Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜூன் 2006

அயல்நாடு போகும் அய்.அய்.டி. ‘சரக்குகள்’
விடுதலை ராஜேந்திரன்

அய்.அய்.டி.யில் இடஒதுக்கீடு செய்தால் - ‘தகுதி-திறமை’ போய்விடும் என்று ஓலமிடும் பார்ப்பன-உயர்சாதியினரும், பார்ப்பனிய ஊடகங்களும் - இந்தத் ‘தகுதி’, ‘திறமை’ யாருக்குப் பயன்படுகிறது என்ற கேள்விக்கு, பதில் சொல்வது இல்லை. அய்.அய்.டி. படித்த மாணவர்கள் உடனே வெளிநாடுகளுக்கு ஓடிப் போய், அந்த நாட்டின் குடிமகனாகப் பதிவு செய்து கொள்வதுதான் நடக்கிறது. கடந்த ஜூன் 11 ஆம் தேதி ‘தினகரன்’ நாளேட்டின் ஞாயிறு வாரமலர் ஒரு செய்தி கட்டுரையை வெளியிட்டிருக்கிறது.

சென்னை அய்.அய்.டி.யில் பி.டெக் இறுதியாண்டு படிக்கும் மூன்று மாணவர்களை ஜப்பான் நாட்டின் மிகப் பெரிய வங்கியான ‘லீமென் பிரதர்ஸ்’ வங்கி, மாதம் ரூ.4.5 லட்சம் ஊதியத்தில், வேலைக்கு தேர்வு செய்துள்ளதாம். சந்தோஷ், அபினவ் ஜெயின், அருண் என்ற அந்த மூன்று மாணவர்களையும் பேட்டி கண்டு, படத்தோடு செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். அந்த மாணவர்களுக்கு இன்னும் இறுதி ஆண்டு தேர்வே முடியவில்லை; அதற்குள் ஜப்பான் கொத்திக் கொண்டு போகிறது. சென்னை அய்.அய்.டி.யில் ‘டிரெய்னிங் மற்றும் பிளேஸ்மென்ட் அட்வைசர்’ என்ற பெயரில் ஒரு அதிகாரமிக்க பதவி இருக்கிறது. பகாசுர பன்னாட்டு நிறுவனங்களுக்கு - அய்.அய்.டி. பார்ப்பனர்களை ஏற்றுமதி செய்யக் கூடியவர்கள். இந்தப் பதவியில் இருப்பவர்கள் தான்! இந்தப் பொறுப்பில் இருக்கும் நரேந்திரன் என்ற அய்யங்கார் பார்ப்பனர். இந்த ஜப்பான் ஏற்றுமதிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் அதைப் பெருமையோடும் கூறுகிறார். மக்கள் வரிப்பணத்தில் படிப்பு, சேவகமோ வெளிநாட்டுக்கு. கேட்டால் ‘தகுதி-திறமை’யைப் பார்த்தேளா என்று ‘பூணுலை’ இழுத்துவிட்டுக் கொண்டு, முப்புரி கூட்டம் எக்காளச் சிரிப்பு சிரிக்கிறது.

மிகவும் பின்தங்கிப் போன சமூகத்திலிருந்து படித்து வரும் மாணவர்கள் - சாதனை படைக்கிறார்கள். ஆனால், அவர்கள் கல்விக்கு பொருளாதார வசதியின்மையே தடையாக இருக்கிறது. அவர்களுக்கு கல்வி உதவிப்பணம் கிடைத்தால், பல மாணவர்கள் சாதனை படைப்பார்கள். மகாராஷ்டிராவில் ஷிண்டே முதல்வராக இருந்தபோது, மாநிலத்தில் மருத்துவம் படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான முழுமையான செலவை அரசே ஏற்கும் என்ற திட்டத்தை அறிவித்தார். அது நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் மிகவும் ஏழ்மை நிலையில் பின் தள்ளப்பட்டுக் கிடந்த ஒடுக்கப்பட்ட மாணவர்கள் படைத்துள்ள சாதனைகளை, ஒரு ஆங்கில நாளேடு சுட்டிக்காட்டியுள்ளது.

செந்தில்நான் ஏழை குடும்பத்தில் பிறந்தவர். தனது முதல் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பின்போது இரவு காவலராக பணிபுரிந்து அதில் கிடைத்த வருமானத்தை வைத்து படித்து முடித்துள்ளார். இவர் நிலையை உணர்ந்த அவர் படித்த எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரி நிர்வாகம் படிக்க உதவித் தொகை வழங்க முன் வந்தது. அதன் பின்னர் அரசு விடுதியில் இருந்து தனது அறையை கல்லூரி விடுதிக்கு மாற்றிக் கொண்டார். பின்னர் படிப்பே தனது முழு மூச்சாக கொண்டு படித்து பொறியியல் பட்டம் பெற்றார். இன்று பெங்களூரில் உலகப் புகழ்பெற்ற விப்பேரா டெக்னாலஜி நிறுவனத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணிபுரிகிறார்.

சென்னை தண்டையார்பேட்டையில் சலவை தொழிலாளி மகன் சரவணக்குமார் கல்வி உதவித் தொகையால் தனது பொறியியல் படிப்பை முடித்தார். இன்று பிரபல எல்.அன்ட்.டி. இன்போடெக்கில் உயர்பதவியில் பணிபுரிகிறார். தனது சொந்த ஊரான தேனியில் இன்று அவர் ஒரு ஏழை பெண் பொறியியல் படிப்பை முடிக்க உதவி செய்து வருகிறார். ஆட்டோ ஓட்டுனரின் மகள் பி.ராஜேஷ்வரி இன்று எச்.சி.எல். நிறுவனத்தில் பணிபுரிகிறார். பிஸ்கட் விற்பவரின் மகன் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார்.

உயர்கல்விக்கு உரிய நிதி ஒதுக்கீடும் அரசு கல்லூரிகளின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஒரே ஒரு அரசு கல்லூரிகூட திறக்கப்படவில்லை. கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளித்தால் தரம் கெட்டுவிடும் என்று கூப்பாடு போடுபவர்களுக்கு இந்த மாணவர்களின் முன்னேற்றமே சரியான சவுக்கடி. வாய்ப்புகள் மறுக்கப்பட்டால் யாரால்தான் உயரமுடியும்? பொருளாதார அளவுகோல் - பிற்படுத்தப்பட் டோரை நிர்ணயிப்பதில் இருக்கக் கூடாது; படிக்கக் கூடிய பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பொருளாதார வசடிதயில்லையேல் உதவ முன்வரவேண்டும்.

பார்ப்பன உயர்சாதியினர் ‘பிற்படுத்தப்பட்டோர்’ என்ற பிரிவுக்குள் ஏழை பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் இடஒதுக்கீடு தரவேண்டும் என்று ‘குறுக்குசால்’ ஓட்டுகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அதே குரலை ஒலிப்பதுதான் வேடிக்கை. ஆனாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலேயே உள்ள ரெங்கராஜன் - எச்சூரி - காரத் போன்றவர்களின் பார்ப்பனிய சிந்தனைக்கு அக் கட்சிக்குள்ளே எதிர்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. அந்தக் கட்சி நடத்தும் ‘தீக்கதிர்’ நாளேட்டில்கூட பொருளாதார அளவுகோல் வேண்டும் என்ற கருத்தை விமர்சிக்கும் கட்டுரைகளும் வந்து கொண்டிருக்கின்றன. உதாரணமாக ஜூன் 4 ஆம் தேதி அந்த நாளேட்டில் ‘யாசகம் அல்ல; உரிமைப் பங்கு’ என்ற தலைப்பில் வெளிவந்த ஒரு கட்டுரை ‘பொருளாதார அளவுகோல்’ பேசுவோரை கடுமையாகச் சாடியுள்ளது. ‘பொருளாதார அளவுகோல்’ வேண்டும் என்று கோரும் மருத்துவ மாணவர்கள், ஏழை நோயாளிகளுக்கு, தங்களின் பகட்டான மருத்துவமனையில் காசு வாங்காமல் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று போராடுவார்களா? என்ற கேள்வியை எழுப்புகிறது அக்கட்டுரை.

அய்.அய்.டி.யில் பிற்படுத்தப்பட்டவருக்கான இடஒதுக்கீடே இன்னும் துவக்கப்படாத நிலையில் பொருளாதார அளவுகோலைப் புகுத்துவது என்ன நியாயம்? திறந்த போட்டியில் தேர்வு செய்யப்படும் பார்ப்பன - உயர்சாதியினருக்குத்தான் நியாயமாக பொருளாதார அளவுகோலைப் புகுத்த வேண்டும்! மார்க்சிஸ்ட் கட்சியின் மேல்மட்ட பார்ப்பனியத் தலைவர்கள், கட்சிக்குள்ளேயே - பார்ப்பனரல்லாதார் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது! ‘கிரிமிலேயர்’ தத்துவத்தை, முதலில் கட்சிக்குள் முடிவெடுப்பத்தல் பின்பற்றுவது நல்லது!

தனியார்துறையில் இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை வரும்போது, ‘இன்போசிஸ்’ நிறுவனத் தலைவரான பார்ப்பனர் நாராயணமூர்த்தி ஒரு கருத்தைக் கூறினார். “வேலையில் இடஒதுக்கீடு கொடுத்தால் அது தரத்தைப் பாதிக்கும். எனவே கல்வியில் இடஒதுக்கீடு அளித்து, அவர்களை தரமானவர்களாக மாற்றி வேலை வாய்ப்பு சந்தைக்கு அனுப்ப வேண்டும்” என்றார். இப்போது உயர்கல்வியில் இடஒதுக்கீடு கேட்கும்போது, அதே பார்ப்பனர் அது கல்வித் தரத்தையும், பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும்” என்கிறார். இதுதான் பார்ப்பனர்களின் இரட்டைவேடம்!

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை எதிர்ப்பதில் முன்னணியில் நிற்பவர்கள் நாராயண மூர்த்தி போன்ற பெரும் தொழிலதிபர்களான பார்ப்பனர்களும், பனியாக்களும்! டாக்டர் பாலச் சந்திராமுங்கேக்கர் என்ற சமூக ஆய்வாளர் அவர்களைப் பார்த்து ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார் (பீப்பிள்ஸ் டெமாக்கிரசி - ஜூன் 5) இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டுப் பொருள்களுக்கு அரசு இறக்குமதி வரி விதித்து வருகிறது. இன்னும் கூடுதலாக அரசு இறக்குமதி வரியை விதிக்க வேண்டும் என்று, இதே முதலாளிகள்தான் வலியுறுத்தினர். அப்போதுதான், உள்நாட்டு சந்தை பாதுகாக்கப்படும் என்றார்கள். அதேபோல், உலக மயமாக்கல் கொள்கை 1991-ல் அமுலாக்கத் தொடங்கியபோது, இதே தொழிலதிபர்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் படையெடுப்பால் உள்ளூர் உற்பத்தி பாதிக்கப்படாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்றார்கள்.

வெளிநாட்டுப் பொருள்கள் தரமானது, ‘தகுதியானது’. எனவே ‘தரம்-தகுதி’ என்பதே முக்கியம் என்று அப்போது பேசாமல், உள்நாட்டு உற்பத்தி பாதிக்கக்கூடாது என்று தானே கூறினார்கள்? அதேபோல், பாதிக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்கள் பாதிப்படைந்துவிடக் கூடாது என்பதற்குத் தானே, இடஒதுக்கீடு? இதை மட்டும் எதிர்க்கலாமா? - என்று கேட்கிறார், அந்த ஆய்வாளர். நல்ல கேள்விதான்! ஆனால் பார்ப்பனியம் மூளைக்குள் புகுந்த பிறகு, ஆதிக்க வெறி தானே, ஆட்டிப் படைக்கும்?

சென்னையில் தொண்டு நிறுவனம் நடத்திய கருத்தரங்கு ஒன்றில் பேசிய ‘நக்கீரன்’ துணை ஆசிரியரும், சீரிய பெரியாரியல்வாதியுமான தோழர் லெனின், ஒரு நல்ல கேள்வியைக் கேட்டார். அவர் பேசியது இதுதான் “தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஒன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியும் என்ற அறிவிப்பு; அப்படியானால் ஏற்கனவே அர்ச்சகர்களாக இருப்பவர்கள், எந்த வேலைக்குப் போவார்கள் என்று பார்ப்பனர்கள் கேட்கிறார்கள். தமிழக அரசு வெளியிட்டுள்ள மற்றொரு முக்கிய அறிவிப்பு, காலம் காலமாக மலம் அள்ளும் தொழிலாளர்கள் அதிலிருந்து விடுவிக்கப்பட்டு தகுதியான மாற்றுப் பணி வழங்கப்படும்” என்பதாகும். எனவே, மாற்று வேலைக்கு வழி என்ன என்று கேட்கும் அர்ச்சகர்கள், நல்ல ஊதியத்தில் காலியாகும் மலம் அள்ளும் வேலைக்கு வரலாமே! வருவார்களா? என்ற கேள்வியைக் கேட்டார். கேள்வி அர்த்தமுள்ளது என்பதை, அரங்கத்தில் எழுந்த கரவொலி உணர்த்தியது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ஜி. இராமகிருட்டிணன் ‘தீக்கதிர்’ நாளேட்டில் (மே 27) எழுதியுள்ள ஒரு கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: நாடு விடுதலை அடைந்த பிறகு அரசியல் சாசனத்தை உருவாக்கிட சர் ஐவர் ஜென்னிங்ஸ் என்ற ஒரு வெளிநாட்டு நிபுணரை பயன்படுத்தலாமா என பண்டித நேருவும், சர்தார் வல்லபாய் பட்டேலும் யோசித்தபோது; வேண்டாம் சிறந்த ஞானமுள்ள டாக்டர் அம்பேத்கரை இதற்கு பயன்படுத்தலாம் என அண்ணல் காந்திஜி ஆலோசனை கூறியதாக சந்திரமௌலி என்ற நூலாசிரியர் குறிப்பிடுகிறார். பிறப்பால் தலித் குடிமகனான டாக்டர் அம்பேத்கரால், நாடே போற்றக் கூடிய இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைக்க முடிந்தது. மறைந்த கே.ஆர்.நாராயணன் சிறந்த குடியரசுத் தலைவராக மட்டுமல்ல, பல துறைகளில் வல்லுநராகவும் விளங்கினார். வ்வகையில் ஏராளமான உதாரணங்களை கூற முடியும்.

தகுதி, திறமை தான் பிரச்சினையென்றால், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்படி நடைபெறுகிறது? +2 தேர்வில் வெற்றி பெற்றால் போதும், (மதிப்பெண்கள் பற்றிய கவலையில்லை) ரூ.30 லட்சம் கொடுத்து எம்.பி.பி.எஸ். சேருகிறார்களே அங்கெல்லாம் திறமை பாதிக்காதா? 50 லட்சம், 60 லட்சம் என பணம் கொடுத்து எம்.டி., எம்.எஸ். சீட்டு வாங்குகிறார்களே இதைப் பற்றியெல்லாம் ‘யூத் பார் ஈக்குவாலிட்டி’ ஏன் வாய் திறப்பதில்லை? அகமதாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தில் சீட்டுக்களை அதிகப்படுத்திட வேண்டுமென்று மத்திய அரசு கோரியதை மறுத்த அந்த நிறுவன இயக்குனர் துபாயில் ஒரு கிளையை துவங்க வேண்டும் என்று அனுமதி கோரியிருக்கிறார், அது எதற்காக? இந்த நிறுவனத்தில் படித்தவர்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்குத்தான் வேலைக்குச் செல்லுகிறார்கள். இந்திய வளர்ச்சிக்கு பயன்படுவதேயில்லை. இதைத்தான் திறமை என்று கூறுகிறார்களா?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com