Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜூலை 2009

கோயிலுக்குள் பெரியார் முழக்கம்

அன்று கல் போட்டவர்கள் சிலர்! இன்று மாலை போடுகிறவர்கள் பலர்! அன்று அவர் விதைத்த நெல் இன்று நமக்காக அறுவடையாகிறது!

1929 என்று நினைவு!

சீர்காழியில் ஒரு சுயமரியாதைப் பொதுக் கூட்டம். நாயக்கர் அவர்களும் (அன்று எல்லோரும் இப்படித்தான் அழைப்பது வழக்கம்) இயக்கத் தோழர்கள் மூவரும் ரயில் நிலையத்தில் இறங்கினோம். மாலை 4 மணி இருக்கலாம். ரயில் நிலையத்தின் மேடையில் (ப்ளாட்ஃபாரம்) பள்ளிக்கூடத்துக் கரும்பலகைகள் (ப்ளாக்போர்டு) 4-5 வரிசையாகக் காட்சியளித்தன! பெரிய பெரிய மண்டை எழுத்தில் - 2-3 வர்ணங்களில் - சாக்கட்டியினால் வரவேற்பு வாக்கியங்கள் எழுதப்பட்டிருந்தன.

“...... நாயே! திரும்பிப்போ!”
“ஞான சம்பந்தர் பிறந்த ஊரில் உனக்கென்ன வேலை?”
“நாத்திக நாயே! உள்ளே வராதே!”
“உள்ளே நுழைந்தால் உனக்குத் தக்க மரியாதை கிடைக்கும்!”

இவை போன்ற இன்னும் சில வரவேற்பு வாக்கியங்கள்!!

“அய்யா, படித்தீர்களா?” என்று கேட்டோம்.

படித்தார், ஒன்றும் சொல்லவில்லை.


ரயில் நிலையத்திற்கு வெளியே வந்தோம்.

ஒரு பழைய ஃபோர்டு மோட்டார் கார்! மேளம் வாசிப்போர் 5 - பேர்!கூட்டம் நடத்தும் தோழர்கள் இரண்டு பேர்! இவ்வளவுதான்! எதற்காக? ஊருக்குள்ளே எங்களையெல்லாம் ஊர்வலமாக அழைத்துச் செல்வதற்காக.

“மேளமும் வேண்டாம்; ஊர்வலமும் வேண்டாம். விடுங்கள் வண்டியை!” என்றார், பெரியார்.

நால்வரும் ஏறிக் கொண்டு புறப்பட்டோம். வழிநெடுக கறுப்புத் துணித் தோரணங்கள், வரிசை வரிசையாக - ஊர் நுழையும் வரையில். ஊருக்குள்ளே நுழைந்ததும் எல்லாக் கடைகளும் அடைப்பு! இரு ஓரங்களிலும் ஏராளமான கரும்பலகைகள்! அதே வரவேற்பு வாக்கியங்கள்!

வைதீகர்களுடன் அன்று காந்தீயவாதிகளும் சேர்ந்து கொண்டு ஊர் தவறாமல் நம் இயக்கப் பிரச்சாரத்துக்குக் கொடுத்த தொல்லை, அடடா! இன்று வர்ணிக்கவே முடியாது.
சீர்காழியில் சிவன் கோவில் கோபுர வாசலில் வண்டி நின்றது - இறங்கினோம். ஏராளமான போலீஸ் படை! 144 தடையுத்தரவு கோரியிருந்தார்களாம், எதிரிகள்! ஆனால் அதிகாரிகள் மறுத்துவிட்டனராம்.

“கூட்டம் எங்கே?” என்று கேட்டார் பெரியார்.

“உள்ளே தான்; முதல் பிரகாரத்தில்” என்றார், கூட்டத்தின் அமைப்பாளர்!

“வேறு இடமா இல்லை? வீண் வம்பு தானே இது?” என்று கேட்டுக் கொண்டே கோபுரத்துக்குள்ளே நுழைந்தார்!

உள்ளே பெருங்கூட்டம்! சுமார் மூவாயிரம் பேராவது இருக்கலாம் (ஒலிபெருக்கி பரவியில்லாத அக்காலப் பொதுக் கூட்டங்களில் மூவாயிரம் என்பது பெருங்கூட்டந்தான்! அதுவுமின்றி முப்பதாண்டுகட்கு முன்பு மக்கள் எண்ணிக்கையும் மூன்றில் ஒரு பங்கு தானே!)

பெரியார் உள்ளே சென்று கூட்டத்தில் அமர்ந்தார். அந்த ஊர்ப் பெரும் பணக்காரர் 2-3 பேரும் வந்தனர் - போலீஸ் மேல் அதிகாரியும், சப் மாஜிஸ்ரேட்டும் வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். கூட்டத்தின் எதிரில் ஒரு மண்டபம். அதன் மேலும் சிலர் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

பெரியார் அமர்ந்தவுடனேயே “பேசாதே! திரும்பிப் போ!” என்று பெருங்கூச்சல்! உய், உய், என்ற ஊளை! நடுவில் சிலர் எழுந்தனர். போலீசார் அவர்களை அடக்கி உட்கார வைத்தனர். ஏறத்தாழ எல்லா மக்களுமே கூட்டத்தைக் கலைக்க வந்தவர்கள் என்றே கூறலாம்.

வழக்கம்போலப் பெரியார் கண்ணைச் சுழற்றிச் சுழற்றிக் கூட்டம் முழுவதையும் பார்த்தார்! அன்று நாங்கள் மூன்று பேர் பேசுவதாக இருந்தது. அவைத் தலைவரை நோக்கி, “நீங்கள் ஒன்றும் பேச வேண்டாம். ஒரே வாக்கியத்தில் “இன்னார் பேசுவார்” என்று மட்டும் சொல்லுங்கள். மற்றவர்களும் பேச வேண்டாம். நானே பேசிவிடுகிறேன்” என்று சொன்னார்.

அவ்வாறே ஆரம்பித்தார். அந்தப் பேச்சு இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது! அதே பீடிகையை அண்மையில் கூடச் சில தோழர்களிடம் பேசிக் காட்டியுமிருந்திருக்கிறேன் - அடடா! என்ன நாசுக்கு! என்ன குழைவு! என்ன மரியாதை! என்ன அடக்கம்!

பேச்சின் துவக்கத்தில், 10-15 நிமிடத்திற்கெல்லாம், மதிற்சுவருக்கு வெளிப்புறத்தி லிருந்து 4-5 அரை செங்கற்கள் வந்து கூட்டத்தில் விழுந்தன - எதிர் மண்டபத்தின் மேல் வீற்றிருந்த பக்தர்களும் இரண்டொரு மலப் பிஞ்சுகளை வீசினர். மணி ஆறு இருக்கும். சிறிது இருட்டிவிட்டது. கல் வீச்சினால் இரண்டொருவருக்குச் சிறிது காயம் ஏற்பட்டது! போலீசார் பரபரப்பாக அங்குமிங்கும் ஓடினர்.

“கல்வீச்சுக்குப் பயப்படுபவர்கள் மட்டும் எழுந்து போய்விடுங்கள். பயப்படாதவர்கள் தலையில் துணியை சுற்றிக் கொள்ளுங்கள்!” என்றார் பெரியார்.

ஊசி குத்தி நரம்பில் மருந்தை ஏற்றுவதுபோல் சொல்லை நிறுத்தி நிறுத்தி, ஒவ்வொரு வாக்கியத்தையும் எடை போட்டு வீசிக் கொண்டேயிருந்தார். ஒரு மணி ஆனதும் பலர் சிரித்தனர். அடுத்த அரைமணிக்கெல்லாம் தலையாட்டினர். இடையில் சிலர் கை தட்டினர். மகுடிக்காரனிடம் பாம்பு மயங்கிவிட்டது! பெரியார் முடிக்கப் போகிறார். அடித்தார், கடைசியில் தம் துருப்புச் சீட்டை!

“இப்பேர்ப்பட்ட உருவமா, நம் கடவுள்? இதை ஏன் குப்புறப்போட்டு துணி துவைக்கக் கூடாது?” என்று அடித்தார்! எங்கே கோவிலுக்குள்ளே! ஞான சம்பந்தனுக்குக் காட்சி தந்த எம்பிரான் எழுந்தருளியிருக்கின்ற இடத்திலே!

ஒரே கைதட்டல்! யாரிடமிருந்து? கல்வீச வந்திருந்த நெற்றிப் பூச்சுத் திருமேனிகளிடமிருந்து!

கூட்டம் முடிந்தது. பெரியாரை நெருங்கிக் கூட்டம் ஓடி வந்தது! அடிப்பதற்கல்ல; அணைப்பற்காக.

சப்மாஜிஸ்ட்ரேட் (திரு. இராமசாமி முதலியார் - பல ஆண்டுகட்கு முன்பே ஓய்வு பெற்று இன்று திருக்கண்ணபுரத்தில் இருக்கிறார்) பெரியாரை நெருங்கினார்! நெற்றியில் பலமான விபூதிப்பட்டை! நடுவில் சந்தனப் பொட்டு!

“அய்யா! ஆரம்பத்தில் உங்கள் ஊர்வலம் நின்றுவிட்டது! நீங்களே மறுத்து விட்டீர்கள்! இப்போதாவது புறப்படலாமா? மூன்று லாரி போலீஸ் வந்திருக்கிறது! பாதுகாப்புத் தரவே நானும் வந்திருக்கிறேன்” என்று கேட்டார்.

“அய்யோ! ரொம்ப நன்றி! வேண்டாம், ஊர்வலம்! ஊருக்கு திரும்ப வேண்டும்!” என்று கூறினார் பெரியார்.

ஆகவே திரும்பினோம், உயிரோடு! ஆனால் வெற்றியோடு!

(‘நாத்திகம்’ 23.9.1960)

தமிழர் தன்மைக்கு பொருந்தாது!

திரு.வி.க. முதலியாரிடத்திலும் மற்ற பண்டிதர்கள் இடத்திலும் எனக்கு மதிப்பு உண்டு. மரியாதையும் உண்டு. ஆனால் தமிழர் தொண்டுக்கு இவர்கள் முறையை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். ஆனாலும் அவர்கள் தமிழர்கள் என்ற காரணத்தாலேயே அவர்களைச் சிறிதும் விட்டுக் கொடுக்க நான் சம்மதிக்க மாட்டேன். நம்மிலும் பெரிய பண்டிதர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இவர்களைத்தான் பயன்படுத்திக் கொண்டு வருகிறேன். இவர்களது எழுத்தும் பேச்சும் சைவப் பண்டிதர் தன்மைக்கு மிகப் பொருத்தமாகவும் தகுதியாகவும் இருக்கலாம். தமிழர் தன்மைக்கு அவை பொருத்தமாகாது என்பதே எனது கருத்து.

- ‘குடிஅரசு’ 24.11.1940


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com