Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜூன் 2007

எப்படி வந்தது “ராமன்” பாலம்?

“மக்களிடம் மரபு வழியாக நிலை பெற்றுள்ள நம்பிக்கைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து, மக்களைத் திருத்த முடியாது. எனவே ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை முற்றாக எதிர்த்துப் பெரியார் பிரச்சாரம் செய்வது, எதிர்விளைவுகளையே உருவாக்கும்” - என்று பல “முற்போக்கு”வாதிகள் - பெரியார் பிரச்சாரத்தைக் கடுமையாகக் குறை கூறினார்கள். இன்னும் ஒரு படி மேலே போய், ராமாயணத்தில் வரும் ராமன் பாத்திரம் - பொதுவுடைமைப் பேசுகிறது. அயோத்தியில் சோசலிச ஆட்சி நடந்துள்ளது என்றெல்லாம், பிரச்சாரம் செய்து நூல் எழுதிய “முற்போக்காளர்களும்” தமிழ்நாட்டில் இருக்கவே செய்தார்கள்.

‘முற்போக்குக் கருத்துக்களை பழமையில் தேடாதீர்கள். அரிசி தேவை என்றால் அரிசி கடைக்குப் போய் வாங்குங்கள். மலத்தில் அரிசி பொறுக்காதீர்கள்’ என்று பெரியார் அவருக்கே உரிய மொழியில் பதிலளித்தார். பெரியாரின் பதில் - அன்று பலரை முகம் சுளிக்க வைத் திருக்கலாம். ஆனால், பெரியாரின் அணுகுமுறைதான் சமூகத்துக்குப் பயன்தரும் என்பதை காலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. அயோத்தி ராமன் அரசியல் மய்யப் பிரச்னையாக மாற்றப்பட்டபோது - ‘ராமன்’ கடவுள் அல்ல; அவதாரம் அல்ல; ராமாயணம் பொய்; புனைவு; என்ற கருத்தைப் பேச வேண்டிய கட்டாயம் உருவானது. ‘ராமனை’ அரவணைத்துப் போக வேண்டும் என்று அதுவரை பேசி வந்தவர்கள் தங்கள் குரலை மாற்றிக் கொள்ள நேர்ந்தது.

அடுத்து, மதவெறி சக்திகள் - இப்போது - ராமனை - ‘சேது சமுத்திரத் திட்டத்துக்கு’ இழுத்து வந்து விட்டார்கள். பா.ஜ.க.வினர் மட்டுமல்ல, பார்ப்பன செயலலிதாவே ‘ராமன்’ கட்டிய பாலத்தை இடித்துவிட்டு சேது சமுத்திரத் திட்டத்தை கொண்டு வரக் கூடாது என்கிறார். இராமகோபாலன்களும், இல.கணேசன்களும், குருமூர்த்திகளும் பூணூலை உருவிக் கொண்டு தொடை தட்டுகிறார்கள்.

‘இருந்த மசூதியை இல்லாத ராமனுக்காக இடித்தார்கள்; இல்லாத பாலத்தை இராமனுக்காக இடிக்கக் கூடாது என்கிறார்கள்’ என்று ஒரு புதுக்கவிதையை கவிஞர் ஒருவர் எழுதினார்.

இராமன் கட்டிய பாலத்தை இடிக்கக் கூடாது என்று கூறுகிறார்கள். அனுமான் எரித்துப் பொசுக்கிய இலங்கை இருக்கக்கூடாது என்று போராடினாலும் வியப்பதற்கு இல்லை. கற்பை நிருபிக்க பெண்கள் - இராமபிரான் வைத்த சோதனையைப் போல் ‘எரியும் நெருப்பில் குளித்து மீள வேண்டும்’ என்று கூட அடுத்தப் போராட்டத்தை இவர்கள் தொடங்கிவிடலாம். இந்த மதவெறி சக்திகள் பரப்பி வரும் கருத்துகளில் கடுகளவாவது உண்மையோ, அறிவு சார்ந்த வாதங்களோ இருக்கிறதா?

இவர்கள் என்னதான் சொல்கிறார்கள்?

சீதையை மீட்க இலங்கை மீது இராமன் படை எடுத்துச் சென்றபோது, கடலைக் கடக்க வானரங்களின் உதவியோடு ஒரு பாலம் அமைத்துக் கொண்டு, அந்தப் பாலத்தின் வழியாகச் சென்று, ராவணனை வீழ்த்தி, சீதையை மீட்டு வந்தான். இப்போது திட்டமிடப்பட்டுள்ள சேதுக் கால்வாய்த் திட்டம் கடலுக்கு அடியிலுள்ள அந்த இராமன் பாலத்தை இடித்துத்தான் கட்டப்பட இருக்கிறது. எனவே ராமன் பாலத்தை இடித்துவிட்டு சேதுக் கால்வாய் திட்டத்தைக் கட்டக்கூடாது என்பதே பா.ஜ.க. இந்து முன்னணி - ஜெயலலிதா மற்றும் பார்ப்பனர்களின் வாதம்.
சரி; இராமாயணம் எப்போது நடந்தது? ‘திரேதாயுகத்தில்’ நடந்தது என்கிறார்கள். அதாவது 17,50,000 ஆண்டுகளுக்கு முன்பு! இந்த 17.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு - மனித இனமே உருவாகவில்லை. இரண்டு கோடி வருடங்களுக்கு முன் ‘பிரை மேட்ஸ்’ எனும் குரங்கினம் தோன்றியிருக்கின்றன. அவற்றிலிருந்து 20 லட்சம் வருடங்களுக்கு முன் தான் - மனிதனின் மூதாதைகள் உருவாகின. அதற்குப் பிறகு சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் தான் நவீன மனிதன் உலகம் முழுதும் பரவ ஆரம்பித்துள்ளான். மனித உயிர்களின் பரிணாம வளர்ச்சியே பெறாத காலத்தில் - ராமன் வாழ்ந்தான் என்பதும் - அவன் பாலம் கட்டினான் என்பதும் கட்டுக்கதை - அல்லவா?

அப்படியானால் இவர்கள் இராமன் கட்டிய பாலம் என்று எதைச் சொல்கிறார்கள்?

ராமேசுவரத்துக்கும் - தலை மன்னாருக்கும் இடையே கடல் பரப்பிற்குக் கீழே ஒரு நீண்ட மணல் திட்டு தெரிகிறது. இந்த மணல் திட்டையே, இவர்கள் ‘இராமன் பாலம்’ என்று கதை விடுகிறார்கள். அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மய்யமான ‘நாசா’ விண்வெளிக் கோள் மூலம் படம் பிடித்து, கடலுக்குடியில் பாலம் இருந்ததாக கூறியுள்ளது என்று, இவர்கள் கடந்த பல ஆண்டுகாலமாகவே ஒரு புரளியைக் கிளப்பி விட்டார்கள்.
நாசா ஆய்வு மய்யம் அதை மறுத்துவிட்டது. உலகின் பல பகுதிகளில் கடலுக்கடியில் இருப்பவைகள் பற்றி விண்வெளிக் கோள் மூலம், நாசா ஆய்வு மய்யம் படம் பிடித்து வருகிறது. அப்படி 2002 ஆம் ஆண்டு ராமேசுவரம் தலைமன்னார் பகுதியிலும் படம் பிடித்தது உண்மை. அந்த படங்களை இந்திய விண்வெளி ஆய்வு மய்யத்திடம் நாசா வழங்கியது. உலகின் பிற பகுதிகளில் கடலுக்கடியில் மணல் திட்டுகள் இருப்பது போலவே இந்தியாவின் இந்தப் பகுதியிலும் மணல் திட்டுகள் இருக்கின்ற என்றே ‘நாசா’ அறிவித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் ‘இந்துத்துவ’ சக்திகளின் இணைய தளமான ‘இந்தோலிங்க்’ என்ற இணைய தளமும், ‘வைகணவா’ என்ற செய்தி தொடர்பகமும் கடலுக்கடியில் ராமன் கட்டிய பாலம் இருப்பதாக ‘நாசா’ அறிவித்துவிட்டது என்ற பொய்ச் செய்தியைப் பரப்பியது. இந்தக் கட்டுக்கதையை இந்தியாவிலுள்ள ஒரு செய்தி நிறுவனம் (பி.டி.அய்.) உலகம் முழுதும் பரப்பியது. அப்போதே 2002 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் - ‘மார்கேசு’ எனும் நாசாவைச் சார்ந்த அதிகாரி மறுத்துவிட்டார். நாசா நிறுவனத்தின் ஆய்வின்படி கடலுக்கடியில் இருந்தது மணல் திட்டு தான்; அது பாலம் என்றோ, அதைக் கட்டியது ‘ராமன்’ என்றோ நாசா கூறவில்லை. அது தங்களின் ஆய்வுக்குரியதும் அல்ல என்று தெளிவுபடுத்திவிட்டார். ஆனாலும் பொய்யைப் பரப்புவதையே ‘தர்மம்’ என்று நம்பும் பார்ப்பன சக்திகள் தொடர்ந்து தங்களது கட்டுக்கதைகளைப் பரப்பி வருகின்றன.

இந்த மணல் திட்டுகள் கடலுக்கடியில் எப்படி வந்தன? இதற்கு பூகோள, புவியியல் விஞ்ஞானம் விடை கூறுகிறது.

இன்று உலகில் தனித் தனியாக உள்ள கண்டங்கள் ஒரு காலத்தில் ஒன்றோடு ஒன்றாக இணைந்தே இருந்தன. பூகோளவியலில் இப்படி ஒன்றாக இணைந்திருந்த நிலப்பிரிவு, “பாங்கியா” என்று அழைக்கப்படுகிறது. பூமியின் வெப்பத்தினால் மாற்றங்கள் நிகழ்ந்தன. பூமியின் மய்யப் பகுதி இறுகி, அதனால் மேல் பகுதிகள் இளகி, ஒன்றிலிருந்து ஒன்றாகப் பிரிந்து பல கண்டங்களாக உருவெடுத்தன. இதை கண்டங்களின் விலகல் (கான்டினென்டல் டிரிப்ட்) என்று பூகோளவியல் கூறுகிறது. இதைப் பற்றி - பூகோளவியலிலும் நிலவியலிலும் விரிவாக கற்றுத் தரப்படுகிறது. இந்தப் பாடத்துக்குப் பெயர் ‘வேகனர்ஸ் கான்டினென்டல் ட்ரிப்ட் தியரி’ என்பதாகும். இப்படி ஒன்றாக இணைந்திருந்த கண்டங்கள் விலகியபோது இரு கண்டங்களை இணைத்திருந்த ஒரு நிலப்பரப்பு கடலுக்கு அடியில் போனது. புவியியலில் இதற்குப் பெயர் ‘இஸ்மஸ்’ என்பதாகும். இதுதான் கடலுக்கு அடியில் உள்ள மணல் திட்டுகள். இந்த மணல் திட்டுகள் ராமேசுவரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையில் சேது சமுத்திரத்திட்டம் அமையப் போகும் இடத்தில் மட்டும் தான் இருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதில். உலகில் ஏராளமான இடங்களில் இதேபோல் மணல் திட்டுகள் கடலுக்கு அடியில் இருக்கின்றன.

தென் அமெரிக்க மற்றும் வட அமெரிக்க கண்டங்களை இணைக்கும் கடல் பகுதியில் இத்தகைய மணல் திட்டுகள் இருக்கின்றன. இந்த மணல் திட்டின் மீதுதான் பனாமா கால்வாய் வெட்டப்பட்டு, கப்பல்போக்குவரத்து நடைபெறுகிறது. பசிபிக் கடலையும், அட்லாண்டிக் கடலையும் இணைப்பது பனாமா கால்வாய் தான். இந்தக் கால்வாய் அமையாமல் போயிருக்குமானால், பசிபிக் கரையோர துறைமுகங்களுக்கு வரும் கப்பல்கள், தென் அமெரிக்கக் கண்டம் முழுவதையும் சுற்றி வர வேண்டியிருந்திருக்கும்.

அய்ரோப்பா கண்டத்தையும் - ஆப்பிரிக்கா கண்டத்தையும் இணைக்கும் கடல் பகுதியிலுள்ள மணல் திட்டு மீது தான் சூயஸ் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய தரைக்கடலையும், செங்கடலையும் இணைப்பது சூயஸ் கால்வாய்தான். இதன் வழியாக வெற்றிகரமாக கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

நியுசிலாந்து தீவுக்கு அருகிலுள்ளவை ஆக்லாந்து தீவுகள் மற்றம் கிரேட்டர் ஆக்லாந்து தீவுகள். இவைகளை இணைக்கும் கடலுக்கடியில் மணல் திட்டுகள் இருந்தன. இந்த ‘மணல் திட்டு’களை வெட்டி எடுத்து - அங்கே கால்வாய் கட்டப்பட்டு, தீவுகள் இணைக்கப்பட்டுள்ளன.

கனடா நாட்டை - அதன் அருகே - நியுபவுண்ட் லான்ட் தீவுகளை இணைக்கும் கடல்பகுதியிலும், ஆஸ்திரேலியாவை - அதன் அருகே உள்ள டாஸ்மேனியா மற்றும் புரூனித் தீவுகளையும் இணைக்கும் கடலுக்கு அடியிலும் உள்ள மணல் திட்டுகள் வெட்டி எடுக்கப்பட்டு கால்வாய்கள் வெட்டப்பட்டு, கப்பல் போக்குவரத்து நடந்து கொண்டிருக்கிறது.

ராமேசுவரத்துக்கும் - தலைமன்னாருக்கும் இடையே கடலுக்கு அடியில் இருக்கும் மணல் திட்டுகள் - உலகின் ஏனைய பகுதியிலுள்ள மணல் திட்டுகள் போன்றுதான் என்று அமெரிக்காவின் வெளி ஆய்வு நிலையம் கூறுகிறது. ராமேசுவரத்துக்கும் - தலைமன்னாருக்கும் இடையே கடலுக்கடியிலுள்ள மணல் திட்டுகளை ராமன் கட்டிய பாலம் என்று கூறுகிறவர்கள், உலகின் இதர பகுதிகளில், இதே போன்று - கடலுக்கடியிலுள்ள மணல் திட்டுகளையும், ராமன் கட்டினான் என்று கூறுவார்களா? மத்திய அரசும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்த மனுவில் தெளிவாக மறுத்துள்ளது. அந்த மனுவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

“தலை மன்னார் - தனுஷ்கோடி இடையே பாலம் கட்டப்பட்டு இருந்ததற்கு அறிவியல், இலக்கியம், வரலாறு, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆதாரம் இருப்பதாகக் கூறுவ தவறு. அங்கு மனிதனால் செயற்கையாக கட்டுமானப் பணிகள் நடந்ததற்கான அடையாளம் காணப்படவில்லை.
நாசா வெளியிட்ட படத்தை ஆதாரமாக வைத்து மனு தாக்கல் செய்துள்ளனர். இதை வைத்து அதை ராமர் பாலம் என்று கூறக் கூடாது. அந்தப் படம் மட்டும் தங்களுடையது என்றும், ஆனால், அது ராமர் கட்டிய பாலம் என்ற கருத்து தங்களுடையதல்ல என்றும் நாசா தெளிவுபடுத்தி இருக்கிறது. 17 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பாலம் கட்டப்பட்டதாக கூறுகிறார்கள். இதற்கான ஆதாரம் ஒன்றுமில்லை. கம்பராமாயணத்திலும், வால்மீகி ராமாயணத்திலும் ராமர் பாலம் கட்டப்பட்டது பற்றி தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

ராமநாதபுரம் மாவட்டம் குறித்த அரசு ஆவணங்களில் ராமர் பாலம் கட்டப்பட்டதாக எழுதப்பட்டு உள்ளது என்று மனுதாரர்கள் கூறுகின்றனர். ஆனால், அதை கதை என்றும், அப்படிப்பட்ட கதையில் கூட, இலங்கையில் இருந்து ராமர் திரும்பி வந்து அம்பு மூலம் பாலத்தை அழித்துவிட்டார் என்றே அந்த ஆவணங்கள் கூறுகின்றன. எனவே எந்த விதத்திலும் ஆதாரம் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டு உள்ள மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேணடும்” - என்று மத்திய அரசே திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

‘நாசா’ இந்த ‘மணல் திட்டு’ படத்தை வெயிடுவதற்கு முன்பு - இந்த மதவெறி சக்திகள் வேறு ஒரு கதையைப் பரப்பி வந்தார்கள். ராமேசுவரம் கோயிலுக்குப் போனால், அங்கு தண்ணீரில் மூழ்காமல் மிதக்கக்கூடிய பவழப் பாறைகளைக் காண முடியும். இந்தப் பவழப் பாறைகளைக் கொண்டுதான் இராமன் பாலம் கட்டினான் என்று கூறி வந்தவர்கள், ‘நாசா’ படம் வந்த பிறகு, தங்களது குரலை மாற்றிக் கொண்டார்கள்.
செயற்கைக் கோள் படம் - கடல் பகுதியில் தொடர்ச்சியாக சுண்ணாம்புக்கல் இருப்பதைப் படம் பிடித்துக் காட்டியப் பிறகு, ராமன் சுண்ணாம்பால், இந்தப் பாலத்தைக் கட்டினான் என்று கதையளக்கத் துவங்கிவிட்டார்கள். இதற்கும் விஞ்ஞான அடிப்படை கிடையாது. சுண்ணாம்பைக் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தத் தொடங்கியது 3000 ஆண்டுகளுக்கு முன்புதான். ஆனால் - திரேதாயுகத்தில் ராமன் சுண்ணாம்புக்கல் பாலம் கட்டினான் என்று, காதில் பூ சுற்றுகிறார்கள்.

பாமர மக்களிடம் - ஊறிப்போன நம்பிக்கைகளைச் சுரண்டி, மதத்தின் அடிப்படையில் மக்களை திரட்டலாம் என்பதே இவர்களின் நோக்கமாகும்போது, மக்களிடம் ஊறிப் போயிருக்கிற, அந்த நம்பிக்கைகளைத் தகர்க்கும் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டாமா என்பதே நமது கேள்வி? ‘ராமன்’ அரசியலுக்கு வந்துவிட்டதால், இப்போது ‘ராமனை’யும், ராமாயணத்தையும் விமர்சிக்கலாம். மற்ற புராண - இதிகாச - வேத - பார்ப்பனிய கருத்துகளை எதிர்த்து மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டியதில்லை என்று ஒதுங்கிக் கொண்டால், அடுத்தடுத்து புதிய புதிய ‘புராணங்கள்’ அரசியல் தளத்துக்குக் கொண்டு வந்து கடை விரிக்கவே செய்வார்கள்.

எனவே - மதச் சார்பின்மையில் உண்மையான கவலை கொண்ட அமைப்புகள் கட்சிகள், பகுத்தறிவுப் பிரச்சாரத்தைச் செய்யும் போதுதான், மதவெறி சக்திகளை மக்களிடமிருந்து தனிமைப்படுத்த முடியும்! என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com