Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
இராமேசுவரம் கோயில் கருவறைக்குள் சங்கராச்சாரியை நுழைய விடாத தமிழக அரசுக்குப் பாராட்டு!

காஞ்சி சங்கராச்சாரியை கோயில் கருவறைக்குள் நுழைய அனுமதி மறுத்த தமிழக அரசைப் பாராட்டி, கழக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

17.7.2005 ஞாயிறன்று காலை 11 மணிக்கு கரூர், கொங்கு திருமண மன்றத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், பொதுச்செயலாளர்கள் கோவை. கு.இராமகிருட்டிணன், விடுதலை க. இராசேந்தின், ஆட்சிக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் துரைசாமி உள்பட சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.

நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில செயற்குழுக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Kollatur Mani in meeting

இரங்கல் தீர்மானம் : திராவிடர் இயக்கத்தின் பழம்பெரும் கலைஞரும், சீரிய பகுத்தறிவாளருமான ‘கலைமாமணி’ முத்துக் கூத்தன்; பெரியாரோடும், பெரியார் இயக்கத்தோடும் நீண்ட கால தொடர்புடையவரும், பெரியாரிய கருத்துகளை ஆங்கிலத்தில் எழுதி பரப்பி வந்தவருமான பேராசிரியர் மு.க. சுப்பிரமணியம்; பெரியாரோடும், பெரியார் இயக்கத்தோடும் நெருங்கிய தொடர்பு கொண்ட இன உணர்வாளர் புகைப்படக் கலைஞர் சுபா சுந்தரம்; கழகச் செயல்வீரர், குமாரபாளையம் ஓவியா கணேஷ் ஆகியோர் மறைவுக்கு இந்த செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

நுழைவுத் தேர்வு

தீர்மானம் எண் 2 : கிராமப்புற ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் தொழில் கல்விக்கு பெரும் தடையாக இருந்த நுழைவுத் தேர்வை தமிழக முதல்வர் இரத்து செய்ததை அனைத்துக் கட்சியினரும் ஒடுக்கப்பட்ட மக்களும் வரவேற்றனர். வழக்கம் போல் நீதிமன்றங்கள் தமிழக அரசு இரத்து ஆணையை முடக்கி விட்டன. நீதிமன்றங்களின் இந்த முடிவு கிராமப் புற ஒடுக்கப்பட்ட மக்களின் மீது விழுந்த பேரிடியாகும். அதே நேரத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு தொழில் கல்விக்கான கதவுகளை திறப்பதற்கு நுழைவுத் தேர்வை இரத்து செய்தது மட்டும் போதாது. கிராமப்புற மாணவர்களுக்காக தனி இட ஒதுக்கீடு ஆணைக்கும் மீண்டும் உயிர் கொடுக்க வேண்டியது அவசியமாகும். எனவே மேற்குறிப்பிட்ட இரண்டு கோரிக்கைகளுக்கும் மீண்டும் உயிருட்ட தமிழக சட்டமன்றத்தைக் கூட்டி இதற்கான சட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்று தமிழக முதல்வரை இச் செயற்குழு வலியுறுத்துகிறது.

சி.பி.எஸ்.சி. மெட்ரிகுலேஷன் போன்ற பாடத் திட்டங்களின் கீழ் படித்து வரும் மாணவர்களை நுழைவுத் தேர்வு பிரச்சனையோடு சேர்த்து குழப்பாமல், மேற்குறிப்பிட்ட பாடத் திட்டங்களின் கீழ் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் தேர்ச்சி விகிதாச்சாரத்திற்கேற்ப தொழில் கல்வி நிறுவனங்களில் இடங்களை ஒதுக்கி இச்சிக்கலுக்கு தீர்பு காணலாம் என்ற யோசனையை அரசின் பரிசீலனைக்கு இச்செயற்குழு முன் வைக்கிறது.

நீதித் துறையிலும்

தீர்மானம் எண் 3 : நீதித் துறையின் போக்கு, சமூக நீதிக்கு எதிராகவும் பார்ப்பன மேல்தட்டுப் பிரிவினரின் நலனுக்கு ஆதரவாகவுமே இருந்து வருகிறது. இடஒதுக்கீட்டுக்கான சட்டங்கள் மற்றும் அரசாணைகளை நீதி மன்றங்கள் தொடர்ந்து முடக்கி வருகின்றன. இடஒதுக்கீட்டு ஆதரவான சட்டங்களுக்கு உடனடியாக தடை ஆணை வழங்கும் நீதிமன்றங்கள், அதே நேரத்தில் வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தாமல் கிடப்பில் போட்டு காலம் தாழ்த்தி வருகின்றன. தமிழ் நாட்டில் 31 (சி) சட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்டு ஒன்பதாவது அட்டவணையில் வைக்கப்பட்ட 69 சதவிகித இடஒதுக்கீடு சட்டம்; ஒன்றாம் வகுப்பு முதல் அய்ந்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாக்கும் அரசாணை; கிராமப்புற மாணவர்களுக்கு கல்வியில் 25 சதவிகித ஒதுக்கீடு வழங்கும் அரசாணை ஆகியவை இதற்கு உதாரணங்களாகும். நீதித் துறையின் இந்த சமூக அநீதிகள் தொடராதிருக்க நீதிபதிகள் நியமனத்திலும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டை கொண்டு வரவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

விவசாயத்தைப் பாதிக்கும் தொல் நிறுவனங்கள்

தீர்மானம் எண் 4 : உள்ளூர் மக்களின் விவசாயத்திற்கு ஊறு விளைவித்து நிலத்தடி நீரையும் நஞ்சாக்கி உலக நாடுகளுக்கு ஏற்றுமதி வர்த்தகம் செய்யக்கூடிய ஆபத்தான தொழில்கள் உலகமயமாக்கல் கொள்கை அமலாக்கத்திற்குப் பிறகு அதிகரித்து வருகின்றன. உதாரணங்களாக திருப்பூர் சாயப்பட்டறையிலிருந்து நாள்தோறும் வெளியேறும் 10 கோடி லிட்டர் கழிவு நீர், நொய்யலிலும் அதன் துணையாறுகளிலும் திறந்து விடப்படுவதால் நொய்யல் ஆற்றுக்கரையில் அமைந்துள்ள கிராமங்களில் விவசாயம் கடும் பாதிப்படைந்துள்ளது. பாசனத்திற்கான தண்ணீரைத் தேக்கி நிற்க வேண்டிய ஒரத்துப்பாளையம் அணை விஷ நீரைத் தாங்கி நிற்கிறது. அதேபோல் நாகை மாவட்டம் வேதாரண்ய வட்டத்தில் கடற்கரையை ஒட்டி இருக்கும் ஜி.எச்.சி.எல். ஆலையின் நச்சுக் கழிவால் நாற்பது கிலோ மீட்டர் வட்டச் சுற்றுக்குள் உள்ள பகுதிகள் பாலைவனமாகி விடும் ஆபத்துக்கள் எழுந்துள்ளன.

மேட்டூர் அணை கெம்ப்ளாஸ்ட் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் நச்சுக் கழிவு மேட்டூர் பகுதி கிராமங்களில் குடிநீர் மற்றும் விவசாயத்தை சீரழித்து மக்களின் உடலுக்கு ஊறு விளைவித்து வருகிறது. கோகோ கோலா குளிர்பானம் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனம் சிவகங்கை மற்றும் நெல்லை மாவட்டங்களில் பூமிக்கடியிலிருந்து குடிநீரை உறிஞ்சுவதை எதிர்த்து அக்கிராம மக்கள் போராடி வருகிறார்கள். மக்களுக்கு எதிரான இத்தொழில் நிறுவனங்களின் முறைகேட்டை தடுத்து நிறுத்துவது அவசியமாகும். உரிமைக்குப் போராடும் இந்த மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உறுதியான ஆதர வினை வழங்குவது என இச்செயற்குழு முடிவு செய்கிறது.

தீர்மானம் எண்: 5 - இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் நார்வே நாட்டின் முயற்சியால் போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் சமரசத்திற்கு துணை நிற்க வேண்டிய இந்திய அரசு, இலங்கை இராணுவ பலத்தை அதிகரிக்கும் நோக்கத்தோடு அந்த அரசோடு ஒப்பந்தம் செய்து கொள்ள முயற்சிப்பதை இச்செயற்குழு கண்டிப்பதோடு இது ஈழத் தமிழர்களுக்கும், அமைதிக்கான தீர்வுக்கும் இழைக்கும் துரோகம் என்று இச்செயற்குழு சுட்டிக் காட்டுகிறது.

சங்கராச்சாரியை நீக்குக

தீர்மானம் எண்: 6 - கொலைக் குற்றப் பின்னணியுள்ள சங்கராச்சாரி ஜெயேந்திரரை இராமேசுவரம் கோவில் கருவறைக்குள் நுழைய அனுமதி மறுத்த தமிழக அரசை இச்செயற்குழு நெஞ்சாரப் பாராட்டுகிறது. கொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி வழக்கை சந்தித்து வரும் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரன், இராமேசுவரம் கோவில் கர்ப்ப கிரகத்திற்குள் செல்ல உரிமை கோருவதன் மூலம், கொலைக் குற்றச் சாட்டுக்குள்ளானாலும் ‘பிராமணன்’ குற்றவாளியாக மாட்டான் என்ற மனு தர்மத்தை நிலைநாட்ட முயல்கிறார். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக்கப்பட்டு அதன் வழியாக கோவில் கர்ப்பகிரகத்திற்குள் நிலைநாட்டப்பட்டுள்ள தீண்டாமையையும் ‘சூத்திர’ இழிவையும் ஒழிக்க வேண்டும் என்று கூறினால் அது ஆகமத்திற்கு எதிரானது என்று பா.ஜ.க.வினரும், பார்ப்பனர்களும் கூக்குரல் போடுகிறார்கள். அதே நேரத்தில் கொலைக் குற்றச்சாட்டுக் குள்ளான ஜெயேந்திரனை கர்ப்பக் கிரகத்திற்குள் அனுமதிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறார்கள். இதே பா.ஜ.க.வினர்தான் குற்றப் பின்னணி உள்ளவர்களை அமைச்சர் பதவிகளில் அமர்த்தக் கூடாது என்றும் கூறி வருகின்றனர். இந்த பச்சைப் பார்ப்பனியத்தையும், கருவறைக்குள் நுழைய பார்ப்பனரல்லாத சைவ மடாதிபதிகள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதையும் தமிழர்களின் கவனத்திற்கு இச்செயற் குழு கொண்டுவர விரும்புகிறது. அத்துடன் கொலைக் குற்றச்சாட்டுக்குள்ளான ஜெயேந்திரனையும், விஜயேந்திரனையும் சங்கராச்சாரியார் பதவியிலிருந்து உடனடியாக நீக்கி, இந்து அறநிலையத் துறை சட்டரீதியான தனது கடமையை செய்ய முன்வர வேண்டுமென்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் : 7 - பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம், கொட்டாச்சியேந்தல், கண்டதேவி - என்ற சொற்றொடர்கள் தமிழகத்தில் தீண்டாமை சாதி வெறியின் குறியீடுகளாகிவிட்டன. தாழ்த்தப்பட்டோருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த ஊராட்சிகளை பொதுத் தொகுதிகளாக மாற்றக் கூடாது என்றும் தீண்டாமையைக் கடைபிடிக்கும் இந்த ஊராட்சிகளில் சாதி இந்துக்கள் வாழும் பகுதிகளுக்கு அரசு நிதி உதவிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை அரசு நிறுத்த வேண்டும் என்றும் இச்செயற் வலியுறுத்துகிறது.

தென் தமிழகத்தில் நிலவும் இந்த சாதி ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர மேற்குறிப்பிட்ட ஆதிக்கச் சாதியைச் சார்ந்த அப்பகுதியில் வாழும் முற்போக்கு சிந்தனையாளர்கள் துணிவுடன் வெளியே வந்து சாதிக் கொடுமைக்குள்ளாகும் மக்களுக்காக போராட வேண்டும். தமிழகத்தையே தலைகுனிய வைக்கும் இந்த முக்கிய பிரச்சினையில் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் தங்களது நீண்ட மவுனத்தைக் கலைத்து சாதி வெறிக்கு எதிராக களமிறங்க வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் : 8 - பக்தியின் பெயரால், பக்தர்களின் மொட்டைத் தலையில் பூசாரி தேங்காய் உடைக்கும் உடலுக்கு ஆபத்தையும், மூளைக்கு அதிர்ச்சியையும் உருவாக்கும் சடங்கு கட்கு தமிழக அரசு தடை போட வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துவதோடு, இது மனித உரிமைக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்துள்ள மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி சம்பந்தம் அவர்களைப் பாராட்டுகிறது.

சமூக மாற்றத்துக்குத் தடையாக மக்களை மடமைகளில் ஆழ்த்தும் இந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுப் பிரச்சாரத்தை செய்ய முற்போக்கு, இடதுசாரி, தமிழ்த் தேசிய, தலித்திய, பெண்ணிய மனித உரிமை அமைப்புகள் முன் வரவேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com