Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜூன் 2006

ஆகமப் புரட்டு: துக்ளக் பார்ப்பனருக்கு பதில்
ந. சேதுராமசாமி

இந்த ஆகமங்களினால் என்ன நன்மை விளைந்தது? இவற்றால், தமிழ் இனம் தனது வரலாற்றை, நாகரிகத்தை, பண்பாட்டைப் பதிவு செய்திருந்த பழைய நூல்கள் பலவற்றை இழந்து விட்டது. இதுதான் உண்மை. இதனை சு.வெங்கடேசன் அவரது “உ.வே.சா. சமயம் கடந்த தமிழ்” என்ற நூலில்,

“பல்வேறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட மகத்தான இலக்கியச் செல்வங்களைத் தீயில் போட்டு அழிக்கும் வைதீக வெறித்தனத்தின் தொடர்ச்சியாக, கரிவலம் வந்த நல்லூரில், பழைய ஏடுகளை எல்லாம் ஆகம சாஸ்திரப்படி, குழிவெட்டி, அக்கினி வளர்த்து நெய்யில் தோய்த்து, ஆகுதி செய்யப்பட்டதைக் கேட்டு, அப்படிச் சொல்லியிருந்தால், அந்த ஆகமத்தை அல்லவா முதலில் ஆகுதி செய்ய வேண்டும்? என்று கொதித்து எழுந்தவர் உ.வே.சா.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்ப்பாளர்களின் உள்ளக் கிடக்கை ஆகம பக்தி என்பதைவிட, சுயசாதி ஆதிக்க உணர்வே என்பது சொல்லாமலேயே விளங்கும். மக்களை மயக்கிய இவர்களின் நூற்பா (சுலோகம்)

‘இந்த பிரபஞ்சம் கடவுளுக்கு அடக்கம்
கடவுள் மந்திரத்திற்கு அடக்கம்
மந்திரம் பிராமணர்களுக்கு அடக்கம்
ஆகவே பிராமணர்களே தேவர்கள்’

- என்பதாகும். இந்நூற்பாவின் வட மொழி வடிவத்தை, கி.பி.1807-ல் ஆபேடுபே என்ற பிரஞ்சு ஆய்வாளர், “இந்துக்களின் பழக்க வழக்கங்கள், சடங்குகள்” என்ற ஆய்வு நூலில் பதிவு செய்துள்ளார். பேரறிஞர் அண்ணா “ஆரியமாயை” எழுத மேற்குறித்த ஆங்கிலப் புத்தகம் ஆதாரமாக அமைந்திருந்தது. இதே பார்ப்பன மேலாண்மை பற்றிய சுலோகத்தை, 1901-ல் வெளிவந்த “வருண சிந்தாமணி” என்ற வேளாளர் பற்றிய நூலில் கூடலூர் கனக சபைப்பிள்ளை பதிவு செய்துள்ளார். வேதமும், யாகமும், புரோகிதமும் பார்ப்பனர்களின் ஏகபோக உரிமை என்ற ஆதிக்கம், ஆட்டம் காண்கிறதே என்ற ஆதங்கத்திலேயே எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன. 27 சதவீத இடஒதுக்கீடு மற்றும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற இரு திட்டங்களும் ஆதிக்கபுரியின் அடிமட்டத்தையே தகர்த்துவிடும் என அஞ்சுகின்றனர்.

எல்லா சாதியினரும் அர்ச்சகராகலாம் என்றால், “எல்லோரும் வாங்க, எல்லோரும் அயோக்கியன் ஆகலாம். நிறைய காட்டுமிராண்டிகளை உருவாக்கலாம்” என துக்ளக் ஏடு (31.5.06) கொச்சைப்படுத்துகிறது. இந்த அர்ச்சகர்கள் பற்றி விவேகானந்தரே இவ்வாறு தோலுரித்தார்:

“துர்த்தர்களும், ஏமாற்றுக்காரர்களும் ஆகிய புரோகிதர்கள் எல்லா வகையான, மூடநம்பிக்கைகளையும், வேதம் மற்றும் இந்து மதத்தின் சாரம் என்று மக்களுக்குக் கற்பிக்கின்றனர். இந்த போக்கிரித்தனம் மிக்க புரோகிதர் களும், அவர்களுடைய முன்னோர்களும், கடந்த நானூறு தலைமுறைகளாக வேதத்தின் ஒரு பகுதியைக்கூட பார்த்ததில்லை! மூடத்தனமிக்க ஆச்சாரங்களைக் கடைப்பிடித்து, அவர்கள் தம்மைத்தாமே அழிநிலைக்குக் கொண்டு வந்துவிட்டனர். கலியுகத்தில் ‘பிராமணர்களின்’ வேடத்தில் இருக்கும் இராட்சதர்களிடமிருந்து, மக்களையும் இந்த நாட்டையும் அந்தத் தெய்வம் தான் காப்பாற்ற வேண்டும் (விவேகானந்தரின் முழுப் பேச்சுக்கள் தொகுதி 8, பக்கம் 290 கொல்கத்தா 1971). அர்ச்சகர் பதவி என்றாலே - அது புனிதமானது என்று பேசும் துக்ளக் சோவிற்கு, இந்த விவேகானந்தர் கருத்து தான் நாம் தரும் பதில்!

ஆகமங்கள் எந்தக் காலத்தில் யாரால் எழுதப்பட்டது? அவற்றை காலா காலமாக மக்கள் அனைவரும் மாற்றமின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டது யார்? எந்த மக்கள் மன்றம் ஏற்றுக் கொண்டது? மண்டல் கமிஷன் வழக்கில் உச்சநீதி மன்றம் தீர்ப்பளிக்கும் போது - இவ்வாறு குறிப்பிட்டது:

“மநுவினால் முன்னிலைப்படுத்தப் பட்டு, இந்து சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சாதி அமைப்பு. இந்த நாட்டிற்கு பெரிய சாபக் கேடாகும். ஆரியர்களின் நால்வருண முறை. செய்தொழில் அடிப்படையில் பாகுபடுத்தப்பட்டதாகும். அதன் பின்னர் பேராசிரியர் எ.கோவுல்ட் அவரது “இந்து சாதி அமைப்பு” என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளவாறு, பார்ப்பானின் பரம்பரைத் தொழில் முறையை புனிதப்படுத்தினார்கள். அதில் புனிதமான தொழிலை கைப்பற்றிக் கொண்டார்கள். காலப்போக்கில் சாதி அமைப்பு, இந்து சமூகத்தின் புற்று நோயாகிவிட்டது”. (1992 துணைத் தொகுப்பு (3) உச்சநீதிமன்ற வழக்குகள் 217) ஜவஹர்லால் நேரு அவரது “இந்தியாவை கண்டுபிடித்தது” பற்றிய புத்தகத்தில் “பிராமணர்கள் தங்கள் மேலாதிக்கத்தை நிலை நாட்ட, கண்டுபிடித்த ஆயுதம்தான் சாதி” எனப் பதிவு செய்துள்ளார்.

நீண்ட நெடுங்காலமாக மநு தர்மத்தின் வர்ணாஸ்ரமத்தை ஏற்றுக் கொள்ளாத கம்மாளர்கள் எனப்படும் விசுவகர்மா வகுப்பினருக்கும் பார்ப்பனர்களுக்கும் போராட்டம் நடைபெற்று வந்துள்ளது. புரோகிதத்தில் பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தை, பாஞ்சாலர்கள் எனப்படும் அய்ந் தொழிலாளர்களாகிய கம்மாளர்கள் ஏற்றுக் கொள்ளாததை சில மாவட்டங்களில் நேரில் கண்டதாக பிரஞ்சு ஆய்வாளர் ஆபேடுபே தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். விசுவகர்மா சமூகத்தினர் தங்களை, “விசுவ பிராமணர்கள்” என்று அழைத்துக் கொண்டதுடன், வேத சாஸ்திரங்கள் கற்று, தங்களுக்கு வேண்டிய யாகங்கள் புரோகிதங்களை அவர்களே செய்து கொண்டனர். இதனை வடமொழி நூற்களின் வழி ஆராய்ந்து டி.எம்.தெய்வ சிகாமணி ஆச்சாரி என்பவர் “விஸ்வகர்ம பிராமண வம்சப் பிரகாசிகை” என்ற நூலை எழுதினார். அதில் விரிவாகப் பல செய்திகளைப் பதிவு செய்துள்ளார். ஆச்சாரி மற்றும் செகத்குரு பட்டங்களை கம்மாளர்கள் பெற்றிருந்தனர் என்று குறிப்பிட்டதுடன், கம்மாளர்களின் புரோகிதம் செய்யும் உரிமையை நிலைநாட்ட, பஞ்சாங்கம் குண்டய்யருக்கு எதிராக, சித்தூர் அதாலத் நீதிமன்றத்தில் மார்க்க சகாய ஆச்சாரி என்பவர் வழக்கு தொடர்ந்ததையும் குறிப்பிட்டுள்ளார். விசுவ பிராமணர்கள் வேதாதிகாரங்களுக்கு உரிமை/தகுதி பெற்றவர்கள் என்றும், அவர்கள் தாங்களே புரோகிதம் செய்து கொள்ளலாம் என்றும், 15.12.1818-ல் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் கி.பி.1885-ல் 78-வது காலண்டர் (கிரிமினல்) வழக்கு எண்கள் 421 மற்றும் 422-ல் விசுவ பிராமணர்கள் (கம்மாளர்கள்) எந்த கோவிலின் கருவறைக் குள்ளும் சென்று ருத்ராபிஷேகம் செய்வதற்கும், பூசிப்பதற்கும் தகுதி உரிமை படைத்தவர்கள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கி.பி. 1894-ல் நடைபெற்ற மசூலிப்பட்டினம் வழக்கில், சிவகோடி வீரபத்ரன் என்னும் ‘விசுவ பிராமணன்’, மகா சிவராத்திரி அன்று, காசி விசுவநாதர் ஆலயத்தில் நுழைந்து லிங்காபிஷேகம் செய்ததால், லிங்கம் பரிசுத்தமிழந்தது என்ற வாதம் ஏற்கப்படாமல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையும் டி.எம்.தெய்வசிகாமணி ஆச்சாரி குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கு விசாரணையின் போது, வீரபத்ர ஆச்சாரி அபிஷேகம் செய்யும்போது ஏன் தடுக்கவில்லை என வினா தொடுத்தபோது அது வித்தியாசமாகத் தெரியவில்லை என்றே வழக்குத் தொடர்ந்த பார்ப்பனர்கள் தெரிவித்தனர். அதைவிட வேடிக்கை, வீரபத்ர ஆச்சாரி கருவறைக்குள் நுழையும்போதே ஏன் தடுக்கவில்லை என வினா தொடுக்கப்பட்டபோது, அவர்கள் அதற்கு முன்பே இவ்வாறு செய்வது வழக்கமே என பதில் வந்துள்ளது. ஆகவே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இது போன்று, பதிமூன்று வழக்குகளை தனது ஆய்வுப் புத்தகத்தில் டி.எம்.தெய்வசிகாமணி ஆச்சாரி (பின்னாளில் புகழ்பெற்ற மேடைத் தமிழை எழுதியவர்) பட்டியலிட்டுள்ளார். இப்பதிவுருக்களை தேடிப் பிடித்தால் பழைய கால நிகழ்ச்சிகள் வெளிவரும். இன்றைக்கும் விசுவகர்ம வம்சா வழியினர் புரோகிதம் செய்து வருகின்றனர். யாகம் மற்றும் கும்பாபிஷேகம் செய்கின்றனர். போளூர் வட்டம் காந்தபாளையம் சீனந்தல் மடாலயத்தின் சார்பில், விசுவகர்ம மடாதிபதி, இதற்கென வைதீக பாடசாலையை நடத்திக் கொண்டிருக்கின்றார். கம்மாளர்களில் தன்மானமுள்ளவர்கள் இவர்களையே அழைக்கின்றனர். ஆனால், ஆகம விதிப்படி, வம்சாவழி சிவாச்சாரிய பார்ப்பனர்களே பூஜை செய்ய உரிமை உண்டு என்பது உண்மையல்ல, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூறியபடி “ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டோர் புலிவேடம்” போட்ட இடைக்கால வரலாறு தான் அது.

சூத்திரனிடத்தில் ஏதேனும் பொருளிருந்தால், அதை பார்ப்பனர் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் அவன் அடிமையாதலால், அவனுக்கென்று பொருள் ஏதுமில்லை; பிறவியினால் “பிராமண” குலத்தில் பிறந்த ஒருவனை அரசன், மந்திரியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். அறிவில் மிகுந்தவன் சூத்திரனாயினும், ஒரு போதும் அரச சபைக்கு உரியவனாக மாட்டான்; எந்த நாட்டில் சூத்திரன் மந்திரியாக இருக்கின்றானோ அந்நாடு சேற்றில் மூழ்கிய பசுவைப் போல், பார்த்துக் கொண்டிருக்கும்போதே அழிந்து போகும்; என (மனு தர்மம், தமிழில் திரு. தமிழ்நாடன் 1987) வம்சா வழி பிறவித் தத்துவத்தை பல முனைகளிலும் முன்னிலைப்படுத்திய மனு தர்மமே புறக்கணிக்கப்பட்ட பின்னர், அந்த மனுதர்ம வம்ச வழியாக வந்த ஆகமங்களும் புறக்கணிக்கப்பட வேண்டியவையே.

15.12.1818-ல் சித்தூர் அதாலத் நீதிபதி டெக்கர் அளித்த தீர்ப்பில் “விவரம் தெரியாதவர்கள் அவர்களை (பார்ப்பனர்களை) உயர்ந்த சாதி என ஏற்றுக் கொண்டுள்ளனர். பாமர மக்களையும், அறிவுத் தெளிவற்ற அரசர்களையும் ஏமாற்றி, தங்களை புரோகிதர்களாக நியமித்துக் கொள்வதில் வெற்றிக் கண்டுள்ளனர். இப்போது, உண்மையைக் கண்டறிந்து அதற்கேற்ப ஆட்சி நடத்த வேண்டியது அரசின் கடமை ஆகும்” என அறிவுறுத்தியுள்ளார். அந்த அறிவுரை இப்போது அனைத்துக் கட்சியினரின் ஆதரவுடன் நிறைவேறுகின்றது.

இத்தனைக்கும் பிறகு, இன்றைக்கும் சிவாச்சாரியார் வம்சா வழியில் வந்தோரே, அர்ச்சகராக வேண்டும். மற்றவர்கள் கருவறையில் நுழைந்தாலும், சிலையைத் தீண்டினாலும், பூசை நடத்தினாலும், புனிதம் கெட்டு விடும் என்பது (துக்ளக், பெரியார் மொழியில் கூற வேண்டுமானால், புரட்டு, புரட்டு, இமாலயப் புரட்டு” ஆகும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com