Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜூலை 2008

‘பெரியாரியல் பேரொளி’ திருவாரூர் தங்கராசு - கொளத்தூர் மணி

14.6.2008 சென்னை எம்.ஜி.ஆர். நகரில் கழகத்தின் மூத்த தலைவர் திருவாரூர் தங்கராசு அவர்களுக்குநடந்த பாராட்டுவிழா, நாத்திகர் விழா பொதுக்கூட்டத்தில் தலைவர் உரை:

நாத்திகர் விழாவாகவும், நடிகவேள் எம்.ஆர். இராதா நூற்றாண்டு விழாவாகவும் தொடர்ந்து மிக நீண்டகாலம் பெரியாரியல் பணிகளில் தொய்வில்லா பணியாற்ற வந்த நம்முடைய மூத்த தலைவர் திருவாரூர் தங்கராசு அவர்களின் பாராட்டு விழாவாகவும் இந்த மூன்று நிகழ்ச்சிகளும் எழுச்சியோடு நடந்து கொண்டிருக்கின்றன. மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணிக்கு அரசு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் நூற்றாண்டு நினைவாக, அவர் பெரியாரியலில் ஆற்றிய பெரும் பணியை நினைவு கூர்ந்து அவர் பெயரால் பேருந்து நிறுத்தத்தில் ஒரு நினைவு நிழற்குடையை கழக சார்பில் அமைத்திருக்கிறோம்.

நடிகவேள் எம்.ஆர்.இராதா புகழ் பெறுவதற்கு காரணமாக இருந்த ‘இரத்தக் கண்ணீர்’ நாடகமாகி பிறகு திரைப்படமாக வெளிவந்தது. அது வெளிவந்த நாளிலிருந்து தமிழகத்தில் ஏதாவது ஒரு கிராமத்தில் தொடர்ந்து திரையிடப்பட்டு வரும் ஒரே திரைப் படமாக இருந்து வருகிறது. நாடக உலகில் ஒரு புரட்சியாக வந்த நாடகம் இது. அதேபோல இந்து மதவாதிகளுக்கு ஒரு அதிர்ச்சியைத் தந்த நாடகம்; அதே அதிர்ச்சியை பார்ப்பனர்களுக்கு தந்த ‘இராமாயணம்’ நாடகத்தை எழுதியவரும் அய்யா தங்கராசு என்பதுதான் மிகவும் பெருமைக்குரிய ஒன்று. ஒரு ஆய்வாளரைப் போல் அடிக்குறிப்புகளிட்டு அந்த நாடகத்தை ஏராளமான வரலாற்று ஆதாரங்களோடு அவர் எழுதியுள்ளார். அதே போல் அய்யா திருவாரூர் தங்கராசு எழுதியுள்ள மிகச் சிறந்த ஆராய்ச்சி நூல் ‘திருஞான சம்பந்தர்’ நாடகம். அதில் அவர் அரிய கருத்துகளை தனது ஆய்வின் வழியாக எடுத்துரைத்துள்ளார். இப்படி ஏராளமானவற்றை அவர் பணியாற்றலுக்கு சொல்லிக் கொண்டிருக்கலாம்.

1971 ஆம் ஆண்டில்தான் அய்யா திருவாரூர் தங்கராசு அவர்களை கொளத்தூருக்கு அழைத்துச் சென்று கூட்டம் நடத்தினேன். தொடர்ந்து மூன்று மாதத்துக்கு ஒரு முறை அழைத்தோம், அவர் எடுத்து வைக்கிற பெரியாரியல் கருத்துக்கள் சென்று சேர வேண்டுமென்ற அக்கறையோடு! தோழர் நல்லக்கண்ணு அவர்கள் சொன்னதைப் போல அவர் எல்லாத் துறையிலும் பன்முக ஆற்றலைக் காட்டியவர். தன்னுடைய ஆற்றலை சொந்த நலனுக்கோ, மேன்மைக்கோ பயன்படுத்தாமல் பெரியாரியலை பரப்பப் பயன்படுத்தியவர். அந்த உயரியப் பண்பை பாராட்ட வேண்டும். அந்த முறையிலே தான் அவருக்கு பாராட்டு விழாவை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

பெரியார் பேசிய நாத்திகம்

இது நாத்திகர் விழா என்பதால், பெரியார் பேசிய நாத்திகம் பற்றி சில கருத்துகளை கூற விரும்புகிறேன். பெரியார் பேசியது வெறுப்பினால் பேசிய நாத்திகம் அல்ல; அல்லது அறிவியல் ஆய்வு முடிவும் அல்ல. பெரியார் பேசிய நாத்திகம் சமுதாய உணர்வோடு பேசப்பட்ட நாத்திகம். பெரியார் பேசிய இரண்டு சொற்பொழிவுகளை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன்.

1928 இல் சமுதாய சீர்திருத்த மாநாட்டில், “மனிதனுக்கு மனிதன் தொடக் கூடாது, தெருவில் நடக்கக் கூடாது, கோயிலுக்குள் போகக் கூடாது, குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது போன்ற கொள்கைகள் தாண்டவம் ஆடும் ஒரு நாட்டில் பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் அழிக்காமலோ, சமுத்திரம் பொங்கி மூழ்கச் செய்யாமலோ, சண்ட மாருதத்தால் துகள் துகள்களாக வெடிக்காததைப் பார்த்த பிறகும்கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான் என்றும், சர்வ தயாபரன் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று சொல்வது என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்” என்று கூறுகிறார். அதே போல் 1946 இல் பி.அன்.சி. மில் தொழிலாளர்கள் மத்தியிலே பேசுகிறார்:

"எந்த ஒரு மதம் ஒரு மனிதனை சூத்திரனாகவும், அதாவது தொழிலாளி யாகவும், பாட்டாளியாகவும், பறையனாகவும் உண்டு பண்ணிற்றோ அந்த மதம் ஒழிய வேண்டுமென்று சொல்லுகிறேன். ஒழிய வேண்டுமா? வேண்டாமா? என்று பெரியார் கேட்கிறார்.

எந்த கடவுள் ஒருவனுக்கு நிறைய பொருள் கொடுக்கும், ஒருவனுக்கு பாடு படாமல் வாழ உரிமை கொடுக்கும், மற்றொருவனை உழைத்து உழைத்து ஊரானுக்கு போட்டுவிட்டு சோற்றுக்கு திண்டாடும்படியும், இரத்தத்தை வியர்வையாக சிந்தி ஓயாது உழைத்த வண்ணம் கீழ்மகனாய் வாழும்படி செய்கிறதோ அந்தக் கடவுள் ஒழிய வேண்டுமென்று சொல்லுகிறேன். ‘ஒழிய வேண்டுமா? வேண்டாமா?’ என்று மக்களைப் பார்த்து கேட்கிறார். ‘வேண்டும், வேண்டும்’ என்று மக்கள் குரல் கொடுக்கிறார்கள். பெரியார் தொடர்ந்து சொல்லுகிறார்: “ஆகவே தோழர்களே இதைச் சொன்னால் நான் நாத்திகனும், மத துவேசியுமா? ஆம் ஒழிய வேண்டும் என்று சொன்ன நீங்கள் மத துவேசியா? நாத்திகர்களா?” என்று கேட்கிறார்.

அப்படிப்பட்ட நாத்திகத்தை மக்கள் சமுதாயக் கருத்தோடு எடுத்து வைத்த நாத்திகத்தை தான் நாம் பரப்ப நினைத்தோம். தடுத்து விட்டார்கள். இருக்கட்டும். இன்று பெரியாரியலை எடுத்துச் சொல்கிறபோது அறிவியல் பூர்வமாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் ‘தினமணி’யில் வந்த செய்தியை கழகத் தோழர்கள் துண்டறிக்கைகளாகக் கூட போட்டிருக்கிறார்கள்.

லண்டன் அல்ஸ்டெர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து அளித்த அறிக்கையில் சொல்லுகிறார்கள். அறிவாளிகளுக்கு இறை நம்பிக்கை குறைவு என்று. மேலும் சொல்கிறார்கள் - பிரிட்டனில் ஆரம்ப கல்வி பயில்பவர்களுக்கு மத்தியில் இறை நம்பிக்கை அதிகம் உள்ளது. அவர்கள் வளர்ந்து அறிவு முதிர்ச்சி பெறப் பெற அவர்கள் மத்தியில் இறை நம்பிக்கை மெதுவாக குறைய ஆரம்பித்து விடுகிறது. பிரிட்டனில் 3.3 சதவீதம் பேர் தான் இறை நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தனர். 68.5 சதவீதம் பேர் தங்கள் மீதான நம்பிக்கையைத் தவிர்த்து வேறு எந்த நம்பிக்கையும் இல்லை என்று சொன்னதாக தெரிவித்திருக்கிறார்கள். அதோடு இன்னொரு செய்தியும் வந்திருக்கிறது. ‘டெக்கான் கிரானிக்கல்’ நாளேட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டு கட்டுரைகூட வந்திருக்கிறது. இதில் அவர்கள் சொல்கிறார்கள் - நாத்திகர்கள்தான் அதிக நாள் வாழ் கிறார்கள் என்று. அதற்கு எடுத்துக் காட்டாக இங்கே அமர்ந்திருக்கும் அய்யா திருவாரூர் தங்கராசு அவர்களுக்குத்தான் நாம் விழா எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

நாத்திகர்களுக்கு தன்னம்பிக்கை இருக்கிறது. எதையும் அறிவுபூர்வமாக சிந்திக்கிறார்கள் என்று இன்னொரு ஆய்வுக் கட்டுரையும் செய்தியாக வந்திருக்கிறது.

பெரியாரியல் கருத்துகளை எப்படியாவது முன்னெடுத்து செல்ல வேண்டுமென்ற துடிப்பும், அக்கறையும் கொண்ட எளிய தொண்டர்களை கொண்ட இந்த அமைப்பு, முன்னோடியாக வழிகாட்டி இந்த மண்ணில் பெரியாருக்கு அடுத்து இந்த கருத்துகளை தமிழ் நாடெங்கும் எடுத்துச் சென்று கூறிய அய்யா திருவாரூர் தங்கராசு அவர்களுக்கு பெரியாருடைய லட்சியங்களை சுடராக அல்ல. பேரொளியாக மக்கள் முன்னாள் விளக்கிகாட்டிய அவருக்கு பெரியார் திராவிடர் கழகத்தினுடைய எளிய தொண்டர்களாகிய நாங்கள் எங்களுடைய எளிமையான, நல்லெண்ணங்களை வெளிப்படுத்தும் வகையிலும் அவருக்கு ஆடை அணிவிப்பதும் ஒரு சிறிய நினைவுப் பரிசை கொடுப்பதுவுமாக இந்த பாராட்டை செய்கிறோம்.

அரசியல் சட்டத்தின் அடிப்படை கடமையாக மக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்த வேண்டும் என்று எழுதி வைத்துள்ளனர். ஆய்வு மனப்பான்மையை, முற்போக்கு சிந்தனைகளை, சமுதாய சீர்திருத்தத்தை பெருக்க வேண்டுமென்றும் அரசியல் சட்டம் சொல்லுகிறது. ஆனால் அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது அறிவியலைப் பரப்பும்போது, நமக்கு தடை வருகிறது. இருந்தாலும் நம்மால் இயன்ற அளவு எடுத்துச் சொல்வோம். மீண்டும், மீண்டும் பெரியாரியலை முழங்கி நாடு முழுதும் எடுத்துச் சென்ற அய்யா தங்கராசு அவர்களுக்கு “பெரியாரியல் பேரொளி” என்ற எங்களுடைய விருப்பத்தை எழுத்துக்களாக வடித்து அவர்களிடம் கொடுத்து எங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொளகிறோம் - என்றார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com