Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜூலை 2008

மக்களை பலிகடாவாக்கும் ‘மதவெறி’ குண்டுகள்

பெங்களூரைத் தொடர்ந்து அகமதாபாத் நகரத்திலும் குண்டுகள் வெடித்துள்ளன. அப்பாவி மக்கள் 50 பேர் உயிர்ப் பலியாகியுள்ளனர். இந்தியாவின் முக்கிய நகரங்களில் - டெல்லி, பம்பாய், சண்டிகார் என்று தொடர்ந்து குண்டுகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. இது மிகக் கொடூரமான வன்மையாக கண்டிக்கத்தக்க பயங்கரவாதம். இந்த வன்முறைகளுக்குப் பின்னால், மதவாதம் தான் மறைந்து கொண்டு நிற்கிறது. மத அடிப்படைவாதம் - அது எந்த மதத்துக்கு ஆதரவாக வந்தாலும் பாதிக்கப்படுவது மனித குலம் தான். இதே குஜராத்தில் தான் மோடி ஆட்சி முஸ்லீம்களை மதவாதத்தின் பெயரால் நரவேட்டை ஆடியது. இப்போது நடக்கும் தொடர் குண்டு வெடிப்புகள் - பாகிஸ்தானுடன் தொடர்புடைய இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளின் சதி என்று செய்திகள் வருகின்றன. உண்மை எதுவாக இருந்தாலும், மதவாதமும் சரி, அதனடிப்படையில் எழுப்பப்படும் அரசியலும் சரி, இரண்டுமே மக்களுக்கான வாழ்க்கை நெறிகளுக்கே மதம் என்ற மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து முழுமையாக விலகி, வேறு திசையில் மக்களை பயணிக்கச் செய்து வருகின்றன.

அறிவியல் வளராத காலங்களில் உருவான மதங்களும், அதன் வாழ்க்கை முறைகளும், கோட்பாடுகளும் இன்றைய வாழ்க்கையோடு முரண்பட்டு, காலாவதியாகிவிட்ட நிலையில், மதத்தின் பெயரால் சுரண்டும் சக்திகள் இந்த மதங்களை உயிர்ப்புடன் வாழ வைக்க அதீதமான முயற்சிகளில் இறங்கி வருகின்றன. மதத்துக்கும், கடவுளுக்கும் உறவுகளை உருவாக்கியவர்கள் ஒரு கட்டத்தில் மதத்துக்கும், அரசியலுக்குமான உறவை வலிமைப்படுத்தி, அதற்கு கடவுளையும் கடவுள் நம்பிக்கையையும் கருவி களாக்கிவிட்டனர். அதனால்தான் மதத்தின் பெயரால் நடக்கும், குண்டு வெடிப்புகளில் அரசுகளும், அரசியல்களும், அரசு அமைப்புகளான உளவு நிறுவனங்களும் விவாதத்துக்கு உள்ளாகின்றன.

“கடவுள் இதை ஏன் தடுத்து நிறுத்தவில்லை?” என்ற கேள்வியே எழாமல் போய்விட்டது. ‘கடவுள்’கள் என்ற அடித்தளத்தில் மதத்தை நிற்க வைத்த காலம் முடிந்துபோய், உண்மையான அதிகாரமும், வலிமையும் கொண்டுள்ள அரசுகள், அரசு நிறுவனங்களின் மீது தான் மதத்தை நிற்க வைக்க முடியும் என்ற நிலை வந்துவிட்டது. கடவுள்கள் அதிகாரமோ, சகதியோ இல்லாதவை என்பது அம்பலமாகிவிட்டது. அதன் காரணமாகத்தான் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தவுடன், மக்களுக்கு தரும் பாதுகாப்புகளை விட அரசுகள், செல்வம் கொழிக்கும் கோயில்களுக்கு கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட கடும் சோதனைகளுக்கு பிறகே கோயிலுக்குள் பகவானை தரிசிக்க அனுப்பப்படுகிறார்கள்.

ஆக, மதவாதங்களிலிருந்து மக்களை மீட்டெடுப்பது தான் மக்களுக்கான எதிர்கால பாதுகாப்பாக இருக்க முடியும். இந்தியாவில் உளவு நிறுவனங்கள் ஏராளமாக இருந்தாலும், கோடிக்கணக்கான ரூபாய் அதற்கு செலவிடப்பட்டாலும், இந்த உளவு நிறுவனங்களுக்குள் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன. ‘இந்தியன்’ என்ற ஒருங்கிணைவே இல்லாத ஒரு நாட்டில், அதன் நிறுவனங்கள் மட்டும் ஒருங்கிணைவாக செயல்படும் என்பது எதிர்பார்க்க முடியாததுதான். பார்ப்பனியம் உருவாக்கிய சாதியக் கட்டமைப்பு, கூறு போட்டு நிற்கும் சிந்தனைகளை உருவாக்கி ஓர்மையையும், ஒற்றுமையையும் சீர்குலைத்து விட்டது. பார்ப்பன இந்தியாவின் குணாம்சமும் இதைத் தானே பிரதிபலிக்கும்? பாதிக்கப்படுவது மக்கள் தான்!

மதவெறிகளும், அதனால் எழும் குண்டு வெடிப்புகளும் பற்றிய அழமான விவாதங்கள் நடத்தப் பெற வேண்டும். இந்துத்துவா குண்டு ஆனாலும், இசுலாமிய குண்டு ஆனாலும், கிறித்துவ குண்டு ஆனாலும் குண்டு - குண்டு தான். அந்தக் குண்டுகளைத் தங்களோடு இணைத்துக் கொள்ள மதங்கள் கதவுகளைத் திறந்து வைத்திருப்பதுதான், இதில் அடங்கியுள்ள பேராபத்து.

குண்டு வெடிப்புகளைத் தடுக்க மீண்டும் ‘பொடா’ வைக் கொண்டுவர வேண்டும் என்பது அபத்தமான யோசனை. ‘பொடா’வும் மதவெறி ஆயுதம் தான்! ஒது குறிப்பிட்ட மதத்தினருக்கும், மத நம்பிக்கையற்ற மனித உரிமையாளர்களுக்கும் எதிராக பார்ப்பன மதவெறி கையில் எடுத்துக் கொண்ட அடக்குமுறை ‘குண்டு’ தான் ‘பொடா’! ஒரு மத வெறிக்கு மற்றொரு மதவெறி தீர்வாக முடியாது. மனித நேய முள்ள - மத வெறியற்ற - சமூகமும், அரசியலும் வரவேண்டும். மக்களிடம் மதத்தை எதிர்த்துப் பேசவே கூடாது என்று, வாய் மூடிக் கொண்டிருக்கும் முற்போக்கு சக்திகள், இப்போதாவது தங்கள் மவுனத்தைக் கலைத்து வெளியே வரவேண்டும்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com