Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜூன் 2009

நாடாளுமன்ற அனுமதியே இல்லாமல் இலங்கைக்கு ஆயுதம் வழங்கியது ஏன்?
வைகோ

ஆயுத வாகனங்களை மறித்ததாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் தோழர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து 8.6.2009 அன்று கோவையில் பெரியார் திராவிடர் கழகம், ம.தி.மு.க. நடத்திய மாபெரும் பொதுக் கூட்டத்தில் வைகோ ஆற்றிய உரை:

உலகெங்கும் பல்வேறு நாடுகளில் துன்பத்திலும் துயரத்திலும் கொந்தளித்துக் கொண்டு இருக்கிற இதயத்தோடு இனி விடியல் எப்போது? இருள் எப்பொழுது விலகும் என்று கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிற தமிழர்கள்; அவர்களின் பார்வை கவனம் ஆறரைக் கோடி தமிழ்மக்கள் வாழுகிற தமிழகத்தின் பக்கம் திரும்பி இருக்கிற நேரத்தில், இனி அடுத்து செய்யவேண்டியது என்ன என்பதை வளரும் இளம் தலை முறையினரிடம் எடுத்துச் சொல்லும்வகையில் அருமைச் சகோதரர் கொளத்தூர் மணி அவர்கள், அரிய பல கருத்துகளை காலத்தின் அருமைகருதி இரத்தினச் சுருக்கமாக கூறி அமர்ந்து இருக்கின்றார்.

விடுதலை இராஜேந்திரன் சிலவினாக்களை எழுப்பினார். பெரியார் திராவிடர் கழகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான அதனுடைய பொதுச்செயலாளர் சிறைப்பறவை என்று விளிக்கத்தக்க வகையில் அடக்குமுறைக்கு பலமுறை ஆளாகிய கோவை இராமகிருஷ்ணன் அவர்கள்மீது - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கோவை மாநகர் மாவட்டம் மாணவர் அணி அமைப்பாளர் அருமைத்தம்பி புதூர் சந்திரசேகர் மீது - பெரம்பலூர் மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் அமைப்பாளர் அருமைச் சகோதரர் லட்சுமணன் அவர்கள்மீது தேசப் பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டு இருக்கிறது. இரண்டு இயக்கங்களையும் சேர்ந்த தோழர்கள் பலர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த மண்ணின் வழியாக - எங்கள் பூமியின் வழியாக - ஈழத்தில் எங்கள் சொந்த சகோதர, சகோதரி களைக் கொன்று ஒழிப்பதற்கு இனக்கொலையை தீவிரப்படுத்துவதற்கு ஆயுதங்கள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகின்றன என்ற செய்தி காட்டுத் தீயாக பரவியபோது, அதைத் தடுக்கவேண்டும் என்ற தன்மானத் தமிழ் உணர்வோடு, அறவழியில் தடுத்து நிறுத்தியதற்கு தேசப்பாதுகாப்புச் சட்டத்தை ஏவி இருக்கிறார் தமிழக முதல் அமைச்சர்.

அந்தச் செய்தி வந்தநேரத்தில் நான் கோவை இராமகிருஷ்ணனிடம் தொலைபேசியில் பேசி னேன். செல்லும் வாகனங்களை நாங்கள் அறவழியில் தடுக்கிறோம் என்று சொன்னார். வன்முறைக்கு துளியளவும் இடம்கொடுக்காத வகையில் நாங்கள் தடுத்து நிறுத்துகிறோம் அறப்போர் நடத்துகிறோம் என்று சொன்னார். தமிழகத்தில் மான உணர்ச்சி செத்துப்போய்விடவில்லை என்பதற்கு அடையாள மான போராட்டம் உங்கள் போராட்டம். வாழ்த்து கிறேன். என் இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

இதில் என்ன தவறு? இனி மேலும் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு வாகனங்கள் ஈழத் தமிழ்மக்களைக் கொல்வதற்கு புறப்படுமானால், அதைத்தடுப்போம் - மறிப்போம் - பறிப்போம் என்று நானே சொன்னேன். வழக்கு போடு. இன்னும் சொல்வேன் நான். இந்திய அரசு இங்கிருந்து ஆயுதங்களைத் தந்து ஈழத்தமிழ் மக்களை படுகொலை செய்வதற்கு - நான் இராஜபக்சேவுக்கு இந்த மண்ணில் இருந்து தெரிவிக்கிறேன். விடுதலைப் புலிகளை ஆதரித்த வர்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்று நீ கொக்கரிக்கிறாய் விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம் என்று உன் சகோதரர் கொத்தபயா ராஜபக்சே கொக்கரிக்கிறான் - இப்பொழுதுதான் நீங்கள் வினையை விதைத்து இருக்கிறீர்கள் இனிமேல்தான் விபரீதத்தை அறுவடை செய்வீர்கள்.

தமிழகத்தில் உணர்ச்சி செத்துப்போய்விட வில்லை. 14 பேர் தீக்குளித்து மடிந்து இருக்கிறார்கள். வீரத்தியாகி முத்துக்குமார் எடுத்துவைத்த அந்த நெருப்பு 14 வீரத் தமிழ் இளைஞர்கள் தணலுக்கு தங்கள் உயிர்களைத் தந்து இருக்கிறார்கள். அந்த நெருப்பு சுடுகாட்டில் அணைந்து போய் இருக்கலாம். எங்கள் நெஞ்சில் எரிகிறது. தன்மான உணர்வுள்ள வாலிபர்கள் நெஞ்சில் எரிந்து கொண்டு இருக்கிறது.

கொளத்தூர் மணி அவர்கள் குறிப்பிட்டத்தைப் போல, என்றோ நடந்த சம்பவங்கள் 1960, 1970 தொடக்கத்தில் நடைபெற்ற சம்பவங்கள் ஆயுதப் போராட்டத்துக்கு ஈழத்து இளம் பிள்ளைகளை கொண்டுவந்து நிறுத்தியது. புதிய புலிகள் தமிழ் ஈழ விடுதலை புலிகளானார்கள். அதைவிட ஆயிரம் மடங்கு கொடுமை இப்பொழுது நடத்தப்பட்டு இருக்கிறது. இதைத்தமிழக மக்கள் மனதில் விதைக்கவேண்டிய கடமை நமக்கு உண்டு. அப்படியானால் இந்தத் தேசத்தின் பாதுகாப்புக்கு எதிராக வாகனங்களைக் குறுக்கே மறித்தது சரிதானா? என்று சிலமேதாவிகள் கேட்கலாம். ஈழத்தமிழ் மக்களைப் படுகொலை செய்வதற்கு இந்திய அரசு ஆயுதம் அனுப்பியது - ராடார் கொடுத்தது - தமிழர்களைக் கொலைசெய்வதற்கு மத்திய அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்து அவர்களுக்கு ஆதரவு தந்தார்களா? யார் அந்த அனுமதியைக் கொடுத்தது? நாடாளுமன்றத்தில் அதற்குரிய அனுமதி கிடைத்ததா?

1998 ஆம் ஆண்டு அடல்பிகாரி வாஜ்பாய் தலைமை அமைச்சராக இருக்கிறபோது ஈழத்தில் தமிழர்கள் இரத்தம் ஓடுகிறது. படுகொலை செய்யப்படுகிறார்கள் என்ற குரல் வேதனைக் குரலாக எழுந்தபோது அவர் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத் தில் எடுக்கப்பட்ட முடிவு ஆயுதங்கள் தருவதில்லை ஆயுதங்கள் விற்பதில்லை என்று ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு.

இலங்கை அரசுக்கு இவ்வளவு ஆயுதங்களையும் கொடுத்ததற்குப்பிறகு இந்த யுத்தத்தை இந்திய அரசு நடத்தியது. இந்திய அரசின் துரோகத்தை நாங்கள் மக்கள் மன்றத்தில் சொன்னோம். இன்றைக்கு நாதியற்றுப் போய்விட்டார்கள் தமிழர்கள் என்ற நிலையை உருவாக்குகிறார்கள். நாங்கள் பாதுகாப் புக்கு விரோதமானவர்கள் அல்ல. இந்தியாவின் பாதுகாப்புக்கு இராமகிருஷ்ணன் விரோதமானவர் அல்ல - இலட்சும ணனோ, சந்திரசேகரோ இந்தியா வின் பாதுகாப்புக்கு விரோதமானவர்கள் அல்ல. இந்த அடக்குமுறைக்கு அவர்கள் பயப்படுகிறவர்களும் அல்ல.

மூன்றரை ஆண்டுகள் தடா கைதியாக சிறையில் அடக்குமுறையை ஏற்றவர்தான் கோவை இராம கிருஷ்ணன். இந்த மேடையில் கூட்டத்துக்கு தலைமை தாங்குகின்ற சகோதரர் கொளத்தூர் மணி எண்ணற்றமுறை சிறைக்கு சென்றவர்தான். பாது காப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இப் பொழுதுதான் விடுதலை ஆகிவந்திருக்கிறார். எங்களாலா இந்த நாட்டுக்கு ஆபத்து? இந்த நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து? கிடையாது.

இந்தநாட்டின் பாதுகாப்புக்கு கேடுவிளைவித்தது மன்மோகன் சிங் அரசு. 1965 மொழிப் போராட் டத்தை இராஜேந்திரன் நினைவூட்டினார். 1967 இல் அண்ணா முதல்வரானார். மீண்டும் கிளர்ச்சி வெடித்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுத்தது. இரயில் பெட்டிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. வன்முறை பரவி விட்டது என்று காங்கிரஸ்காரர்கள் கூச்சலிட்டனர். சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப் பட்டது. இத்தனை இரயில்பெட்டிகளை மாணவர்கள் தீயிட்டுக் கொளுத்தி இருக்கிறார்களே இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது? ஏன் நீங்கள் காவல் துறையைப் பயன்படுத்தவில்லை? எதற்கு உங்களுக்கு அரசாங்கம் எதற்கு உங்களுக்கு அதிகாரம் என்று கேட்டார்கள்.

அதற்கு அண்ணா அவர்கள் சொன்னார்கள் முதலமைச்சராக நான்கு இரயில் பெட்டிகளைக் கொளுத்தினால் திரும்ப நான்கு இரயில் பெட்டிகளைத் தயாரிக்க முடியும். ஒரு மாணவன் உயிர்போய்விட்டால் அவனது உயிரை திரும்பக்கொடுக்க முடியாது என்றார். இருதயத்தில் ஏற்படுகிறவேதனை அங்கே பச்சிளம் குழந்தை களும் கொல்லப்படுகிறார்கள் - நமது சகோதரிகள் கொல்லப்படுகிறார்கள் - தமிழர்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிகிறார்கள்.

இந்திய அரசின் ஆயுதங்கள் போகின்ற காரணத்தினால் தமிழர்கள் கொல்லப்படு கிறார்கள் என்ற செய்தி பரவிய காரணத்தினால் தடுக்கின்ற உணர்வு வராதா? ஆயுதத்தோடு ஒருவன் வருகிறான் பச்சிளம் குழந்தைகளையும் தாய்மார்களையும் கொல்வதற்கு ஒருவன் வருகிறவனைத் தடுக்க நினைப்பதுதான் மனிதநேயம். தடுக்கின்ற முயற்சியில் ஈடுபடும்போது அது எல்லைமீறிக்கூடப் போகலாம். இந்த உணர்வில்தானே இராமகிருஷ்ணனும் தோழர்களும் இந்த கோவை மாநகரத்து வீதிகளில் திரண்டார்கள். அவர்களை சிறையில் நீங்கள் வைத்து இருக்கலாம். உலகம் முழுவதும் இருக்கிற தமிழர்கள் கோடிக்கணக்கான தமிழர்கள் தரணி எங்கும் பல கண்டங்களில் சிதறிக்கிடக்கின்ற தமிழர்கள் அந்த ஒருசெய்தி வந்தவுடன் கோயம்புத்தூரில் ஆயுதங்கள் ஏற்றிச்செல்கின்ற இராணுவவண்டிகளைத் தமிழர்கள் தடுத்தார்கள் என்ற ஒருசெய்தி இந்தத் தமிழனின் தன்மானத்தைத் தரணியில் தாய்த் தமிழகத்தில் தன்மானம் செத்துவிடவில்லை என்ற உணர்வை உண்டாக்கிக் காட்டியது.

இந்திய அரசு நடந்து முடிந்திருக்கிற படுகொலைகளுக்கு முழுமுதல் காரணம் என்று நாங்கள் குற்றம் சாட்டுகின்றோம். ஐ.நா. மன்றத்தில் தீர்மானத்தை முன்மொழிய வேண்டிய இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டு அந்தத் தீர்மானத்தை வெற்றிபெற வைத்தது என்ற செய்தியை இங்கே குறிப்பிட்டார்கள். ஏனென்றால் இந்த யுத்தத்தை நடத்திய குற்றவாளி இந்திய அரசு. ஆதாரம் இல்லாமல் நான் எதுவும் பேசவில்லை. அவசரப்பட்டு நான் எதையும் பேசவில்லை. இது ஒரு முக்கியமான கூட்டம் நாங்கள் தேர்தலுக்காகவும் பதவிகளுக்காகவும் கட்சி நடத்துகிறவர்கள் அல்ல. பேரறிஞர் அண்ணா சொன்னதைப்போல அதை ஒரு கருவியாகப் பயன்படுத்துவோம். அதை பயன்படுத்தாவிடில் என் சகோதரர் கணேச மூர்த்தி நாடாளுமன்றத்துக்குச் சென்றார். இன்று பேசியிருக்கிறார் அவருக்குக் கிடைத்த குறைந்த நேரத்தில் - இந்திய அரசுதான் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்தது என்று குற்றம்சாட்டி இருக்கிறார்.

சோனியா காந்தி காங்கிரசுஸ் கட்சிக்குத் தலைமை தாங்குகிறார். காங்கிரசுஸ் தோற்கடிக்கப் பட்ட கோவையில் நின்றுநான் பேசுகிறேன். 1991 ஆம் ஆண்டு நரசிம்மராவ் ஆட்சியில் இருந்தபோது சோனியாகாந்தியின் திட்டம் நிறைவேறவில்லை. இந்தக் காங்கிரசுஸ் கட்சிக்குத் தலைமை தாங்கி வழிகாட்டுகின்ற தகுதி அவருக்குக் கிடையாது என்று இன்று மண்டியிட்டுக் கொண்டிருக்கிற சங்மா அன்று சொன்னார். இன்று சலுகைக்குக் காத்துக்கிடக்கின்ற சரத்பவார் சொன்னார் - கோபித்துக் கொண்டு கதவை ஓங்கி அடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றார் சோனியாகாந்தி. சீதாராம் கேசரி பின்னாலே சென்று கெஞ்சினார் மன்றாடினார்.

அதன்பிறகு ஐந்து ஆண்டுகள் கழிந்தன அடுத்தத் தேர்தலில் தேவகௌடா பிரதமரானார். காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது. அவர் நினைத்ததை நடத்தக்கூடிய இடத்தில் இல்லை. ஆனால், திராவிட முன்னேற்றக் கழகம் அந்த அரசில் பங்கெடுத் தது. ஒருவரி அதுவும்கூட நேரடிக் குற்றச்சாட்டல்ல ஜெயின்கமிஷன் அறிக்கை. சந்தேகத்தை எழுப்புகின்ற ஒருவாக்கியம் திராவிட முன்னேற்றக் கழகம் இந்த அமைச்சரவையில் நீடிக்குமானால் காங்கிரசுஸ் ஆதரவுதராது என்று காங்கிரசுஸ் கட்சி அறிவித்தது. சோனியா காந்தி அறிவிக்கச் செய்தார். அந்த அரசு கவிழ்ந்தது. தி.மு.க. மீது அவ்வளவு ஆத்திரம் இருந்தது அல்லவா சோனியா காந்திக்கு.

அதன்பிறகுதான் 1998 ஆம் ஆண்டில் வாஜ்பாய் பிரதமரானார். மீண்டும் 1999 ஆம் ஆண்டு அதே வாஜ்பாய் மீண்டும் பிரதமராக தேர்ந்து எடுக்கப்பட்டு 5 ஆண்டுகள் அவர் ஆட்சி நடத்தியபோது மிக சாதுர்யமாக ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டார். 2003 ஆம் ஆண்டு இறுதியில் 2004 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்துடனே கூட்டணி அமைப்பது என்ற முடிவுக்கு வந்தார். துரதிருஷ்டவசமாக அந்தக் கூட்டணியில் இணைய வேண்டிய துர்பாக்கியத்துக்கு நாங்களும் ஆளானோம். ஆனால், அமைச்சர் அவையில் சேர்வதில்லை என்று முடிவெடுத்தோம். எந்த அழுத்தம் கொடுத்தாலும் சரி நாங்கள் மந்திரி சபையில் சேர்வதில்லை என்று முடிவெடுத்தோம்.

தமிழ்நாட்டில் தமிழ் இனத்தின் தலைவர் என்று தனக்குத்தானே மகுடம் சூட்டிக் கொண்ட கருணாநிதி, சோனியா காந்தி அம்மையாருடைய சலுகைகளை எதிர்பார்க் கின்ற இடத்துக்கு வந்தார். மந்திரி சபையில் அவர் கேட்ட இலாக்காக்கள் கிடைத்தது. சோனியா காந்தியைப் பொறுத்தவரை மிகசாதுர்யமாக திட்டமிட்டார். நாம் எது செய்தாலும் கருணாநிதி தமிழ்நாட்டை பொறுத்தவரையில் எதிர்க்கப் போவதில்லை இதுதான் தமிழர்களின் வரலாற்றில் நேர்ந்த மிகப்பெரிய அழிவுக்கான காரணங்களில் ஒன்றாகும்.

எடுத்த எடுப்பிலேயே இலங்கையோடு இராணுவ ஒப்பந்தம்போட திட்ட மிட்டார். அதுமுதலில் நமக்குத் தெரியாமற்போயிற்று. எதிர்ப்புக் காட்டினோம். நேரடியாகச் சந்தித்தோம். சோனியாகாந்தியிடமே கேட்டேன் எனக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாதுஎன்றார் இன்றைக்கு தமிழர்களின் இரத்தத்தில் குளித்துவிட்டு கொக்கரித்து கொண்டு இருக்கின்ற ராஜபக்சே இலங்கை பிரதமராக வந்தான் தில்லிக்கு. இந்தியா - இலங்கை இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகப் போகிறது இலங்கை அதிபர் சந்திரிகா வருகிறார் கையெழுத்தாகும் என்றார்.

நான் பதறி அடித்துக் கொண்டு ஓடி மன்மோகன் சிங்கிடம் கேட்டேன். அப்படி ஒன்றும் நடக்காது என்றார். சந்திரிகா வந்தார் இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகப் போகிறது என்றார்கள். மீண்டும் சென்று கேட்டோம் மன்றாடினேன் முறையிட்டேன் பல தலைவர்களின் வீடுகளுக்குச் சென்றேன். கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் சென்றேன். அவர்கள் இதுகூடாது என்றார்கள். ஆனால், ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகா விட்டாலும் அதன் சரத்துகள் நிறைவேற்றப்படும் என்று கொழும்புக்குச் சென்று நமது வெளிவிவகார அமைச்சர் நட்வர்சிங் சொன்னார். மறுநாள் பிரதமரைச் சந்தித்து இது அக்கிரமம் அல்லவா என்றபோது அது அவருடைய தனித்த கருத்து என்று சொன்னார்.

நீங்கள் பலாலி விமானதளத்தையா பழுதுபார்த்துக் கொடுக்கப்போகிறீர்கள். அங்கிருந்து ஏவப்பட்ட விமானங்கள்தானே நவோலியில் புனிதபீட்டர் தேவாலயத்தில் குண்டுவீசி 168 பேர் குழந்தைகளும் பெண்களும் கொல்லப் பட்டார்கள். எங்கள் தமிழ் மக்கள் சாடிக்கப்பட்டார்கள். அந்த விமானதளத்தைப் பழுதுபார்த்துக் கொடுக்காதீர்கள் என்று சொன்னோம். பழுதுபார்த்துக் கொடுத்தீர்கள். கோவையில் இராமகிருஷ்ணன் ஆயுதம் தாங்கிவந்த வாகனத்தை தடுத்தார் என்று வழக்கு போடுகிற கருணாநிதியைக் கேட்கிறேன். நாங்கள் செல்கிற வாகனத்தில் எங்கள் மக்களைக் கொல்வதற்கான ஆயுதங்களை எடுத்துச் செல்கிறாயா என்று சந்தேகம் வந்தது. இந்தியாவைப் பாதுகாக்க ஆயுதம் என்று நாங்கள் நினைக்கவில்லை. எங்கள் மக்களைக் கொன்றுகுவிக்கப்படுவதற்கு இந்த ஆயுதம் அனுப்பப்படுகிறது என்ற எண்ணம் வலுத்ததனால் நாங்கள் தடுத்தோம்.

காரணமில்லாமல் தடுக்கவில்லையே? இந்த ஐந்தாண்டு காலத்தில் நீங்கள் செய்த தொடர்ந்து அடுத்தடுத்து அனுப்பி வைத்தீர்கள் ஆயுதங்களை! அந்த அடிப்படையில் மீண்டும் இங்கிருந்து ஆயுதங்கள் செல்கின்றன பீரங்கிகள் செல்கின்றன கனரக ஆயுதங்கள் செல்கின்றன என்ற செய்திவந்தபோது நாங்கள் நம்பினோம். இதில் என்ன தவறு? நீ யோக்கியனா? ஆயுதம் கொடுக்காத யோக்கியனா? நாங்கள் தடுத்தது தவறு என்றால். நீ ஆயுதமே ஐந்தாண்டுகளாக கொடுக்கவில்லை என்றால் நாங்கள் நடுவீதியில் மறித்தது தவறு என்று சொல்.

நீ கடந்த ஐந்தாண்டுகளாக ஆயுதங்களைக் கொடுத்தாய் - விமானதளத்தைப் புதுப்பித்துக் கொடுத்தாய் - விமானதளத்தைப் பழுதுபார்த்துக் கொடுக்க மாட்டோம் என்றார் பிரணாப் முகர்ஜி என்னிடம். மன்மோகன் சிங் நல்லமனிதர் என்று நினைத்தேன். நாணயமானவர் என்று நினைத்தேன். மன்மோகன் சிங்கும் சரி நட்வர் சிங்கும் சரி பிரணாப் முகர்ஜியும் சரி எல்லோரும் பொய்சொன்னார்கள். அந்த விமான தளம் புதுப்பித்துக் கொடுக்கப்பட்டது என்ற உண்மை 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி டொமினிக் பெராரே என்கின்ற இலங்கை விமானப்படைத் துணைத்தளபதி சர்வதேச செய்தியாளர்களை அழைத்துக் கொண்டுபோய் பலாலி விமானதளத்தைச் சுட்டிக் காட்டி இது பழுதுபார்த்துக் கொடுக்கப்பட்டுவிட்டது இதை செய்து கொடுத்தது இந்தியவிமானப்படை இதை செய்து கொடுத்தது இந்திய விமானப்படை நிபுணர்கள். இதற்கு செலவழிக்கப் பட்ட பணம் இந்திய அரசின் பணம் என்று கூறினான்.

நான் கேட்கிறேன் இது என்ன சோனியா காந்தியின் பாட்டன் வீட்டுப்பணமா? யாருடைய பணம்? ஆக, எங்கள் வரிப்பணத்தில் நீ பழுதுபார்த்துக் கொடுத்தாய். நீ பழுதுபார்த்துக் கொடுத்த இடத்தில் இருந்து புறப்பட்ட விமானம் செஞ் சோலையில் குண்டு வீசியது. நீ கொடுத்த பணத்தில் இஸ்ரேல் நாட்டுக்காரனிடம் வாங்கிய விமானம் குண்டுவீசியது அதில் 61 சின்னஞ்சிறு அநாதைச்சிறுமிகள் தாயை தந்தையை யுத்தக்களத்தில் இழந்துவிட்ட அனாதைச் சிறுமிகளை செஞ்சோலையில் துடிக்கத் துடிக்கக் கொன்றாய். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமுற்றார்கள். அதை நான் செலவழித்துக்கொடுத்த பழுதுபார்த்துக் கொடுத்த விமானதளத்தில் இருந்து புறப்பட்ட விமானங்கள் குண்டுவீசின.

இந்தக் குற்றச்சாட்டுக்கு உன்னுடைய பதில் என்ன? நீ மறுக்கமுடியாது. இதை எழுத்துமூலமாக பிரதமரிடம் தந்திருக்கிறேன் மறுக்க முடியாதபடி ஆவணங் களோடு நாங்கள் தந்திருக்கிறோம்.

(தொடரும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com