Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜூன் 2008

அறிவாளிகளுக்கு இறை நம்பிக்கை குறைவு

சாதாரண மக்களுடன் ஒப்பிடுகையில் அறிவாளிகளுக்கு இறை நம்பிக்கை குறைவாக உள்ளதாக, லண்டன் அல்ஸ்டெர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் தாங்கள் நடத்திய ஆய்வின் மூலம் இது தெரிய வந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதிலும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் அறிஞர்களுக்கு இறை நம்பிக்கை மிக மிகக் குறைவு. தாங்கள் புத்திக் கூர்மையோடு திகழ்வதற்கு தங்களது திறனே காரணம். இதற்கு வேறு காரணம் எதுவும் இல்லை என்றே பெரும்பாலான பிரிட்டன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றனர்.

பிரிட்டினில் ஆரம்பக் கல்வி பயில்பவர்கள் மத்தியில் இறை நம்பிக்கை அதிகம் உள்ளது. அவர்கள் வளர்ந்து அறிவு முதிர்ச்சிப் பெறப்பெற அவர்கள் மத்தியில் இறை நம்பிக்கை மெதுவாக குறைய ஆரம்பித்து விடுகிறது. அந்த வகையில் 20-ம் நூற்றாண்டில் 137 வளரும் நாடுகளில் மக்கள் மத்தியில் சமய நம்பிக்கை குறைந்து வருகிறது. மக்கள் அறிவாளிகளாக மாறி வருவதே இதற்குக் காரணம்.

பிரிட்டனில் 3.3 சதவீதம் பேர்தான் இறை நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தனர். 68.5 சதவீதம் பேர் தங்கள் மீதான நம்பிக்கை தவிர்த்து வேறெந்த நம்பிக்கையும் இல்லை என தெரிவித்ததாக இந்த ஆராய்ச்சிக் குழுவில் இடம் பெற்ற பேராசிரியர் ரிச்சர்டு லைன் தெரிவித்தார்.

நன்றி : ‘தினமணி’ 13.6.2008

கடவுளை ஏன் எதிர்க்கிறோம்?

முதலில் சாதி வித்தியாசம் என்கிற கொடுமைத் தன்மை என்பது இந்த நாட்டைவிட்டு ஒழிய வேண்டுமா, வேண்டாமா என்ற முடிவு தெரிந்துவிட வேண்டும். இரண்டாவதாக, ஒரு மனிதனுக்குக் கீழோ, மேலோ சாதி என்பது ஒன்றுமில்லை என்ற முடிவுக்கு வந்தாக வேண்டும். அதற்கு மேல், சாதி வித்தியாசத்திற்கு ஆதாரமாயுள்ளவைகளை அடியோடு அழிக்க முயல வேண்டும். அப்படிச் செய்யாமல், உயர்வு தாழ்வைப் போக்கிவிடலாமென்று கருதுதல் நுனிமரத்தில் நின்று கொண்டு அடிமரத்தை வெட்டுகிற மனிதனின் முட்டாள் செய்கையையே ஒக்கும்.

சாதி ஆசாரம் என்பவை மதம் என்னும் மரத்தைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. சாதியை மதத்திலிருந்து பிரித்துத் தள்ள வேண்டும். இப்படிப் பிரிப்பதற்கு முடியாத வரையில் சாதியும் மதமும் ஒன்றோடொன்று இறுகப் பின்னிக் கொண்டிருக்குமேயானால் அந்த இரண்டையும் வீழ்த்தியேயாக வேண்டும். முன்னிருந்த அந்த உயர்ந்த சாதிக் கபடர்கள் அவ்வளவு தந்திரமாக ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத வகையில் சாதியையும், மதத்தையும் பிணைத்துப் பின்னிக் கொண்டிருக்கும்படி இறுகக் கட்டி வைத்திருக்கிறார்கள். ஆகையால் சாதியை அழிக்கத் தலைப்படுகையில் மதமும் வெட்டப்படுகிறதே என்று பயப்படாமல் சாதி மரத்தையும், மத மரத்தையும் சேர்த்து நெருப்பு வைத்துச் சாம்பலாக்க வேண்டியது தடுக்க முடியாத அவசியமாகும். இதிலும் ஒரு சங்கடம் இருக்கிறது. அதாவது, மதமானது வேதம், புராணம் என்பவைகளுடன் கட்டிப் பிணைக்கப்பட்டிருக்கிறது.

ஆதலால், இந்த வேதம், புராணங்களிலிருந்து மதத்தைப் பிரிக்க வேண்டும். இதிலும் பிரிக்க முடியாதபடி கட்டு பலமாக இருந்தால், இங்கும் இரண்டையும் சேர்த்து நெருப்பு வைக்க வேண்டியதுதான். ஆனால் இந்த வேதம், கடவுளுடன் சேர்த்துக் கட்டி வைக்கப்பட்டிருக்கிறது. இதிலும் பிரிக்க முடியாத பிணைப்பு இருந்தால் அந்தக் கடவுள் என்பதன் தலையிலும் கை வைத்துத்தான் ஆக வேண்டியிருக்கிறது. வேதத்தை இழுத்தால் கடவுளுக்கும் அசைவுதான் கொடுக்கும். இதில்தான் பெருத்த சங்கடப்படக்கூடும். கடவுளை அசைப்பதா என்று பயப்படக் கூடாது. எனவே சாதி, மதம், வேதம், கடவுள் எல்லாவற்றையும் ஒழித்துத்தான் ஆக வேண்டும். இவற்றில் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்து வராது.

இப்படி நாம் ஒன்றைவிட்டு ஒன்றைப் பிரிக்க முடியாமல் எல்லாவற்றையும் சேர்த்துக் கொளுத்தும்போது, உண்மையில் ஏதாவது சத்து இருந்தால் அது அழியாது. இப்படி நாம் சாதி வித்தியாசத்தை ஒழிக்க முற்படுகையில் மதமென்பதும் ஒழிந்து போகுமேயென்றால் அந்த மதம் நமக்கு வேண்டாம். அது இப்போதே அழிந்து போகட்டும். மதத்தைப் பொசுக்கும்போது வேதமும் பொசுங்கிப் போவதாயிருந்தால் அந்த வேதம் என்பது இப்போதே வெந்து போகட்டும். வேதத்தை ஓட்டும்போது கடவுளும் ஓடிவிடுவாரென்றால் அந்தக் கடவுள் என்பதும் இந்த நிமிஷத்திலேயே ஓடிவிடட்டும். அப்பேர்ப்பட்ட கடவுள் நமக்கு வேண்டவே வேண்டாம்.

- பெரியார் (2.10.1929 ‘திராவிடன்’)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com