Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
மார்ச் 2007

நாடி சோதிட மோசடியை எதிர்த்து வழக்கு

நாடி சோதிட மோசடிகளைத் தடை செய்யக் கோரி, சீர்காழி, குற்றவியல் நடுவர் மன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகாலமாகவே நடைபெற்று வரும் இந்த மோசடியை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். இது பற்றிய செய்தி விவரம்:

நாகை மாவட்டம் - மயிலாடு துறைக்கு அருகே உள்ளது வைத்தீஸ்வரன் கோயில் என்ற சிற்றூர். வைதீசுவரன் கோயில் வியாதிகளைப் போக்கும் திருத்தலமாக பக்தர்களால் நம்பப்படுவதால் இங்கு பக்தர்கள் கூட்டமாக வருகிறார்கள். இந்த சிற்றூரில் ‘நாடி சோதிடம்’ என்ற மோசடி வியாபாரமும் நடந்து வருகிறது. இந்த நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர் காலம் முழுதும், ஓலைகளில் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டதாம். நாடி சோதிடம் பார்க்கிறவர்களிடம் பெயரைச் சொன்னால், உடனே அவர்கள், அவர்களுக்கான ஓலையைக் கண்டுபிடித்து, அவரது கடந்த காலத்தையும், எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதையும் அப்படியே சொல்வார்கள். இப்படி இந்த ஊரில் சுமார் 50 பேர் நாடி சோதிடம் பார்ப்பதாக மக்களை ஏமாற்றி வருகிறார்கள். நீதிபதிகள், உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் என்று பலரும் நாடி சோதிடம் பார்க்க வருகிறார்கள். தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பதைப் பிறகு தெரிந்து கொண்டு, வாய் மூடி மவுனம் சாதித்து விடுகிறார்கள்.

சீர்காழியைச் சார்ந்த கோபால கிருட்டிணன் என்ற தோழர் - இப்போது இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் நாடி சோதிடம் பார்க்கச் சென்றபோது முதலில் அவரது கைரேகையைப் பதிவு செய்தார்கள். கைரேகையின் அடிப்படையில் அவருக்கான ஓலையைக் கண்டுபிடிப்பதாக, நாடி சோதிடர் கூறி, ஒரு ஓலையைக் கொண்டு வந்தார். அவருடைய கடந்த காலம், எதிர்காலத்தை, ஓலைச் சுவடி மூலம் “கண்டறிந்து”, எழுத்து மூலம் எழுதிக் கொடுத்தார்.
ஒலி நாடாவிலும் இதைப் பதிவு செய்து கொடுத்துள்ளார். கோபால கிருட்டிணனின் தாயார் உயிருடன் உள்ளார்.
ஆனால் நாடி சோதிடரோ, தாயார் இறந்துவிட்டதாகக் கூறினார். கோபாலகிருட்டிணன் விவசாயத் தொழில் செய்கிறார். நாடி சோதிடரோ அவர் மின்சாரத் துறையில் பொறியாளராகப் பணியாற்றுவதாக, ஓலையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

கோபாலகிருட்டிணன், செங்குட்டுவன் என்ற தனது நண்பரின் ரேகையை கொடுத்து பலன் கேட்டார். செங்குட்டுவனுக்கு நல்ல ஆயுள் இருப்பதாகவும், 75 ஆண்டுகள் அவர் வாழ்வார் என்று, அவரது ஓலைச் சுவடியில் குறிப்பு இருப்பதாக, சோதிடர் கூறினார். உண்மையில் செங்குட்டுவன் ஏற்கனவே இறந்து விட்டார், அவருக்கான ஓலைச் சுவடியை கோபாலகிருட்டிணன் சோதிடருக்குத் தெரியாமல் ரகசியமாக படம் பிடித்துக் கொண்டு, அதை தஞ்சை சரபோஜி கல்லூரிக்கு எடுத்துச் சென்றார். ஒலைச் சுவடியின் எழுத்துகளைப் படிக்கக் கூடிய கம்ப்யூட்டர் - தஞ்சை சரபோஜி நூலகத்தில் இருக்கிறது. அதில் படம் பிடித்து வந்த ஓலைச் சுவடியைப் போட்டுப் பார்த்த போது, சோதிடர் கூறியதற்கும், ஓலைச் சுவடியில் எழுதப்பட்டுள்ளதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெரிய வந்தது.

இவை எல்லாமுமே - நீதிமன்றத்தில் ஆதாரங்களாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வழக்கறிஞர் வேலு குபேந்திரன், சீர்காழி சோமசுந்தரம் உள்பட 5 வழக்கறிஞர்கள் இந்த வழக்கில் ஆஜராகி வாதாட முடிவு செய்துள்ளனர்.

மயிலாடுதுறை, சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில், இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடிகளுக்கு எதிராக பெரியார் திராவிடர் கழகம் களம் இறங்கியுள்ளது.

பண பலம், அடியாட்கள் பலத்துடன் நாடி சோதிடர்கள் வசதியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வழக்கு வந்தவுடன், மிரட்டல் படலமும் தொடர்ந்தது. காவல்துறை அதிகாரியிடம், வழக்கு தொடர்ந்த கோபாலகிருட்டிணனும், வழக்கறிஞர்களும் புகார் கொடுத்தனர். காவல்துறை பாதுகாப்புத் தருவதாக உறுதியளித்துள்ளது.


நாடி சோதிட மோசடி: அரசுக்கு வேண்டுகோள் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை:

மக்களின் மடைமையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு... குட்டி சாத்தான், பேய், பில்லி சூனியம், ஏவல் விடுதல், கைரேகை, சோதிடம், வாஸ்து, யோகம், தியானம், ஆன்மீகம் என பல்வேறு துறைகள் செயல்படுகின்றன.

கல்வியறிவு, சாதிய படிநிலைகளின் ஏறு வரிசையில் மேற்கண்ட வற்றில் ஏதேனும் ஒன்றில் ஏமாறுகிறார்கள். ஆனால் பணக்காரன், படிப்புக்காரன், பதவிக்காரன் என எல்லா தரப்பினரும் ஏமாறும் துறை ஓலைச் சுவடி நாடி சோதிடம் ஆகும்.
சீர்காழியை அடுத்த வைதீசுவரன் கோயிலைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த ஏமாற்றுத் தொழில் முதல்முறையாக நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாகியுள்ளது.

சீர்காழியைச் சார்ந்த கோபாலகிருட்டிணன் என்பவர் நாடி சோதிட புரட்டை அம்பலப்படுத்தும் நோக்கில் உயிரோடிருக்கும் தனது தாயார், முதிராச் சாவெய்திய உறவினர் செங்குட்டுவன் ஆகியோரின் ரேகையைக் கொடுத்து பலன் கேட்க உயிரோடிருக்கும் தாயாரை இறந்துவிட்டதாகவும், இறந்து போன செங்குட்டுவன் 75 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வார் என்றும் சொன்னதை எழுதி வாங்கியுள்ளார்; ஒலிப்பதிவு செய்துள்ளார்; ஒளிப்படம் எடுத்துள்ளார்.
அவற்றை ஆதாரமாகக் கொண்டே சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவரை அடியாட்களைக் கொண்டு மிரட்ட போய் காவல்துறைக்கும் இவ்வழக்கு போயுள்ளது.

அவைகள் ஒருபுறம் இருக்கட்டும்!

இந்த ஓலைச்சுவடி நாடி சோதிடர்கள் அனைவருமே தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டுவரும் ஓலைச்சுவடிகளைப் பார்த்தே தாங்கள் பலன் கூறுவதாக தொடர்ந்து கூறி வருகின்றனர்.

அவ்வாறு ஏதேனும் ஓலைச்சுவடிகள் தங்கள் நூலகத்தில் உள்ளனவா? அவை வைதீசுவரன் கோவில் நாடி சோதிடர்களால் அவ்வப்போது ஒப்பு நோக்கப்படுகிறதா? என்ற விவரங்களை வெளியிட வேண்டிய சமுதாயக் கடமை (மத்திய அரசால் நிதி ஒதுக்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவரின் கட்டுப்பாட்டில் இயங்கும் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தின் இயக்குநர்) அவர்களுக்கு உண்டு.

மக்களின் அறியாமையையும், ஆர்வத்தையும் பயன்படுத்தி பணம் பறிக்கும் மோசடிகளை அம்பலப்படுத்தும் இம்முயற்சியில் பெரியார் திராவிடர் கழகமும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும்.

எவ்வாறாயினும், தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தார் இது குறித்த விளக்கங்களை உடனே வெளிப்படுத்த வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்திக் கொள்கிறோம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com