Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜூன் 2008

புதுவையில் கழகம் நடத்திய இருநாள் பயிற்சி முகாம்

புதுவையில் பெரியார் திராவிடர் கழக பயிற்சி முகாம் - மே 31, ஜூன் 1 தேதிகளில் சிறப்புடன் நடைபெற்றது. புதுவை அரியாங்குப்பம் அருகே உள்ள - ஒரு மாந்தோப்பில் இயற்கைச் சூழலில் நடந்த இந்த பயிற்சி வகுப்பில், 20 பெண்கள் உட்பட, 125 தோழர்கள் பங்கேற்றனர்.

மே 31 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் சமூகப் பாகுபாடுகள் எனும் தலைப்பில் தோழர் தேவ நேயன் பயிற்சியாளர்களையும் பங்கேற்க வைத்து - பால், சாதி அடிப்படையிலான பாகுபாடுகளையும், அதன் வழியாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதையும் விளக்கினார். தொடர்ந்து - பயிற்சியாளர்கள், 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, சமூகத்தில், அடிமைத்தனத்தையும், பாகுபாட்டை யும் நிலைநிறுத்தும் பல்வேறு கற்பிதங்கள், பழமொழிகள் பற்றி, குழுவினர் விவாதித்து, அதைத் தொகுத்தனர். ஒவ்வொரு குழுவினரும் தொகுத்த கற்பிதங்கள் தொகுக்கப்பட்டு, அதில் அடங்கியுள்ள பாகுபாடுகள், விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டது. மதியம் 2.30 மணியளவில் அனைவருக்கும் புலால் உணவு வழங்கப்பட்டது.

மீண்டும் 3 மணியளவில் பயிற்சிகள் தொடர்ந்தன. வழக்கறிஞர் சுந்தர்ராசன், பயிற்சியாளர்களின் பங்கேற்போடு, உலக மயம் சுற்றுச் சூழல் பற்றிய விரிவான விளக்கங்களைத் தந்தார். இந்தியாவின் சட்டம், ராணுவம், விவசாயம், கல்வி, மருத்துவத் துறைகளில் ‘உலகமயமாதல்’ என்ற சுரண்டும் கொள்கை உருவாக்கியுள்ள பாதிப்புகளை எடுத்துக்காட்டினார். 1947 இல் உருவான காட் ஒப்பந்தத்திலிருந்து தொடங்கி, 1993 இல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே முழு விவரம் தெரிவிக்கப்படாமல் அன்றைய மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டது வரை விளக்கினார். அணுசக்தி யினால் உருவாகும் ஆபத்துகளையும், அணுமின் நிலையங்கள் செயல்படும் பகுதியில், அணுக்கதிர் வீச்சால், மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் வெளிநாட்டு வழக்கறிஞர்கள் - இந்தியாவில் தொழில் நடத்த அனுமதிக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டினார். இந்தியாவில் பொருள்களை உற்பத்தி செய்யும் முறைக்கு மட்டுமே காப்புரிமை வழங்கும் சட்டம், அமுலில் இருந்ததால், இந்தியாவில், மருந்து பொருள்கள் குறைந்த விலையில் கிடைத்து வந்தன. சர்வதேச நிர்ப்பந்தத்துக்கு அடிப்பணிந்த இந்திய ஆட்சி, ‘உற்பத்தி செய்யும் முறைகளுக்கு’ இருந்த காப்புரிமையை உற்பத்தியான “பொருள்”களுக் கான காப்புரிமையாக மாற்றி, சட்டத்தைத் திருத்தி யதால், ஏகாதிபத்திய நாடுகள் - பொருள்களுக்கு காப்புரிமை கோரி, இந்தியாவின் உற்பத்தியில் தலையிட்டு, விலைகளை ஏறச் செய்துவிட்டன. இந்த திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் கையெழுத்திட்ட நாள் - சுனாமி தாக்குதல் நடந்த 2004 டிசம்பர் 26 என்ற அதிர்ச்சியான தகவலையும் கூறினார். கொக்கோ கோலா போன்ற பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள்; பன்னாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்கள்; உலகமயமாக்கத்தைப் பயன்படுத்தி நடத்தி வரும் சுரண்டலையும், பன்னாட்டு விதை நிறுவனங்கள் இயற்கை வளத்தை அழித்து வருவதையும், விரிவாக எடுத்துரைத்தார். பயிற்சியாளர்கள் இது தொடர்பாக பல கேள்விகளை எழுப்பினர். அது தொடர்பான விவாதங்கள் நடந்தன.

தொடர்ந்து தேவநேயன் - ஊடகங்கள் பற்றியும், ஊடகங்களில் வெளிவரும் விளம்பரங்கள் பற்றியும், குழந்தைகள் உரிமைகளில், இவைகள் நிகழ்த்தும் கொடூரமான குறுக்கீடுகள் பற்றியும், பல்வேறு உதாரணங்களை எடுத்துக்காட்டியும் பேசினார். முதல் நாள் நிகழ்ச்சிகள் இரவு 7.30 மணியளவில் நிறைவடைந்தன.

இரண்டாம் நாள்

இரண்டாம் நாள் ஜூன் 1 ஆம் தேதி காலை 10 மணியளவில் பயிற்சி தொடங்கியது. பங்கேற்பாளர்கள், முதல் நாள் பயிற்சியில் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்தனர். பங்கேற்பாளர்கள் எழுப்பிய அய்யங்களுக்கு விளக்கம் என்ற வடிவத்தில் விவாதம் தொடங்கியது. பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், உலகமயமாக்கலினால் பார்ப்பன ஆதிக்கம் மேலும் உறுதியாகியுள்ள நிலைமையையும், தனியார் துறைகள் வளர்ச்சியினால், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் வேலை இழந்து நிற்பதையும், தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்கும் பிரச்சினையை மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளதையும் எடுத்துக்காட்டி, தற்போது கணினி துறையிலும், ‘பி.பி.ஓ.’, கால்சென்டர்’ களிலும் 70 சதவீதத்துக்கு மேல் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்துவதை பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளில் அடங்கியுள்ள புள்ளி விவரங்களை எடுத்துக்காட்டி விளக்கினார். உலகமயமாக்கல் என்ற சுரண்டல் கொள்கையை எதிர்க்கும்போது, இந்துத்துவா சக்திகளிலிருந்து மாறுபட்டு நிற்க வேண்டிய புள்ளிகளை பெரியாரில் கண்ணோட்டத்தில் எடுத்துக் கூறினார். தொடர்ந்து - கழகத் தலைவர் கொளத்தூர் மணி இடஒதுக்கீட்டின் வரலாறு, நீதிமன்றம் போட்ட தடைகள், அதற்கு நீதிமன்றம் கூறிய சமூக நீதிக்கு எதிரான காரணங்களையும், ‘கிரிமிலேயர்’ முறையினால் வரும் பாதிப்புகளையும் விளக்கிப் பேசினார்.

1.30 மணியளவில் அனைவருக்கும் புலால் உணவு வழங்கப்பட்டது. மீண்டும் 2.30 மணியளவில் பயிற்சி தொடங்கியபோது பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், பெரியார் திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள், அணுகுமுறைகள், கழகத் தோழர்கள் இயக்கத்தை மேலும் வளர்த்தெடுக்க மேற்கொள்ள வேண்டிய பல்வேறு அணுகு முறைகள், பெரியார் இயக்கத்தின்மீது கூறப்படும் விமர்சனங்களுக்கான விளக்கங்களைத் தந்து உரையாற்றினார்.

தொடர்ந்து பயிற்சியாளர்கள், இரண்டு நாள் பயிற்சியில் தாங்கள் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதோடு, கழகத்துக்கும், கொள்கைக்கும் தங்களின் பங்களிப்பு, எத்தகையதாக இருக்கும் என்ற உறுதியை வழங்கினர். இறுதியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, குடும்ப உறவுகளுக்கு மாற்றாக, இயக்க உறவுகள் வலிமை பெறும் வகையில், கழகத்தின் செயல்பாடுகள் முன்னேற வேண்டும் என்பது குறித்தும், ‘தமிழ்த் திருமண முறை’ என்ற சைவர்கள் திணித்த திருமண முறையின் நோக்கமே சுயமரியாதை திருமணத்துக்கு எதிரானதுதான் என்பதை விளக்கியும், நிறைவுரையாற்றி, பயிற்சி முகாமை முடித்து வைத்தார். இரவு 7 மணியளவில் பயிற்சி முகாம் நிறைவடைந்தது.

திறந்த விவாதங்களோடு புதிய பயிற்சி முறைகளைப் பின்பற்றி நடந்த இந்த பயிற்சி முகாம், பெரியார் திராவிடர் கழகத்தின் பெரியாரியல் செயல்பாடுகளை, மேலும் விரிவான தளத்துக்கு நகர்த்தி, பெரியாரியலை வளர்த்தெடுப்பதாக அமைந்திருந்தது. பயிற்சியாளர்களுக்கு ஏராளமான தகவல்கள், விளக்கங்களைத் தருவதாகவும் அமைந்திருந்தது. புதுவை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் தலைமையில் தோழர்கள் முகாமுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
- நமது செய்தியாளர்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com