Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜூலை 2008

நடிகவேள் நூற்றாண்டில் ராதாரவி : பெரியார் திராவிடர் கழகத்துக்கு நான் உறுதுணையாக நிற்பேன்

கோவையில் மே 17 ஆம் தேதி கழக சார்பில் நடைபெற்ற நடிகவேள் எம்.ஆர்.இராதா நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகவேள் மகனும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான எம்.ஆர்.ராதாரவி பங்கேற்று உரையாற்றினார். பெரியார் மறைந்த போது ‘தமிழரின் சகாப்தம் முடிந்துவிட்டது’ என்று தனது தந்தை கூறியதை நினைவு கூர்ந்தார்.
கட்டாயப்படுத்தி தனது தந்தையை கோயிலுக்கு அழைத்துச் சென்ற நிலையிலும், அங்கும் பகுத்தறிவுப் பிரச்சாரத்தையே அவர் செய்தார் என்று கூறிய ராதாரவி, தனது தந்தையாருடன் தனக்குக் கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். சுமார் ஒரு மணி நேரம் அவரது உரை நீடித்தது. உரையிலிருந்து சில பகுதிகள்:

நான், என்னுடைய மைத்துனர் எல்லாம் சேர்ந்து எனது தந்தையாரிடம், சிறைச்சாலையிலிருந்து அவர் வந்த முதல் நாளே ஏன் சூட்டிங் போறீங்க? அந்த கோயில் (சாமூண்டீஸ்வரி) வரைக்கும் போயிட்டு வரலாம் என்றோம். அப்படியாடா சரி போயிட்டு வரலாம் என்றார் என் தந்தை. அவர் மறுக்கவில்லை. எங்களுக்கு வியப்பு. காரிலே கருநாடகத்திலுள்ள சாமூண்டீஸ்வரி கோயிலிலே போய் இறங்கினோம். கோயில் பூட்டி இருந்தது. நாங்கள் போய் தட்டினோம். தட்டினா உள்ளே இருந்து ஒரு சத்தம் வந்தது. கன்னடத்திலே கேட்கிறார்கள், ‘யாரய்யா?’ என்று. நான் சொன்னேன். ‘தமிழ் ஆர்ட்டிஸ்ட் எம்.ஆர்.ராதான்னு’. ‘சார், எம்.ஆர்.ராதாவா? கோயிலுக்கு எதிரே குருக்கள் இருக்காரு, அவருகிட்ட சாவி வாங்கிட்டு வாங்க சார், கதவை திறப்பாங்க’ என்றார்.

குருக்கள் வீட்டுக்குப் போய் நான் கதவைத் தட்டி னேன். அவர் என்னான்னு கேட்டார். தமிழ் ஆர்ட்டிஸ்ட் எம்.ஆர்.ராதா வந்திருக்காருன்னு சொன்னேன். அவர் உடனே ‘தொட் ஆர்ட்டிஸ்ட்டு’ன்னு கன்னடத்திலே சொன்னார். தொட்டுன்னா கன்னடத்திலே பெரிய ஆர்ட்டிஸ்டுன்னு அர்த்தம். ‘யாகே! யாகே!’ ன்னாரு. ‘எங்கே? எங்கே?’ என்று அர்த்தம். இதோ வண்டியிலே இருக்காருன்னு சொன்னேன். வந்தார், பார்த்தார். நமஸ்காரம் சார் என்றார். எங்க அப்பா இறங்கிட்டாரு. எனக்கு எல்லாம் ஒரே மகிழ்ச்சி. அப்பாடா, கோயிலுக்கு அப்பாவை கூட்டிட்டு போயிட்டேண்டா சாமி என்று நிம்மதி. உள்ளே வந்த உடனே, கோயில் கதவை திறந்தால் போலீஸ்காரர்கள் இரண்டு பேர் உள்ளே இருந்தனர். அப்பா, அவர்களிடம் முதலில் கேட்ட கேள்வி இதுதான். “ஏய்யா! இரண்டு பேரும் உள்ளேயே இருக்கீங்களே, ஏதாவது அர்ஜெண்ட்டா வந்தா என்ன செய்வே?”. எனக்கு ஏண்டா இந்த ஆளை கூப்பிட்டு வந்தோம்னு ஆயிடுச்சு. ஏன்னா அவங்க தகராறு பண்ணிட்டாங்கன்னா என்ன செய்யறது? அது கர்நாடக மாநிலம் அது ஏற்கனவே தமிழ் ஆளுங்கள் மேலே ‘அன்பான’ ஊரு. இது வேறே தொல்லையாச்சேன்னு நெனைச்சேன்.

‘என்னய்யா செய்வே?’ என்று அவர் மீண்டும் கேட்டார். உடனே அவங்க சிரிச்சாங்க. ‘இதைத் தான் நாடகத்திலே சொல்றேன். கடவுள் சாப்பிட மடப் பள்ளியறை. மக்களைப் பார்க்க மூலஸ்தானம். தூங்குவதற்கு பள்ளியறை. காலைக்கடனை போக்குவதற்கு கழிப்பறை கட்டியிருக்கிறானா? அப்படின்னு கேட்பேன்... இதையெல்லாம் தப்பா எடுத்துக்கிறான்’ என்று அந்த போலீஸ்காரர்களுக்கு விளக்கம் சொன்னார். அவங்களும் சரி தான் சார் என்றார்கள். சொல்லிட்டு, நாங்கள் ஏதாதுன்னா கதவைத் தட்டுவோம். குருக்கள் வந்து தொறப்பாருன்னு சொன்னாங்க. ‘ஏய்யா, நான் வீட்டுக்கு நேரே போய் எழுப்பறத்துக்கே அரைமணி நேரமாச்சு. நீ கோயில் கதவைத் தட்டினா, வீட்டுல இருக்கும் அவருக்கு கேட்கவாப் போகுதுன்னு?’ கேட்டார்.

அப்புறம் கோயிலை சுத்தி வந்தாரு. குருக்கள் கிட்ட இந்தக் கோயிலை எப்பக் கட்டினாங்க என்று கேட்டார். அவர் எனக்குத் தெரியல சார்.

ராஜா கட்டுனாரு என்றார். ‘உங்களுக்கு அதைப் பத்தி என்ன, தட்டுலெ காசப் போட்டா, உங்க கதை முடிஞ்சு போச்சு’ என்றார். இவரை வெளியே கூப்பிட்டு வர்றதுக்குள்ளே எனக்கு மார்கழி மாசத்திலேயே வேர்க்க ஆரம்பிச்சிடுத்து!

தந்தை பெரியார் என்று ஒருவர் இல்லையென்றால் நமக்கு கோயமுத்தூர் கிடையாது. இது கேரளாவோட சேர்ந்திருக்கும். தந்தை பெரியார் ஒருவர் இல்லை யென்றால் நமக்கு சென்னையே இருந்திருக்காது. எல்லோரும் ம.பொ.சி.யைச் சொல்லுவார்கள். ம.பொ.சி. சண்டை போட்டாருன்னா, யாருடைய தைரியத்திலே? முதுகெலும்பு தந்தை பெரியார் தான்.

பெரியார் திராவிடர் கழகத்தை நீங்கள் நல்லபடியாக நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். நல்ல கருத்துகளை சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். நல்ல வழிகாட்டிகளை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். எனது தந்தையாருக்கு நூற்றாண்டு விழா எடுக்கிறார்கள் என்கிற பொழுது, எனக்கெல்லாம் மகிழ்ச்சி. என் குடும்பத்திலிருந்து நான் கலந்து கொள்கிறேன் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். எங்கப்பா மாதிரி ஒரு தீர்க்கதரிசியான நடிகரை பார்க்க முடியாது. அவருக்கு எல்லாமே கேள்வி ஞானம் தான். எழுதத் தெரியாது. படிக்கத் தெரியாது. ஆனால் அவர் பேசிய கருத்தை எவரும் பேசியது கிடையாது. அதுதான் பெரிய விஷயம்.

‘மணியோசை’ படத்திலே ஒருவன் பணம் கொடுத்தவனிடம், திருப்பிக்கேட்டு சண்டை போடுவான். எங்கப்பா கேட்பார், ‘ஏண்டா அவனுக்கு பணம் கொடுத்தே’ என்று. ‘பணம் இல்லையென்று சொன்னான் கொடுத்தேன்’ என்பான். ‘அடிப்படையே உதைக்குதேடா’ என்பார். ‘பணம் இல்லையேன்னு சொன்னவனுக்கு கொடுத்தா, எப்படிடா திருப்பிக் கொடுப்பான்’ என்று கேட்டார்.

அதேபோல், ‘பாகப் பிரிவினை’யில் கேட்பார். செக் போட்டிருக்கேன் பேங்க்லே போய் பணம் எடுத்துக்கடா என்பார். பேங்கிலே பணம் இல்லேன்னு சொல்லிட்டாங்கன்னு பதில் வரும். பேங்கிலேயே பணம் இல்லேன்னு சொல்லிட்டானா? பேங்கிலேயே பணம் இல்லையா? என்று திரும்பி விடுவார். அது இல்லீங்க, உங்க கணக்கிலே பணம் இல்லை. கையிலே ‘கேஷா’ கொடுத்திடுங்க என்று கேட்பார். உடனே கேஷ் இருந்தா நாங்க ஏண்டா செக்க கொடுக்கிறோம்? (சிரிப்பு, கைதட்டல்)

அதே மாதிரி ‘பலே பாண்டியா’ படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் கதாநாயகன். அவரை தொரத்திட்டுப் போவாரு எங்கப்பா காரில். எங்கப்பா வில்லன். காரு நின்னுடும். டிரைவர் கிட்ட கேட்பாரு. ஏ மேன் கார் நின்னுச்சு. அவர் உடனே கார் பஞ்சர் அப்படீம்பாரு. இடியட் டயர் பஞ்சருன்னு சொல்லு என்பார். (சிரிப்பு, கைதட்டல்)

‘பெரிய இடத்துப் பெண்’ படத்திலே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை பார்க்கிறபோது, சாமி கும்பிட்டு வெளியே வருவாரு. இவரு வசதியானவரு. எம்.ஜி.ஆர். ஏழைகளை அழைச்சிட்டு வருவார். ஏந்தம்பி, ஏழைகளை எல்லாம் சாமி கும்பிட கூட்டிட்டு வர்றே. சாமியே எங்களுக்கு டயம் ஒதுக்கியிருக்கிறான். பணக்காரன், வசதியானவன் நிதானமா கும்பிடனும்னு. நீ ஏய்யா ஏழைகளை கூப்பிட்டு வந்து தொந்தரவு பண்றேன்னு? கேட்பார். அதெல்லாம் முடியாது. எல்லோருக்கும் ஒரே நேரம்தான்னு எம்.ஜி.ஆர். அவருடன் சண்டை போட்டு உள்ளே கூட்டிக் கொண்டு போவார். இவரு உடனே, என்னங்க தம்பி நீங்க பேசப் பேச எதுத்து எதுத்துப் பேசிட்டே இருக்கிறே... என்று கூறி, கடவுள் பக்கம் திரும்பிப் பார்த்து, ‘பாரு பரமசிவா’ என்பார். அப்ப நாங்க கேட்டோம். எதுக்கு பாரு பரமசிவா என்கிறீங்க என்று. ‘கடவுள் தான் எல்லோர் சொல்றதும் கேப்பாருன்னு சொல்லுவாங்க. அது தான். பாரு பரமசிவா’ என்றேன் என்பார். (சிரிப்பு)

நாங்கள் எல்லாம் வருடாவருடம் சபரிமலைக்குப் போவோம். எங்க அப்பாவுக் நம்பிக்கை இல்லை என்றாலும் தடுக்க மாட்டார். ஒரு முறை, அய்யப்ப பக்தர் வீரமணி என்பவர் அய்யப்பன் கோயிலுக்கு வரவில்லை. எங்கள் வீட்டுக்கு வந்த அவரிடம் அப்பா கேட்டார், “ஏன் நீ போகலையா?” என்று. “அய்யப்பன் அழைக்கவில்லை; போகவில்லை” என்று பக்தியோடு பதில் சொன்னார். அப்பா கேட்டார், “உங்களையெல்லாம் லெட்டர் போட்டு அய்யப்பன் கூப்பிடுவானா? அப்படியானால் எனக்கும் ஒரு லெட்டர் போடச் சொல் நானும் வரேன்” என்றார் ராதாரவி.

தொடர்ந்து பேசுகையில், தனது தந்தை நன்கொடை வழங்கி, பெரியார் திடலில் தந்தை பெரியாரால் கட்டப்பட்ட கட்டடத்துக்கு பெரியார் ‘நடிகவேள் ராதா மன்றம்’ என்று பெயர் சூட்டியதை பெருமையுடன் நினைவு கூர்ந்த நடிகர் ராதாரவி, அம்மன்றத்தில் தனது தந்தையார் படத்தையோ, பெயரையோ பொறிக்காமல் கி. வீரமணி, அவமதித்ததை வேதனையுடன் சுட்டிக் காட்டினார். தனது தந்தையார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க கி.வீரமணி வந்தபோது, “ஏன் எங்கள் அப்பா படத்தை மாட்டவில்லை?” என்று அழுது கொண்டே கேட்டதாகக் குறிப்பிட்டார்.

பெரியார் திரைப்படத்தில் நடிகவேள் பற்றிய பாத்திரத்துக்கு உரிய முக்கியத்துவம் தரப்படாததை சுட்டிக்காட்டிய ராதாரவி, நடிகர் சத்யராஜ் பெரியாராகவே மாறி நடித்ததைப் பாராட்டினார். ஆனால், அதற்காக பெரியார் அணிந்திருந்த பச்சைக் கல் மோதிரத்தை அன்பளிப்பாக கி.விரமணி சத்யராஜூக்கு வழங்கியதை தன்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. பெரியார் பயன்படுத்திய பொருள்களையெல்லாம் எடுத்து கொடுத்துவிடப் போகிறார்களா என்றும் அவர் கேட்டார். “பெரியார் திராவிடர் கழகத்தின் வளர்ச்சிக்கு நான் உதவிடத் தயாராக இருக்கிறேன். என்னை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறி விடைபெற்றார்.

- செய்தி: கரு. மலையப்பன்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com