய ஆதிக்க சாதியிலே வேறுபட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் இரண்டு கடைகளை திறந்தபோது இன்றைக்குத் தாக்குதல் நடத்திய எட்டு கடைக்காரர்களும் அந்த ஊர் மக்களும், ஆதிக்க சாதியினரும் அந்த இரண்டு தேனீர் கடைகளையும் தாக்கியிருக்கிறார்கள்.

அந்த தாக்குதல் நடத்தியபோது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்குமேயானால், வன்கொடுமை சட்டத்திலே அன்றைக்கே அப்போதே நடவடிக்கை எடுத்திருக்குமானால் இவ்வளவு பெரிய, நூற்றுக்கணக்கான அருந்ததிய மக்கள் - 80 வயது வேலம்மாள் முதல் 5 வயது சிறுவன் வரைக்கும் தாக்கப்பட்டு இருக்க மாட்டார்கள். அப்போதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தாக்குதல் நடந்தபோதும் காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது. அதை நான் சொல்லவில்லை. காவல்துறையே பத்திரிகைக்கு செய்தி கொடுத்து இருக்கிறது. நாங்கள் குறைவானவர்கள் இருந்தோம். ஆகவே ஒன்றும் செய்ய முடியவில்லை என்று சொல்லுகிறார்கள் என்றால், அப்போது காவல்துறை ஒப்புக் கொள்கிறது. அங்கு தாக்குதல் நடந்தது உண்மை. நாங்கள் அங்கு ஒன்றும் செய்ய முடியவில்லையென்று சொல்கின்றார்கள். ஏன் இவர்கள் 20 பேர் இருந்தால், அங்கே தாக்குதலை சமாளிக்க முடியாதா?

டி.எஸ்.பி.க்கு எதற்காக துப்பாக்கி தரப்பட்டிருக்கிறது? காவல்துறை ஆய்வாளருக்கு எதற்காக துப்பாக்கி தரப்பட்டிருக்கிறது? ஒரு சந்தேகம். ஏன் என்று சொன்னால், தமிழ்நாட்டில் அதுவும் கோவை மாவட்ட மக்களுக்கு மிகுந்த சந்தேகம் வந்துவிட்டது. இனி அந்தத் துப்பாக்கிகள் அவர்களுக்கு தரப்படுமா? அல்லது சந்தனக் கடத்தல்காரர்கள் கத்தியைக் காட்டிய உடனே தரக்கூடிய காவல்துறை ஆயிற்றே! இவர்களுக்கு எதற்கு துப்பாக்கி என்று பறித்துக் கொள்வார்களா என்ற நிலை இருக்கிறது. அங்கே 20 பேர் பார்த்துக் கொண்டு இருந்தோம் என்று பதிவு செய்திருக்கிறார்கள். அதே நேரத்திலே பொய்யான வழக்குகள் ஆதித் தமிழர் பேரவை பொறுப்பாளர்கள் மீது. என்னவென்று கேட்டால் கோயிலுக்குள் நுழைய முயன்றதால் என்று சொல்லி பொய்யாக பதிவு செய்து, இந்தத் தாக்குதல் தொங்கியதற்கு இவர்கள் காரணம் என்பதுபோல ஒரு பொய்யான காரணத்தை காவல்துறையே உருவாக்கி பத்திரிகையிலே செய்திகள் தருகிறார்கள்.

அதோடு மட்டுமல்ல, இங்கே காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர் வீட்டிலே, அவர் சமூகத்திலே அவர் என்ன சாதியினராக வேண்டுமானாலும் இருக்கலாம். காவல்துறையிலேயும் அவர்கள் வீட்டிலே என்ன சாதியாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அவர்கள் காக்கிசட்டை போட்ட பின்னால் அவர்கள் மக்கள் நலப் பணியாளர்கள். அவர்களுக்குள் சாதி இருக்கக் கூடாது. ஆனால், அந்த துணைக் கண்காணிப்பாளர் நான் இந்த சாதி தான் என்று குறிப்பிட்டுச் சொல்லி, இங்கே தன்னை அடையாளப்படுத்துகிறார். அதனுடைய விளைவு, இதே உடுமலையிலேயே அந்த துணை கண்காணிப்பாளர் ஈசுவரன் அவர்கள் வந்த பின்னால் துங்காவி, அனுப்பட்டி, வல்லக்குண்டாபுரம், கொங்கல் நகரம், சாளையூர், தும்பலப்பட்டி - ஐந்து கிராமங்களிலே இதே போல தாக்குதல்கள் தலித்துக்கள் மீது நடந்திருக்கிறது.

அந்த அய்ந்து கிராம நிகழ்ச்சிகளிலும் இதே நிலையை அவர் கையில் எடுத்து நியாயம் வழங்கவில்லை. தலித்துக்களை முடக்கி அவர் உயர்சாதியினருக்கு துணைப் போயிருக்கின்றார்கள். ஆகவே, அரசு உடனடியாக அந்த துணைக் கண்காணிப்பாளரை இங்கிருந்து மாற்ற வேண்டும். இன்னும் சொல்லப் போனால், எந்த ஆதிக்க சாதிகள் அதிகமாக இருக்கிறார்களோ அந்த பகுதியிலே அவர்கள் சார்ந்த அதிகாரிகளை நியமிக்கக் கூடாது. நியமித்தால் அவர்கள் சாதிக்கத்தான் துணைப் போகின்றார்கள். அதனால் தான் இந்த முழக்கத்திலே அதை மய்யமாக வைக்கப்பட்டது.

அதேபோல, அந்த பள்ளியிலே தலைமையாசிரியர் - பள்ளியைப் போய் தாக்கப் போகின்றார்கள். என்ன கொடுமை என்று சொன்னால், சாதிவெறி தாண்டவம், தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமை எவ்வளவு கூர்மைப்பட்டு இருக்கிறது என்று சொன்னால், அந்த சாளரப்பட்டிப் பள்ளியிலே தாக்குதலுக்குப் போனவர்கள், அதே பள்ளியிலே அய்ந்தாம் வகுப்பு படிக்கின்ற தலித் மாணவனை அடிக்கப் போயிருக்கின்றார்கள். பேனாவை கத்தியாகப் பயன்படுத்திக் கொண்டு, “உன்னையெல்லாம் இதிலே குத்த வேண்டும்” என்று சொல்லி தாக்குதலுக்குப் போயிருக்கிறார்கள். பத்து வயது, பனிரெண்டு வயது சிறுவர்களெல்லாம், அவர்களுக்கு உண்மையாக உள்ளத்துக்குள் இருந்திருக்காது - பெரியவர்கள் செய்வதைப் பார்த்து அவர்கள் செய்திருக்க முடியும். ஆனால், அங்கு என்ன நிகழ்ந்திருக்கிறது என்று சொன்னால், தலைமையாசிரியர் அங்கே இவர்கள் தாக்கப் போகின்றபோது இப்போது வேண்டாம், நான் மணியடித்து விடுகிறேன்; அவர்கள் வெளியே வந்த பின்னால் தாக்குதல் நடத்துங்கள் என்று வழிவகை செய்திருக்கிறார் அந்த தலைமையாசிரியர்.

இப்படி பள்ளிக்கூடம் தாக்கப்பட்டிருக்கிறது. அவர் (தலைமையாசிரியர்) அந்த குழந்தைகளை காப்பாற்றி இருக்க வேண்டும்.அந்தப் பள்ளியிலே நூற்றுக்கணக்கான தலித் மாணவர்கள் இன்றைக்கு வரைக்கும் அச்ச உணர்வோடு படிக்க முடியாத, படிக்கப் போக முடியாத சூழல் இருந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு நாம் இங்கே கடலென கூடியிருக்கின்ற அனைத்து அமைப்புகளும் ஒன்றுபட்டு இருக்கிறோம். பெரிய மகிழ்ச்சி. நாம் ஒன்று சேருவதை யார் தீர்மானிக்கிறார்கள் என்றால் எதிரிகள் தான் தீர்மானிக்கிறார்கள். இன்றைக்கு திருமாவளவனையும், அதியமானையும் ஒன்றிணைத்தது எதிரிகள் தான். எதிரிகள் தீர்மானிக்கிறார்கள் நாம் ஒன்றுபடுவதை. இந்த ஒற்றுமை தமிழ்நாடு முழுவதும் மலர வேண்டும்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடினார்; எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார். இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டேன் என்று. இப்போது நாம் பாடுவோம். எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார். இங்குள்ள தலித்துகள் ஒன்றாதல் கண்டே என்று நாம் புதிய கவிதை பாட வேண்டும். இந்த ஒற்றுமை மலர வேண்டும். சாளரப்பட்டில் தாக்க வந்த அந்த ஆதிக்க சாதிகள் யாரென்று பார்க்கவில்லை. அத்தனை பேரும் திரண்டு வந்தார்கள். நாம் நம் மக்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா? அதற்கு இந்த ஒற்றுமை வேண்டும். ஒன்றுபடுவோம்! ஒன்றுபடுவோம்!

இன்றைக்கு வடக்கும் மேற்கும் இணைந்திருக்கிறது. பிரிந்திருந்த நம்மையெல்லாம் ஆதிக்கசாதி எதிரிகள் ஒன்றுபடுத்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆயிரங்கோடி நன்றிகள். இதற்காக 80 வயது பாட்டி வேலம்மாள் இரத்தம் சிந்தியிருக்கின்றார். 5 வயது விக்னேஷ் இரத்தம் சிந்தியிருக்கின்றார். அவர்கள் சிந்திய இரத்தம் நம்மை இன்றைக்கு ஒன்றுபடுத்தியிருக்கின்றது. அதிலும் இந்த மேடையிலே அதியமானையும், திருமாவளவனையும் ஒன்றுபடுத்தியிருக்கிறது. (பலத்த கரவொலி) இந்த ஒற்றுமையில் பெரியார் கண்ட, பெரியார் இயக்கத்தின் நோக்கம் நிறைவேறுகின்றது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com