Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜூலை 2008

‘மனம் புண்படும்’ பார்ப்பனர் பார்வைக்கு... கடவுள் ‘சக்தி’ கப்பல் ஏறுகிறது

‘பக்தர்களைப் புண்படுத்துவதா?’ என்று கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறது. ராமகோபாலன், துக்ளக் சோ, இல.கணேசன் போன்ற பார்ப்பன கூட்டம், தமிழ்நாட்டில் ‘சமஸ்கிருத மந்திரம்’ ஓதி - ‘கடவுளுக்கு சக்தியை’ ஏற்றி பார்ப்பனர்களால் ‘பிரதிஷ்டை’ செய்யப்பட்ட பகவான்கள் திருட்டுப் போய்க் கொண்டிருக்கிறார்களே. தாங்கள் திருடப்படுவதை தங்களின் ‘சக்தி’யைக் கொண்டு தடுக்கும் சக்தியை - கடவுள்களே இழந்து நிற்கிறார்களே. இதற்கு இந்தப் பார்ப்பனர்கள் என்ன பதில் கூறப் போகிறார்கள்? ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (ஜூன் 26) இது பற்றி ஒரு பக்க அளவில் விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த சிலைகளைத் திருடுவது யார்? நாத்திகர்களா? பெரியார் இயக்கத்தினரா? அல்ல. மாறாக ‘இந்து’வாகத் தங்களைக் கூறிக் கொள்ளும் கூட்டம் தான், இந்தத் திருட்டுகளை நடத்திக் கொண்டிருக்கிறது. 12 ஆம் நூற்றாண்டு காலத்தின் ‘கடவுள்களுக்குத்தான்’ வெளிநாட்டு சந்தையில் அதிக விலைக்கு விற்பனையாவதால் அந்தக் கடவுள்களே குறி வைத்து கடத்தப்படுகின்றன. எல்லா மாவட்டத்திலும் கடவுளை கடத்தும் கும்பல் தீவிரமாக செயல்படுகிறது. இதில் பெரும் சந்தை - காரைக்குடிதான். இதற்கு அடுத்ததாக சென்னை, மதுரை, புதுவையிலும் கடவுள் வியாபாரம் நடக்கிறது.

2008 ஆம் ஆண்டில் அரியலூர் மாவட்டத்தில் 18 கடவுள்களும், 2007 ஆம் ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் 3 கடவுளர்களும், திருவாரூர் மாவட்டத்தில் 7 கடவுளர்களும், தஞ்சை மாவட்டத்தில் 3 கடவுளர்களும் திருட்டுப் போய்விட்டனர்.

முதலில் திருடப்பட்ட கடவுளர்கள் மும்பை அல்லது டெல்லி நகருக்கு கடத்தப்படுகிறார்கள். அங்கு சில காலம் வைக்கப்பட்டு பாங்காக் நகருக்கு கொண்டு போகப்படுகிறார்கள். பாங்காக்கிலிருந்து கப்பலில் ஏற்றி அய்ரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறார்கள். அங்கு பெரும் வசதி படைத்தவர்கள் வீட்டில் அலங்காரப் பொருள்களாக தமிழக பக்தர்களின் வழிபாட்டுக்குரிய கடவுள்கள் மாறிப் போய்விடுகின்றனர். திருடர்கள் திருடும்போதும், கடத்தும்போதும் - சமஸ்கிருத மந்திரத்தால் ‘பிரதிஷ்டை’ செய்யப்பட்டு, ‘உயிரூட்டப்பட்ட’ கடவுள்கள், சக்தியற்றவைகளாகி, விற்பனைப் பண்டங்களாகவே உள்ளன.

முதலில் கோயிலில் ‘பகவான்’களை திருடும் திருடர்கள் அந்த கடவுள்களை இடைத்தரகர்களிடம் ஒப்படைக்கிறார்கள். இடைத்தரகர்கள் காரைக்குடியில்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இடைத்தரகர் இந்த சிலையைப் படம் பிடித்து, அதன் வரலாற்றுக் குறிப்புகளை எழுதி தனக்கு அடுத்த நிலையில் உள்ள தரகருக்கு அனுப்புகிறார். அவர் பகவானுக்கான விலையை மதிப்பீடு செய்து நிர்ணயிக்கிறார். மூன்றவாது நிலையில் உள்ள தரகர் பணம் கொடுத்து வாங்கி, பம்பாய் அல்லது டெல்லிக்கு கடத்துகிறார். திருடனிடமிருந்து முதலில் 10 ஆயிரம் அல்லது 15 ஆயிரத்துக்கு கைமாறும் கடவுள் முதல் தரகரிடம் ரூ.1 லட்சமாக விலை உயர்ந்து, இரண்டாவது தரகரிடம் 10 அல்லது 15 லட்சமாகி, மூன்றாவது தரகர் வழியாக 50 லட்சம், ஒரு கோடிக்கு வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகிறது. சிலை செய்யப்பட்ட காலம், எடை, அளவு ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 12 ஆம் நூற்றாண்டு கடவுள்களுக்குத் தான் சர்வதேச சந்தையில் விலை அதிகம் என்பதால் திருடர்கள் தஞ்சை, திருவாரூர், மதுரை, காஞ்சிபுரம் பகுதிகளிலேயே அதிகம் குறிவைக்கிறார்கள்.

100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ‘கடவுளர்களுக்கு’ சரக்கு லாரிகளில் ஏற்ற வேண்டுமானால், மாநில அரசின் அனுமதி தேவை. ஆனாலும் சரக்குகளை ஏற்றிச் செல்வோர் இது பற்றி கவலைப்படுவதில்லை. அரசு அனுமதியின்றியே குறுக்கு வழியில் கடத்தல் நடக்கிறது.

இந்தத் தகவல்களையெல்லாம் தமிழக காவல் துறையில் சிலை திருட்டுக் கண்டுபிடிப்புக்காக உள்ள தனிப் பிரிவு அதிகாரிகளிடமிருந்து பெற்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு வெளியிட்டுள்ளது.

இந்தப் பிரிவில் 25 காவல் துறை அதிகாரிகள் பணிபுரிகிறார்கள். தமிழ்நாடு முழுதும் 33000 கோயில்கள் உள்ளன. இந்தக் கடவுள் திருட்டுகள் பற்றி தகவல் தெரிவிப்பதற்காக காவல்துறை, சில நபர்களை வைத்திருக்கிறது. பொதுவாக பணக்கார மார்வாடிகள் போல் காவல்துறையினர் வேடம் போட்டு, தரகர்களிடம் பேரம் பேசி, பணம் தரும் போது, குற்றவாளிகளை பிடிக்கிறார்கள்.


முஸ்லீம் அதிகாரி

இந்த சிலை திருட்டு தடுப்புப் பிரிவில் பணியாற்றும் காதர்பாட்சா என்ற முஸ்லீம் ஆய்வாளர் தான், மிக அதிக அளவில், இந்து கடவுளர்களின் திருட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளார். அதிக எண்ணிக்கையில் ‘கடவுள்’ திருட்டுகளைக் கண்டு பிடித்து, குற்றவாளிகளை கைது செய்த பெருமை இவரையே சாரும். கோயில் பாதுகாப்புப் படையில் பணியாற்றும் ஓய்வுப் பெற்ற ராணுவத்தினரும், போலீசாரும் 50 வயதைக் கடந்தவர்கள், இவர்களால் ‘கடவுள்’களைக் காப்பாற்ற முடியவில்லை. கடவுள்கள் தப்ப விடாமல் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

(ஓடிப் போகும் இந்துக் கடவுள்களை முஸ்லீம் அதிகாரி எப்படி பிடிக்கலாம் என்று, இந்து முன்னணியினர் கேள்வி கேட்க மாட்டார்கள் என்று நம்புவோமாக!)



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com