Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
மார்ச் 2007
உலகில் விமானப்படைக் கொண்ட ஒரே இயக்கம்
களமிறங்கியது, ‘வான்புலி’ப் படை

விடுதலைப்புலிகளின் விமானப்படை ஈழ விடுதலைப் போராட்டக் களத்தில் இறங்கி விட்டது. மார்ச் 26, 2007 - தமிழின வரலாற்றில், நீங்கா இடம்பெற்ற நாளாகும். உலகிலேயே எந்த ஆயுதம் தாங்கிப் போராடும் விடுதலை இயக்கமும் விமானப்படையைக் கொண்டிருக்கவில்லை. தமிழ்ஈழ விடுதலைப் புலிகள் மட்டுமே இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளனர். ஏற்கனவே தரைப்படையும், கடல்படையும் தம்மிடம் கொண்டுள்ள விடுதலைப்புலிகள் இப்போது ‘வான்புலி’களையும் களத்தில் இறங்கியிருப்பது சிங்களப் பேரினவாத ஆட்சியை நிலை குலையச் செய்து விட்டது. உலகமும், வியந்து பார்க்கிறது.
வன்னியிலிருந்து புறப்பட்ட புலிகளின் இரண்டு போர் விமானங்கள், கொழும்பிலிருந்து 23 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கட்டுநாயகா விமானப்படைத் தளத்தில் இரவு 12.45 மணிக்கு 4 குண்டுகளை வீசியது. ரஷ்யாவின் எம்.அய்.ஜி. போர் விமானம், இஸ்ரேலின் கிபிர் விமானங்களை இலக்கு வைத்து, இந்தக் குண்டுகள் வீசப்பட்டன என்று விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் கூறினார். அப்பாவி மக்கள் மீது தொடர்ந்து குண்டுகளைப் போட்டு பிணமாக்கிய விமானங்கள் இவை! சிங்கள அரசைப் போல், ‘வான் புலிகள்’ பொதுமக்களைக் குறி வைக்கவில்லை. மாறாக, மக்கள் மீது குண்டு போடும் விமானங்களைக் குறி வைத்து குண்டு வீசினர். இந்த விமான படைத்தளத்துக்கு அருகில்தான், பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையம் இருக்கிறது. அங்கே ஏராளமான பயணிகள் இருந்தனர் என்றாலும், புலிகளின் இலக்கு, அப்பாவி மக்கள் மீது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள விடுதலைப்புலிகள், தங்களது இணையதளங்களில், தாக்குதலுக்கு புறப்பட்ட விமானங்கள், போர் வீரர்கள், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை வழி அனுப்பி வைக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இது சோதனை ஓட்டமாக நடத்தப்பட்ட தாக்குதல். இனி, இலங்கை ராணுவ முகாம்கள் மீது ‘வான்புலிகள்’ படை, குண்டுகளை வீசும் என்று, விடுதலைபுலிகளின் ராணுவ செய்தி தொடர்பாளர் ராசய்யா, இளந்திரையன் அறிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளிடம் உள்ள விமானம் - தற்கொலைத் தாக்குதலுக்கு மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று, இராணுவ ஆய்வாளர்கள் பலரும் எழுதி வந்ததை, பொய்யாக்கியிருக்கிறது, இந்தத் தாக்குதல். குண்டுகளை தாங்கிச் சென்று, தானாகவே குண்டுகளை வீசக்கூடிய எந்திர அமைப்பை, தங்களது சொந்த நாட்டிலே, விடுதலைப்புலிகளே தயாரித்துள்ளார்கள் என்பதை அறிந்து, ராணுவ ஆய்வாளர்களும், இலங்கை அரசும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இரவு நேரத்தில் பறந்து செல்லக்கூடிய விமானமாகவும் அவைகள் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். வன்னிக் காட்டுப் பகுதியிலிருந்து இருட்டிலேயே, 200 மைல் தூரம் பறந்து சென்று கொழும்பில் குண்டு வீசி விட்டு, பத்திரமாக திரும்பியிருக்கின்றன.

வன்னிப் பகுதியில் இரணமேடு என்ற பகுதியில் விடுதலைப்புலிகள் விமான ஒடு தளம் அமைத்துள்ளதாக 2005 ஆம் ஆண்டிலேயே நார்வே அமைதிக் குழுவின் தலைவர் உறுதி செய்தார். அந்த ஓடு பாதையை குண்டு வீசி நாசப்படுத்தியதாக பிறகு இலங்கை அரசு அறிவித்தது. பாதை செப்பனிடப்பட்டுவிட்டதாக பிறகு விடுதலைப்புலிகள் இயக்கம் அறிவித்தது. விடுதலைப் புலிகளிடம் விமானம்

இல்லை என்று, இலங்கை அரசு மறுத்து வந்தாலும், அரசிடம் அந்த அச்சம் தொடர்ந்து கொண்டே இருநதது. 1998 ஆம் ஆண்டு மாவீரர் நாளான நவம்பர் 27 அன்று, மாவீரர்களின் நினைவிடங்களில், புலிகளின் விமானம், வானத்திலிருந்து மலர்களைத் தூவியபோது, இலங்கை அரசு அதிர்ச்சியடைந்தது. அதனைத் தொடர்ந்து, அவசர அவசரமாக இலங்கை அதிபர் சந்திரிகா தன்னுடைய வீட்டில், விமான எதிர்ப்புக் கருவிகளைப் பெரும் பொருட் செலவில் பொருத்தினார்.

1998 நவம்பர் 2ஆம் தேதி சீறீலங்கா சிறப்பு அதிரடிப் படை அக்கறைப்பட்டு என்ற இடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றபோது, அருகே ஒரு காட்டில், விமானம் இறங்கும் சத்தத்தைக் கேட்டதாகக் கூறியது. அதே நேரத்தில் மட்டக்களப்பில் தாந்தமலை பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று இறங்கியதாக சிறீலங்காவின் துணை ராணுவப் படையினர் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, கொழும்பிலிருந்து வெளி வரும் ‘சண்டே டைம்ஸ்’ ஆங்கில நாளேட்டின் ராணுவ செய்தி ஆய்வாளர் இக்பால் அத்தாஸ், இதை உறுதிப்படுத்தினார். ‘லங்காதீபா’ நாளேடு சிறீலங்கா உளவு நிறுவனத்தை மேற்கோள் காட்டி, விடுதலைப்புலிகள், விமானங்கள் மூலம், முல்லைத் தீவுக்கு ஆயுதங்களைக் கொண்டு வந்து இறக்கத் திட்டமிட்டுள்ளதாக எழுதியது. 2005 ஆம் ஆண்டு பிப்ரவரியிலேயே விடுதலைப்புலிகள் விமானப் படையை உருவாக்கி வருவதாக அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, அமெரிக்க அதிபர்கள் புஷ் மற்றும் கிளின்டனிடம் முறையிட்டார் என்று கொழும்பு இராணுவ ஆய்வாளர் ஆர். அரிகரன், புலிகள் குண்டுவீச்சு நடத்தியதற்குப் பிறகு, எழுதியுள்ள ஒரு ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். 1988-ல் இந்திய ராணுவம் அங்கு சென்ற போதே, புலிகளின் பாசறைகளிலிருந்து விமானத்துக்கான பாகங்கள் கண்டறியப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வளவு உண்மைகளையும் மறைத்து விட்டு, அமைதிப் பேச்சு வார்த்தை துவங்கிய பிறகு, அந்தக் காலத்தில்தான், விடுதலைப்புலிகள் தங்களது விமானப்படையை உருவாக்கிக் கொண்டார்கள் என்றும், அதற்கு முன் அவர்களிடம் விமானங்களே கிடையாது என்றும் அரசு அப்பட்டமாக பொய் கூறுகிறது.

அது மட்டுமல்ல, இலங்கையின் விமானப்படை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் புகைப்படம் ஒன்றை சமர்ப்பித்தது. அதில் கிளி நொச்சியில், விடுதலைப்புலிகள், புதிதாக கட்டியுள்ள ஓடு பாதையும் விமானமும் இடம் பெற்றிருந்தன. இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட விண்ணிலிருந்து படம் பிடிக்கும் தானியங்கி நவீன புகைப்படக் கருவி மூலம், இந்தப் படம் எடுக்கப்பட்டது. இதைப் பார்த்து அதிர்ந்து போன அதிபர் சந்திரிகா, “இப்போது இரண்டு சுனாமிகளால் நான் தாக்கப்பட்டுள்ளேன். ஒன்று இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட சுனாமி; இரண்டாவது சுனாமி இப்போது நான் பார்க்கும் இந்த புலிகளின் விமானம் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து பல மணி நேரம், தேசியப் பாதுகாப்புக் கவுன்சிலில், புலிகளின் விமானப் படை பற்றியே பேசப்பட்டது.

விடுதலைப் புலிகளின் வான்புலிகள் படையை உருவாக்கியவர் - வான் படை தளபதியாக இருந்த சங்கர் என்ற வைத்தியலிங்கம் சொர்ணலிங்கம் ஆவார். தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரனுடன் எப்போதும் உடனிருக்கக் கூடிய, அவரது நெருக்கமான நண்பர். இலங்கை பருத்தித் துறையிலுள்ள ஹார்ட்லி கல்லூரியில் படித்து, பிறகு, சென்னையில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் ‘விமானப் பொறியியல்’ பட்டம் பெற்றவர். கடந்த 2001 ஆம் ஆண்டு டிசம்பரில் துரோகக் குழுவான கருணா குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

செக் குடியரசின் இசட் 143 ரக விமானங்கள் இரண்டை வாங்கி, அவற்றை பாகம் பாகமாகப் பிரித்து, தாய்லாந்து வழியாக கடல் வழியில் விடுதலைப் புலிகள் கொண்டு வந்ததாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடுகள், ஏற்கனவே செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஊகச் செய்திகளுக்கு எல்லாம் தெளிவாக விடை கிடைத்த நாள்
மார்ச் 26!

ராடார் கருவி செயலிழந்ததா?

சர்வதேச விமானதளங்களில் பொருத்தப்பட்டுள்ள ராடார் கருவியின் விலை 200 கோடி ரூபாயாகும். ‘ராடார்’ கருவியின் மூலம் வானில் பறக்கும் விமானங்கள் செல்லும் பாதை எல்லாவற்றையும் கண்டுபிடித்து விடலாம். இந்த ராடார் கருவி கடந்த 12 ஆம் தேதியிலிருந்து செயலிழந்து நிற்கிறது. அதேபோல், விமானப்படைத் தளத்துக்காக இந்தியாவிடமிருந்து வாங்கப்பட்ட பாதுகாப்பு ராடாரும் செயல்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது. இவை எல்லாமுமே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கின்றன. இந்தியாவில் கூட சென்னை, டெல்லி, பம்பாய், கல்கத்தா, கவுகாத்தி விமான நிலையங்களில் மட்டுமே இந்தக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் இந்த ராடார் கருவி இருந்தும்கூட கிளிநொச்சியிலிருந்து புறப்பட்டு, சுமார் 30 நிமிடம் வானில் பறந்து குண்டுகளை வீசி விட்டு, பிறகு மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே பத்திரமாக வந்து சேரும் வரை ராடார் கருவி வழியாக இலங்கை அரசு அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது எப்படி நடந்தது என்பதே இப்போது உலகத்தையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. இந்தத் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com