Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam

திரைப்படங்களில் - தலைகாட்டும் பகுத்தறிவு!
மே.கா. கிட்டு

தந்தை பெரியார் அவர்கள் திரைப்படங்களைப் பற்றி குறிப்பிடும் பொழுது மனிதன் பகுத்தறிவு பெறத்தக்கதாகவோ - மூடநம்பிக்கையைப் போக்கக் கூடியதாகவோ எந்த சினிமாவும் இல்லை. மிக்க உணர்ச்சியினைத் தூண்டக்கூடிய வகையிலேயே சினிமாக்கள் இருக்கின்றன என்றும், இங்குப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் சினிமாக்கள் தயாரிக்கப்படுகின்றனவே ஒழிய, மனிதன் அறிவை வளர்க்க வேண்டுமென்கின்ற எண்ணத்தில் தயாரிக்கப்படுவது கிடையாது. நமது நாட்டில் மூடநம்பிக்கையை வளர்க்கவும், பொது ஒழுக்கத்தைக் கெடுக்கவுமே சினிமா பயன்படுகிறது என்றார்.

Thangarpachan and Navya ஆனாலும் தற்பொழுது திரைப்படங்களில் முற்போக்குக் கருத்துக்கள் தலைகாட்டத் துவங்கியுள்ளன. புரட்சித் தமிழன் சத்யராஜ் அவாகள் நடித்த ‘இங்கிலீஷ்காரன்’ திரைப்படத்தில் சத்யராஜ் தோன்றும் முதல் காட்சியே, மந்திரங்கள் சொல்லியபடி அர்ச்சனைத் தட்டுடன் கோயிலுக்குச் சென்று அர்ச்சகரிடம் தந்துவிட்டு தேங்காய்கள் உடைக்கிறார். உடைத்த தேங்காய்களை மூட்டை கட்டும்போது என்ன இது என்று கேட்கும் பார்ப்பானிடம், ‘கோயிலில் தேங்காய் உடைக்கிறதா வேண்டிக்கிட்டேனே தவிர விட்டுட்டுப் போறதா வேண்டிக்கல என்று பதில் கூறிவிட்டு எடுத்துச் சென்றுவிடுகிறார். மேலும் ‘குண்டக்க மண்டக்க’ என்ற திரைப்படத்தில இயக்குநர் அசோகன் சுயமரியாதை முறைப்படி சீர்திருத்தத் திருமணம் செய்து கொண்டதாக காட்சி வைத்து தன்னில் உள்ள பெரியார் கருத்துக்கு வலு சேர்த்திருக்கிறார்.

இயக்குநர் சேரனின் ‘தவமாய் தவமிருந்து’ என்ற படத்தில் சிறுவன், ‘அப்பா, சாமி எத்தனாப்பு படிச்சிருக்கு?’ என்று ராஜ்கிரணிடம் கேட்க, அதற்கு அவர், இது படிச்ச சாமி இல்லப்பா நம்மளப் படைச்ச சாமி என்கிறார். உடனே சிறுவன் மக்குச் சாமியா? என்று கேள்வி கேட்டு சிந்திக்க வைக்கிறான்.

இயக்குநர் தங்கர்பச்சானின், “சிதம்பரத்தில் அப்பாசாமி” என்ற திரைப்படத்தில் கதாநாயகி, எங்களை சந்தோசமா வச்சுக்காத சாமி எங்களுக்கு தேவையில்லை என்று கடவுள் படங்களையும், சிலைகளையும் விசிறியடித்து உடைக்கும் காட்சியும், தன் பொறுப்புகளிலிருந்து தப்பிக்க அய்யப்பனுக்கு மாலை போடுவதும் போன்ற காட்சிகளை வைத்து சிறப்புச் சேர்த்துள்ளார்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் ‘சரவணா’ என்ற திரைப்படத்தில், நாகேஷ் விபூதி, பட்டையெல்லாம் போட்டுகிட்டு சிம்புவிடம் வருகிறார். சிம்பு, என்ன தாத்தா காலையில பட்டையெல்லாம் போட்டுக்கிட்டு யாரை ஏமாத்த என்று கேட்க, அதற்கு நாகேஷ் உங்கப்பாவை ஏமாத்தறதுக்கு இந்த வேஷம் மாலையிலிருந்து சாயந்திரம் வரைக்கும் தான் என்று சொல்ல, சிம்பு சாமியார் வேஷமா என்று கேட்க, நாகேஷ் இல்லடா என்று சொல்ல, சிம்பு, போலிச் சாமியார் வேஷமா? என்று கேட்க அதற்கு உடனே நாகேஷ் சாமியாருன்னாவே அதான்” என்று பகுத்தறிவுக் கருத்தை படம் பிடித்துள்ளார்.

நடிகர் எம்.ஜி.ஆர். அவர்கள் எந்த படத்திலும் கடவுள் வேடம் போட்டதில்லை. தேவரின் வற்புறுத்தலுக் கிணங்க ‘தனிப்பிறவி’ என்ற திரைப் படத்தில் மட்டும் முருகன் வேடம் போட்டு, ஆசீர்வதிக்கும் காட்சியில் தனது இடது கையால் நடித்து தனது எதிர்ப்பினைத் தெரிவித்தார். அதே போல் திரைப்படங்களில், புராணப் படங்களிலே நடிப்பதில்லை என்று புராணப்படக் காலத்திலேயே தனது கொள்கையில் உறுதியாக இருந்தவர் நடிகர் கே.பி. கேசவன் ஆவார். இவரைப் போன்றே புராணப் படங்களில் நடிக்க மறுத்தவர் இலட்சிய நடிகர் எஸ்.எஸ். இராஜேந்திரன்.

அதே போல் திரைப்படங்களில் பெண்ணியத்தை ஒரு காமப் பொருளாக, பெண்ணைக் கேவலப்படுத்தும் வரிகளை எழுதி பெண்ணையே பாட வைத்து, பெண்ணே நடிப்பதை காட்டி பெண் ஒரு போகப் பொருளோ என்று நிலை நிறுத்துகின்றன. இதற்கு கவிஞர்களும் விலை போகிறார்கள் என்பது வருந்தத்தக்கது. தந்தை பெரியார் அவர்கள் ‘பாடல்களில் ஐம்பது வரிகளில் பெண்களின் உறுப்பழகு இடம் பெற்றால் அதில் இரண்டு வரிகள் கூடப் பெண்களின் அறிவைப் புகழ்ந்து பாடும் பழக்கத்தைக் காணோம்’ என்று அன்றே சொன்னார்; இன்னும் அதே நிலையில் தானே இருக்கிறது!

திரைப்பாடல்களில் மூட நம்பிக்கையை வளர்க்கும் பொருட்டு பாடல்கள் எழுதுவதும், ஆங்கிலத்தையே அதிகம் பயன்படுத்துவது, இரட்டை அர்த்தமுள்ள வரிகளை எழுதுவதும், அசிங்கமான வரிகளை எழுதுவது மட்டுமே பலருக்கும் குறிக்கோளாக இருக்கிறது. திரைப் படங்களில் பாடல்கள் எழுத நமக்கு வாய்ப்புக் கிடைக்காதா? என்று ஏங்கு கிறவர்கள் மத்தியில், திரைப்பாடல்களை எழுதிய கவிஞர் அறிவுமதி இனி நான் திரைப்படங்களுக்கு பாடல் எழுத மாட்டேன் என்று சொல்லியுள்ளது அதிசயமானதாகும். இருப்பினும் முற்போக்குக் கருத்துகள் பாடல்களில் ஒலிப்பதை பாராட்டாமலிருக்க முடியாது. இங்கிலீஷ்காரன் படத்தில் ‘நூறு பெரியார் வந்தாலும் திருந்தாத வெங்காயங்கள்’ என்ற வரிகளும், இயக்குநர் சீமானின் ‘தம்பி’ படத்தில் நா.முத்துக்குமார் எழுதிய ‘சாமிக்குப் படைக்கிற கைகளை கும்பிட்டோம், சாக்கடை அள்ளுற கைகளை விட்டுட்டோம்’ என்ற முற்போக்கு பாடல் வரிகளும் மகிழ்ச்சியை அளிக்கின்றன.

மூடநம்பிக்கையற்ற, மக்களுக்கு பொது ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்க நினைக்கின்ற சினிமா என்ற புதிய மொழியை வரவேற்போம். இப்படி திரைப்படம் எடுக்கிற இளைய தலை முறையினருக்கு ஆதரவு அளிப்போம்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com