Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
மார்ச் 2007

தமிழக அரசுக்கு நீதிமன்றம் ‘கிடுக்கிப்பிடி’ ஆக்கிரமிப்பு கோயில்கள் அகற்றப்படுமா?

பூங்கா போன்ற பொது இடங்களில், ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயில்களை இடிக்க, அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதா என்பது குறித்து பதில் அளிக்குமாறு, சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாம்பரத்தைச் சேர்ந்த பாபு என்பவர், உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘தாம்பரத்தில் உள்ள முத்துரங்கன் பூங்கா இடத்தை, சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கோயில் கட்டப்படுகிறது. இதனால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால், கோயிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், கோயில் கட்ட இடைக்கால தடை விதித்தது. பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு தாக்கீது அனுப்பியது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதிகள் முகோபாத்யா, சுதாகர் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குமாரதேவன் ஆஜராகி வாதாடினார். ‘பூங்கா போன்ற பொது இடங்களில் கோயில்களை கட்ட தடை விதிக்க வேண்டும். அவ்வாறு ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கோயில்களை உடனே இடிக்க உத்தரவிட வேண்டும். கோயில் கட்டுவது மட்டுமல்லாமல், அதற்கு விழா எடுத்து பூங்காவை நாசப்படுத்துகிறார்கள்’ என வாதிட்டார்.

இதற்கு அரசு வழக்கறிஞர் தங்கவேலு, ‘பொது இடங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில்களை இடிக்க அரசு தயாராக உள்ளது. இதற்கு நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று வாதாடினார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் மத சம்பந்தப்பட்டவர்கள் மனதை புண்படுத்தும். இதனால் பெரும் விளைவுகள் ஏற்படும். எனவே, ‘பொது இடங்களில் இந்து கோயில், மசூதி, சர்ச், குருத்வாரா ஆகியவை கட்டப்பட்டால், அவற்றை இடிக்க வேண்டும்’ என்று அரசு கொள்கை முடிவு ஏதாவது எடுத்துள்ளதா? எதிர்காலத்தில் இப்படி ஆக்கிரமித்து கோயில் கட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, ஜூன் 11 ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.


சூலூரில் சாதிமத எதிர்ப்பு அறக்கட்டளை

சூலூர் மக்கள் நல அறக்கட்டளை ஊர் பொது மக்களால் மக்கள் நலம் நாடி சேவை நோக்குடன் நிறுவப்பட்டுள்ளது. கடந்த சனவரி மாதம் 26 ஆம் நாள் குடியரசு தினத்தன்று சூலூர் அண்ணா சீரணிக் கலையரங்கத்தில் அறக்கட்டளைத் தொடக்கவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சூ.ஆ. நல்லசாமி வரவேற்புரை வழங்கினார். சூலூர் முன்னாள் பேரூராட்சித் தலைவர் சூ.ர.தங்கவேலு தலைமை வகித்தார். முன்னாள் பேரூராட்சித் தலைவரும், மக்கள் நல அறக்கட்டளையின் தலைவருமான சூ.ர.தங்கவேலு அறக்கட்டளை நோக்கத்தை விளக்கிப் பேசினார்.

சூலூர் மக்கள் நல அறக்கட்டளையின் நோக்கங்களாக அவர் முன் வைத்த கருத்துக்கள் பாராட்டுக்குரியதாகும். மக்களிடையேயே சாதி, சமயம், மதம், பால் மற்றும் அரசியல் சிந்தனைகள் கடந்த ஒற்றுமையையும், ஒத்திசைவையும் உருவாக்குதல், “ஒவ்வொருவரும் எல்லோருக்கும் எல்லோரும் ஒவ்வொருவருக்கும்” என்ற கோட்பாட்டை மக்கள் மனதில் வளர்த்தல்; அறிவியல் மனப்பாங்கு, மனித நேயம், ஆய்வு மற்றும் சீர்திருத்தச் சிந்தனை இவைகளை மக்களிடையே வளர்த்தல்; எல்லாவகை மூட நம்பிக்கைகளையும், முட்டாள்தனமான பழக்க வழக்கங்களையும் கைவிட்டு அறிவியல் சார்ந்த புரிந்துணர்வுடனும், விழிப்புணர்வுடனும் வாழ மக்களுக்குக் கற்பித்தல்; நிலம், நீர், காற்று, சுற்றுச் சூழலைக் காத்து ஆரோக்கியமான சுற்றுச் சூழலை உருவாக்குதல்; தமிழ் தேசிய இனத்தின் தாய்மொழியான தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றைப் பாதுகாத்தல்;
பெண்ணடிமைத்தனத்தை அகற்றி வாழ்வின் எல்லா நிலைகளிலும் தளங்களிலும் ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் வர வழிவகுத்தல்; சாதி மற்றும் மதமறுப்புத் திருமணம் செய்து கொண்ட இணைகளுக்கும், குடும்பங்களுக்கும் சமூகத்தின் சிறப்பு அக்கரையும் பாதுகாப்பும் கிடைத்திட சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்திட உழைத்தல்; இறைமை மறுப்பாளர்களுக்கு தனித்த சட்டப்பூர்வமான அடையாளம் கிடைத்திட உழைத்தல் போன்ற நோக்கங்களை முன் வைத்து இந்த அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது.


‘கடவுள் ஆசி’யோடு ‘பீரோ புல்லிங்’

சென்னை புறநகரங்களில் பல வீடுகளில், ஜன்னல் வரியாக பீரோவை இழுத்துத் திருடும் ‘பீரோ புல்லிங்’ திருட்டுக் குற்றத்தில் ஈடுபட்டு, பிடிபட்டுள்ள நாகமணி என்பவர் போலீசாரிடம் தந்துள்ள வாக்குமூலம்:

எனக்கு சாமி பக்தி அதிகம். அடிக்கடி சோழவாயம்மனை கும்பிட்டு வருவேன். திருட்டு பற்றி சாமியிடம் சொல்வேன். ‘போலீசில் சிக்காமல் இருக்க அருள் புரிதாயே’ என்று வேண்டிக் கொள்வேன்.

சாமிக்கு பூ போட்டு ‘இன்று எங்கு கொள்ளை அடிக்க வேண்டும்’ என்று கை நீட்டிக் கேட்பேன். இந்த திசையில் என்ற மனது சொல்லும். அந்த பகுதியை நோட்டமிட்டு திருடுவேன்.

200க்கும் அதிகமான போலீசார் சேர்ந்து என்னை தேடுகிறார்கள். ராத்திரி முழுவதும் ரோந்து சுற்றுகிறார்கள். இந்த திருட்டுக்கு பெயர் ‘பீரோ புல்லிங்’ என்று எதுவுமே எனக்குத் தெரியாது. ‘இப்போதே திருடப்போ என்று மனசு சொல்லும். உடனே கிளம்பிவிடுவேன். வியாழக்கிழமை மட்டும் தான் கொள்ளையடிப்பேன். இத்தனை காலம் போலீசில் சிக்காமல் இருந்தது இதனால் தான்.

2 நாட்களுக்கு முன்பு முதல் மனைவி செல்வி தற்கொலைக்கு முயன்றாள். அவளை தேற்றி சொந்த ஊரில் விட்டு வந்தேன். துணைக்கு 2 ஆவது மனைவி ஜீவாவையும் அனுப்பி வைத்தேன். செல்வியுடன் தகராறு செய்துவிட்டு ஊரில் இருந்து நேராக கொள்ளையடிக்க வந்தேன். சாமி கும்பிட மறுத்துவிட்டேன். மாட்டிக் கொண்டேன்.

(சென்னை ‘தமிழ்முரசு’ - 17.3.2007)

பக்தி வந்தால் ஒழுக்கம் வந்துவிடும் என்று பிரச்சாரம் செய்வோர் - இதை கவனிக்க வேண்டும். ‘கில்லாடி’ திருடர்கள்கூட ‘கடவுள் ஆசி’யோடு தான் தொழில் செய்கிறார்கள்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com