Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
மார்ச் 2007

இதோ, ‘தேசத் துரோகிகள்’

“பகுத்தறிவு” நிறைந்த மனிதர்களைத் திருத்துவதற்கு, இப்போது, விலங்குகளே பொறுமை இழந்து களம் இறங்கத் துவங்கி விட்டன போலும்! காடுகள் - விலங்குகளுக்கான வாழ்விடம். ‘சாதி பேதம், வர்ணாஸ்ரம தீண்டாமை’யை சக விலங்குகளிடம் கடைபிடிக்காமல், விலங்குகள், சுதந்திரமாக உலவி, இயற்கையான வழியில் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், மனிதர்களோ இந்தக் காடுகளுக்குள் புகுந்து மிருகங்களின் வாழ்விடங்களை ஆக்கிரமித்துக் கொண்டு விடுகிறார்கள். தங்களது உயிர் வாழும் உரிமை பாதிக்கப்படும் போது, மிருகங்கள் அய்.நா. பிரகடனங்களையும், அரசியல் சட்டங்களையுமா புரட்டிக் கொண்டிருக்கும்? அவைகள் ஆக்கிரமிப்பாளர்களைப் புரட்டி எடுக்கத் தயாராகிவிடுகின்றன.

‘தினத்தந்தி’ நாளேட்டில் (ஈரோடு பதிப்பு) 20.3.2007 அன்று ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. யானைகளின் உறைவிடமான வால்பாறை பகுதியில், நல்ல காத்து என்ற குடியிருப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வனப் பகுதிக்குள் குடியேறியவர்கள் தங்களோடு, தங்களது “கடவுளை”யும் கொண்டு போய் அதற்கும் பாதுகாப்புடன் ஒரு வீடு கட்டி குடியேற்றியுள்ளனர். அதாவது, நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் மாரியம்மன் கோயிலைக் கட்டி, அதற்கு இரும்பு கம்பிகதவுகளை அமைத்துள்ளனர். கடந்த மாதம் 25 ஆம் தேதி, மாரியம்மனுக்கு மகாகும்பாபிஷேகமும் நடந்து முடிந்தது. இந்த நிலையில் 9 யானைகள் அடங்கிய கூட்டம் கோயிலுக்குள் புகுந்து இரும்பு கம்பி கதவுகளை உடைத்தன. அருகே இருந்த கன்னிமாரி கோயிலுக்குள்ளும் யானைகள் புகுந்து நவக்கிரக சிலைகளை இடித்துத் தள்ளின. இரவு ஒரு மணிக்கு வந்த யானைகள் விடியற்காலை 5 மணி வரை விடிய விடிய அதே பகுதியில் நின்று கொண்டிருந்தன. இதனால் மாரியம்மனுக்கு கோயில் கட்டிய பொது மக்கள் யானை மீது மிகுந்த அச்சத்துடன் உள்ளனர் என்கிறது, அந்த செய்தி.

“மானுடனே! எம்மைப் பார்த்து மதம் பிடித்ததாகக் கூறும் அற்பனே! எமது வனப்பகுதியில், நீ புகுந்தது மட்டுமின்றி, உனது கடவுளையும் கொண்டு வந்து, கும்பாபிஷேகம் நடத்தி, எங்கள் சூழலை ஏன் மாசு படுத்துகிறாய். அவ்வளவு சக்தியா உனது கடவுளுக்கு? இதோ, உள்ளே புகுந்து உடைக்கிறோம்; உடைத்துவிட்டு ஓடிவிடவில்லை; இரவு முழுதும் அதே இடத்தில் நிற்கிறோம்; எங்கே, உனது கடவுள் தண்டிக்கிறதா, பார்ப்போம்! அல்லது எந்த இராம.கோபாலனோ, இல.கணேசனோ, இந்து முன்னணியோ எங்களிடம் நேரில் வரட்டும்! அல்லது உங்கள் காவல்துறை வந்து எங்களை தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யட்டும். சவால் விடுகிறோம்” - என்று அந்த யானைகள், சவாலுக்கு அழைப்பது போலவே நின்றிருக்கின்றன.

இனி ‘துக்ளக்’, ‘இந்து’ உள்ளிட்ட பார்ப்பன ஏடுகள் இப்படியும் தலையங்கங்கள் எழுதலாம். “ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், யானைகள் காட்டுக்குள் கட்டுப்பாட்டிலே இருந்தன. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் யானைகள், இப்படி எல்லாம் ஆட்டம் போடுகின்றன. கடவுள் சிலைகளையே யானைகள் தாக்க வருகிறது என்றால், அதை எப்படி பொறுக்க முடியும்? தேசத்துக்கே ஆபத்து வந்துவிட்டது. இதைத் தடுத்தேயாக வேண்டும்” என்று எழுதலாம்!

“இந்த யானைகள் - பாகிஸ்தானில் பிறந்து, காஷ்மீரில் பயிற்சி பெற்று, தமிழ்நாட்டில் வால்பாறைக்குள் ஊடுருவியிருக்கும், அன்னிய ஏஜெண்டுகள்; இந்துக்களின் விரோதிகள்; காட்டையும் நாட்டையும் கூறு போடத் துணியும் பிரிவினைவாதிகள்; காட்டு யானைகளுக்கு எதிராக - ராமேசுவரத்திலிருந்து திருத்தணி வரை இதோ பாதயாத்திரை புறப்பட்டு விட்டேன். பெரியார் தி.க.வினரைப் போல், இந்த யானை களையும் தண்டிக்க வேண்டும்” என்று இராமகோபாலன் அறிவிக்கக் கூடும்!

“யானைகள் - கோயிலுக்குள் புகுந்ததால் நேர்ந்த தீட்டைக் கழிக்க சில சம்ரோட்சணங்களையும், வேத சடங்குகளையும் உடனே நடத்திட வேண்டும். எங்கள் வேதத்துக்கு அபார சக்தி உண்டு; அவ்வளவு சக்தி மிக்க வேதத்தை ஓதும் எங்களுக்கு யானைகளிடமிருந்து காப்பாற்ற, காட்டுக்குள் ராணுவத்தை உடனே அனுப்பி வைக்க வேண்டும்” என்று தயானந்த சரசுவதி தலைமையில் புரோகிதர்கள் கூடி, வேண்டுகோள் விடுக்கலாம்!

“எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். காடுகள் யானைகள் வாழும் இடமாக இருக்கலாம்; அது அவைகளின் உரிமையாகவும் இருக்கலாம்; அதே நேரத்தில் மனிதர்களுக்கு வழிபாட்டு உரிமை உண்டு; மனிதர்கள் வழிபாட்டு உரிமையில் யானைகள் குறுக்கிடுவதை இந்த ஆட்சி அனுமதிக்கும் என்று யாரும் தவறாகக் கருதிக் கொண்டிருக்கத் தேவையில்லை. இது பெரியார்-அண்ணா வழி வந்த ஆட்சி; ‘இந்து’க் கடவுளுக்கு அவமதிப்பு என்றாலே அது தேச விரோதம்; எனவே காட்டு யானைகளை தேசவிரோதிகளாக இந்த அரசு அறிவிக்கிறது” என்று தமிழக அரசும் அறிவிக்கக்கூடும்.

“காட்டு யானை உனது நாட்டுக்குள் நுழைந்தா கோயிலை உடைத்தது? உனது கோயில் சாமி ஊர்வலத்தில் எல்லாம் எந்த நாமத்தைப் போட்டாலும், விபூதி பூசினாலும், பொறுமையாகத்தானே பவனி வந்து கொண்டிருக்கிறது? அது வாழும் பகுதிக்குப் போய் நீர் இடையூறு செய்யத் தானே, அது திருப்பித் தாக்குகிறது? குற்றம் இழைத்தது நீ; யானைகள் தட்டிக் கேட்டால் தண்டனையா? என்று கேட்கிறார் ஒரு பகுத்தறிவாளர்!

“பார்! பார்! தேச விரோதிகளைப் பார்; விடாதே; பிடித்து உள்ளே போடு” என்று, பூணூலை உருவிக் கொண்டு ‘இந்து’வுக்கு ஆசிரியர் கடிதம் எழுதக் கிளம்பிவிட்டார் எங்கள் ஊர் பார்ப்பனர். அடேங்கப்பா! இவர்கள் பேனாவும் - பூணூலும் யானையை விட பலமாயிற்றே!

- கோடங்குடி மாரிமுத்து



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com