Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜூன் 2007

இரட்டைக் குவளைகளை உடைப்போம்!
கோவை இராமகிருட்டிணன் எழுச்சி உரை

தேனீர் கடைகளில் தீண்டாமையை நிலைநிறுத்தும் இரட்டை தம்ளர்களை உடைக்கும் கிளர்ச்சிக்கு தயாராவீர் என்று, கழகப் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் அறை கூவல் விடுத்தார். ஈரோடு கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையிலிருந்து - தமிழ்நாட்டிலேயே அதிகமாக ஈரோடு மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட தோழர்கள் ‘பெரியார் சிலை உடைப்புக்குப் பிறகு நடைபெற்ற நிகழ்வுகளில் சிறைப்படுத்தப் பட்டதற்கு எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாத்திகர் விழா - தஞ்சை சாதி ஒழிப்பு மாநாட்டு விளக்கக் கூட்டம் - வழக்கறிஞர்களுக்குப் பாராட்டு என்று இயக்க நட வடிக்கைகளை ஒட்டிய மூன்று தலைப்புகளில் இன்றைய நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதே ஈரோட்டு மண்ணில் பிறந்த பெரியார் தான் 95 வயது வரை கடவுள் இல்லை என்று வலம் வந்து சுற்றிச் சுழன்றார். காவல்துறை அதிகாரிகள் அரசாணைக்கு எதிராக தீ மிதிக்கிறார்கள். ஆனால், நாங்கள் தீச்சட்டி எடுத்தால் தடுக்கிறார்கள். அதிக சக்தியுள்ளதாகக் கூறப்படும் பண்ணாரி மாரியம்மனோ, ஈரோடு பெரிய மாரியம்மனோ - எங்களை தீச்சட்டி எடுக்கவேண்டாம் என்று கூறவில்லை. காவல்துறை தான் தடைபோடுகிறது.

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் கதாநாயகனைக் கொண்ட ஒரு படம் ‘ரிலீஸ்’. ஆனால், அதற்காக ரசிகர்கள் மண்சோறு சாப்பிடுகிறார்கள். கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்கிறார்கள் - அதே படத்தின் டிக்கெட் 500 ரூபாய்க்கு விற்கிறது. கர்நாடகாவில் எந்தத் தமிழ்ப் படத்தையும் அனுமதிக்காதவர்கள், கன்னட நடிகர் படத்தை மட்டும் 13 திரையரங்குகளில் அங்கே திரையிடுகிறார்கள். இவர் நம்ம ஆள் என்று மகிழ்ச்சியடைகிறார்கள். தமிழனுக்கு ரோசம் வர வேண்டாமா? தமிழன் இளக்காரமானவனாக, ஏமாளியாகவே வாழ வேண்டுமா?
மானமும், அறிவும் பெறுவதற்கே நாத்திகர் விழாவை நடத்துகிறோம். 1957 இல் அரசியல் சட்டத்தில் சாதிக்கு ஏற்புக் அளிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, தந்தை பெரியார் ஒரு மாநாட்டைக் கூட்டுகிறார்.

பேருந்து வசதி, தகவல் வசதி போன்ற எதுவும் இல்லாமல், பொருளாதார வசதியும் இந்த அளவு இல்லாத அந்தக் காலத்தில், பெரியார் ‘வா’ என அழைக்கிறார். மூன்று லட்சம் பேர் கூடுகிறார்கள். அப்போது பிரதமர் நேரு; முதலமைச்சர் பக்தவத்சலம்! அரசியல் சட்டத்தில் சாதியைப் பாதுகாக்கும் அம்சத்தை எடுத்தால் - போராட்டத்தைக் கைவிடுவதாகவும், இல்லையென்றால் அரசியல் சட்டப் பிரிவுகளை எரிக்கும் போராட்டத்தை நவம்பர் 26 இல் நடத்தியே தீருவேன் என்றும் பெரியார் அறிவித்தார்.

உடனே, பெரியாருக்காகவே சட்டமன்றம் கூடியது. முன்னதாக 1952 இல் இடஒதுக்கட்டுக்காக பெரியாரின் போராட்டத்திற்குப் பின்பு - காமராசர் டெல்லி சென்று வற்புறுத்திய பிறகு, இந்தியாவின் முதல் அரசியல் சட்டதிருத்தம் நடந்தது. அதன் பின் இரண்டாம் முறையாக 1957 இல் காந்தி பட அவமதிப்பு - தேசியக் கொடி எரிப்பு - அரசியல் சட்ட எரிப்பு - போன்றவைகளுக்காக கடும் தண்டனை கொடுப் பதற்காக தனியாக சட்டம் போட்டார்கள்.

அப்படி சட்டம் போட்டதற்குப் பிறகு, சட்டத்தை எரித்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று சட்டம் வந்ததற்குப் பிறகு - பெரியார் அறிவித்த 1957 நவம்பர் 26 போராட்டத்தில் 10,000 பேர் கலந்து கொண்டார்கள். 3000 பேர் கைதானார்கள். 5 பேர் சிறையிலும், 13 பேர் வெளியில் வந்தும் இறந்தார்கள். சிறையில் இருந்த போது இறந்த 2 பேரை வெளியில் பிணத்தைக் கொடுக்காமல், சிறையிலேயே புதைத்துவிட்டது பக்தவத்சலம் அரசு. மணியம்மையார் வேங்கையாகச் சீறி எழுந்தார். பிறகு 2 பேரையும் தோண்டி எடுத்து பிணத்தைக் கொடுத்தார்கள். சிறைபட்டவர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் தண்டனை கிடைத்தது. பெரியார் 19 முறை சிறை சென்றிருக்கிறார். தஞ்சையில் 1957 போராட்டத்தில் சிறை சென்று இன்னும் உயிரோடு இருக்கும் அந்த மான மறவர்களைப் பாராட்டிச் சிறப்பித்தோம். அதே வழியில் தான் இப்போது எங்கள் தோழர்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறைச் சென்றவர்கள், தன்னெழுச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். எந்த வித எதிர்பார்ப்புமின்றிப் போராடினார்கள்.

1944 இல் இனிவரும் உலகம் என்ற தனது நூலில் பெரியார் வாடகைத் தாய், சோதனைக் குழாய்க் குழந்தை - என்பது பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார். பெரியார் கண்ட கனவு இப்போது நனவாகியிருக்கிறது. ஆனால், பெரியார் காலத்தி லிருந்த சாதியம் இன்னும் இருக்கிறது. இரட்டை தேநீர் குவளைகள் - கிராமங் களில் அகலவில்லை.

எனவேதான், தஞ்சை மாநாட்டில் வருகின்ற நவம்பர் 15 இல் தமிழ்நாடு முழுவதும் இரட்டைக் குவளைகள் இருக்கும் கடைகளைச் சென்று தம்ளர்களை உடைக்கும் போராட்டத்தை அறிவித்துள்ளோம். அதற்கான பட்டியல்களை தமிழ்நாடு முழுவதும் தயார் செய்யும் பணியை தோழர்களே உடனே தொடங்குங்கள்... தொடங்குங்கள்... என்று கூறி முடிக்கிறேன்” - இவ்வாறு கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் உரையாற்றினார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com