Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜூலை 2007

கோடி கோடியாக பணம் புரளும் ஆன்மீக மோசடி வர்த்தகம்

யோகா தியானம், ஆயுர்வேதம், வாழ்க்கைக் கலை என்ற வழியில் ‘ஆன்மீகம்’ திரும்பியிருக்கிறது. புராணம், இதிகாசம், சடங்கு வழிபாடு என்ற தளங்களில் உயிர் பெற்றிருந்த ‘இந்து’ மதம் - இப்போது, அறிவியல் நெருக்கடிகளுக்கு உள்ளாகி, புதிய உருமாற்றத்தை எடுத்து, தன்னை தகவமைத்துக் கொண்டு வருகிறது என்றே கூறலாம். உருவங்களை மாற்றிக் கொண்டு, உலா வரும், இந்த புதிய நம்பிக்கைகளால் - ‘இந்துயிசம்’ போற்றி வரும் பார்ப்பனிய - வர்ணாஸ்ரம சிந்தனையில் மாற்றங்கள் எதுவும் வந்துவிடவில்லை. அந்தப் பாசி படிந்த பழமை - அப்படியே நீடித்துக் கொண்டே இருக்கிறது. வாழ்க்கைக் கலையை வழிகாட்டுவதற்கு புற்றீசல் போல் - புதிய, புதிய ‘குருக்கள்’ புறப்பட்டு வந்துள்ளார்கள். அவர்கள் இந்த நம்பிக்கைகளை நல்ல வர்த்தகமாக நடத்தி வருகிறார்கள். அரசியல் அதிகார செல்வாக்குள்ள மனிதர்களின் ஆசியோடு - இந்த வியாபாரம் கடை விரித்துள்ளது.

இது பற்றி விரிவான கட்டுரையை ‘டெகல்கா’ வார ஏடு (ஜுன் 30, 2007) வெளியிட்டுள்ளது. அக்கட்டுரைகளின் சில முக்கியப் பகுதியைத் தொகுத்து வழங்குகிறோம்.

‘கடவுள் அவதாரங்களில்’ முன்னிலையில் நிற்கும் ஒரு குரு - டெல்லியில் வசதிப்படைத்தவர்கள் வாழும் மெரவுலி - குர்காவோன் பகுதியில் - பண்ணை மாளிகை ஒன்றை எழுப்பி, “ஆன்மிகப்” பணி செய்து வருகிறார். கடந்த மாதம் இவர் சார்பில் - டெல்லி காவல்துறையிடம், ஒரு புகார் வந்தது. காவல்துறையின் ‘பொருளாதார’க் குற்றத் தடுப்புப் பிரிவுக்கு, இந்தப் புகார் வந்தது. அது என்ன புகார்? ‘குரு’விடம் நெருக்கமாக இடம் பிடிக்க விரும்பிய ஒரு சீடர் - “குரு”விடம் நெருக்கமாக ரூ.35 லட்சம் நன்கொடை வழங்கி, குருவிடம் நெருக்கமானார்.

இந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, குரு - புதிய சீடரிடம் 4 கோடி ரூபாயை ‘உடனடி லாபம்’ தரும் நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அந்த நிறுவனம் - சீடருக்கு மிகவும் நெருக்கமானது. சீடரோ - நான்கு கோடி பணத்தை ‘நோட்டுகளாக’ வாங்கிக் கொண்டு தலைமறைவாகி விட்டார். இது கடந்த மே மாதம் நடந்த சம்பவம் காவல் துறையில் புகார் கொடுத்தாலும் ‘குரு’வோ அவரது சீடர்களோ, இந்த விசாரணையை வலியுறுத்த விரும்பவில்லை. அதற்குக் காரணம் இதுதான். இந்த நான்கு கோடி ரூபாய் - தனக்கு எப்படி வந்தது என்ற கேள்விக்கு விசாரணையில் ‘குரு’ பதில் சொல்லியாக வேண்டும்.

அந்த ‘ஆன்மீகக் குரு’ சீடர்களுக்காக நடத்தும் அறிவுரைக் கூட்டங்களுக்கு பெரும் தொகையைக் கட்டணமாக வாங்கி விடுகிறார். நட்சத்திர ஓட்டல்களில் தான் இந்தக் கூட்டங்கள் நடக்கின்றன. படித்த மத்திய தர வர்க்கத்தினர், வசதிப் படைத்தவர்கள் - தங்களின் வர்த்தக வாழ்க்கை முன்னேற்றத்துக்காக, ஆலோசனைகளைக் கேட்டு, இத்தகைய ‘ஆன்மீகப்’ பேர்வழிகளை நாடி வருகிறார்கள்.

ரவிசங்கர் என்ற பார்ப்பன ‘ஆன்மிகக் குரு’ ஒரு பேரரசையே நடத்தி வருகிறார். அவரது ஆண்டு வரவு செலவு ரூ.400 கோடியை எட்டுகிறது. வாழும் கலை பயிற்சி மய்யங்கள், உடல்நல மய்யங்களையும் நடத்தி வருகிறார். பெங்களூரிலிருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் அரசுக்கு சொந்தமான மலைப் பகுதியை அரசிடமிருந்து 99 ஆண்டு குத்தகைக்குப் பெற்றுள்ளார்.

அகரம் பாபு என்ற குருவுக்கு - ஆண்டு வரவு செலவு ரூ.350 கோடி. தொழில் - ஆன்மீகப் பேச்சு, டெல்லியில் ‘ரிட்ஜீ’ பகுதியில் இவரது ஆசிரமம் இருக்கிறது. கேரளாவைச் சார்ந்த “அம்மா” (அப்படித்தான் அவரது சீடர்கள் அழைக்கிறார்கள்) மாதா அமிர்தானந்த மாயியின் ஆண்டு வரவு செலவு ரூ.400 கோடி. பெரும் தொழில் நிறுவனம் போல் செயல்படும் இவரது நிறுவனம் - நாடு முழுதும் கல்வி நிறுவனங்களையும், மருத்துவமனைகளையும் நடத்தி வருகிறது. உலகம் முழுதுமிருந்தும் பெரும் தொகை நன்கொடைகளாக இவருக்கு குவிகிறது.

பெரும் பணக்காரர்கள், செல்வாக்குள்ள அரசியல் தலைவர்களின் வீடுகளுக்குப் போய் ஆன்மீக ஆலோசனைகளை வழங்கிடும் (ஆன்மீககன்சல்ட்டன்ட்) சுதான்சு மகாராஜ் என்ற ‘குரு’வின் ஆண்டு வரவு செலவு ரூ.300 கோடி. அவ்வப்போது விமானங்களில் வெளிநாடுகளுக்குப் பறந்து - அங்கும் பெரும் பணக்காரர்களுக்கு ‘ஆன்மீக’ விற்பனை செய்து வருகிறார்.

அதேபோல் முராரி பாபு என்று ஒருவர். அரசியல் கட்சிகளின் மாநாடுகள், பேரணிகளுக்கும் இவருக்கு அழைப்பு வருகிறது. அங்கு சிறப்பு ஆன்மீக உரை நிகழ்த்து கிறார். உள்நாட்டு - வெளிநாட்டுப் பணக்காரர்களுக்கும் ஆன்மீக வியாபாரம் செய்து வருகிறார். இவரது ஆண்டு வருமானம் ரூ.150 கோடி.

அரித்துவாரில் - பிரமிக்கத்தக்க ஆசிரமத்தைக் கட்டி எழுப்பியுள்ளார் பாபாராம்தேவ். தன்னுடைய ‘புனித கரங்களின் தொடுதலால்’ நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறும் இவர், மன, உடல்நல மய்யங்களை நடத்தி வருகிறார். அவரது ஆசிரமத்தின் நுழைவாயிலில் மிகப் பெரிய அறிவிப்பு பலகை ஒன்று தொங்கிக் கொண்டிருக்கிறது. அதில் - அவரது ஆசிரமத்தில் சீடர்களாவதற்கான கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி உறுப்பினர் கட்டணம் - ரூ.10,000, கவுரவ உறுப்பினருக்கு ரூ.21,000, சிறப்பு உறுப்பினருக்கு ரூ.51,000, ஆயுட்கால உறுப்பினருக்கு ரூ.1 லட்சம், ஒதுக்கீட்டு (Reserved) உறுப்பினருக்கு ரூ.2.51 லட்சம், நிறுவன (Founder) உறுப் பினருக்கு ரூ.5 லட்சம் என்று கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்கத்தாவில் பகுத்தறிவாளர் கழகத்தைச் சார்ந்த பிரதீப் கோஷ், பாபாராம்தேவை ‘என்.டி.டி.வி’ தொலைக் காட்சி நிகழ்ச்சியில் நேருக்கு நேர் விவாதித்து, கேள்விகளால் மடக்கினார். பகுத்தறிவாளரின் கேள்விகளைக் கண்டு திக்குமுக்காடினார் பாபாராம்தேவ். “தன்னுடைய வழுக்கைத் தலையில் பாபாவால் முடி முளைக்க வைக்க முடியுமா?” என்று கேள்வியை முன் வைத்தார். கோஷ் - என்னால் முடியாது என்றார் பாபாராம்தேவ். பகுத்தறிவாளர் கோஷ் - ஆன்மீக மோசடிக்குப் யோகாவை பயன்படுத்து வதை விளக்கி, ஆங்கில நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். புதிய பொருளாதாரக் கொள்கைகளால் பணப்புழக்கமும், பண வீக்கமும் அதிகமானதைத் தொடர்ந்து, இந்த ‘ஆன்மிகக் குருக்கள்’ - அதன் பயனை அனுபவித்து வருகிறார்கள்” என்று கூறுகிறார் கோஷ்.

“பெரும் தொழில் நிறுவனங்கள் - தங்கள் உற்பத்திப் பொருள்களின் தரத்தை மட்டுமே நம்பி சந்தையில் இறங்கினால், இன்றைய போட்டி சந்தையில் வெற்றி பெற முடியுமா? நிச்சயம் முடியாது. அதற்கான விளம்பரமும், திட்டமிடுதலும் அவசியம் தேவையாகிறது. இந்த வியாபார யுக்தியில் இந்த ‘ஆன்மிகக் குரு’க்களும் கைதேர்ந்தவர்கள் தான்” என்கிறார் கோஷ்.

பாபாராம்தேவ் - உத்தரகாண்ட் மற்றும் ம.பி. மாநிலங்களில் இரண்டு மிகப் பெரும் பல்கலைக் கழகங்களை உருவாக்கி வருகிறார். இரண்டு மாநில அரசுகளும், மிகக் குறைந்த விலையில், இவருக்கு நிலங்களை ஒதுக்கித் தந்துள்ளன. அண்மையில் இந்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பாபாராம்தேவ், “எங்களால் இலவசமாக எதையும் தர முடியாது. அது இயலாதது. நாங்கள் செய்வதற்கு எல்லாம் உரிய கணக்குகள் உண்டு. முறையான தணிக்கை உண்டு” என்று கூறியுள்ளார்.

பாபா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நாள் ஒன்றுக்கு சராசரியாக 3000 பேர் வருகிறார்கள். அவரது மருத்துவ மய்யம் டெல்லியில் இருக்கிறது. மருந்து பொருள் களையும் இவரது நிறுவனம் தயாரிக்கிறது. அதன் விலையோ மிக மிக அதிகம். இத்தனைக்கும் இவரது நிறுவனத்துக்கு வருமான வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. மிகக் குறுகிய ஆண்டுகளிலேயே பெரும் பணக்கார நிறுவனமாக பாபாவின் ‘திவ்ய யோக மந்திர்’ வளர்ந்துள்ளது என்று அண்மையில் வருமான வரித்துறை அறிவித்துள்ளது. அண்மையில் டெல்லியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் அதிர்ச்சியான தகவல் வெளிவந்தது. நகரின் முக்கியப் பகுதிகளில் 19.55 ஏக்கர் நிலத்தை, இத்தகைய ‘ஆன்மீக குருக்கள்’ சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள். இவற்றின் மதிப்பு ரூ.1900 கோடி.

‘ஆசிதரம்ஜி அறக்கட்டளை’ ரூ.2.15 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது என்றும், ரோமன் கத்தோலிக்க திருச்சபை ரூ.1 கோடி வருமான வரியை கட்டவில்லை என்றும், டெல்லி வருமான வரித்துறை அதிகாரி அசோக்சிங் கூறியுள்ளார். டெல்லியின் தெற்குப் பகுதிகளில் உள்ள பண்ணை வீடுகளில் - இந்த “ஆன்மீகக் குருக்கள்” ஆன்மீக உரை நிகழ்த்துகிறார்கள். வெள்ளை உடையுடன் உரை கேட்க வரும் சீடர்கள் ஒவ்வொருவரிடமும் வாங்கப்படும் நுழைவுக் கட்டணம் மட்டும் ரூ.5000. சைவ சாப்பாட்டுடன் ஒரு மணி நேரம் மட்டுமே உரை.

பெங்களூருக்கு அருகே குன்றுப் பகுதியில் ரவிசங்கர் நிறுவியுள்ள ஆசிரமத்தில், ஹெலிகாப்டர் இறங்குதளம், செயற்கை ஏரி, புத்தக விற்பனை மய்யங்கள், கணினி மய்யங்கள், குடியிருப்புகள், செயற்கைக் கோள் வானொலி மய்யம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. ‘வேத கணிதம்’ கற்பிக்க பல்கiக்கழகம் ஒன்றை தொடங்கவும் திட்டமிட்டுள்ளார். ஆண்டுதோறும் இங்கே நடக்கும் ஆன்மீகத் திருவிழாவுக்கு நுழைவு கட்டணம் ரூ5000.

இந்த ஆண்டு, இந்த நுழைவுக் கட்டணத்தை செலுத்தி, விழாவில் பங்கேற்றோர் 5,50,000 பேர்; அவ்வளவு பெரிய வசூல்! “எங்களது ஆன்மீகம் பெரும் தொழில் நிறுவனங்களைப் போல்தான் - அமைப்பு ரீதியாக பரப்பப்படுகிறது” என்று ‘டெகல்கா’வுக்கு அளித்துள்ள பேட்டியில் ரவிசங்கர் ஒப்புக் கொள்கிறார். (கடந்த ஆண்டு - சிறீலங்காவுக்கும், யாழ்ப் பாணத்துக்கும் சென்று பேசிய ரவிசங்கர், ஈழத் தமிழர் பிரச்சினையைத் தன்னால் தீர்த்து வைக்க முடியும் என்று கூறியதோடு, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை சந்திக்க முயற்சி செய்தார். அரசியல் பிரச்சினையில் ஆன்மீகத் தீர்வுக்கு இடமில்லை என்று கூறி, பிரபாகரன், சந்திக்க மறுத்து விட்டார் - ஆர்)

மராட்டிய மாநிலம் புனேயில் கோரே கான் பகுதியில் ஓசோவின் (ரஜினீஷ்) சர்வதேச தியான மய்யம் - வெகு ஆடம்பரமாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது. வெள்ளை சலவை கற்களால், அழகிய தோட்டங்களோடு காட்சியளிக்கும் அந்த மய்யம் உல்லாச புரியாகவும் திகழுகிறது. ஓசோவின் மரணத்துக்குப் பிறகு அவரது ஆன்மீக நிறுவனத்தின் வர்த்தகம் 300 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்கிறார் மய்யத்தின் நிர்வாகி மாசாதனா. ஓசோ மய்யத்தின் நட்சத்திர ஓட்டல்களில் - ஓசோவின் சீடர்கள் வந்து தங்குகிறார்கள். அங்கே நிர்வாண மய்யங்களும் உண்டு.

மீனவர் சமூகத்தில் பிறந்தவர் என்றாலும் கேரளாவின் அமிர்தானந்த மாயி - மீனவர் பிரதிநிதியாகவோ அல்லது மீனவர் சமூகப் பின்னணி கொண்டவராகவோ இல்லை. 33 பள்ளிகள், 12 கோயில்கள், உயர்ந்த வசதிகள் கொண்ட மருத்துவமனை, அமிர்தா தொலைக் காட்சி, நிகர்நிலை பல்கலைக்கழகம் என்று அவரது உடைமைகளின் பட்டியல் நீள்கிறது. இவரது ஆண்டு வரவுசெலவு 175 கோடி. வெளிநாட்டு நிதி பெறுவதில் இந்தியாவிலே இரண்டாவது இடத்தில் இருப்பவர் இவர்தான் என்று உள்துறை அமைச்சகம் கூறுகிறது. 1998-99 ஆம் ஆண்டில் மட்டும், இவருக்கு வந்த வெளிநாட்டுப் பணம் ரூ.51.55 கோடி. சில ஆண்டுகளுக்கு முன் கொச்சியில் - இவர் தனது பிறந்த நாளைக் கொண்டாடிய போது, கேரள நாளிதழ்களுக்கு, பெரும் தொகையை அன்பளிப்பாக வழங்கினார். மலையாள நாளேடுகள் “அம்மா”வுக்கு பக்கம் பக்கமாக சிறப்பிதழ்களை வெளியிட்டன.

சுனாமியால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.100 கோடி செலவிட்டார். அமெரிக்காவில் கத்ரினா புயல் வீச்சில் பாதிக்கப்பட்டோருக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர் நன்கொடை வழங்கினார். இவரது ஆசிரமத்துக்கு அய்.நா. சிறப்பு கவுரம் வழங்கி, தொண்டு நிறுவனமாக அங்கீகரித்துள்ளது. இவர் ஆர்.எஸ்.எஸ். உயர்மட்டத் தலைவர்களோடு நெருக்கமாக இருப்பவர், ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளில் தீவிர ஆர்வம் கொண்டவர்.

கேரளா பகுத்தறிவாளர் யு. கலாநாதன் கூறுகையில் - “ரூ.1200 கோடி மதிப்புள்ள பேரரசை கட்டி ஆண்டு வருகிறவருக்கு, இத்தகைய உதவிகள் எல்லாம் மிகச் சாதாரணம். அவர் நடத்தும் மருத்துவக் கல்லூரியில் ஒரு மாணவர் படிப்பதற்கு வாங்கும் நன்கொடை ரூ.40 லட்சம். முக்கிய பிரமுகர் வீட்டுப் பிள்ளைகளுக்கு மட்டும் கட்டணச் சலுகை தருகிறார்கள்” என்கிறார் கலாநாதன்.

புதுடில்லியில் ‘அரே கிருஷ்ணா, அரே ராமா’ அமைப்புக்கு தனிக் கோயில் இருக்கிறது. பெரிய இடத்தில் - மாளிகை இருக்கிறது. ஆயுள் உறுப்பினருக்கான கட்டணம் ரூ.10,000/-

“நாங்கள் 400 கோயில்களையும் 100 சைவ ஓட்டல்களையும் நடத்துகிறோம்” என்கிறார் நிறுவனத்தின் துணைத் தலைவர் விராஜேந்திர நந்தன்தாஸ். தங்களுக்கு பெருமளவில் நன்கொடை தரும் பட்டியலில், நடிகையும், மாநிலங்களவை உறுப்பினருமான ஹேமமாலினி, ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத்தின் மகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

அடுத்தப் பிறவியில் மோட்சம் போவதற்கு - சடங்குகளை வழிபாடுகளை, வலியுறுத்தி வந்த இந்து மதம் - இப்போது, தன்னைத் தலைகீழாக மாற்றிக் கொண்டு வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாகக் கூறி வருகிறது. இதற்காக நட்சத்திர ஒட்டல் கலாச்சாரத்துடன் - ‘ஆன்மீகக் குருக்கள்’ பக்தி வர்த்தகச் சந்தைக்கு வந்துள்ளனர். விமானங்களில் பறக்கின்றனர். நட்சத்திர ஓட்டல்களில் ‘ஆன்மீகம்’ பேசப்படுகிறது.

உருமாற்றங்கள் ஏற்பட்டாலும் பார்ப்பனியம் - சாதியம் - மூடநம்பிக்கைகள் என்ற பிற்போக்குக் கொள்கைகளை மட்டும் இந்து மதமோ, நவீன ஆன்மீகமோ கைவிடத் தயாராக இல்லை. பார்ப்பனியம் புதிய ‘அவதாரத்துடன்’ - பவனி வருகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com