Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜூன் 2008

மூத்த தலைவர் திருவாரூர் தங்கராசுக்கு பாராட்டு!
“பெரியார் லட்சியங்களுக்காக - 60 ஆண்டுகாலம் பல்வேறு தளங்களில் உழைத்தவர்”

சென்னையில் ஜூன் 14, 2008 அன்று கழகத்தின் மூத்த தலைவர் திருவாரூர் தங்கராசுக்கு பாராட்டு விழாவும், நாத்திகர் விழாவும் எழுச்சியுடன் நடந்தது. ஆயிரக்கணக்கான கழகத் தோழர்களும், பொது மக்களும் விழாவில் பங்கேற்றனர். மாலை 6 மணியளவில் எம்.ஜி.ஆர். நகரில், கழக சார்பில் நடிகவேள் எம்.ஆர். ராதா நினைவாக நிறுவப்பட்ட நிழல் கொடையை நடிகவேள் எம்.ஆர். ராதா மகனும், தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளருமான ராதாரவி திறந்து வைத்தார். முன்னதாக கழகத் தோழர்களின் பறை முழக்க நிகழ்ச்சி நடைபெற்றது. கழகத் தோழர்கள், பொது மக்கள் சூழ்ந்து நிற்க, ராதாரவி நிழற் குடையைத் திறந்து வைத்து பெரியார் திராவிடர் கழகத்தின் முயற்சிகளைப் பாராட்டினார்.

“இந்தக் கழகக் குடும்பத்தில் நானும் ஒரு அங்கம். பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் எந்த நேரத்திலும் என்னிடம் தொடர்பு கொள்ளலாம். இந்த கழகத்திற்கு உதவிட நான் காத்திருக்கிறேன். இந்தக் கழகம் வளர வேண்டும் என்று நாம் விரும்புகிறேன்” என்று உணர்ச்சிப்பூர்வமாக குறிப்பிட்டார். நிழற் கொடை முகப்பில் நடிகவேள் எம்.ஆர்.ராதா படத்துடன் நடிகவேள் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.

நிழற்குடை திறப்பைத் தொடர்ந்து தீமிதி நிகழ்ச்சி தொடங்கியது. தீமிதியைப் பார்வையிட ஏராளமான பொது மக்கள் திரண்டிருந்தனர். பறை முழக்கம் - கடவுள் மறுப்பு முழக்கங்களோடு தோழர்கள் தீக்குழியில் இறங்கியதைப் பொது மக்கள் பார்த்தனர். தோழர்கள் கோழிக்கறியை கடித்து சாப்பிட்டுக் கொண்டும், கைகளில் செருப்பை எடுத்துக் கொண்டும், கடவுள் இல்லை; இல்லவே இல்லை; பக்திக்கும் தீமிதிக்கும் தொடர்பில்லை என்ற முழக்கங்களோடு தீயில் இறங்கிக் காட்டினர்.

கழகத் தோழர்கள் வாயில் அலகுகளைக் குத்தி, அலகு குத்தலுக்கும் பக்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பொது மக்களிடம் விளக்கினர். அங்கிருந்து எம்.ஜி.ஆர். நகரில் நாத்திகர்விழா நடைபெறும் இடத்துக்கு தோழர்கள் சென்றனர். சமர்ப்பா குழுவினரின் எழுச்சி இசையோடு நிகழ்ச்சிகள் தொடங்கின. மேடைக்கு எதிரே பறக்கும் நிலையில் முதுகில் அலகு குத்தி பறவைபோல் தோழர்கள் இரும்புத் தூணில் தொங்கி, சுழன்று காட்டினர். அப்போது - கடவுள் மறுப்பு முழக்கங்களை கூடியிருந்த தோழர்கள் எழுப்பினர்.

தோழர் கரு. அண்ணாமலை வரவேற்க, தோழர் அன்பு. தனசேகர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். வழக்கறிஞர் அமர்நாத், தோழர் கேசவன், வழக்கறிஞர் இளங்கோ, தோழியர் பாரதி, பொதுச் செயலாளர்கள் விடுதலை இராசேந்திரன், கோவை இராமகிருட்டிணன், திரவரங்கம் பெரியார் சிலை அமைப்புக் குழுத் தலைவர் டாக்டர் முத்து, மூத்த பெரியார் தொண்டர் திருச்சி வீ.அ. பழனி, விழாவின் தலைவர், கழகத் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து, மூத்த தலைவர் திருவாரூர் தங்கராசு ஏற்புரை நிகழ்த்தினார்.

கழகத்தின் நாத்திகர் விழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்து முன்னணி ராமகோபாலன் உள்ளிட்ட மதவெறி சக்திகள், காவல்துறையிடம் வற்புறுத்தி வந்த நிலையில், சென்னை மாநகர காவல்துறை, நாத்திகர் பேரணிக்கு அனுமதி மறுத்தது. தீ மிதிப்பது, அலகு குத்துதல் மற்றும் நாத்திக பிரச்சாரத்துக்கே தடை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி, இந்து முன்னணியைச் சார்ந்த சிலர், நடிகவேள் எம்.ஆர். ராதா நினைவு நிழற்குடை அருகே மறியல் செய்ய வந்தபோது, காவல் துறையினர் அவர்களைத் தடுத்து கைது செய்தனர்.

பக்தியின் பெயரால் மக்களிடம் அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கைகள் பரப்பப்படும் போது, அதை எதிர்த்து அறிவியல் கருத்துகளை முன் வைத்து, பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வதை எதிர்க்கலாமா? இது அரசியல்சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமை என்று, கழகத் தோழர்கள் விழாவில் பேசுகையில் குறிப்பிட்டனர்.

கோவை இராமகிருட்டிணன்

கோவை இராமகிருட்டிணன் இது பற்றி குறிப்பிடுகையில் ‘இந்து முன்னணி’ என்ற பெயரில் நமது பார்ப்பனரல்லாத சமுதாயத்தைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்து தோழர்களையே பெரியார் இயக்கத்துக்கு எதிராக பார்ப்பான், களத்தில் இறக்கி போராடச் சொல்கிறான். பார்ப்பனர்கள் நேரடியாக களத்துக்கு வருவதில்லை. இதை இந்து முன்னணியில் உள்ள பார்ப்பனரல்லாத தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

சென்னை அய்.அய்.டி.யிலே பார்ப்பனர்கள் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளைப் பறித்தபோது, அவர்களுக்காக பெரியார் திராவிடர் கழகம் தான், போராடியது. இவர்கள் இந்துக்கள் என்பதற்காக, இராமகோபாலனோ, இல. கணேசன்களோ, அய்.அய்.டி. பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுத்தார்களா? இந்து அறநிலையத் துறையிலேயே கோயில் ஊழியர்கள் பணிக்கு, பெண்கள் விண்ணப்பிக்கக்கூடாது என்று, தமிழ்நாடு தேர்வாணையம் விளம்பரம் செய்தபோது, பெரியார் திராவிடர் கழகம் சார்பில், எங்கள் வழக்கறிஞர் எஸ்.துரைசாமி தான், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றார். இந்து பெண்களும் கோயில் ஊழியர்களாக உரிமை உண்டு என்று, உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இங்கே பாதிக்கப்பட்ட இந்துப் பெண்களுக்காக, குரல் கொடுத்தது பெரியார் திராவிடர் கழகம் தானே தவிர, இந்து முன்னணி குரல் கொடுத்ததா?

கோயில் கர்ப்பக்கிரகத்தில், இந்து பிற்படுத்தப்பட்டவனும், இந்து தாழ்த்தப்பட்டவனும் நுழைந்தால் சாமியே தீட்டாகி விடும் என்று இந்து பார்ப்பனர்கள் காலம்காலமாக நிலை நிறுத்தி வந்த இழிவை எதிர்த்துப் போராடியது யார்? காஞ்சிபுரத்திலே கருவறை நுழைவு போராட்டத்தை பெரியார் திராவிடர் கழகம் தானே நடத்தியது? இந்து முன்னணி தோழர்களே! உங்களின் நண்பர்கள் யார்? எதிரிகள் யார் என்பதை நீங்களே சிந்திக்க வேண்டும்? இந்து மதம் என்று ஒரு மதமில்லை; பார்ப்பன மதத்தையே இந்து மதம் என்று கூறி, நமது தலையில் சுமத்தி, பார்ப்பன ஆதிக்கத்துக்கு நம்மை பலிகடாவாக்குகிறான் பார்ப்பான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்” என்று எடுத்துரைத்தார்.

விடுதலை இராசேந்திரன் தனது உரையில் தமிழ்நாட்டில் பெரியார் நடத்திய பகுத்தறிவு இயக்கம் தான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் சமூக மாற்றங்களுக்கும் அடித்தளமாக இருந்தது என்பதை எடுத்துக்காட்டி, இந்தப் பிரச்சாரம் முடக்கப்பட்டால், மீண்டும் பார்ப்பன ஆதிக்கமே திரும்பும் என்பதை தமிழக ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என்று எச்சரித்தார். “கடவுள் மறுப்பு பிரச்சாரம் பக்தர்களை புண்படுத்துகிறது” என்று கூறுவோரை கேட்கிறோம். நீங்கள் கடவுளை மறுக்கவே இல்லையா? நோய் வந்தால் அது கடவுள் கொடுத்தது என்று ஏற்றுக் கொள்கிறீர்களா? மருத்துவமனைக்கு போய் நோய்க்கு சிகிச்சை பெறுவதே கடவுள் தந்த நோயை எதிர்க்கும் - கடவுளுக்கு எதிரான செயல்தானே?

உங்கள் வீட்டுப் பிரச்னை, சொத்துப் பிரச்னை, குடும்பப் பிரச்னைகளையெல்லாம் கடவுள் தந்த பிரச்னையாக கருதி ஏற்றுக் கொள்கிறீர்களா? அல்லது பிரச்னைகளைத் தீர்க்க கடவுளிடம் கோரிக்கை வைக்காமல், அரசிடமும், காவல்துறையிடமும், நீதிமன்றத்திடமும் ஓடுவதே, கடவுள் தந்த பிரச்னையை எதிர்க்கும் கடவுள் மறுப்பு செயல் தானே! முஸ்லிம் மதத்தையும், கிறிஸ்துவ மதத்தையும் ஏன் எதிர்க்கவில்லை என்று எங்களிடம் கேட்பதற்கு பதிலாக, இந்த மதங்களை எல்லாம் ஏன் அனுமதித்தீர்கள் என்று நீங்கள் நம்பும் சர்வசக்தி உள்ள கடவுள்களிடம் கேட்க வேண்டியதுதானே? இந்த மதங்கள் வராமலே தடுப்பதற்கு, உங்கள் கடவுளுக்கு சக்தியில்லாமல் போய்விட்டதா? அப்படி சக்தியில்லை என்று நீங்கள் கருதிக் கொண்டு, எங்களை நீங்கள் எதிர்க்க வருவது, எதைக் காட்டுகிறது? நீங்களே, கடவுள் நம்பிக்கையை கைவிட்டு, கடவுளைப் புண்படுத்துகிறீர்கள் என்பதைத்தானே காட்டுகிறது?

உலகின் ஒரே இந்து ஆட்சி நடந்த நேபாள நாட்டில் இந்து மன்னர் ஆட்சியை மக்கள் சக்தி ஒழித்து, ஜனநாயகத்தை நிலைநாட்டிவிட்டனரே. மக்கள் சக்தி பெரிதா? கடவுள் சக்தி பெரிதா? நேபாளத்துக்குப் போய் அந்த மக்களை எதிர்த்து ‘இந்து விரோதிகள்’ என்று கூறி, நீங்கள் போராடுவீர்களா?” என்று கேட்டார்.

ஆர். நல்லக்கண்ணு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, திருவாரூர் தங்கராசு அவர்களுக்கு ஆடை போர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து உரையாற்றினார். “தமிழகம் முழுதும் சுற்றி சுற்றி பகுத்தறிவுப் பிரச்சாரத்தை மக்கள் மன்றத்துக்கு எடுத்துச் சென்ற தன்னலமற்ற தியாகி திருவாரூர் தங்கராசு அவர்களின் பாராட்டு விழாவில் கலந்து கொள்வது கடமையாகும் என்று கருதியே இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்துள்ளேன். சிலர் பேச்சாளர்களாக இருப்பார்கள்; சிலர் எழுத்தாளர்களாக இருப்பார்கள். ஆனால் நல்ல பேச்சாளர், நல்ல எழுத்தாளர் என்பதோடு, நல்ல நாடக ஆசிரியர் என்ற பன்முகச் சிறப்பு கொண்டவர் திருவாரூர் தங்கராசு.

தன்னுடைய ஆற்றல்களையெல்லாம் அவர் வணிக நோக்கிற்காக பயன்படுத்தாமல் சமுதாயத்துக்காகப் பயன்படுத்தினார். இத்தகைய சுயநலமற்று வாழ்நாள் முழுதும் சமூகத்துக்கு உழைப்பவர்களுக்கு பாராட்டு விழாக்கள் நடத்தப்பட வேண்டியது அவசியமாகும். அத்தகைய விழாவை எடுத்துள்ள பெரியார் திராவிடர் கழகத்தை நான் பாராட்டுகிறேன். திருவாரூர் தங்கராசு அவர்களுடன் எங்களுக்கு நெருக்கமான உறவும், மரியாதையும் உண்டு. தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள் பிரச்சினைக்காக தொடர்ந்து போராடி வருவது எங்கள் இயக்கம். இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டங்கள் நடக்கும் போது, திருவாரூர் தங்கராசு அவர்கள் தொழிலாளர்கள், விவசாயிகள் உரிமைகளை அழுத்தமாக எடுத்துக் கூறி, எங்களுக்கு வலிமை சேர்த்துத் தருவார். அந்த வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அவரிடம் நெருக்கம் உண்டு.

அவர் எழுதி நடிகவேள் எம்.ஆர். ராதா நடித்த ரத்தக் கண்ணீர் நாடகம் - தமிழகம் முழுதும் 3000த்துக்கும் அதிகமாக மேடை ஏற்றப்பட்டுள்ளது. இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மேடை ஏற்றப்பட்ட நாடகம் ரத்தக் கண்ணீர் மட்டும் தான். இந்த நாடகம் அரங்கேற்றப்பட்ட காலத்தில் அதைப் பார்க்க எங்களுக்கு வாய்ப்பில்லை. அப்போது கம்யூனிஸ்ட் கட்சி, தடை செய்யப்பட்டு, நாங்கள் தலைமறைவாக இருந்த காலம். பிறகு - அது திரைப்படமாக வந்தபோது தான், நான் அதைப் பார்த்தேன். அந்த நாடகத்தில் கூறப்பட்ட கருத்துகள், இப்போதும் சமூகத்துக்கு தேவையான கருத்துகளேயாகும்.

இப்போதும் அந்த நாடகத்தை மேடை ஏற்ற முடியும். இன்றைக்கு சமுதாயத்துக்கு தேவையான கருத்துகளை இணைத்துக் கொண்டு, அந்த நாடகத்தை நடத்த முடியும். காலத்தின் தேவைக்கேற்ப நடத்தக்கூடிய யுக்திகளுடன், அந்த நாடகம் எழுதப்பட்டிருப்பது அதன் தனிச் சிறப்பாகும். இப்போது கன்னடத்தில், ரத்தக் கண்ணீர் திரைப்படமாக தயாரித்து வெற்றிகரமாக ஓடியிருக்கிறது என்ற செய்தியை, மேடையில் என்னிடம் திருவாரூர் தங்கராசு தெரிவித்தார்.

கம்யூனிஸ்ட் கட்சியினராகிய நாங்கள் நாத்திகர்கள் தான். ஆனால், மேடையில், நாத்திகப் பிரச்சாரம் செய்வது இல்லை. ஆனால், சமூகத்தில் கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றும் கூட்டம் அதிகமாகி வருகிறது. அமெரிக்காவின் அதிபர் புஷ், கடவுள் மீதும், மதத்தின் மீதும் பக்தி கொண்டவர்தான். நமது நாட்டின் ரூபாய் நோட்டுகளில், ‘‘I Promise to pay the bearer’ ’ என்றுதான் எழுதப்பட்டிருக்கும். ஆனால் அமெரிக்க டாலரில் ‘‘Trust the God’’ (கடவுளை நம்பு) என்றுதான் அச்சிடப்பட்டிருக்கும். அந்த அமெரிக்க டாலர் தான் உலகம் முழுதும் கடவுள் பெயரால் சுரண்டலை நடத்துகிறது. கொள்ளை அடிக்கிறது.

உலகின் தலைசிறந்த நாகரிகங்களில் ஒன்றான பாபிலோனியா நாகரிகம், செழித்து வளர்ந்த பூமிதான் ஈராக். அந்த ஈராக் மீது தான், அமெரிக்கா தனது படைகளை அனுப்பி ஆக்கிரமித்து, ஈராக் நாட்டையே சீரழித்தது. காரணம் - ஈராக் நாட்டின் அதிபர் சதாம் உசேன், அமெரிக்க டாலருக்கு பதிலாக அய்ரோப்பிய ஒன்றியங்களின் நாணயமான ‘ஈரோ டாலருக்கு’ பெட்ரோல் விற்பனையை மாற்றியது தான், அமெரிக்காவின் மிரட்டலுக்கு பதிலடி தந்த காரணத்தால்தான், சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.

நமது நாட்டில் - கடவுள், மூடநம்பிக்கைகள் - மக்கள் நலத் திட்டங்களையே முடக்கும் நிலைக்கு வந்து விட்டதைப் பார்க்கிறோம். 1860 இல் தொடங்கப்பட்ட திட்டம் சேது கால்வாய். இதே காலகட்டத்தில் தொடங்கப்பட்ட சூயஸ் கால்வாய் திட்டம், பனாமா கால்வாய் திட்டம் நிறைவேற்றி முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் ராமகோபாலன், சுப்ரமணியசாமி, ஜெயலலிதா போன்றவர்கள் ராமன் பாலத்தை இடிக்கக் கூடாது என்று உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடருகிறார்கள்.

பூமியையும், மலையையும், கடலையும்கூட தெய்வமாகத்தான் வணங்குகிறார்கள். எனவே பூமியிலோ, மலையிலோ, கடலிலோ எந்தத் திட்டமும் தொடங்கக் கூடாது என்று கூறுவீர்களா என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டபோது, நாம் நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்பு வேறு விதமாக வந்து விட்டது.

ஆன்மீகத்தை நம்பிய வள்ளலார்கூட கடவுள் பெயரால் கற்பிக்கப்பட்ட மூடநம்பிக்கைகளை “கலை உரைத்த கற்பனைகள்” என்றார். அந்த மூடநம்பிக்கைதான் ரூ. 1000 கோடி செலவிலான மக்கள் திட்டத்தை தமிழகத்தில் முடக்கிப் போட்டிருக்கிறது. எனவே பகுத்தறிவு இயக்கம் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று, தனது உரையில் குறிப்பிட்டார்.

திருச்சி வீ.அ. பழனி

மூத்த பெரியார் தொண்டர் திருச்சி வீ.அ. பழனி பேசுகையில் திருவாரூர் தங்கராசு அவர்களின் பல்வேறு கொள்கைத் தொண்டுகளை நினைவு கூர்ந்தார். பெரியாரை எதிர்த்த பார்ப்பனர்களுக்கு சரியான பதிலடியை தந்தது. “ஈ.வெ.ரா. இறப்பதென்றோ” எனும் தலைப்பில் திருவாரூர் தங்கராசு அவர்கள், ஒரு வெளியீட்டைக் கொண்டு வந்தபோது திராவிடர் கழகத் தோழர்களே அத் தலைப்பைக் கண்டு முதலில் ஆத்திரமடைந்து, பிறகு தெளிவு பெற்றனர்.

1947 ஆம் ஆண்டு முதல் நான் அவருடன் இணைந்து செயல்பட்டுள்ளேன். அவரது கொள்கை உறுதி எத்தகையது என்பது எனக்குத் தெரியும் அவர் ‘நவீன லீலா’ என்ற நாடகத்தை எழுதி நடித்தார். நானும் அந்த நாடகத்தில் நடித்தேன். கழகத் தோழர் லால்குடி முத்துச் செழியன் போன்றவர்கள் எல்லாம் அதில் நடித்தார்கள். மறைந்த டார்பிடோ ஏ.பி.ஜனார்த்தனம் அவர்கள் நடத்தி வந்த ‘தோழன்’ பத்திரிகைக்கு நிதி திரட்டுவதற்காக தஞ்சை நகரில் அந்த நாடகத்தை நடத்தினோம். சின்னாளப்பட்டியில், நாகர்கோயிலில், நன்னிலத்தில் கழக வளர்ச்சிக்கு நிதி திரட்ட திருவாரூர் தங்கராசு அவர்கள் இந்த நாடகத்தை நடத்தினார்.

கிருஷ்ணகிரியில் திருவாரூர் தங்கராசு அவர்கள் பேசும்போது கூட்டத்தில் பெரும் கலவரத்தை உருவாக்கி தாக்கினார்கள். சலசலப்புக்கு அஞ்சாமல், திருவாரூர் தங்கராசு துணிவுடன் எதிர்கொண்டார். அப்போது அரசு வழக்கு தொடர்ந்தது. வழக்கு நடத்துவதற்காக, அய்யா பணம் தர முன் வந்தபோது, அதை திருவாரூர் தங்கராசு வாங்க மறுத்துவிட்டார். வழக்கறிஞர் இல்லாமல், தானே நீதிமன்றத்தில் வாதாடி, வழக்கில் வெற்றி பெற்றார். நடிகவேள் நடத்திய தூக்குமேடை நாடகத்தில், திருவாரூர் தங்கராசு அவர்களே வேடமேற்று நடித்தார்.

கி.ஆ.பெ.விசுவநாதன் தலைமையில் ரத்தக் கண்ணீர் நாடகம் அரங்கேற்றமானது. ஆரம்பத்தில், ரத்தக் கண்ணீர் நாடகத்திலேயே அதை எழுதிய திருவாரூர் தங்கராசு, நடிகவேள் ராதாவுடன் நடித்து வந்தார். 1970 ஆம் ஆண்டில் மயிலாடுதுறையில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் இராமாயணம் நாடகம் நடந்தது. அதில் திருவாரூர் தங்கராசு இராவணன் வேடமிட்டு நடித்தார். நான் ராமன் வேடமிட்டு நடித்தேன். எனது மகன் இந்திரஜித் வேடத்தில் நடித்தார். நாடகத்தை பெரியார் இரவு வெகுநேரம் விழித்திருந்து பார்த்தார். நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது பாதியிலேயே நேரமாகிவிட்டது புறப்படலாம் என்று அவருடனிருந்த “சிலர்” கூறியபோது பெரியார், போக மறுத்து இறுதி வரை நாடகத்தைப் பார்த்து, நாடகம் முடிந்தவுடன், நாடகத்தை பாராட்டி உரையாற்றினார்.

பெரியார் நாடகத்துக்கு தலைமை ஏற்று நிகழ்த்திய அந்த உரை முதலில் ‘விடுதலை’ நாளேட்டில் வெளியிடப்படவில்லை. ஏன் அதை வெளியிடவில்லை என்று பெரியாரே கேட்ட பிறகுதான், அது வெளியிடப்பட்டது. கீழப்பாவூர், உள்ளிக்கோட்டை, மன்னார்குடியில் நடந்த ராமாயணம் நாடகங்களில் திருவாரூர் தங்கராசு, ராவணன் வேடமிட்டு நடித்துள்ளார். எனவே, சிறந்த பேச்சாளராக, எழுத்தாளராக மட்டுமின்றி, நாடக நடிகராகவும் இருந்து பெரியார் கொள்கைகளைப் பரப்பியவர் திருவாரூர் தங்கராசு. இந்த விழாவில் நான் பங்கேற்றதற்காக பெருமைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டார்.

இந்த விழா நாத்திகர் விழாவாக நடப்பது அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இத்தகைய நாத்திகப் பகுத்தறிவுப் பிரச்சாரம் தான் தமிழகத்தில் தீவிரமாக நடத்தப்பட வேண்டும் என்பதே என் விருப்பம் என்று கூறி முடித்தார். இறுதியில் திருவாரூர் தங்கராசு 45 நிமிடம் ஏற்புரை நிகழ்த்தினார். இறுதி வரை கூட்டம் கலையாது, அவரது உரையை செவிமடுத்தது. மாவட்ட செயலாளர் உமாபதி நன்றி கூற இரவு 10.45 மணியளவில் நிகழ்ச்சி முடிவடைந்தது. விழாவுக்கு திருவாரூர் தங்கராசு அவர்களின் துணைவியார், மகள்கள், மருமகன், பேரன் மற்றும் மூத்த பெரியார் தொண்டர்கள் பலரும் வந்திருந்து சிறப்பித்தனர்.

கழகத் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், பேராசிரியர் புதுவை இராசேந்திரன் உள்ளிட்ட பல தோழர்கள் ஆடை போர்த்தி சிறப்பு செய்தனர். பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருந்தனர். இரவு 10.45 மணியளவில் நிகழ்ச்சி முடிவடையும் வரை, கூட்டத்தினர் அனைவரும் உரைகளைக் கேட்டது கூட்டத்தின் தனிச் சிறப்பாக அமைந்தது. மாவட்ட செயலாளர் உமாபதி நன்றி கூற விழா நிறைவடைந்தது.

“பெரியாரியல் பேரொளி!”

திருவாரூர் தங்கராசு அவர்களின் 60 ஆண்டுகாலத்துக்கும் மேலான பெரியார் லட்சியத் தொண்டை பெருமையுடன் நினைவு கூர்ந்து பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ‘பெரியாரியல் பேரொளி’ என்ற விருதை வழங்கி, விழாவில் சிறப்பிக்கப்பட்டது. விருதுக்கான நினைவுப் பரிசை மேடையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு, கழகத் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், கழகத்தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் பலத்த கரவொலிகளுக்கிடையே வழங்கினர். புதுவை மாநில பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தலைவர் லோகு. அய்யப்பன் நினைவுப் பரிசினை வழங்கினார். கோவை மாவட்டக் கழகம் சார்பில் பொதுச்செயலாளர் கோவை இராமகிருடடிணன், சென்னை மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் தபசி குமரன், செயலாளர் உமாபதி ஆடைகளைப் போர்த்தினர்.

“பெரியாருக்கே சேரும்!”

திருவாரூர் தங்கராசு தனது ஏற்பரையில் - “எனக்கு அளிக்கப்பட்ட பெருமை, சிறப்பு அனைத்தும் பெரியார் ஒருவருக்குத்தான் சேரும். பெரியாரின் கருத்துகளைத்தான் நான் அவரது எளிய தொண்டன் என்ற முறையில், என்னால் இயன்ற அளவில் பரப்பி வந்திருக்கிறேன். எனது பணியைப் பாராட்டி விழா எடுக்கும்போது, அரசு அலுவலர்கள், பணி ஓய்வு பெறும்போது விழா எடுப்பதுபோல், ஒரு வேளை, உனது பணி போதும் என்று கூறி விழா எடுக்கிறார்களோ என்றுகூட தோன்றுகிறது” என்று குறிப்பிட்டபோது, அருகில் இருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘அப்படி நாங்கள் கருதவில்லை’ என்று கூறவே, ‘மகிழ்ச்சி எனது பணி தொடர வேண்டும் என்றே விரும்புகிறார்கள்’ என்று திருவாரூர் தங்கராசு கூறினார். அதை ஆதரிக்கும் வகையில் கூட்டத்தினர் பலத்த கரவொலி எழுப்பினர்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com