Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜூன் 2007

‘ராஜஸ்தான்’ கலவரம் உணர்த்துவது என்ன?

ராஜஸ்தானில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றிருந்த குஜ்ஜார் சமூகத்தினர் (மக்கள் தொகை 8 சதவீதம்) தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி தொடங்கிய போராட்டம் - வன்முறையாக வெடித்து 27 உயிர்களைப் பலிவாங்கிய பிறகு, இது பற்றி ஆராய, குழு ஒன்றை அமைப்பதாக, மாநில பா.ஜ.க. முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா அறிவித்துள்ளார். குஜ்ஜார் சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், பிரச்சனை மிகவும் சிக்கலானதற்குக் காரணம், ஜாட் சமூகத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததுதான். சில ஆண்டுகளுக்கு முன் ‘ஜாட்’ சமூகத்தினர் (12 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து - கல்வி, வேலை வாய்ப்புகளில், குஜ்ஜார் சமூகத்தினரின் வாய்ப்புகள் மோசமாகக் குறைந்துவிட்டன. பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, குஜ்ஜார் சமூகத்தினரைப் பழங்குடியினப் பட்டியலில் சேர்ப்பதாக வாக்குறுதி தந்திருந்தது. ஆனால், பழங்குடியினர் பட்டியலில் ஒரு சமூகத்தினரை சேர்க்கும் உரிமை மத்திய அரசுக்குத்தான் உண்டு. மாநில அரசுக்கு இல்லை. இதற்கிடையே ராஜஸ்தானில் பழங்குடியினர் பட்டியலில் உள்ள ‘மீனாஸ்’ சமூத்தினர், குஜ்ஜார்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், பிரச்சினை மேலும் சிக்கலாகிவிட்டது.

இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு - பெரியார் வலியுறுத்தியதுபோல், வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வழங்குவதுதான். கல்வி, வேலை மற்றும் அரசியல் உரிமைகள், அனைத்து வகுப்பினருக்கும், அவர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்துக்கேற்ப, பகிர்ந்து அளிக்கும்போது மட்டுமே உண்மையான சமத்துவத்துக்கும், ஜனநாயகத்துக்கும் வழி திறக்கப்படும்.

பார்ப்பன உயர்சாதியினரால் மறுக்கப் பட்ட உரிமைகளுக்குப் போராடுவது சமூக நீதிக்கான போராட்டம். அதைத்தடுத்து நிறத்த முடியாது. சமூகநீதியை நீண்ட காலம் தள்ளிப் போட்டால், அது ரத்தம் சிந்தும் புரட்சியைத்தான் உருவாக்கும்.

அதே நேரத்தில், சமத்துவம் தான் அனைத்துக்கும் அடிப்படை.

சாதி அமைப்பு - சமத்துவத்துக்கு எதிரானது. சாதியின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் கேட்பது, சாதி அமைப்பு முறையால் பறிக்கப்பட்ட உரிமைகளுக் கான பரிகாரம். அதே நேரத்தில் சாதியமைப்பு முறையும் தகர்க்கப்பட்டாக வேண்டும்.

ராஜஸ்தான் மாநிலத்தில், குஜ்ஜார் சமூகமும், மீனாஸ் சமூகமும், சாதிப் பஞ்சாயத்துக்களை நடத்தி, தங்களது சாதி “தர்மங்களை” நிலைநாட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. சட்டப்பூர்வமான பஞ்சாயத்துகளைவிட அதிகாரத்தை தங்கள் கரங்களில் எடுத்துச் செயல்படும் இந்த சாதி பஞ்சாயத்துகள் - சாதி விதிகளை மீறாமல் பாதுகாப்பது, சாதி மறுப்பு திருமணம் செய்வோரைத் தண்டிப்பது உட்பட தங்கள் சாதிக்குள் நடக்கும் பல்வேறு பிரச்சினைகளை விசாரித்து தீர்ப்பு கூறுகின்றன. இரண்டு சாதி பஞ்சாயத்துகளிலும் உள்ள இளைஞர்கள் தான் அண்மையில் நடந்த கலவரங்களைத் தீவிரமாக்கினார்கள் என்று செய்திகள் வருகின்றன.

தமிழ்நாட்டிலும், இத்தகைய சாதி பஞ்சாயத்துகள் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக - அருந்ததி சமூக மக்களை அடக்கி, ஒடுக்கி வைப்பதற்காகவே நிதி திரட்டி செயல்படும் ‘பண்டு கிராமங்கள்’ திண்டுக்கல், ஒட்டன் சத்திரம், பழனி போன்ற பகுதிகளில் செயல்படுகின்றன. தேனீர் கடைகளில் இரட்டை தம்ளர், இரட்டை இருக்கைகளை எதிர்த்து - பெரியார் திராவிடர் கழகம் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டபோது, இந்த ‘பண்டு கிராம’ சாதிவெறியர்கள்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கழகப் பிரச்சாரத்தைத் தடுத்துள்ளனர். இதற்குக் காவல்துறையும் உடந்தையாகவே இருக்கிறது. சேலத்துக்கு அருகே காடம்பட்டி எனும் கிராமத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திரவுபதியம்மன் கோயிலுக்குள் பல்லாண்டு காலமாகவே தலித் மக்கள் நுழைய முடியவில்லை. கடந்த ஜூன் 4 ஆம் தேதி அவர்கள் கோயில் நுழைவு போராட்டத்தை அறிவித்து, பிறகு, ஆளும் கட்சியின் உறுதியின் பேரில், போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இப்படி பல ‘கண்டம்பட்டிகள்’ இருக்கவே செய்கின்றன. தீண்டாமைத் தடுப்புச் சட்டங்கள் செயலிழந்து, சாதிவெறியினர் காலடிகளில் மிதித்து நசுக்கப்பட்டுக் கிடக்கின்றன. ராஜஸ்தான் போன்ற மாநிலங்களைப் போல், மிக மோசமான நிலை தமிழகத்தில் இல்லை என்று கூறலாமே தவிர, தமிழ்நாட்டில் தீண்டாமையும் - சாதி ஆதிக்கமும் தொடரவே செய்கின்றன.

வகுப்புவாரி உரிமை என்ற சமநீதிக்குப் போராடும் அதே நேரத்தில், சாதி அமைப்புக்கு எதிரான போராட்டத்தையும் தீவிரமாக நடத்தியாக வேண்டும். ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த கலவரமும் - இதையே உணர்த்துகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com