Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam

கேரளாவின் அடாவடி!

முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 136 அடியிலிருந்து 142 அடிக்கு உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றம், கடந்த பிப்.27-ம்தேதி ஆணையிட்டபோது, தேனி கம்பம் பகுதியைச் சார்ந்த விவசாயிகள், பட்டாசு வெடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள். ஆனால், கேரள அரசின் பிடிவாதத்தினால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.

1979-ம் ஆண்டு வரை முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. அணை பழுதடைந்துவிட்டதாக கேரள அரசு கவலை தெரிவித்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு ஆணைப்படி, பல கோடி ரூபாய் செலவில், தமிழக அரசு தான் அணையைப் பழுது பார்த்தது. இந்தப் பழுது பார்க்கும் பணி முடியும் வரை 136 அடி தண்ணீரை மட்டும் தேக்கி வைக்க தமிழக அரசு ஒப்புக் கொண்டது. கேரள அரசோ, இதையே நிரந்தர மாக்க முடிவு செய்துவிட்டது. அணையைப் பார்வையிட்ட மத்திய அரசின் நீர்வளத் துறை நிபுணர்கள் குழு, அணையில் 152 அடி வரை தண்ணீரைத் தேக்கலாம்; எந்த ஆபத்தும் வராது என்று சான்றிதழும் தந்திருக்கிறது. இந்த நிலையில் நீர் மட்டத்தை உயர்த்த மறுத்த கேரளாவின் பிடிவாதத்தை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர, உச்சநீதிமன்றம், நீர் மட்டத்தை 142 அடி வரை உயர்த்த இப்போது ஆணையிட்டுள்ளது.

இப்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் குப்பைக் கூடையில் போட கேரள அரசு முடிவெடுத்து விட்டது. அணை மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தாமல் இருப்பதற்கு கேரள அரசு சட்டத்தைத் திருத்தப் போகிறதாம். காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பை - கருநாடக அரசு இப்படித்தான் அமுல்படுத்த மறுத்து வருகிறது. இடைக்காலத் தீர்ப்பு அரசின் அரசிதழில் (கெசட்) வெளிவந்த போது பெரும் கலவரத்தை கருநாடகத்தில் நடத்தினார்கள்.

இப்படி கருநாடகம், கேரளம், ஆந்திரம் என்று ஒவ்வொரு மாநிலமும், உச்சநீதிமன்றங்கள், நடுவர் மன்றங்கள், நதிநீர் ஒப்பந்தங்களை மதிக்காமல் செயல்படும்போது, தமிழன் மட்டும் ஏமாளியாக வேண்டுமா? தேசிய ஒருமைப்பாடு பற்றி வாய்கிழியப் பேசுகிறவர்களும் - பிரிவினைவாதிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று முழங்குகிற “தேசிய திலகங்களும்” இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

ஒவ்வொரு மாநிலமும், மாநில சட்டமன்றங்களைக் கூட்டி, தங்கள் மாநில நலன்களுக்காக தனித் தனியாக, சட்டங்கள் போடும் நிலைவந்துவிட்ட பிறகு, இல்லாத ஒருமைப்பாட்டைக் கட்டி அழுது கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை. ‘ஒருமைப்பாட்டுக்கான’ விலை கொடுக்க வேண்டியவன் தமிழன் மட்டும் தானா?

கேரளாவின் அடாவடித்தனத்துக்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

கற்புக்கரசிகளும், கடவுளர்களும்

பெண் என்றால் அவள் ஆடவர்களின் உடமைகளில் ஒன்று! பிற சொத்துக்களைவிட சற்று மதிப்புயர்ந்த சொத்தாக வேண்டுமானால் பெண் மதிக்கப்படலாமே ஒழிய பெண்ணும் ஆணும் சமம் என எந்த மதமும் ஒப்புக் கொள்வதில்லை. மதத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்ட பழங்கால சமுதாயச் சட்டங்களும், பெண்ணை இப்படியே தான் கணித்திருக்கின்றன. பெண்ணைக் கற்புக்கரசிகளாகச் சித்தரித்துக் காட்டும் இலக்கியங்கள், பெண்களின் கற்புக்குக் காவலாக நிற்கும் தர்மங்கள், பெண் களிடம் முறை தவறி நடக்கும் ஆண்கள், முறை தவறி வாழும் பெண்கள் ஆகியோரை இப்படி இப்படியெல்லாம் தண்டிக்க வேண்டும் எனக் கூறும் சட்ட விதிகள் அனைத்தும் பெண்ணைப் பெரிதாக மதித்தன் காரணமாக உரு வானவை அல்ல; ஆண்களின் உடமைகளில் ஒன்று, தனதுகாமச் சுவைக்குத் தரம் குன்றாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இயற்றப்பட்டன.

மெக்சிகோ, யுகாதன் போன்ற சில சமூகங்களில் ஒரு பெண்ணிடம் முறை தவறி நடக்கும் ஆணை அப்பெண்ணின் உறவினர்கள் கொலை செய்யலாம் என்று சட்டமே இடம் அளித்தது. பாபிலோனிலும், ரோமிலும் முறை தவறி நடக்கும் பெண்ணையும், ஆணையும் ஒன்றாகப் பிணைத்து கோட்டையின் கொத்தளத்திலிருந்து கீழே ஆற்றில் உருட்டித் தள்ளிவிட வேண்டும் என்றது சட்டம். எகிப்தியச் சட்டப்படி கற்பிழந்தவளும், கற்பழித்தவனும் நகரத்தின் முச்சந்தியிலே நிறுத்தப்பட்டு 1000 கசையடி கொடுக்கப்பட வேண்டும். பழைய ரோமில், இருவருக்கும் பெருமளவு அபராதம் விதிக்க சட்டம் இடம் தந்தது.

இப்படியெல்லாம் கற்புக்கு பெரிய பெரிய அரண்களாக அமைத்து வந்த சமுதாயத்தில் அதை உடைக்கும் முயற்சிகளும் அவ்வப்போது நடைபெற்றுத் தான் வந்தன. இந்த முயற்சிகளைப் பகுத்தறிவாளர்கள் முன் நின்று நடத்தினர். கற்பு வாழ்க்கையில் நாகரிக உணர்ச்சிக்குப் பகுத்தறிவாளர்கள் வித்தூன்றியது கண்டு மக்களின் பெரும் பகுதியினர் தங்கள் மதங்களையும் கடும் சட்டங் களையும் புறக்கணித்து பகுத்தறிவாளர்கள் பக்கம் சாயத் தொடங்கினார்கள். அப்போதெல்லாம் மதவாதிகள் தாங்களும் பெரிய சீர்திருத்தவாதிகள் தாம் என்று காட்டிக் கொள்ளும் போலி முயற்சிகளில் ஈடுபட்டார்கள். இந்த போலி முயற்சிகள் எல்லா மதத்திலும் இருந்தன. கிறிஸ்துவ மதத்திலும் இத்தகைய முயற்சி நடைபெற்றது. இதன் விளைவாகத்தான் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு நிகழ்ச்சி நடந்ததாகப் பைபிளில் கூறப்பட்டிருக்கிறது.

சோரம் போன பெண் ஒருத்தியை கல்லால் அடிக்க யூதர்கள் (தங்கள் சட்டப்படியே) முயன்றபோது இயேசு அவர்களைத் தடுத்து நிறுத்தினார் என்றும், “உங்களில் யார் அதே குற்றத்தைச் செய்யாதவனோ அவன் மட்டுமே அவளைக் கல்லால் அடிக்கலாம்” என்று இயேசு வாதாடியதாகவும், அதன் விளைவாக அப்பெண் காப்பாற்றப்பட்டாள் என்றும் அக்கதை கூறுகிறது.

இயேசுவை பெரிய சீர்திருத்தக்காரராக காட்ட வேண்டும் என்ற ஆசையில் பைபிளில் எழுதியவர்கள் சுருட்டிவிட்ட புளுகுக் கதையே இது. ஏனென்றால் யூத வரலாற்றில் சோரம் போன பெண்ணைக் கல்லால் அடிக்க வேண்டும் என்று சட்டத்தில் என்றுமே விதியிருந்ததில்லை. அப்படிப்பட்ட வளை அரசே தூக்கிலிட்டு கொல்ல வேண்டும் என்பது தான் விதி. இயேசுவைப் பெரிய புரட்சிக் காரராகக் காட்ட வேண்டி எழுதிய பொய்யே மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சி.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com