Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
மார்ச் 2007

அரசு தடை போட கோரிக்கை:குழந்தைகளை குரூரமாக்கும் ‘ஜெட்டிக்ஸ்’

சேனல்களிலிருந்து தெறிக்கும் ரத்தத் துளிகளால் இப்போது பெற்றோர் மற்றும் சமூகம் திகிலில் உறைந்து போய் இருக்கிறது. நுகர்வு கலாச்சாரத்தின் வக்கரிப்பான வசீகரங்கள் அத்தனையும் ஒரு புள்ளியில் குவியும் மையமாக ஏற்கனவே இயங்கி வரும் தொலைக்காட்சி ஊடகம், தற்போது தனது ஆக்டோபஸ் கரங்களை அடுத்தபடியாக குழந்தைகளின் மீது பாய்ச்சி வருகிறது.

மும்பையிலிருந்து இயங்கிவரும் டூன் - டிஸ்னி நெட்வொர்க் நிறுவனத்தால் பல்வேறு இந்திய மொழிகளில் ஒளிபரப்பப்படும் ‘ஜெட்டிக்ஸ்’ என்ற அலைவரிசையில் வரும் சாகச நிகழ்ச்சிகளைப் பார்த்து தாங்களும் அதேபோல செய்ய முயன்று தமிழகத்தில் மட்டும் அண்மையில் சில மாதங்களுக்குள் இரண்டு குழந்தைகள் உயிரை விட்டிருப்பதாக பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் (செப்.2 தேதியிட்ட நக்கீரன் இதழ் செய்தி) மதுரையைச் சேர்ந்த தியாகேஷ் என்ற ஒன்பதாவது படிக்கும் சிறுவன் வீட்டுக்குள்ளேயே தன்மீது தீ வைத்துக் கொண்டு பரிதாபமாக இறந்து போயிருக்கிறான். ‘ஜெட்டிக்ஸ்’ சேனலில் வருவது போல தீயில் குதித்து சாகசம் செய்ய முயன்றதால்தான் இந்த மரணம்நிகழ்ந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த சிறுவனின் பெற்றோரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிதான் தங்கள் மகனை இவ்வாறு செய்யத் தூண்டியுள்ளதாகக் கூறியுள்ளனர்.

இதையடுத்து, சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த எட்டுவயது பிரேமானந்த் என்ற சிறுவன் ஜெட்டிக்ஸ் சேனலில் வரும் ‘பவர் ரேஞ்சர்ஸ்’ என்ற நிகழ்ச்சியைப் பார்த்து அதில் வருவது போல தனக்குத் தானே தீயிட்டுக் கொண்டு பரிதாபமாக துடிதுடித்து இறந்து போய் உள்ளான். (5.1.2007 தேதியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழில் செய்தி வந்தள்ளது) ஜெட்டிக்ஸ் நிகழ்ச்சியைப் பார்த்துதான் நான் இவ்வாறு செய்தேன் என்று காவல்துறையினரிடம் அந்தச் சிறுவன் தான் சாகும் தருவாயில் கூறியிருக்கிறான்.

தமிழகத்தில் வெளிப்படையாகத் தெரியவந்த இரண்டு நிகழ்வுகள் மட்டுமே இவை. இந்திய அளவில் எத்தனை என்ற விவரங்கள் நமக்குத் தெரியவில்லை. இது போன்ற கொடுமையான நிகழ்வுகள் தங்கள் குழந்தைகளுக்கும் எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்ற அச்சம் இப்போது அனைத்து பெற்றோரையும் தொற்றிக் கொண்டுள்ளது.

வளர்ந்த மனிதர்களையே பல்வேறு வகையில் தன் மாய வலைக்குள் சிக்க வைத்து, மனப்பிறழ்வுகளுக்கு ஆளாக்கி இருக்கும் ‘தொலைக்காட்சி ஊடகம்’, இப்போது குழந்தைகள் உலகத்தை குரூரமாக குறி வைத்திருக்கிறது. குறிப்பாக இந்த ‘ஜெட்டிக்ஸ்’ என்ற சேனல் இருபத்தி நாலு மணி நேரமும், பகுத்தறிவுக்கு ஒவ்வாத, சற்றும் யதார்த்தத்துக்கு பொருந்திவராத சாகச நிகழ்ச்சிகளை இடை விடாது ஒளிபரப்பி, பிஞ்சு மனங்களில் மூர்க்கத்தனமும், ரத்த வெறியும் கலந்த ஒரு மோசமான கிளர்ச்சியைத் தூண்டுகிறது. முன்பெல்லாம் தங்களின் நண்பர்களைப் பார்க்கும்போது, கட்டிப்பிடித்து புன்னகை தவழ வரவேற்று மகிழும் குழந்தைகள், இப்போது ஒருவரை ஒருவர் சந்தித்த உடனேயே தங்களின் கைகளை குறுக்கே மடித்து முஷ்டியை உயர்த்திக் காட்டி சண்டைக்கு தயாராகின்றன. ஜெட்டிக்ஸ் சேனலில் ரத்தம் தெறிக்கும் கொலைக் காட்சிகள் நடக்கும்போது, அவற்றை பார்த்து குலுங்கி குலுங்கி சிரிக்கின்றன.

குழந்தைகளின் மனவுலகம் நமது கற்பனைக்கு எட்டாத அளவுக்கு வக்கிரங்களும், வஞ்சமும், ரத்த வெறியும் கொண்டதாக மாறிக் கொண்டு வருகிறது. ஒரு சமூகத்தை நிர்மூலமாக்குவதற்கு அதன் நிகழ் காலத்தைவிட எதிர்காலத்தை குறி வைத்து தாக்குவது தான் ஆதிக்க சக்திகளின் நுட்பமான நடைமுறைத் தந்திரம். இப்போது அது தான் நடந்து கொண்டிருக்கிறது. வளர்ந்த நாடுகளில் குழந்தைகளின் மனதில் வன்முறையை விதைக்கும் இத்தகைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நமது எதிர்காலத் தலைமுறையையே மனச்சிதைவுக்கு ஆளாக்கக்கூடிய அளவுக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த ‘ஜெட்டிக்ஸ்’ சேனலை தடை செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டிய நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த இயக்கத்தில் சமூகநலத் தொண்டர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள் என்று பல்வேறு தளங்களிலிருந்தும் பலர் இணைந்து பங்கேற்று முன்னெடுத்துச் செல்ல ஆர்வத்துடன் முன் வந்துள்ளனர்.

ஜெட்டிக்ஸ் சேனல் தவறான, வன்முறையான சிந்தனையை வளர்க்கக் கூடியது என்பதை குழந்தைகளுக்கு பெற்றோர் புரிய வைக்க வேண்டும். அந்த சேனலை துண்டித்து விட வேண்டும். இதன் விளைவுகள் எத்தகைய விபரீதம் வாய்ந்தவை என்பதை முதலில் பெற்றோர் புரிந்து கொண்டு, பிறகு குழந்தைகளுக்கும் புரிய வைக்க வேண்டும்.

தொலைக்காட்சி என்பது தவிர்க்க முடியாத ஊடகமாக நடுவீட்டுக்குள் வந்து விட்டது. எனவே குழந்தைகளுக்கு அதை எதிர்கொள்ளும் பயிற்சியை அளிக்க வேண்டிய கடமை பள்ளிகளுக்கு உண்டு.

‘ஜெட்டிக்ஸ்’ சேனல் குழந்கைளின் மனநலத்தை முற்றிலும் பாதிக்கக்கூடியது என்ற உணர்வை பெற்றோர்களிடமும், குழந்தைகளிடமும் சமூகநலப் பணியாளர்கள் கொண்டு செல்ல வேண்டும்.

கேபிள் ஆபரேட்டர்கள் சமூகத்தை சீரழிக்கும் இதுபோன்ற சேனல்களின் ஒளிபரப்பை வழங்கக் கூடாது.

பொழுது போக்கு என்ற பெயரால் வன்முறையும், வக்கிரமும் கலந்த காட்சிகளை பார்க்கக் கூடாது என்ற முடிவை குழந்தைகள் எடுக்க வேண்டும். ஜெட்டிக்ஸ் போன்ற சேனல்களை பார்க்க மாட்டோம் என்று குழந்தைகள் சபதம் ஏற்க வேண்டும்.

பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைக்கும் இதுபோன்ற சேனல்களை அரசு உடனடியாகத் தடை செய்ய வேண்டும். இது போன்று துவங்கும் புதிய சேனல்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது.

இன்று யாரோ ஒரு குழந்தைக்கு நடந்தது நாளை நம் குழந்தைக்கும் நேரலாம் என்ற யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் இந்த பிரச்சாரத்துக்கு உதவ முன் வரவேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com